SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

படைப்பாற்றலை பெருக்கும் திருக்கண்டியூர் சரஸ்வதி

2018-10-16@ 10:01:00

ஈசனின் அலகிலா விளையாடல்களின் அடிநாதமாக ஆணவமுற்றோர் அழிவோர் என்ற கருத்து பொதிந்திருக்கும். அது ஈசனுக்கு அருகேயிருப்போராயினும் அதிலிருந்து தப்பிக்க முடியாது. அது போன்றொரு நிகழ்வுக்கு நெருக்கமான தலமே திருக்கண்டியூர். இலக்கானவர் நான்முகனான பிரம்மா. ஐம்முகனான ஈசனின் மூச்சுக்காற்றின் அதிர்வுகள் வேதசப்தங்கள் விண்ணில் நிறைந்தன. நான் மறைகளும் ஒட்டுமொத்தமாக அதை வெளிவிட்டபடி வேதத்தின் திரண்ட வடிவாக பிரம்மா விளங்கினார். அதனாலேயே பிரம்மா வேதசொரூபன் எனும் ஏற்றம் பெற்றார். நான்மறைகளும் நான்கு சிரசாக அவரை அலங்கரிக்க இன்னும் அழகராக ஒளிர்ந்தார். வேதசப்தங்களின் அசைவுகள் சொல்லும் விதம் பார்த்து பிரபஞ்சம் படைத்தார். சிருஷ்டி எனும் விஷயத்தின் சிகரத்தில் அமர்ந்து அதன் அதிபதியானார்.

தான் ஈசனின் ஒரு கருவியே என்பதை அனிச்சையாக, இயற்கையாக உணர்ந்திருந்தார். படைப்புத் திறன் தன்னியல்பாக தன்னிலிருந்து வெளியேறும் அற்புதத்தை அறியாது செய்து வந்தார். அனந்தகோடி உயிரினங்களாக பிரபஞ்சம் பல்கிப் பெருகியது. ஆனால் ஒருமுறை அப்படிப் பெருகியதைப் பார்க்க அவருக்குள் ஆவல் பிறந்தது. பிரபஞ்சத் தோற்றம் கொடுத்த பிரமிப்பு, நான் படைத்ததா இவையெல்லாம் எனும் எண்ணத்தைக் தவிர்க்கமுடியாது அவரைச் சுருக்கிட்டது. நீயே
யாவினிலும் முதல்வன் என்று யாரேனும் தன்னை சொல்ல மாட்டார்களா என்று ஏக்கம் அதிகரித்தது. அண்டபேரண்டங்களும் என் படைப்பில் எப்படி ஒளிர்கின்றன எனும் எண்ணம் தொடர்ச்சியாக விஷவிதையாக விழ, சட்டென்று கர்வக்கொம்பு நான்கு முகங்களையும் பிளந்ததுபோல் செங்குத்தாக வளர்ந்தது. நான்கு முகங்களாக விளங்கும் வேதங்களை பின்னுக்குத் தள்ளியதுபோல் ஐந்தாவது முகம் ஆணவக்கோளமாக உருண்டு எழுந்தது.

பிரம்மா முதன் முதலாக தான் வேறு, பிரபஞ்சம் வேறு என்று உணர்ந்தார். தான் படைத்த வஸ்துக்கள்தான் இவைகள் என்று பேதம் பிரித்தார். தன்னால் இவையெல்லாம் படைக்கப்பட்டதெனில் தானே இவற்றையெல்லாம் ஆளும் அதிபதி என்று விபரீதமாகத் சிந்தித்தார். ஈசனைக் மனக்கண்ணில் நிறுத்தினார். பரமசிவனுக்கும் தன்னைப்போல் ஐந்துமுகங்கள்தான் உள்ளது. வேறெந்த விதத்தில் பிரபஞ்சநாயகன் ஈசனவன் ஐம்முகத்தான் என்று பெயர் உனக்கு என்று செருக்கு அவரைச் சிதைத்தது. நான்முகனின் ஆதாரமான வேதமுகங்கள் வற்றியதைப்போல மாறியது. பிரபஞ்சத்தையே தீர்மானித்த அந்த அங்கங்கள் வெறும் அங்குல அளவான தோற்பைபோல சுருங்கியது. மாபெரும் நதிப்பிரவாகமாக விளங்கிய அந்த உன்னத முகங்கள் மெல்லிய நீர்கசியும் பாறையின் இடுக்குபோல திணறியது.  

ஆனால், ஐந்தாவது முகம் வளமாகவும், வினோதமாகவும் காணப்பட்டது. பிரம்மாவை மாயமான நான் எனும் எண்ணம் சூழ்ந்தது. இதுவே நான் என்று பிரம்மா அந்த உடம்பை நினைக்கத் தொடங்கினார். எண்ணம் உதித்தவுடன் எங்கேயிருக்கிறது கயிலாயம் என்று எண்ணினார். அந்தத் திசை நோக்கி   ஆர்ப்பாட்டமாக பயணித்தார். பொய்ச்சிரமாக இருந்தாலும் வெளியே நின்று பார்ப்பவருக்கு அதன் சிருங்கார அசைவுகள் குதூகலத்தைக் கொடுத்தது. பல்கிப் பெருகிய உயிர்களின் எண்ணிக்கை குறைந்து, அழித்தல் எனும் விஷயம் அதிகமாக இருந்தது. பிரபஞ்சம் தடம் புரண்டது. ஈசன் வெகுதொலைவே ஆர்ப்பரித்து வரும் பிரம்மனைப் பார்த்தார். அகங்காரத்தில் உருண்டு வரும் கோளமான ஐந்தாவது தலையைக் கவனித்தார். அதனுள் வேரோடியிருக்கும் கர்வம் எனும் கொம்புகள் மிகக் கூர்மையாக இருப்பதைக் கண்டு இது பிரம்மனின் இயல்பல்லவே என கவலையுற்றார்.

வேதசொரூபனான பிரம்மனே இவ்வாறு அகங்கரித்துத் திரிந்தால் சாமானிய மானிடர்களின் கதி எப்படி என்று பிரம்மனின் மீது கோபமுற்றார். ஆணவம் கொடுத்த போதையின் தடுமாற்றம் ஈசனையே நீயார் என ஏறிட்டுப் பார்க்க வைத்தது.  எந்த சக்தி அனைத்திற்கும் மூலமானது அதைப்பார்த்து என்னிலிருந்து நீர் உருவானாயோ என்று கேட்க சிவனின் முகம் சினத்தில் சிவந்தது. உமக்கும் ஐந்து முகம் எனக்கும் ஐந்து முகம் என்று அடுத்தடுத்து கேள்விகளை அடுக்கியபோது, ருத்ரன் ரௌத்ரமானார். ஐந்தாவது முகம் இதை கூறிவிட்டுச் சிரித்தது. ஐம்முகங்கள் கொண்ட நீர் இந்த பிரபஞ்சத்திற்கு அதிபதியானால் நானும் உமக்கு இணையானவர்தானே என்று கேட்டவுடன் கயிலைநாயகன் எழுந்தார். நெற்றிக்கண்ணில் கனல் கமழ்ந்தது.

பிரம்மனின் ஐந்தாவது தலை ஏனோ அதிர்ந்தது. சரஸ்வதி மீட்டிக் கொண்டிருந்த வீணையின் ஸ்வரம் மாறியது. ஈசன் எழுந்தார். துள்ளிக் குதித்துக் கிடந்த ஊர்த்துவமாக விளங்கிய ஐந்தாவது முகத்தை தம் இரு கைகளாலும் அழுத்தினார். ஈசனின் ஸ்பரிசம் கிடைத்த உடலில் அதிவேகமாக வேதச்சக்தி பாய்ந்தது. நான்கு முகங்களும் வேதஒலியால் நிறைந்தது. ஆனால், பிரம்மா தான் எனும் அகங்காரத்தை விடமுடியாது அலறினார். கருணைநாயகனான ஈசன் இப்படி மாட்டிக் கொண்டிருக்கிறானே பிரம்மா என ஐந்தாவது தலையை முறுக்கிப் பிழிந்தார். தனியே துண்டமாய் எடுத்தார். ஈசனின் கைகளை பிரம்மகபாலம் எனும் அந்த எச்சம் இறுகப் பற்றிக் கொண்டது. பிரம்மனைக் காப்பாற்றியவர் இப்போது வேறொரு சிக்கலில் சிக்கிக் கொண்டார்.

என்ன இருந்தாலும் வேதத்தைத் சுமந்தவனின் தலையல்லவா அது. எனவே பிரம்மகத்தி தோஷம் அவரைச் சூழ்ந்தது. அது நீங்கும் வழியையும் அறிந்த ஈசன்வேறொருபுறம் பயணமானார். பிரம்மா மெல்லியதாய் தன்னைப் பற்றிய நினைவு வந்தவராக விழித்தார். எங்கே செல்ல வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டார். கண்களை மூடினார். அந்த இடம் அவர் கண்முன் நின்றது. அவ்விடம் நோக்கி நகர்ந்தார். மூவிலைகளுக்குள் முக்கண்ணன் இலகும் அதிசயத் தலமான ஆதிவில்வாரண்யம் எனும் தலம் நோக்கி நகர்ந்தான். ஈசனின் இணையற்ற மகாத்மியத்தால் அத்தலம் இன்னும் அடர்ந்துச் சிவந்திருந்தது. ரணம் தெறித்திருந்த பிரம்மனை வில்வத்தின் குளுமை சூழ்ந்தது. தன்னை மறந்து பிரம்மனும், சரஸ்வதியும் தவத்தில் ஆழ்ந்தனர்.

சிவபெருமானின் சிவச்சக்தியில் ஊறித் திளைத்தனர். அந்த அருட்பிரவாகம் அகங்காரத்தை முற்றிலும் நீற்கச் செய்து பிரம்மாவை படைப்புச் சக்தியோடு ஒன்ற வைத்தது. முக்காலமும் அத்தலத்திலேயே ஒரு முனிவரைப் போல தங்கி ஈசனைப் பூஜித்து படைப்புத் தொழிலுக்கு அகங்காரமற்ற அதிபதியானான். பிரபஞ்சத்தில் வெள்ளி ஒளி வீசியது. கோடிகோடியாக உயிர்கள் பெருகின. எங்கும் சமநிலை சீராகப் பரவியது. ஆதிவில்வாரண்யம் ஈசனின் வீர விளையாடலில் இன்னும் புகழுற்று அட்டவீரட்டத்தலங்களில் முதன்மை பெற்றது. திருக்கண்டியூர் எனப்படும் இத்தலத்தில் நிகழ்ந்த திருவிளையாடல் இது. அது தவிர வேறொரு புகழும் இத்தலத்திற்கு உண்டு. சப்தஸ்தானங்களில் ஒன்று இது. நந்தியம்பெருமானின் திருமணம் நடைபெற்ற திருமழபாடிக்கு இங்கிருந்து பல்லக்கு சுமந்து செல்வர். அதனோடு கட்டுசாதக்கூடையும் எடுத்துச் செல்வர்.

அன்னம் என்பது புண்ணியத்தின் அடையாளம். தூய்மையான வெண்மைக்கு பிரதிநிதியாக எவ்வளவு கொதித்தாலும் பூவாக மலரும் பொருள். அன்னம் என்பது புடம் போடப்பட்ட பொன். நம் வாழ்வினில் எவ்வளவு இருந்தாலும், இழந்தாலும் தூய்மையான அன்னம் எனும் புண்ணியமே முக்கியம், அதைத் தவிர வேறு எதுவும் இந்த ஜீவனோடு வராது என்பதற்கு அடையாளமாக விளங்கும் அற்புதத் தலம் அது. பெரும்புண்ணியம் நல்கும் இந்த அற்புதப் புராணத்தை நெஞ்சில் குளுமையாகச் சுமந்து கோயிலை வலம் வருவோம். சாதாரணமாக பிரம்மாவுக்கு வெறெங்கும் இத்தனை புராணச் சிறப்பு கோயில்களே இல்லை எனலாம். தேவ கோஷ்டத்தில் தனியே வீற்றிருப்பார் பிரம்மா. ஆனால், இத்தலத்தில் பிரம்மாவும், சரஸ்வதியும் தம்பதி சமேதராக வீற்றிருக்கும் சந்நதி
காண்போரை பரவசப்படுத்தும்.

திருக்கண்டியூரின் கடைத்தெரு நெரிசலுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கிறது கோயிலின் ராஜகோபுரம். ராஜகோபுரம் கடந்து இடப்புறம் மங்களாம்பிகை சந்நதி தெற்குநோக்கி உள்ளது. அமைதி தவழும் முகம். அபய, வரத, அக்கமாலையோடு, தாமரை மொக்கை கைகளில் ஏந்தி அருளமுதம் பொங்கி வழியும் முகத்தோடு நிற்கிறாள். அம்பாளின் சந்நதியில் பேரமைதி சூழ்ந்திருக்கிறது. தனக்குள் தான் ஆழ்ந்து நிற்கும் நிலையாக யோகமாதாபோல் இருக்கிறாள் அம்பாள். அதேசமயம், தனக்குள் பொங்கி வழியும் ஆத்மசக்தியில் பூரித்திளைப்பதை ஒரு மெல்லிய புன்னகையில் வெளிப்படுத்தும் பாங்கு அற்புதமானது. அணுக்கன் திருவாயிலைக் கடந்து உள்ளே செல்ல துவாரபாலகர்கள் காவலாக நின்றனர். இடப்புறம் ஸப்தஸ்தான லிங்கங்களையும், பஞ்சபூத லிங்கங்களையும் தரிசிக்கிறோம்.

இத்தலத்தை சிகரத்தில் அமர்த்தியவர் சதாதப முனிவரும் ஒருவர். எப்போதும் ஈசனின் தியானத்தில் மூழ்கியிருந்ததால் சதாதப முனிவர் என்றழைக்கப்பட்டார். பிரதோஷ காலத்தில் காளத்திநாதரை வணங்குவதை நியமமாகக் கொண்டவர். கண்டியூர் வந்தபோது தடை வந்தது. வருத்தமுற்றபோது வில்வ விருட்சத்தில் ரிஷிபாரூடராக காளத்திநாதன் தோன்றினான். சதாதபர் சிவத்தினுள் கரைந்தார். பிரதோஷச் சிறப்புடைய கோயில்களில் இதுவும் ஒன்று. அவருடைய திவ்யச் சிலையை தரிசித்து அட்டவீரட்டானரும், சப்தஸ்தான நாயகரின் சந்நதி நோக்கி நகர்வோம். மிக நீண்ட பாதைபோன்ற சிறு சிறு மண்டபங்கள் தாண்டி கருவறையை அடையும்போது மனதின் வேகம் மெல்ல மறைந்து எண்ணமற்ற ஒருநிலையை அச்சந்நதி உருவாக்குகிறது.

பிரம்மாவின் தலையைத் திருகி எடுத்ததால் பிரம்மசிரகண்டீசர் எனும் திருநாமம் இவருக்கு. வில்வத்தின் கீழ் அமர்ந்ததால் ஆதிவில்வநாதர். பிரம்மனின் அகங்காரத்தை அறுத்த சக்தி நம் அகத்துள்ளும் ஊடுருவும் அற்புதச் சாந்நித்யம்மிக்க சந்நதி. தெள்ளிய ஓடைபோல ஓர் அதிர்வுகள் அவ்விடத்தைச் சூழ, மனதிலுள்ள மாசுக்களை கரைக்கும் கங்கை இங்கு அருவமாகப் பாய்கிறாள். பிரம்மாவுக்கு உலகையே உருவாக்கும் சக்தியைக் கொடுத்தவன் நம் வாழ்வில் வேண்டுவதை அநாயசமாக அருளிவிடுவதில் ஐயமொன்றுமில்லை. பெருங்கருணையாளன் தம்மருகேயே நான்முகனை அமர்த்தி அழகு பார்க்கிறான். மூலத்தானத்திற்கு அருகேயுள்ள இடத்திலிருந்தும் பிரம்மனின் சந்நதியை தரிசிக்கலாம். ஆனாலும், தெளிவாக தரிசிக்க பிராகாரத்தைச் சுற்றி வலம் வருவோம்.
பிரம்மாவுக்கென்று தனிக்கோயில் எனில் அது இதுதான். நல்ல கட்டமைப்பு கொண்ட ஜீவக்கலை ததும்பி நிற்கும் சிலை.

வேறெங்கும் காணமுடியாத திகைப்பூட்டும் அதிசயம் இது. மனிதனைப் படைத்த பிரம்மாவை அவரே படைத்துக் கொண்டாரோ என்று திணறடிக்கும் அழகு. நான்கு முகங்களிலும் ஞானத்தின் பூரிப்பு பரவிக் கிடக்கிறது. பேரானந்தச் சிரிப்பொன்று இடையறாது உதட்டில் பொங்குகிறது. இப்படியொரு சிலையை வேறெங்கேயாவது காணமுடியுமா என்பது சந்தேகமே. அழகிய ஜடையின் அலங்காரமும், மார்பின் மேல் பரவியிருக்கும் ஹாரங்களும், பூணூலின் மெல்லிய நுணுக்கமும் பார்ப்போரை மயக்கும் கலையழகு. அதுமட்டுமல்லாது தனது கணவனோடு அடக்கமாக அமர்ந்திருக்கும் சரஸ்வதி நான்கு கரங்களோடு வீற்றிருக்கிறாள். கல்வியும், ஞானமும் சேர்ந்திழைத்துத் தரும் ஞானவாணி. பிரம்மனின் படைப்பில் தம் சக்தியின் நீட்சியைச் செலுத்தி கலைச் செல்வத்தை வாரியிறைக்கும் வெண்ணிறநாயகி.

அவ்விருவரையும் தரிசித்து பொங்கும் படைப்பில் திரண்டு நிற்கும் ஞான அமுதத்தை அகத்தில் தரித்து பிராகாரத்தைத் தரிசிப்போம். பிராகாரச் சுற்று மண்டபங்களில் காணப்படும் விநாயகமூர்த்திகள் கண்கொள்ளாக் காட்சி தரும். ஏதோ நேற்று செதுக்கிய சிற்பம் போன்று வழவழப்பும் நுணுக்கங்களையும் கலந்திழைத்திருக்கிறார்கள். கலையும், தெய்வீகத்தையும் எப்படி குழைத்துக் கொடுத்தார்கள் என்று பிரமிப்பு தட்டுகிறது. அதற்கடுத்து  அமர்ந்த நிலையில் இருக்கும் அதிசய அர்த்தநாரீஸ்வரர் மூச்சை நிறுத்தும் பேரழகு. நந்தியெம்பெருமானின் மீது அமர்ந்து வலதுகாலை கீழே மடித்துத் தொங்கவிட்டு, இடக்காலை மடக்கி குந்தி அமர்ந்த நிலையும், சற்றே தலைசாய்த்துக் கிடக்கும் உருவமைதி வேறெங்கும் காணமுடியாது.

எத்தனை ஞானிகளின் பூப்பாதங்கள் பட்ட புண்ணிய பூமி இது. அப்பரும், சம்மந்தரும் உருகி நின்ற கோயில் இது. அப்பெரியார்கள் உணர்ந்து அனுபவித்த இப்பெருங்கோயிலை வலம் வந்து கொடிமரத்தின் கீழ் பரவுகிறபோது அலைஅலையாக தெய்வீகச் சக்தி நமக்குள்ளும் சுருளாகச் சுருண்டு குடிகொள்வதை உணரலாம். இக்கோயிலோ பல்லவர்களிலிருந்து தொடங்கி, சோழர்கள் வரை மாற்றிமாற்றி திருப்பணி செய்திருக்கின்றனர். கல்வெட்டுக்களில் திருக்கண்டியூர் திருவீரட்டானத்து மகாதேவர் என்று குறிப்பிட்டுள்ளனர். நந்தாவிளக்கெரிக்கவும், கோயில் நிலங்கள் நிவந்தங்கள் பற்றிய கல்வெட்டுகளும் அதிகமுள்ளன.
இத்தலம் தஞ்சாவூர்-திருவையாறு பாதையில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது, திருக்கண்டியூர்.

- கிருஷ்ணா.

படங்கள்: சி.எஸ்.ஆறுமுகம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-04-2019

  21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-04-2019

  20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • iyesumakal11

  இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2019

  18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்