SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுமனை புகுவிழா நடைபெறும்!

2018-10-08@ 17:00:02

சலூன் கடை வைத்திருக்கும் நான் கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் வாஸ்து பூஜை செய்து வீடு கட்டத் துவங்கினேன். இதுவரை அந்த வீட்டில் குடிபுக முடியவில்லை. வேலை பாதியில் நிற்கிறது. கடன் அதிகமாகிவிட்டது. வீட்டு வேலை நல்லபடியாக முடிந்து குடிபோகவும், கடன்சுமை குறையவும் பரிகாரம் கூறுங்கள். பூபதி, நம்பியூர்.

சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது 11.09.2018 முதல் சனி தசையில் சுக்ர புக்தி துவங்கி உள்ளது. விரயஸ்தானம் ஆகிய 12ம் வீட்டில் சுக்கிரன் இருந்தாலும், ஆட்சி பலத்துடன் குருவின் சாரம் பெற்றுஅமர்ந்திருப்பதாலும், குரு பகவான் சொந்த வீட்டினைக் குறிக்கும் நான்கில் சஞ்சரிப்பதாலும் நின்றுபோன பணியை தற்போது உங்களால் மீண்டும் துவங்க இயலும். தொழில்முறையில் உங்களது வாடிக்கையாளர்களில் ஒருவராக வங்கி உயரதிகாரி ஒருவரின் தொடர்பு கிட்டும்.

அவர் மூலமாக வங்கியில் கடனுதவி பெற்று மீதமுள்ள வீட்டு வேலையை செய்து முடித்து விடுவீர்கள். வருகின்ற தை மாதம் முதலே நீங்கள் பணியைத் தொடர இயலும். வைகாசி மாதத்திற்குள் சொந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைப்பீர்கள். உங்கள் ஜாதகத்தில் 12ல் இணைந்திருக்கும் நான்கு கிரஹங்கள் அதிகப்படியான செலவினங்களுக்கு உங்களை உள்ளாக்கும். வீண் ஆடம்பர செலவிற்கு ஆசைப்படாமல் முடிந்த வரை எளிமையாக செலவழிக்க முயற்சியுங்கள். சனிக்கிழமை தோறும் பைரவர் சந்நதியில் இலுப்பை எண்ணெய் விளக்கேற்றி வைத்து வழிபட்டு வாருங்கள். தடைகள் விலகி புதுமனை புகுவிழா நடைபெறும்.

என் மகளுக்கு கடந்த ஏழு வருடங்களாக வரன் பார்த்து வருகிறோம். செவ்வாய் தோஷம் இருப்பதால் சரியாக அமையவில்லை. நாங்கள் ஜாதகம் பார்க்கும் இடத்தில் சரிஎன்று சொன்னால் அவர்கள் பொருந்தவில்லை என்கிறார்கள். எல்லா கோயில்களுக்கும் போய் வந்துவிட்டோம். இதுவரை ஒன்றும் சரியாக அமையவில்லை. வழிகாட்டுங்கள். லட்சுமி, திருச்சி.

விசாகம் நட்சத்திரம், விருச்சிக ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகத்தின்படி தற்போது புதன் தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் உத்யோக ஸ்தானம் என்பது வலிமையாக உள்ளது. அவரது உத்யோகம் குறித்து நீங்கள் உங்கள் கடிதத்தில் குறிப்பிடவில்லை. திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சூரியன், உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டில் மூன்று கிரகங்களுடன் இணைந்து அமர்ந்துள்ளார். உங்கள் மகள் பணி செய்யும் துறையைச் சார்ந்த மணமகனாக இருப்பார்.

மேலும் உங்கள் மகளின் ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீடு என்பது சுத்தமாக உள்ளதால் எந்தவிதமான தோஷமும் இல்லை. முப்பத்தைந்து வயது முடிவடையும் தருவாயில் உள்ள அவருக்கு உடனடியாக திருமணம் செய்ய முயற்சியுங்கள். இந்த வயதிற்கு மேல் செவ்வாய் தோஷத்தைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமும் இல்லை. சுருங்கச் சொன்னால் மனப்பொருத்தத்திற்கு முக்கியத்துவம் தந்து திருமணத்தை நடத்துங்கள். தற்போது நடந்து வரும் நேரம் திருமணத்திற்கு துணை நிற்கும். வீட்டுப் பூஜையறையில் பார்வதி பரமேஸ்வரர் படம் வைத்து நாள்தோறும் கீழேயுள்ள ஸ்லோகத்தினை 18 முறை சொல்லி உங்கள் மகளை வணங்கி வரச் சொல்லுங்கள். 17.04.2019ற்குள் அவரது திருமணம் நடந்துவிடும்.

“மங்களே மங்களாதாரேமாங்கல்யே மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹிமேஸதா,”


என் மகள் வயிற்றுப் பேத்தி கடந்த ஜூன் மாத இறுதியில் பள்ளிக்கூடத்திற்குப் போனவள் வீட்டிற்குத் திரும்பவில்லை. 15 வயதாகும் அவளின் நிலை என்ன என்பதும் புரியவில்லை. காவல்துறை மூலம் கடுமையாக முயற்சித்தும் பலனில்லை. நான்கு வயதில் தந்தையையும், 14வது வயதில் தாயையும் இழந்த அவள் தற்போது உயிருடன்தான் இருக்கிறாளா என்பதும் தெரியவில்லை. கலங்கி நிற்கும் எனக்கு உரிய பரிகாரம் சொல்லி உதவிடுங்கள். சரஸ்வதி, பெங்களூரு.

சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, மீன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் பேத்தியின் ஜாதகத்தின்படி தற்போது குருதசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. ஜென்ம லக்னாதிபதி குரு ஆறில் அமர்ந்து அவரது தசை தற்போது நடந்து வருவதால் கடும் போராட்டத்திற்கு ஆளாகியுள்ளார். மேலும், எட்டாம் வீட்டில் இணைந்திருக்கும் சந்திரனும், கேதுவும் தெளிவற்ற மனநிலையைத் தந்துள்ளனர். அறியாப் பருவமும், தெளிவற்ற மனநிலையும் இணைந்து கடுமையான சோதனையை உண்டாக்கியுள்ளது. அவருடைய ஜாதகத்தை கணித்துப் பார்க்கையில் கிளம்பிய ஊரில் இருந்து வடகிழக்கு திசையில், மிகப்பெரிய நதியினைக் கொண்டுள்ள ஊரில் அவர் இருப்பதாகப் புலனாகிறது. தள்ளாத வயதில் உங்களால் முடிந்த அதிகபட்ச முயற்சியை ஏற்கனவே மேற்கொண்டு வந்துள்ளீர்கள். இதற்குமேல் இறைவன் விட்டவழி என்று முழுமையாக ஆண்டவனிடம் சரணடைந்து விடுங்கள். பேத்தி பாதுகாப்பாக திரும்ப வேண்டும் என்ற பிரார்த்தனையை கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி தினமும் மஹாகணபதியிடம் முன் வையுங்கள். 09.02.2019க்குள் அவரைப் பற்றிய தகவலைத் தெரிந்து கொள்வீர்கள்.

“ப்ராச்யாம் ரக்ஷது புத்தீச: ஆக்நேய்யாம் ஸித்திதாயக:
தக்ஷிணஸ்யாமுமா புத்ர: நைர்ருத்யாம் து கணேச்வர:
ப்ரதீச்யாம் விக்நஹர்தாவ்யாத் வாயவ்யாம் கஜகர்ணக:”


என் மகன் கல்லூரியில் படிக்கும் போது ஒரு பெண்ணை விரும்பியுள்ளான். அந்த பெண் வேறு மதத்தைச் சேர்ந்தவர். இதை அறிந்து மிகவும் வேதனையாக உள்ளது.அவன் விரும்பிய பெண்ணுடன்தான் திருமணம் நடக்குமா அல்லது நாங்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்துகொள்வாரா, நல்ல வழி சொல்லுங்கள். சலேட் மேரி, கன்னியாகுமரி.

மிருகசீரிஷம் நட்சத்திரம், ரிஷப ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி சுக்கிரன் வெற்றியைத் தரும் 11ம் வீட்டில் உச்சபலத்துடன் அமர்ந்துள்ளதால்தான் நினைத்ததை சாதிக்கும் யோகத்தினைப் பெற்றிருக்கிறார். எந்தவொரு விஷயத்திலும் தான் விரும்புவதை ஏதோ ஒரு வகையில் அடைந்துவிடும் யோகம் உங்கள் மகனின் ஜாதகத்தில் நிறைந்துள்ளது. உத்யோக பலமும் சிறப்பாக உள்ளது. திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி ஜென்ம லக்னத்திலேயே அமர்ந்துள்ளதால் அவரது விருப்பத்தின் படியே மணவாழ்வு என்பது அமையும். யாரும் அவரைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்க முடியாது.

உங்கள் மகன் கைகாட்டும் பெண்ணே உங்களுக்கு மருமகளாக அமைவார். இதில் வேதனைப் படுவதற்கு ஒன்றும் இல்லை. எந்தப் பெண் மருமகளாக வந்தாலும் உங்கள் குடும்பத்தின் பொறுப்புகளை சுமப்பவராகவும், தைரியமும் திறமையும் மிகுந்தவராகவும் இருப்பார். ஜாதி, மத வேறுபாடு பாராமல் அவரது விருப்பத்தினை நிறைவேற்றி வையுங்கள். உத்யோகரீதியாக எதிர்காலத்தில் உங்கள் பிள்ளை சாதிக்க வேண்டிய பல விஷயங்கள் காத்திருக்கின்றன. உங்கள் மகனின் விருப்பத்தில் தவறில்லை. சிறப்பான எதிர்காலம் அவருக்கு உண்டு. பரிகாரம் ஏதும் தேவையில்லை.

கடந்த 2010ல் என்னை காதலித்த பெண் நான் இல்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று வற்புறுத்தியதன் பேரில் திருமணம் செய்தேன். ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் பலமுறை சண்டை, சச்சரவு முற்றி என்மீது சந்தேகம் கொண்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார். கடைசியில் விவாகரத்தும் ஆகிவிட்டது. இந்நிலையில் நான் பணிபுரியும் இடத்தில் ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு திருமணம் செய்தேன். ஜாதியைகாரணம் காட்டி அவளது பெற்றோர் பிரித்து விட்டனர். தற்போது நாடோடி போல் வாழும் எனக்கு சிவனடி சேர்ந்து விடலாம் என்று தோன்றுகிறது. நான் வாழ வழி உள்ளதா? முத்துமணி, புனே.

இரண்டு பெண்களைத் திருமணம் செய்துவிட்டு இருபத்தெட்டு வயதிற்குள் இறைவனடி சேர்ந்து விடலாம்போல் தோன்றுகிறது என்று கடிதம் எழுதியிருக்கும் நீங்கள், பிரச்னைக்கான அடிப்படைக் காரணத்தை ஆராயாமல் சுயநலமாக சிந்தித்து வருகிறீர்கள். அவிட்டம் நட்சத்திரம், மகர ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி குருபகவான் ஐந்தில் உச்சம் பெற்றிருந்தாலும் கேதுவுடன் இணைந்து ஸ்திரமற்ற மனநிலையைத் தந்திருக்கிறார். ஒருநேரம் எல்லாவற்றிற்கும் ஆசைப்படும் நீங்கள் மறுநேரம் விரக்தியான மனநிலைக்குச் சென்று விடுகிறீர்கள்.

திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி புதன் ஆறாம் வீட்டில் சூரியன் மற்றும் சுக்கிரனுடன் இணைந்து சற்று சிரமத்தைத் தந்து வருகிறார். மனைவியின் வழியில் பிரச்னை என்பது உங்களுக்கு இருக்கத்தான் செய்யும். விவாகரத்து செய்திருந்தாலும் தற்போது முதல் மனைவி உங்களுடன் சேர்ந்து வாழத்தான் விரும்புவார். உங்களை உயிருக்கு உயிராக காதலித்து மணந்த அவரது மனநிலையை சற்று எண்ணிப் பாருங்கள். மனைவி மற்றும் குழந்தையுடன் முழுமனதோடு சேர்ந்து வாழ முயற்சியுங்கள். உங்கள் நடத்தையே உங்கள் நல்வாழ்வினை தீர்மானிக்கும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். தினமும் 108 முறை ஸ்ரீராமஜெயம் எழுதி வாருங்கள். 2019 ஏப்ரல் மாதத்திற்குள்ளாக மனத்தெளிவு பெறுவீர்கள்.

எனது மகனுக்கு திருமணம் நடந்து ஆறு ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. உரியவழி காட்டுங்கள். பெரியசாமி, திருச்சி.
 
பூசம் நட்சத்திரம், கடக ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது கேது தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. விசாகம் நட்சத்திரம், விருச்சிக ராசி, மிதுன லக்னத்தில் (கடக லக்னம் என்று தவறாக குறித்துள்ளீர்கள்) பிறந்திருக்கும் உங்கள் மருமகளின் ஜாதகத்தின்படி தற்போது புதன் தசையில் குருபுக்தி நடந்து வருகிறது. மகனின் ஜாதகத்தில் ஐந்தில் கேது இருப்பதும், மருமகளின் ஜாதகத்தில் ஐந்தில் சனி உச்சம் பெற்றிருப்பதும் புத்ர சந்தான ப்ராப்தியை தாமதமாக்கி வருகிறது. என்றாலும் இருவரின் ஜாதகக் கணிப்புப்படியும் வருகின்ற 13.05.2019 முதல் குழந்தைப்பேற்றினை அடைவதற்கான நேரம் துவங்குவதால் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

அதற்கு முன்பாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. முறையான மருத்துவ சிகிச்சை நல்ல பலனைத் தரும். பிரதிமாதந்தோறும் வருகின்ற வளர்பிறை சதுர்த்தி நாளில் விரதம் இருந்து தம்பதியரை திருச்சி மலைக்கோட்டை மலையடிவாரத்தில் உள்ள விநாயகப் பெருமான் ஆலயத்திற்குச் சென்று தரிசித்து வரச் சொல்லுங்கள். வாழைப்பழம், வெல்லம், தேங்காய் துருவல், சத்துமாவு கலந்து நைவேத்யம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்வதும் நல்லது. கீழேயுள்ள ஸ்லோகத்தினை தம்பதியர் இருவரையும் தினந்தோறும் 108முறை ஜபம் செய்து வர விநாயகரின் அருளால் விரைவில் வம்சவிருத்தி உண்டாகும்.

“ஓம் நமோ லக்ஷ்மிகணேசாய
மஹ்யம் புத்ரம் ப்ரயச்சஸ்வாஹா”.


இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்ற நிலையில் நிரந்தர வேலையின்றி ஊர், ஊராக அலைந்து இறைவனருளால் வேலை கிடைத்து சேலத்தில் குடியேறி உள்ளோம். சொந்தவீடு கட்ட பலமுறை முயற்சித்தும் ஏதோ ஒரு வகையில் தடைபடுகிறது. என் கணவரின் ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர் சொந்த ஊரில் வீடு கட்டி வாழ்ந்தால் வாதநோய் வந்துவிடும் என்கிறார். பணிஓய்விற்குபின் வாடகை கொடுக்காமல் சொந்த வீட்டில் வாழநினைக்கும் எங்களுக்கு வழி காட்டுங்கள். சேலம் வாசகி.

துலாம் லக்னத்தில் பிறந்தவருக்கு கடைசி காலத்தில் கை கால் வராது என்றும், சொந்த ஊரில் வீடு கட்டி வாழ்ந்தால் வாதநோய் வந்து விடும் என்றும் சொல்லப் படுவதில் உண்மை இல்லை. கிருத்திகை நட்சத்திரம், மேஷராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் கணவரின் ஜாதகத்தையும், மூலம் நட்சத்திரம், தனுசு ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தையும் ஆராய்ந்ததில் தற்போது சொந்த வீடு கட்டும் முயற்சியில் நீங்கள் இறங்காதிருப்பதே நல்லது என்பது தெளிவாகிறது. இரு பெண்களுக்கும் திருமணம் செய்தபிறகு சொந்த ஊருக்குச் சென்றுஓய்வாக செட்டில் ஆகிவிடலாம் என்ற உங்கள் எண்ணம் ஈடேறுவதுபோல் தெரியவில்லை. உங்கள் பெண்களுக்குத் துணையாக நீங்கள் நிற்க வேண்டிய சூழல் உருவாகும்.

மூத்த மகளுக்கு 26வது வயதில் திருமணம் செய்யலாம். இளைய மகளின் திருமணத்திற்குப் பின் அவரது குடும்பத்திற்கு உதவியாக நீங்கள் இருக்க வேண்டிய சூழல் தோன்றும். அதுபோன்ற சூழலில் உங்கள் மகளோடு இணைந்து வேறொரு புதிய நகரத்தில் இடம் வாங்கி சொந்த வீடு கட்டி குடியேறுவீர்கள். அதுவரை பொறுத்திருங்கள். வாடகை தர விரும்பாவிட்டால் குத்தகைக்கு ஒரு வீடு பார்த்து குடியேறுங்கள். பெண்களின் திருமணத்திற்கு நீங்கள்அதிகம் செலவழிக்க வேண்டி வராது. அவர்களது சம்பாத்தியமே போதுமானது. சொந்த வீடு விஷயத்தில் அவசரம் வேண்டாம். காலமும் சூழலும் அதனை முடிவு செய்யும். பரிகாரம் ஏதும் தேவையில்லை.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

 • libya_sandai11

  தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

 • thuppaki-12jk

  13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

 • hurricane_12

  அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்