SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

என்று வந்தாய் என் பக்தனே

2018-10-12@ 16:33:51

அருணகிரி உலா - 61

திருநெல்வாயிலிருந்து புறப்படும் நமது அடுத்த இலக்கு சிதம்பரம் என்றதுமே மனம் ஆடல்வல்லானை நினைத்து காதலாகிக் கசிய, கண்களில் நீர் மல்குகிறது. சித் =  அறிவு. அம்பரம் =  வெட்டவெளி, சைவர்களின் அகராதியில் ‘கோயில்’ எனும் சொல் சிதம்பரம் நடராஜரது கோயிலையே குறிப்பதாக அமைந்துள்ளது. திருப்புகழ் பாடும் அடியார்களது வாழ்விலும் இத்தலம் முதன்மை பெற்றுள்ளது என்பதை பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடந்த ஒரு நிகழ்ச்சி தெளிவுபடுத்துகிறது. ‘அருணகிரிநாதர் நூலாராய்ச்சி’ எனும் நூலில் திருப்புகழ் முதன்மை உரையாசிரியர் டாக்டர். வ.சு.செங்கல்வராயப் பிள்ளையவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

‘‘வேத நூன் முறை வழுவாமே தினம்
வேள்வியால் எழில் புனை மூவாயிர
மேன்மை வேதியர் மிகவு புசனை புரிகோவே’’

-எனும் சிதம்பரத் திருப்புகழ் அடிகள் தாம் எந்தையார் வ.த.சுப்பிரமணியப் பிள்ளை அவர்கள் திருப்புகழ் ஏடுகளைத் தேடி வெளியிடுவதற்குக் காரணமாயிருந்தன. 1871ல்தான் அவருக்குத் திருப்புகழ்ப் பாக்களைத் தேடி எடுத்து அச்சிட வேண்டும் என்ற எண்ணம் முதன் முதல் உதித்தது. ‘‘சிதம்பரம் தீக்ஷிதர்கள் நீதிமன்ற விவாதமொன்றில் தங்கள் பெருமையை நிலைநாட்ட மேற்காட்டிய திருப்புகழ் அடியைக் கொண்ட ‘தாதுமாமலர்’ எனத் துவங்கும் பாடலைச் சான்றாக எடுத்துக் காட்டியதாகவும், அப்பாடலின் தேனொழுகும் இனிமை, தன் மனத்தை மிகக் கவர்ந்து திருப்புகழில் தனக்கு ஆசை உண்டுபண்ணிற்று எ்ன்றும் இத்தகைய அற்புதப் பாடல்கள் பதினாறாயிரம் அருணகிரி நாதர் பாடியிருக்க, ஓராயிரமேனும் கிடைத்து அச்சிட்டால் தான் எடுத்த ஜன்மம் பலன்பட்டதாகும் எனக் கருதினேன் என்றும் தந்தையார் என்னிடம் கூறினார்’’  -இவ்வாறு கூறுகிறார் டாக்டர் செங்கல்வராயப் பிள்ளளையவர்கள்.

தேவாரச் சுவடிகளை நமக்கு மீட்டுத்தந்த நடராஜர், திருப்புகழ் ஏடுகளும் தேடி எடுக்கப்பட மறைமுகக் காரணமாயிருந்தார் என்பது உண்மைதானே! அருணகிரிநாதர் சிதம்பரத்தில் 17 பாடல்கள் பாடியுள்ளார். ‘சிதம்பரம், அம்பலம், அம்பலச் சிதம்பரம், கனகம்பலம், கனகாபுரி, செம்பொன்னம்பலம், திருச்சிற்றம்பலம், தில்லை, தென்புலியூர், புலிகண்டவூர், புலிசரம், புலிசை, புலிநகர், பெரும்பற்றப்புலியூர், பெரும்புலியூர், மன்று’ என்ற பதினாறு பெயர்களிட்டுச் சிதம்பரத்தைப் பாடியுள்ளார்.

கிழக்கு கோபுர வாயிலை அடைகிறோம். கோபுர வாயிலில் குடிகொண்டுள்ள சிவகுமாரர்களை வணங்கி திருப்புகழ்ப் பாடலொன்றை அர்ப்பணிக்கிறோம்.

‘‘அத்தன் அன்னை இல்லம் வைத்த சொன்னம்   வெள்ளி அத்தை நண்ணு செல்வருடனாகி
அத்து பண்ணு கல்வி சுற்றமென்னும் அல்லலற்று நின்னை வல்லபடி பாடி
முத்தனென்ன வல்லை அத்தன் என்ன வள்ளி
முத்தனென்ன உள்ளம் உணராதே
முட்ட வெண்மையுள்ள பட்டன் எண்மை கொள்ளு முட்டன் இங்ஙகநைவ தொழியாதோ
தித்தி மன்னு தில்லை நிர்த்தர் கண்ணினுள்
உதித்து மண்ணு பிள்ளை முருகோனே
சித்தி மன்னு செய்ய சத்தி துன்னு கைய
சித்ர வண்ண வல்லி அலர்சூடும்
பத்தருண்மை சொல்லுள் உள்ள செம்மல் வெள் இ பத்தர் கன்னி புல்லு மணிமார்பா
பச்சை வன்னி அல்லி செச்சை சென்னியுள்ள
பச்சை மஞ்ஞை வல்ல பெருமாளே.’’

பொருள்:  தாய், தந்தை, வீடு, சேர்த்து வைத்த தங்கம், வெள்ளி, இவற்றை விரும்பும் புத்திரர்கள் ஆகியோருடன் ஒன்றினவனாய், ஓரளவு கைவரப்பெற்ற கல்வி சுற்றத்தார் முதலான தளைகளாகிய துன்பங்கள் நீங்கி, உன்னை இயன்றவரை அன்புடன் பாடிப் புகழ்ந்து, முக்தி தரும் முதல்வன் நீதான், வலிமை படைத்த இறைவன் நீயே என்றும், வள்ளிக்குப் பிரியமானவன் என்றும் உன்னைத் தியானித்து மகிழாமல், முழுதும் அறியாமை நிறைந்த புலவன், பரிதாப நிலையில் வாழும் கேடன் ஆகிய அடியேன் இங்ஙனம் வருந்தி நலிவது நீங்காதோ?

‘தித்தி’ என்னும் தாளத்திற்கு ஒக்க நடமாடும் நடராஜரின் நெற்றிக்கண்ணிலிருந்து அவதரித்து உன்னத நிலை பெற்று விளங்கும் குழந்தை முருகோனே!
ஐம்பெருந் தொழில்களையும் ஆற்றவல்ல சிவந்த வேலாயுதத்தை ஏந்திய கையை உடையவனே!

அழகிய நிறம் கொண்ட அல்லிப்பூவை நின்பாதத்தில் அர்ச்சிக்கும் அடியவர் வாழ்வில் மெய்ப் பொருளாகத் திகழும் பெரியோனே!
(‘அடிபோற்றி அல்லி முடி சூட்டவல்ல அடியார்க்கு நல்ல பெருமாளே’ - வள்ளிமலைத் திருப்புகழ்)

வெள்ளை யானையாகிய ஐராவதத்தின் தலைவனாம் இந்திரனின் மகளான தெய்வானையை அணைக்கும் திருமார்பை உடையவனே!
பசுமையான வன்னிமர இலை, அல்லி, இருவாட்சி இவற்றைத் தலையில் அணிந்து பச்சை மயில் வாகனத்தில் பவனி வரும் பெருமாளே!’’

முருகனைப் பாடி கீழை வாசல் வழியே உள்ளே செல்கிறோம். இவ்வழியாகத்தான் மாணிக்க வாசகர் கோயிலுக்குள் வந்தார் என்பதைக் குறிக்கும் விதமாக, அவரைத் தீட்சிதர்கள் வரவேற்கும் காட்சி சுதைச் சிற்பமாகக் கோபுரத்தின் உட்புறம் மேலே வைக்கப்பட்டுள்ளது. ஒரு வெட்ட வெளியிடத்தைக் கடந்து கோயிலுள் நுழைகிறோம். பல படிகள் இறங்கித் தாழ்வான பகுதியிலிருக்கும் நடராஜர் சந்நதிக்குச் செல்கிறோம். வெகு தொலைவிலிருந்தே தங்க விமானம் காட்சியளிக்கிறது.

காசியில் வாழ்ந்த வியாக்ரபாதர் எனும் புலிக்கால் முனிவர் தில்லையின் மகிமையைக் கேள்விப்பட்டு இங்கு வந்து ஒரு லிங்கத்தை நிறுவி வழிபடலானார். இவரே மூலட்டானேஸ்வரர் என்றும் திருமூலர் என்றும் சிறப்பிக்கப்படுகிறார். சிதம்பரத்திலும், ஆரூரிலும் மூலவர்கள் (முறையே திருமூலட்டானர், வன்மிக நாதர்) இருவரும் அமைதியாக அமர்ந்திருக்க உற்சவர்களாகிய நடராஜரும், தியாகேசருமே அதிகம் கொண்டாடப்படுகிறார்கள்.

சிதம்பரக் கருவறையில் சிவபெருமான் அருவம், உருவம், அருவுருவம் எனும் மூன்று நிலைகளிலும் காட்சி அளிக்கிறார். ஆனந்த தாண்டவக் கோலத்தில் ஆனந்த நடராஜர் எனும் உருவத்துடன் சிவகாம சுந்தரி சமேதராக வீற்றிருக்கிறார். திரு மூலட்டானத்தில் பார்வதியுடன் லிங்கமாகவும், கருவறையில் சந்திரமௌலீஸ்வரர் எனும்  ஸபடிக லிங்கமாகவும் ‘அருஉரு’ நிலையில் காட்சி அளிக்கிறார். நடராஜரின் வலப்புறம் அமைந்துள்ளது, ‘சிதம்பர ரகசியம்.’ பஞ்ச பூதத் தலங்களுள் சிதம்பரம் ஆகாயத்தலம். அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசிக்கும் இறைவனின் அருவ நிலையைத் திரையை விலக்கியதும் வெட்ட வெளியாகத் தரிசிக்கலாம். தங்க வில்வ மாலைகள் தொங்குவதைக் காண்கிறோம். இங்கு திருவம்பலச் சக்கரம் எனப்படும் அன்னாகர்ஷண சக்கரம் உள்ளது.

‘‘அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம்பாலிக்கும் மேலும் இப்பூமிசை
என் அன்பு ஆலிக்குமாறு கண்டு இன்புற
இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே.’’
- அப்பர்.

 ‘‘உலகப்பற்று, அறியாமை இவற்றுடன் வாழ்பவன் அவற்றிலிருந்து விடுபட்டு மெய்ப்பொருளை உணரும் நிலையைப் பெற, மூடிய திரையினுள்ளே அருவமாக இருக்கும் சிதம்பரம் பொருள் அருட்பாலிப்பதாக ஐதிகம் என்பது புராணம். சிதம்பர ரகசியத்தானத்திற்கு நாள்தோறும் பஞ்ச உபசாரங்கள் எனப்படும் ‘‘சந்தனம், புஷ்பம், தூபம், தீபத்தோடு இனிப்பும் நிவேதிக்கப் படுகின்றது. நடராஜரை அருகிலிருந்து தரிசிக்கும்பொழுது அப்பர் பெருமான் வாக்கை நினைக்கிறோம்:

‘‘சென்று தொழுமின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
என்று வந்தாய் என்னும் எம்பெருமானின் திருக்குறிப்பே’’

-என்று அவர் கூறுவதுபோல, ‘என்று வந்தாய்’ என எம்பெருமான் நம்மைக் கேட்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. நடராஜரது கருவறையே சித்சபை என்றும் சிற்றம்பலம் என்றும் அழைக்கப்படுகிறது. திருமுறை ஓதுபவர்கள் ஓதுவதற்கு முன்னும் பின்னும் திருச்சிற்றம்பலம் என்று கூறுவது மரபு. கருவறைக்குள் செல்ல ஐந்து படிகள் உள்ளன. இவற்றின் இருபுறங்களிலும் யானையின் உருவங்கள் உள்ளன. இவற்றைப் பஞ்சாட்சரப் படிகள் என்பர். சித்தாந்த சாஸ்திர நூல்களுள் ஒன்றை இப்படியில் வைத்தபோது ஒரு யானை அதை எடுத்து நடராஜப் படியில் வைத்ததால் அந்நூல் ‘திருக்களிற்றுப் படியார்’ என்று அழைக்கப்பட்டது.  சித்சபையில் அன்னையின் அருகில் காணப்படுபவர் சொர்ணாகர்ஷண பைரவர் ஆவார். (‘சொர்ண கால பைரவர்’ என்றும் கூறுவார்கள்)

நடராஜரைத் தரிசித்தபடி நாம் நிற்கும் கல்லாலான பெரும் மண்டபமே ‘கனகசபை’ எனப்படுகிறது. சித்சபையும், கனகசபையும் சேர்ந்த பகுதி, முழுவதும் பொன்முலாம் பூசப்பட்ட செப்புத் தகடுகளாலான கூரையால் மூடப்பட்டுள்ளது. நடராஜருக்கு எதிரே கனக சபையில் அழகிய சிறு நந்தியொன்று அமர்ந்துள்ளது. இம்மண்டபத்தில்தான் ஸ்படிக லிங்கமான சந்திர மௌலீஸ்வரருக்கும், வெளிர் சிவப்பு நிறமுடைய ஸ்படிகத்தால் வடிவமைக்கப்பட்ட ரத்தின சபாபதிக்கும் அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. கனகசபை எனத் துவங்கும் சிதம்பரத் திருப்புகழை இங்கு மானசீகமாகச் சமர்ப்பிக்கிறோம். (இம்மண்டபத்தில் யாரும் உயர்ந்த குரலில் பாடவோ, பேசவோ அனுமதிக்கப்படுவதில்லை)

‘‘கனகசபை மேவும் எனது குருநாத
கருணை முருகேசப் பெருமாள் காண்
கனகநிற வேதன் அபயமிட மோது
கரகமல சோதிப் பெருமாள் காண்
வினவும் அடியாரை மருவி விளையாடு
விரகுரச மோகப் பெருமாள் காண்
விதி முனிவர் தேவர் அருணகிரிநாதர்
விமல சர சோதிப் பெருமாள் காண்
ஜனகி மணவாளன் மருகன் என வேத
சதமகிழ் குமாரப் பெருமாள் காண்
சரணசிவகாமி இரணகுலஹாரி
தரு முருகநாமப் பெருமாள் காண்
இனிது வனமேவும் அமிர்தகுறமாதொடு
இயல் பரவு காதற் பெருமாள் காண்
இணையில் இப தோகை மதியின் மகளோடும்
இயல் புலியூர் வாழ் பொற் பெருமாளே.’’

(இதுபோன்ற பல பாடல்களில் நடராஜப் பெருமான் வேறு முருகன் வேறு என வேற்றுமை காட்டாது பாடியுள்ளார் அருணகிரியார்!)

சிதம்பரத்தில் பூஜித்துப் பேறு பெற்றவர்கள் பற்றிய குறிப்புகள் ‘அவகுண’ எனத் துவங்கும் பாடலில் உள்ளன.

‘‘மவுலியில் அழகிய பாதாள லோகனும்
மரகத முழுகிய காகோத ராஜனும்
மநுநெறியுடன் வளர் சோணாடர் கோனுடன்   உம்பர் சேரும்
மகபதி புகழ் புலியூர் வாழு நாயகர்
மடமயில் மகிழ்வுற வானாடர் கோ என
மலை மகள் உமை தரு வாழ்வே மனோகர   மன்றுளாடும்
சிவசிவ ஹரஹர தேவா நமோ நம
தெரிசன பரகதி ஆனாய் நமோநம
திசையினும் இசையினும் வாழ்வே நமோநம  செஞ்சொல் சேரும்
திருதரு கலவி மணாளா நமோ நம
திரிபுரம் எரி செய்த கோவே நமோநம
ஜெயஜெய ஹர ஹா தேவா சுராதிபர்           தம்பிரானே.’’

பொருள்: ஆயிரம் பணாமுடிகளை உடைய பாதாள லோகனாம் ஆதிசேஷன், உடல் முழுவதும் பச்சை நிறமுடைய சர்ப்பராஜனாம் பதஞ்சலி, மநுநெறி தவறாத சோழ அரசன் மற்றும் தேவர்களுடன் சேர்ந்து வரும் இந்திரனும் போற்றுகின்ற சிதம்பரத்தில் வாழுகின்ற சபாபதியும், அவர் அருகில் உறையும் சிவகாம சுந்தரியும் மகிழ்வுற, வானோர்  தலைவனாக விளங்குபவனே! மலைமகள் உமை பெற்ற செல்வமே! மனதிற்கினியவனே! மன்றினில் ஆடும் சிவசிவ ஹரஹர தேவா, உன்னை வணங்குகின்றேன்.

நற்கதியளிப்பவனே, உன்னை வணங்குகிறேன். எத்திசையிலும், எப்புகழிலும் வாழ்பவனே, உன்னை வணங்குகின்றேன். இனிய மொழிகளைப் பேசுகின்ற வள்ளிநாயகியுடன் இன்பம் அடைபவனே, உன்னை வணங்குகிறேன். திரிபுரமெரித்த தேவனே! உன்னை வணங்குகிறேன். ஜெய ஜெய ஹர ஹர தேவா! தேவர்கள் தம்பிரானே!
‘‘மாபாதனாகிய கதியிலிதனை, அடி நாயேனை ஆளுவது எந்த நாளோ!’’ என மன்றாடி மைந்தனை வேண்டுகிறார்.

‘‘மன்றுளாடும் தேவா, திரிபுரம் எரி செய்த கோவே’ எனும் போது முருகனையும்-சிவபெருமானையும் ஒன்றாகப் பாவித்துப் பாடும் அருணகிரியாரின் சொல்லழகை ரசிப்போம்.

சித்ராமூர்த்தி


(உலா தொடரும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-06-2019

  16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-06-2019

  15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • china

  சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

 • oaman_thee11

  மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

 • AftermathProtestHK

  ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்