SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பசுவின் மாடியிலிருந்து பெருகும் பாற்கடல்

2018-10-11@ 16:37:12

கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள்

திண்ணனார் என்னும் கண்ணப்பரும், அவர்தம் தோழர் நாணனும் வேட்டைமேற் சென்றபோது திருக்காளத்தி மலைமீது கோணமில் குடுமித்தேவர் இருப்பதாகக் கூறி அவரைக் கும்பிட நாணன் அழைத்தார். இதனைச் சேக்கிழார்பெருமான்,

‘நாணனே! தோன்றும் குன்றில் நண்ணுவோம்’ என்ன,

‘காணநீ போதின் நல்ல காட்சியே காணும் இந்தச்
சேணுயர் காளத்தி மலைமிசை எழுந்து செலவே
கோணமில் குடுமித்தேவர் இருப்பர் கும்பிடலாம்’’ என்றான் நாணன் என்றுரைக்கிறார்.

காளத்தி மலை மீது கண்ணப்பர் தன் கண்ணை எடுத்து பொருத்திய லிங்கப் பெருமானின் திருமேனிக்கு குடுமித்தேவர் என்ற பெயர் இருந்ததாக அறிகிறோம். குடுமி என்பது இங்கு மலை உச்சி என்ற பொருளில் பயன்படுத்தப்பெற்றுள்ளது. திருக்காளத்தி மலை மீதமர்ந்த பெருமானை நினைவு கூறும் வண்ணம் தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருநலக்குன்றம் என்ற பழம்பெயருடைய மலையோடு திகழும் கோயிலுக்கு குடுமித்தேவர் கோயில் என்றே பெயர் ஏற்பட்டது.

குடுமியான்மலை என்னும் இவ்வூர் பண்டு திருநலக்குன்றம் என்றும், சிகாநல்லூர் என்றும் அழைக்கப்பெற்றதாக அவ்வூர் சிவாலயத்துக் கல்வெட்டுகள் கூறுகின்றன. ஊரின் நடுவே அழகான மலை. அதன் அடிவாரத்தில் முற்காலப் பாண்டியர் தோற்றுவித்த மிகப் பழமையான குடைவரைக் கோயில், அதற்கென தனித்த அம்மன் கோயில், அதனை ஒட்டியே பிற்காலப் பாண்டியர் எடுத்த சிகாநாதர் திருக்கோயில். அக்கோயிலுக்கு நேர் கிழக்கே அழகிய ஒரு இடப மண்டபம்.

அதன் முன்னர் பாற்குளம் என்னும் திருக்கோயிலின் தீர்த்தக்குளம் ஆகியவையே இன்றைய குடுமியான்மலையின் எழிலுறு காட்சிகளாகும். இந்தியத் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பெற்ற வரலாற்றுச் சின்னமாகவும், ஒரு வழிபாட்டுத் தலமாகவும் சிகாநாதர் கோயில் விளங்குகின்றது. ஒரு சிற்பக் களஞ்சியமாக இக்கோயில் திகழ்வது ஒரு தனிச்சிறப்பாகும்.

குடுமியான்மலையின் கிழக்குப் பகுதியில் குடபோகக் கோயிலாக மூலக்கோயில் அமைந்துள்ளது. கருவறையும், முன்மண்டபமும் உள்ள இக்குடபோகத்தின் முன்புறம் பிற்காலத்தில் சோழர் காலத்தில் எடுக்கப்பெற்ற மண்டபமும் தனி அம்மன் கோயிலும் உள்ளன. மூலத்தானத்தில் திகழும் லிங்கத் திருமேனி, பிரதிட்டை செய்ததன்று. குடபோகத்தைக் குடையும்போதே உருவாக்கியிருக்கிறார்கள். இது பாண்டியர் குடைவரைக் கோயில்களில் காணப்பெறும் கலை மரபாகும். வெளியே வாயிலில் இரு துவார பாலகர்கள் உருவங்களும், அழகு மிகுந்த வலம்புரி விநாயகர் உருவமும் சுவரில் செதுக்குருவங்களாய் காணப்பெறுகின்றன.

மண்டபத்தில் இடபமும் உள்ளது. பிற்காலச் சோழர்கால சண்டீசர் திருமேனி ஒன்றும், சோமாஸ்கந்தர் திருமேனி ஒன்றும் இம்மண்டபத்திலேயே காணப்பெறுகின்றன. இங்குறையும் இறைவனின் திருநாமங்களாகக் கல்வெட்டுகளில் திருமூலட்டானத்துப் பெருமானடிகள், திருமூலட்டானத்து மகாதேவர், திருமூலட்டானத்துப் பரமேஸ்வரர், திருமேற்றளிப் பெருமானடிகள், திருமேற்றளி மகாதேவர், குன்றிடங்கொண்ட நாயனார் என்ற பெயர்கள் காணப்பெறுகின்றன.

வலம்புரி விநாயகப் பெருமானுக்கு மேலாக, ‘பரிவாதினி’ என்ற முற்காலப் பாண்டியர் காலக் கல்வெட்டுப் பொறிப்பு காணப்பெறுகின்றது. இது வீணையைக் குறிக்கும் சொல்லாகும். இக்குடபோகத்திற்கு வெளியே வலப்புறம் மலைச்சுவருடன் இணைப்பு மண்டபம் ஒன்றும், சுவரில் கணபதியார் திருவுருவம் ஒன்றும் காணப்பெறுகின்றன. இங்கு சுவர் முழுவதும் கிரந்த எழுத்தில் பொறிக்கப்பெற்ற பெரிய கல்வெட்டு காணப்பெறுகின்றது. இது இந்திய வரலாற்றில் தனித்துவம் பெற்ற படைப்பாகும். இசை இலக்கணம் இங்கு பதிவு செய்யப்பெற்றுள்ளது.

‘சித்தம் நமச்சிவாய’ என்ற வணக்கத்தோடு இசை இலக்கணம் தொடர்கின்றது. இக்கல்வெட்டில் ‘ருத்ராச்சார்ய சிஷ்யேண பரம மாதேஸ்வரேண ராக்ஞா சிஷ்ய ஹிதார்தம் க்ருதா ஸ்வராகமா’ எனக் குறிக்கப்பெற்றுள்ளது. ‘ருத்ராச்சாரியனின் சிஷ்யனும், பரம மாகேஸ்வரனுமான மன்னன் ஒருவன் மாணவர்களின் பயன் கருதி இவ்விசைக் கல்வெட்டை வடித்தான்’ என்பதே இதன் பொருளாகும். இக்குடைவரைக் கோயிலுக்கென பின்னாளில் (கி.பி. 3ஆம் நூற்றாண்டில்) துக்கையாண்டி மகள் நாச்சி என்ற தேவரடியார் பெண் ஒருத்தி தனித்த அம்மன் கோயிலொன்றை எடுத்துள்ளாள். இதனை அங்குள்ள கல்வெட்டு விரிவுறக் கூறி நிற்கின்றது.

குடைவரைக் கோயிலுக்கும், அம்மன் கோயிலுக்கும் முன்பாக பெரிய அளவில் பின்னாளில் எடுக்கப்பெற்ற ஆலயமான சிகாநாதர் கோயிலின் தூண்களில் பிரமாண்டமான சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. திருமாலின் தசாவதாரம், ரதி, மன்மதன், ராவணன், வாலி, அனுமன், அகோரவீரபத்திரர், காளி, சங்கரநாராயணன், ஆறுமுகன் போன்ற சிற்பங்கள் எல்லாம் தனித்தன்மை வாய்ந்தவை. இக்கோயிலில் பிற்காலப் பாண்டியர், காங்கேயர், பல்லவராயர், தொண்டைமான் அரசர்கள் எனப் பலராலும் புதிய புதிய மண்டபங்கள் எழுப்பப் பெற்றுள்ளன.

பிற்கால கட்டுமானக் கோயிலின் ஈசனின் திருநாமமே சிகாநாதர் என்பதாகும். புராணங்கள் இக்கோயிலை ஸ்ரீநிகேதாசலம் என்றும், ஸ்ரீஜெயந்தவனேச்சரம் என்றும் கூறுகின்றன. சிகாகிரீஸ்வரரின் தலையில் சிறிய குமிழ் போன்ற குடுமி இருப்பதாகக் கூறுவர். இதுபற்றி இத்தல புராணம் கூறும் நூலொன்றில்,

“ஆலவாய் அமர்ந்த பாண்டியன் ஒருவன்
அர்த்த ஜாமத்திற்கு அப்பால்
சாலவும் ஈசன் பிரசாதமும் ஈதலும்
மலர் அதில் கேசமும் கண்டு
ஏலவே இருக்கும் விதம் ஏன் மறையோய்
இயம்பென உருகிய காலை
சிலமாம் குடுமி இருக்கெனக் காட்டும்
சிகா கிரியாவது இதுவே”
- என்ற இப்பழம்பாடல் காணப்பெறுகின்றது.

இங்குறையும் அம்மையின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி என்பதாகும். குடுமியான்மலையில் குடபோகக் கோயிலுக்கு நேர்மேலாக மலைமீது உள்ள பிதுக்கம்பெற்ற கற்பாறைப் பகுதியில் ஓர் அற்புத சிற்பக்காட்சி பிரமாண்டமாகக் காணப்பெறுகின்றது. நடுவே இடபத்தின்மீது சிவபெருமான் உமாதேவியுடன் அமர்ந்திருக்க இருபுறமும் 63 அடியார்களின் உருவங்கள் வரிசையாக உள்ளன. சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகையில் கூறும் அறுபத்து மூவரும் இங்கு மலைமீது சிவனோடு காட்சியளிக்கின்றனர். இது எங்கும் காண இயலாத அற்புதக்காட்சியாகும். கோயில் வளாகத்தினுள்ளோ அல்லது ஊரின் எப்பகுதியிலிருந்தோ நின்றுகொண்டு மலை நோக்கி பார்ப்போமாயின் விண்ணகத்திலிருந்து அவர்கள் தோன்றுவது போன்று இக்காட்சி அமைந்துள்ளது.

கோயிலுக்குக் கிழக்காகக் காணப்பெறும் அழகிய இடப மண்டபத்தினை அடுத்து உள்ள திருக்குளத்தில் ஓர் அற்புதக் காட்சி சிற்பமாக இருப்பதைக் காணலாம். அக்குளத்திற்கு மழை நீரைக் கொண்டு வரும் கால்வாயில் ஒரு கற்பலகை குறுக்காக நடப்பட்டுள்ளது. அதில் ஒரு பசு காணப்பெறுகின்றது. பசுவின் மடிக்காம்பு உள்ள இடத்தில் அச்சிற்பப் பலகையில் துளையிடப்பெற்றுள்ளது. அத்துளை வழிதான் மழைநீர் குளத்திற்கு வந்து விழும்.

அக்காட்சியைக் காணும்போது பசுவின் மடியிலிருந்து பாலே பெருக்கெடுத்தோடி அக்குளத்தில் வந்து வீழ்வதாகத் தோன்றும். அதனால்தான் அக்குளத்தை முன்னாளில் பாற்குளம் என அழைத்தனர். எத்தனை அற்புதமான கற்பனை! குளத்து நீரை புனிதமான பசுப்பாலாகக் (பசும்பால் எனக் கூறுதல் தவறு. அது Fresh Milk என்பதை மட்டுமே குறிக்கும்) கருத வேண்டும் என நமக்குக் கற்பித்த அந்த சிற்பத்தைச் செதுக்கிய சிற்பியின் ஞானம் குடுமியான்மலையைவிடப் பெரிது என்பதை நாம் உணர்வோம்.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-06-2019

  16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-06-2019

  15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • china

  சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

 • oaman_thee11

  மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

 • AftermathProtestHK

  ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்