SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆபத்தில் காப்பாக விளங்கும் கரபுரீஸ்வரர்

2018-10-05@ 17:49:53

சான்றோர்கள் நிறைந்த தொண்டை மண்டலத்தின் பெருமைகள் சொல்லில் அடங்காதவை. இத்தொண்டை மண்டலத்தின் புகழ் மிகுந்த திருத்தலங்களின் பெருமைகளையும் சொல்லில் அடுக்கி மாளாது. தேவாரத் தலங்களோடு புராண வரலாற்றுச் சிறப்புமிக்கத் தலங்களும் இங்கு அதிகமே. அதோடு, தேவார வைப்புத் தலங்கள் கூட எண்ணிலடங்காதவை, வெளியில் தெரியாமல் மண்டிக் கிடக்கின்றன. அவ்வகையில் தொண்டை மண்டலத்தின் தேவார வைப்புத் தலங்களுள் ஒன்றாக அதியுன்னதத் தலமாகத் திகழப் பெறுகின்றது திருக்கரபுரம். தற்போது இப்பதி திருப்பாற்கடல் என்று வழங்கப்பெறுகின்றது. ராவணனின் படைத் தளபதிகளாக விளங்கிய கரதூஷணர்கள் இத்தலத்தில் தனித்தனியே சிவலிங்கங்கள் ஸ்தாபித்து வழிபட்டுள்ளனர். கரன் வழிபட்டதால் இத்தலம் கரபுரம் என்றும், கரபுரி என்றும் வழங்கப்பெற்றது.

புண்டரீக மகரிஷி கொண்ட சிவவிஷ்ணு பேதத்தை நீக்கும் பொருட்டு சிவபெருமான், தூஷணன் வழிபட்ட லிங்கத்தில் வேங்கடவனாக வெளிப்பட்டு, (பிரசன்னம்) பிரசன்ன வெங்கடேசப் பெருமாளாக ஆவுடையார் மீது நின்ற வண்ணம் அதிசய கோலத்தில் காட்சி தருகின்றார். தூஷ்ணேஸ்வரர், பிரசன்ன வெங்கடாஜலபதியாக மாறி காட்சி தந்த அற்புதம் இங்கு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அருகில் ரங்கநாதர் சயனக் கோலத்தில் அற்புதமாகக் காட்சியளிக்கின்றார். ரங்கநாதப் பெருமாள் சயனக் கோலத்தில் இத்தலத்தில் சேவை சாதிப்பதால் தற்போது இப்பதி திருப்பாற்கடல் என்றே அழைக்கப்படுகிறது. மேலும், இத்தலத்தில் கொங்கணச் சித்தர் வழிபட்ட கொங்கணேஸ் வரர் ஆலயமும், வாலி வழிபட்ட வாலீஸ்வரர் ஆலயமும், பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயமும் அமையப்பெற்றுள்ளது சிறப்புக்குரிய ஒன்றாகும்.

நீர்வளமும், நிலவளமும் நிரம்பப் பெற்ற இப்பதி திருநாவுக்கரசரால் தேவார வைப்புத் தலமாகப் போற்றப்பட்டுள்ளது. தேவாரத்தில் இரண்டு இடங்களில் இத்தலத்தினை நினைவு கூர்ந்துள்ளார், அப்பர் பெருமான். பக்தர்களை சிவபெருமான் காக்கும் தலங்கள் உலகில் எண்ணில்லாதவை. இருப்பினும், திருவதிகை வீரட்டானம், சீர்காழி, திருவல்லம், திருவேட்டி, திருவேடகம், திருவூறல் (தக்கோலம்), திரு அம்பர், உறையூர், திருநறையூர், அரணநல்லூர், திருவிளமர், திருவெண்ணி, திருமீயச்சூர், திருவீழிமிழலை, திருக்கரபுரம் ஆகிய தலங்களை ஆறாம் திருமுறையில் தனது காப்புத் திருத்தாண்டகத்தில் காப்புத் தலங்களாகக் குறிப்பிடுகின்றார் அப்பர் பெருமான். அருணகிரிநாதர் இப்பதி ஆறுமுகப்பெருமான் மீது மூன்றுத் திருப்புகழ்களைப் பாடியருளியுள்ளார். வேகவதி நதி ஒரு காலத்தில் இந்த கரபுரீஸ்வரர் ஆலயத்தை ஒட்டியே பாய்ந்தோடியதாகக் கூறப்படுகிறது.

இதற்கு சான்றாக இன்றும் மணற்பாங்கான இடங்களை இங்கு காண முடிகின்றது. தற்போது ஆலயத்திற்கு சற்று தூரத்தில் வேகவதி நதி ஓடுகின்றது. ஊரின் வடபுறம் ஆலயம் அழகுற அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரம், தென்கிழக்கில் மடப்பள்ளியும், வடகிழக்கில் நவகிரக சந்நதியும் உள்ளது. நவகிரக மண்டபத்தையொட்டி யாகசாலையும் அருகே தலவிருட்சமான வில்வ மரமும் அமைந்துள்ளன. நேராக துவஜஸ்தம்பம், நந்தி, பலிபீடம்! பின், இரண்டாம் வாயிலுள் நுழைகின்றோம். இது உட்பிராகாரமாகும். உட்பிராகார வலம் வருகையில் நிருருதி மூலையில் சங்கடஹர கணபதி அழகுற காட்சியளிக்கின்றார். வாயு மூலையில் வள்ளிதெய்வானையுடனான ஷண்முகர் அழகே உருவாய் அருட்பாலிக்கின்றார். மேற்கு கோஷ்டத்தில் மகாவிஷ்ணு அமர்ந்த நிலையில் பிரயோக சக்கரம் ஏந்தியபடி எழில் சிந்துகின்றார்.

பின், அம்பிகையின் சந்நதியையடைந்து அன்னையை மனங்குளிர வணங்குகின்றோம். தென்முகமாகக் காட்சியளிக்கும் அம்பிகை இங்கு அபீதகுஜாம்பாள் என்கிற பெயர் தாங்கி பாசஅங்குச, அபயவரத ஹஸ்தங்களுடன் நின்ற வண்ணம் பேரருள் புரிகின்றாள். ஸ்வாமி சந்நதி, மகாண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்கிற அமைப்பில் அமைந்துள்ளது. கருவறையுள் கதிரொளி வீசி நம்மை கவர்கின்றார் திருக்கரபுரீஸ் வரர். சகலமும் அருள வல்ல இப்பெருமானை வணங்கி, பெருமிதமும், புளகாங்கிதமும் அடைகின்றோம். வெளிச்சுற்றின் வாயு பாகத்தில் ஜேஷ்டா தேவி மற்றும் ரேணுகாதேவியை தரிசிக்கின்றோம். உடன் நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவ்வாலய சிற்பங்கள் ஒவ்வொன்றும் அற்புதப்படைப்புகளாகத் திகழ்கின்றன. இரண்டுவேளை பூஜைகள் இத்தலத்தில் நடைபெறுகிறது. தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையும் மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் ஆலயம் திறந்திருக்கும். அனைத்து சிவாலய விசேஷங்களோடு, மாசி மகோற்சவமும் சிறப்புற அனுசரிக்கப்படுகின்றன.

இவ்வாலயத்தின் சோழர்கால கல்வெட்டுகள் தமிழ் மற்றும் கிரந்த எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. கி.பி. 975 ஆம் ஆண்டு இரண்டாம் பராந்தக சோழனின் படைத் தலைவனான ‘பார்த்திவேந்திராதி வர்மன்’ காலத்திய கல்வெட்டின்படி இவ்வூர் ஜெயங்கொண்ட சோழ மண்டலம் படுவூர் கோட்டத்து காவிரிப்பாக்கமாகிய அவணி நாராயணச் சதுர்வேதி மங்கலத்தைச் சார்ந்த திருக்கரபுரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, கரபுரீஸ்வரர் கோயிலுக்கு நிலங்கள் ஒதுக்கி, அவற்றின் இருநாழி நெல்லால் கிடைக்கும் அரிசியைக் கொண்டு இறைவனுக்கு அமுது படைக்கவும், அந்நிலத்தின் வாயிலாகக் கிடைக்கும் இதர வருவாயினால் மூன்று வேளைகள் திருவிளக்கேற்றி, ஆராதனை செய்யவும், இவற்றை கல்வெட்டு சாசனம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு குடமுழுக்குக் கண்டு பொலிவுடன் திகழ்கிறது ஆலயம். எதிர்வரும் ஆபத்துக்களை முன்கூட்டியே உணரும் தன்மையையும், ஆபத்துகளில் இருந்து காப்பினையும் தந்தருள்கின்றார் இத்தலத்து கரபுரீஸ்வரர். சுவாமி  அம்பாளுக்கு திரவிய அபிஷேகங்கள் செய்து, வெண்பட்டு சாற்றி, வெண்பொங்கல் நிவேதித்து பிரார்த்தனை செய்ய, பேராபத்துகளில் இருந்தும் தப்பி விடலாம் என்பது முன்னோர் நம்பிக்கையாகும். வேலூர் மாவட்டம், வாலாஜா வட்டத்தில், வேலூர்சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாலாஜாபேட்டைக்கு அடுத்துள்ள காவேரிப்பாக்கத்திலிருந்து தெற்கே 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, திருக்கரபுரம் என்னும் திருப்பாற்கடல்.

பழங்காமூர் மோ.கணேஷ்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • AmazonIllegalMining

  அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

 • chinasnowfall

  கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

 • hungary_policepadhuga11

  புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

 • ThaiSanctuaryPiano

  யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

 • largebudhastatue

  உலகிலேயே மிகப்பெரிய புத்தர் சிலைக்கு புத்துணர்வு தரும் வகையில் பராமரிப்பு பணிகள் துவக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்