SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊரையே அரவணைத்து அருளும் வீரத்தாய்!

2018-10-17@ 09:42:13

ஒரு ஊரில் விநாயகருக்கு, பரமேஸ்வரனுக்கு, அம்மனுக்கு, மஹாவிஷ்ணுவுக்கு என்று பல ஆலயங்கள் இருப்பது பொதுவானது. ஆனால் ஒரே ஊரின் நான்கு எல்லைகளிலும் மற்றும் ஊரின் மத்தியிலும் என்று மொத்தம் ஐந்து அம்மன் ஆலயங்கள் அமைந்த ஊர், குழுமணிதான்! திருச்சியிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது. ஊருக்கு வழிகாட்டும் சாலையின் இருமருங்கிலும் மட்டுமல்ல, ஊரே பசுமைச் செழிப்புடன் விளங்குவது மனதை மகிழ்விக்கிறது. உய்யக்கொண்டான் நதியும் கொடிங்கால் நதியும் ஊரை பசும் சோலையாக மாற்றிக் கொண்டிருக்கின்றன.

ஊரைக் காக்கும் காவல் தெய்வங்களாய், ஐம்பெரும் பெண் தெய்வங்களாய் வெள்ளந்தாங்கி அம்மன், கொண்ணாச்சி அம்மன், வீரத்தாய் அம்மன், ஊரடச்சி அம்மன், குளுந்தலாயி அம்மன் ஆகிய தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர். ஊரின் ஈசான மூலையில் இடம் பெற்றிருக்கும் கோயில் வெள்ளந்தாங்கி அம்மனுக்குரியது. உய்யக்கொண்டான் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வரும் போது, அந்த வெள்ளம் இந்த அம்மன் ஆலயத்தின் வாசல் வரை  வந்து வணங்கும். வெள்ளநீரை ஊருக்குள் செல்லாமல் தடுத்து நிறுத்துவதால் இந்த அன்னை, வெள்ளந்தாங்கி அம்மன் என அழைக்கப்படுகிறாள்.

ஊரின் வடமேற்கு திசையில் ஆதி பராசக்தியாய், திருமுடியில் தீச்சுடர் தாங்கி கோலவிழிகள் கொப்பளிக்க, ஆறு திருக்கரங்கள் ஆயுதங்கள் தாங்க, மகிஷாசுரனை காலால் மிதித்து, அவன் மார்பில் சூலம் பாய்ச்சி போர்க்கோலம் கொண்டு காட்சி தருகிறாள் ஊரடச்சி அம்மன். ஆறு கரங்கள் கொண்ட அரிய தெய்வம் இவள். தாய்ப்பறவை குஞ்சுகளைக் காப்பதுபோல் மக்களை ஆறு கரங்களுக்குள் அடைத்துக் காப்பதால் இந்த அன்னைக்கு ஊரடச்சி அம்மன் என்று பெயர். தென்கிழக்கு மூலை அக்னி மூலையாகும். இந்த திசையில் அமர்ந்திருக்கும் அம்மன், குளுந்தலாயி அம்மன், வெப்பத்தை தணித்து ஊரை குளிரச் செய்வதால் இந்த அன்னை குளுந்தலாயி அம்மன் என அழைக்கப்படுகிறாள்.

தென்மேற்கு மூலை கன்னி மூலையாகும். இதனை நிருருதி எனவும் அழைப்பதுண்டு. ஊர் மக்களிடம் பெரும் செல்வம் நிலைத்திருக்க, இந்த திக்கில் குடிகொண்டுள்ள அம்மனின் பெயர் கொன்னாச்சி அம்மன். அதாவது கொன்றை+ஆச்சி+அம்மன். கொன்றைப்பூ சிவனுக்குரியது. வெற்றிக்குரிய பூவும் அதுதான். மக்களை என்றும் வெற்றி சூழ வேண்டும் என்பதற்காகவும், வெள்ளம், தீ போன்ற பிற சக்திகளை வெற்றி கொள்ளவேண்டும் என்பதற்காகவும், இந்த அம்மன் இங்கே வீற்றிருக்கிறாள்.

ஊரின் நடுவே சிவபெருமான் ஆலயமும் பெருமாள் ஆலயமும் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பாகும். உழவர்கள் நிலத்தை உழுதபோது கொலுச்சிலையிலிருந்து தோன்றியதால் இங்கு அருட்பாலிக்கும் சிவபெருமானை கொலுமுனை ஈசன் என்று போற்றுகிறார்கள். கொலுமுனை என்பதே மருவி காலப்போக்கில் குழுமணி என்று இந்த ஊரின் பெயராயிற்று. வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு என ஊரின் நான்கு எல்லைகளிலும் அம்மன் ஆலயங்கள் உள்ளன. தேவாரப் பாடல் கண்டு மகிழ்ந்த சிவன் மேற்கு  நோக்கி இருப்பதும், காக்கும் கடவுள் திருமால் கிழக்கு நோக்கி இருப்பதும் இந்த ஊரின் சிறப்பு அம்சங்களாகும்.

அழிக்கும் கடவுளான சிவபெருமானுக்கும், காக்கும் கடவுளான திருமாலுக்கும் இடையே உள்ள அம்மன் ஆலயமே ஐந்தாவதான வீரத்தாய் அம்மன் ஆலயம். இந்த ஊர் மக்கள் வீரம் உள்ளவர்களாகவும், ஊர் வீரத்தின் விளைநிலமாக விளங்க வேண்டும் என்பதற்காகவே இங்கு குடிகொண்டு, அருட்பாலிக்கிறாள் வீரத்தாய் அம்மன். ஆலயம் வடதிசை நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் எதிரே கம்பீரமான குதிரை சிலை காட்சி தருகிறது.  மகா மண்டபத்தில் பலிபீடம் இருக்க அடுத்துள்ள கருவறையில் அன்னை வீரத்தாய் அம்மன் எட்டு கரங்களுடன் அமர்ந்த நிலையில் இன்முகம் மலர வடக்கு திசை நோக்கி அருட்பாலிக்கிறாள்.

அன்னை தன் கரங்களில் சூலம், வாள், ஈட்டி, சக்கரம், மணி, கத்தி ஆகிய ஆயுதங்கள் தாங்கி மற்ற இரு கரங்கள் அபய வரத ஹஸ்த முத்திரைகள் தாங்க, காட்சி தருகிறாள். கிழக்குப் பிராகாரத்தில் தலவிருட்சமான வேம்பு மரம் காட்சி அளிக்க, வடக்குப் பிராகாரத்தில் ஆலமரத்தடியில், திறந்தவெளியில், சிவபெருமான் சந்நதியும், மேற்கு பிராகாரத்தில் பனையடி கருப்பு, பெரியசாமி சந்நதிகளும் உள்ளன.

ஆலயத்தின் வலதுபுறம் ஆதி வீரத்தாயின் திருமேனி உள்ளது. மிகப் பெரிய அளவுடையதான இத்திருமேனியும், மூலவர் அம்மனும் மண்ணில் புதையுண்டு இருந்ததாகவும், அவை பக்தர்கள் கண்களில் பட, உரிய முறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறுகின்றனர். ஆதி வீரத்தாய் சிற்பத்தின் எடை சுமார் 1 1/2 டன் எனக் கூறுகின்றனர். அவ்வளவு பெரிய திருமேனி! இவை தவிர  மேலும் ஐந்து சிலைகள் ஆலய வளாகத்தில் பூமியின் அடியில் இன்னும் புதையுண்டு கிடப்பதாகவும் கூறுகின்றனர்.

ஆடி மாத அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அன்று கேழ்வரகு, கம்பு, அரிசி, கொள்ளு முதலிய தானியங்களை ஒன்றாக கலந்து அரைத்து தயாரித்த மாவில் செய்த கூழை, அன்னைக்கு படைத்து, பக்தர்களுக்கு வினியோகம் செய்கின்றனர்.ஆவணி மாதம் வரும் கும்பாபிஷேக நாள், அன்னைக்கு திருவிழா நாளாகும். அன்று அன்னையின் முன் மகாமண்டபத்தில் ஹோமம் வளர்க்கப்பட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெறுகின்றனர். அன்று காவிரியிலிருந்து தீர்த்தம் கொண்டுவந்து அன்னையின் அபிஷேகத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். அனைத்து மாத பௌர்ணமி நாட்களிலும் இங்கு விளக்கு பூஜை சிறப்பாக நடைபெறுகிறது.

இங்கு வந்து அன்னை வீரத்தாயை வேண்டி வணங்குவதால் போட்டி, பொறாமை, கடன் பிரச்னை, பில்லி-சூன்யம் இவற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டு மன தைரியத்துடன் வாழ்வை எதிர்கொள்ள முடியும் என நம்பிக்கையுடன் கூறுகின்றனர் பக்தர்கள். நவராத்திரி ஒன்பது நாட்களும் அன்னையை தினம்தினம், விதவிதமாய் அலங்கரிப்பதுடன், சிறப்பு ஹோமமும் நடைபெறுகிறது. அப்போது தினசரி மூன்று கால பூஜை நடப்பதுடன், அன்னைக்கு சந்தனக்காப்பு அலங்காரமும் நடைபெறுகிறது. அன்னை வீரத்தாய் அம்மன் அனைத்து மதத்தினரையும் அரவணைத்து அவர்கள் மனம் குளிரச் செய்யும் அன்னையாய் விளங்குகிறாள்.

கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய பெருமக்களும் இந்த ஆலயம் வந்து அன்னைக்கு அபிஷேகம் செய்து தரிசித்துச் செல்லும் காட்சி சிலிக்க வைக்கிறது. ஆலயத்தைச் சற்றிலும் குடியிருப்பு வீடுகள் நிறைய உள்ளன. இரவு 1 1/2  மணி முதல் 3 மணி வரை பல நாட்களில் ஒரு பெண் நடந்து செல்ல, அவளுடைய கால் கொலுசு சப்தம் மிகத் தெளிவாகக் கேட்பதாகக் கூறுகின்றனர்.

அந்த சப்தம் கோயிலை நோக்கி வந்து,  பின்னர் நின்று விடுகிறதாம். அன்னை வீரத்தாய் அம்மன் இரவில் இப்படி காவல் தெய்வமாக நடமாடுவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர். 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இந்த ஆலயம். காலை 7 முதல் 8 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும். திருச்சியிலிருந்து குழுமணி செல்ல நிறைய நகரப் பேருந்துகள் உள்ளன. பேருந்து நிலையம் அருகேயே  ஆலயம் உள்ளது.

- ஜெயவண்ணன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-04-2019

  22-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-04-2019

  21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-04-2019

  20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • iyesumakal11

  இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்