SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அற்புத வாழ்வருளும் அன்ன காமாட்சி

2018-10-12@ 09:49:27

சுற்றிலும் பல ஏக்கர் நிலப்பரப்பில் வாழை மற்றும் தென்னந்தோப்புகள். சாலையிலுள்ள முகப்பைத் தாண்டியதும் தென்றல் தவழும் குளிர்காற்று நம்மை தாலாட்டுப் பாடி வரவேற்கும். இந்தத் தோப்பின் நடுவே உள்ளது அன்ன காமாட்சி ஆலயம். அழகான முன் முகப்பு. உள்ளே நுழைந்ததும் மகா மண்டபம். அடுத்து உள்ள அர்த்த மண்டப  நுழைவாயிலின் வலதுபுறம் சித்தி விநாயகரும், இடது புறம் முருகன், வள்ளி, தெய்வானையும் அருள்ட்பாலிக்கின்றனர். உள்ளே கருவறையில் அன்னை அன்ன காமாட்சி நின்ற கோலத்தில் கீழ்திசையை நோக்கி அருட்பாலிக்கிறார். அன்னை தாமரை பீடத்தில் நிற்க அதன் அடியில் அன்ன பீடம் உள்ளது. இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள். மேலிரு கரங்களில் பாசம் மற்றும் அங்குசத்தை சுமந்தும் கீழிரு கரங்கள் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் அன்னை அருட்பாலிக்கும் அழகே அழகு.

இந்த அன்னை திருச்சி, கோவை, திருப்பூர், சென்னை நகரங்களில் வாழும் பல நூறு குடும்பங்களுக்கு குல தெய்வமாய் விளங்குகிறாள். அன்னையின் தேவக் கோட்டத்தின் தென் திசையில் தட்சிணாமூர்த்தியும், மேற்கில் மகாலட்சுமியும், வடக்கில் விஷ்ணு துர்க்கையும் அருட்பாலிக்கின்றனர். தட்சிணாமூர்த்திக்கு கொத்துக்கடலை மாலையும், மஞ்சள் நிற வஸ்திரமும் சாத்தி வேண்டிக் கொள்ள விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் குழந்தை பேறு கிடைக்கும் என்றும், கல்வியில் சிறந்து விளங்கலாம் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர். விஷ்ணு துர்க்கைக்கு செவ்வாய்க் கிழமை ராகு கால நேரத்தில் ஆராதனைகள் செய்தால்  தடைப்பட்ட திருமணம்  உடனே நடந்தேறும். மகாலட்சுமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதால் செல்வ வளம் பெருகும்.

திருச்சுற்றில் தென்புறம் காசி விஸ்வநாதர்  விசாலாட்சி தனிச் சந்நதியில் அருட்பாலிக்கின்றனர். ஐப்பசி  பௌர்ணமியில் விஸ்வநாதருக்கு அன்னாபிஷேகம் பல நூறு பக்தர்கள் சூழ நடைபெறும். இந்த ஆலயத்திற்கு நான்கு தல விருட்சங்கள்.  இறைவன் விஸ்வநாதர் சந்நதிக்கு எதிரே முதல் தல விருட்சமான நாகலிங்க மரம் உள்ளது. மேற்குப் பிராகாரத்தில் கன்னி மூலை கணபதி அருட்பாலிக்கின்றார். விநாயகர் சதுர்த்தி அன்று கணபதிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இரண்டாவது மற்றும் மூன்றாவது தல விருட்சங்களான அரசும் வேம்பும் வடமேற்கு திசையில் தழைத்தோங்கி வளர்ந்திருக்கின்றன. தல விருட்சத்தின் அடியில் நாகர் சிலை உள்ளது. நாகபஞ்சமி அன்று நாகருக்கு அரைத்த மஞ்சளில் அபிஷேகம் செய்கின்றனர். இதனால் அவர்களைப் பற்றியிருக்கும் நாகதோஷத்தின் வீர்யம் குறைகின்றது என்பது நம்பிக்கை.

வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்கள் அருட்பாலிக்கின்றனர். கிரகப் பெயர்ச்சி நாட்களில் நாயகர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. சந்நதியின் அருகிலேயே நான்காவது தலவிருட்சமான வில்வமரம் உள்ளது. இங்கு அன்னை அன்னகாமாட்சியின் முன்பு ஒவ்வொரு மாதமும் ஒரு ஞாயிற்றுக் கிழமையில் அபிராமி அந்தாதி பாராயணம் நடைபெறுகிறது. சுமார் 200 பேர் இந்த பாராயணத்தில் பங்கு பெறுகின்றனர். நூறு பாடல்கள் பாடும் போது ஒவ்வொரு பாடலைப் பாடி முடித்ததும் அன்னைக்கு தீபாராதனை நடைபெறும். இப்படி நூறு முறை தீபாராதனை நடைபெறுவது இங்கு சிறப்பு அம்சமாகும். பாராயணம் முடிந்ததும் சர்க்கரைப் பொங்கல், வாழைப் பழம், வெற்றிலைப் பாக்கு என அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்படும். பெண்களுக்கு பிரசாதத்துடன் மஞ்சளும் தரப்படும்.

நவராத்திரியின் போது அன்னையை ஒன்பது நாட்களும் விதம்விதமாக அலங்காரம் செய்வார்கள். அபிராமி அம்மன், மீனாட்சி அம்மன், கன்னியாகுமரி அம்மன், மாரியம்மன், காமாட்சி அம்மன், அகிலாண்டேஸ்வரி அம்மன், தனலட்சுமி அம்மன், சரஸ்வதி அம்மன், துர்க்கை அம்மன் என அன்னை அற்புத அழகுடன் அருட்பாலிக்கும் அழகைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மறுநாள் 10ம் நாள் விஜயதசமி அன்று விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அர்த்த மண்டப நுழைவாயிலில் அருட்பாலிக்கும் முருகப் பெருமானுக்கு  சஷ்டியின் போதும், கார்த்திகை நாட்களிலும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இங்கு நிலவும் ஏகாந்த சூழலில் அன்னை அன்னகாமாட்சியை வழிபடுவதால் பாசமிக்க தாயை சந்தித்த உணர்வும், மன மகிழ்ச்சியும், மன நெகிழ்வும், மன அமைதியும் ஏற்படும். ஸ்ரீரங்கம் மேம்பாலத்தின் தென் திசையில் வெள்ளி திருமுத்தம் பகுதியில் நேரு வீதியில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
 
ஜெயவண்ணன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-02-2019

  18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-02-2019

  17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 16-02-2019

  16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • BrightBrussels

  ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

 • francelemon

  பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்