SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பயத்தினை விட்டால் ஜெயம் நிச்சயம்!

2018-09-26@ 15:24:46

40 வயதாகும் நான் பிறந்ததில் இருந்து என் குடும்பத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. எந்தத் தொழிலிலும் நிரந்தரமாக உட்கார முடியவில்லை. திருமணமும் கைகூடவில்லை. வீட்டிற்கு முதல் மகனாக பிறந்த என்னால் விரயச் செலவுகள்தான் அதிகம். என்னால் உடன் பிறந்தோருக்கும் திருமணம் தடைபடுகிறது. எனக்கு எதிர்காலம் உண்டா, இல்லையா? ஆனந்த கிருஷ்ணன், திருச்சி.

பெயரில் உள்ள ஆனந்தம் வாழ்க்கையில் இல்லாமல் போய்விட்டது. உங்கள் பெயரின் முதல் எழுத்தினை குறிலாக மாற்றி அனந்த கிருஷ்ணன் என்று எழுதிப் பழகுங்கள். மிருகசீரிஷம் நட்சத்திரம், மிதுன ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின் படி தற்போது சனி தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி குரு வக்ரம் பெற்று எட்டாம் வீட்டில் அமர்ந்திருப்பதும், ஜீவன ஸ்தான அதிபதி புதன் 12ல் அமர்ந்திருப்பதும் உங்களை மிகவும் அலைக்கழித்து வருகிறது. உங்கள் ஜாதக பலத்தின்படி நீங்கள் சொந்த ஊரில் இருக்க முடியாது. சொந்த ஊரில் இருந்தால் முன்னேற்றம் காண இயலாது. உங்கள் ஊரிலிருந்து வடக்கு திசையில் உள்ள ஊருக்கு இடம் பெயர்ந்து அந்த ஊரில் வேலை தேடுங்கள்.

ஜென்ம லக்னத்திலேயே செவ்வாயின் அமர்வினைப் பெற்றிருக்கும் நீங்கள் முதலாளிக்கு உண்மையான ஊழியனாக பணி செய்வீர்கள். உங்களுடைய உண்மையான உழைப்பு நல்ல பெயரைப் பெற்றுத் தரும். உங்கள் குடும்பம் முன்னேறாததற்குக் காரணம் நீங்கள்தான் என்று தவறாக எண்ணிக்கொண்டு இருக்கிறீர்கள். என்னால்தான் எல்லாம் தடைபடுகிறது என்ற ரீதியில் கடிதம் எழுதியுள்ளீர்கள். என்னால் என்ற வார்த்தையை முதலில் மனதில் இருந்து அகற்றுங்கள். எல்லாம் இறைவன் செயல் என்ற எண்ணத்தினை வளர்த்துக் கொள்ளுங்கள். சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். 04.07.2019க்குள் வாழ்வினில் திருப்புமுனை காண்பதோடு ஆனந்தமும் இணையக் காண்பீர்கள்.

31 வயதாகும் என் மகன் வேறு ஜாதி பெண்ணை விரும்புகிறான். பெண்ணின் ஜாதகம் பொருந்தாததால் எங்களுக்கு விருப்பமில்லை. பெண்ணின் பெற்றோரிடம் இந்த விபரத்தை தெரிவித்தும் அவர்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை. திருமணம் முடிக்க என் மகனை தூண்டி விடுகிறார்கள். என் மகனின் திருமணம் எங்கள் விருப்பம்போல் அமைய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? ஜெயலக்ஷ்மி, பெங்களூரு.

திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது.
திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சனி வக்ரம் பெற்ற நிலையில் அமர்ந்திருப்பது சற்று பலவீனமான நிலை ஆகும். எட்டாம் வீட்டில் நான்கு கிரகங்களின் அமர்வும் சற்று சிரமத்தினைத் தந்து கொண்டிருக்கும். தற்போது நடந்து வரும் தசாபுக்தியின் காலம் உங்கள் மகனுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தரும் வகையில் அமைந்துள்ளது. நான்கு மாத காலமாக உங்களுடன் பேசுவதில்லை என்று எழுதியுள்ளீர்கள். வெளிநாட்டில் தனித்து வாழும் அவருடைய மனநிலையைஎண்ணிப் பாருங்கள். உங்கள் மகனுடைய ஜாதக பலத்தினையும் அவருடைய நல்வாழ்வினையும் கருத்தில் கொண்டு அவருடைய விருப்பத்திற்கு சம்மதம் தெரிவியுங்கள். வீட்டில் துளசி மாடத்தில் விளக்கேற்றி வைத்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி 48 நாட்கள் வழிபட்டு வாருங்கள். கவலை தீரும்.

“துளசி அம்ருத ஸம்பூதேஸகாத்வம் கேசவப்ரியா
கேசவார்த்தம் நவாமி த்வாம் வரதா பவ சோபனே,”


இருபத்தொன்பது வயதாகும் நான் ஹைட்ராலிக் ஹோஸ்ஃபிட்டிங்ஸ் தொழில் செய்து வருகிறேன். சுமாராக போய்க் கொண்டிருக்கும் நிலையில் மேலும் பல திட்டங்கள் வைத்துள்ளேன். இருந்தாலும் பயம் என்னை வாட்டுகிறது. எனக்கும் என் தந்தைக்கும் ஒரே நட்சத்திரம். பணிஓய்வு பெற்ற என் தந்தை எனக்கு உதவி செய்து கொண்டு உறுதுணையாய் இருக்கிறார். என்ன பரிகாரம் செய்தால் வாழ்க்கையில் முன்னேறலாம்? விஷ்ணு பார்த்தி, கோபிசெட்டிப்பாளைம்.

பயத்தை விட்டொழித்தால் வாழ்க்கையில் முன்னேறலாம். உத்திரம் நட்சத்திரம், கன்னி ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின் படி தற்போது 17.09.2018 முதல் ராகு தசையில் சுக்கிர புக்தி துவங்கி உள்ளது. இத்தனை நாட்களாக நடந்து வந்த கேது புக்தி மனதில் பயத்தினை தோற்றுவித்திருக்கிறது. தற்போது நல்ல நேரம் என்பது துவங்கிஉள்ளதால் உங்கள் மனதில் உள்ள திட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக செயல்படுத்துங்கள். ஜென்ம லக்னாதிபதி செவ்வாய் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும், தொழில் ஸ்தானத்திற்கு அதிபதி சூரியன் ஆட்சி பலம் பெற்றிருப்பதும் உங்களை கடுமையான உழைப்பாளியாக என்றென்றும் வைத்திருக்கும்.

நீங்கள் செய்து வரும் தொழிலும் நல்லபடியாக கைகொடுக்கும். உண்மையாக உழைப்பவர்கள் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள். வாழ்வினில் சாதிப்பதற்கான நேரம் துவங்கிவிட்டது என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள். உங்களுக்கு உறுதுணையாக நிற்கும் தந்தை கிடைத்தது நீங்கள் செய்த புண்ணியம். அநாவசிய பயத்தினை விட்டொழித்து முயற்சியில் இறங்குங்கள். பயத்தினை விட்டுவிட்டால் ஜெயம் நிச்சயம். நீங்கள் மனதில் வைத்திருக்கும் திட்டங்கள் அனைத்தும்  வெற்றி பெறும். நேரம் நன்றாக இருப்பதால் பரிகாரம் ஏதும் தேவையில்லை.

பத்தாம் வகுப்பில் பயிலும் என் மகன் படிக்கும்போது தூங்கிவிடுகிறான்.அரைமணி நேரம் படித்தாலே தூக்கம் வந்துவிடுகிறது.படிக்க வேண்டும் என்ற நினைப்பு மட்டும் உள்ளது. ஆனால், தூக்கம் வந்து தடுக்கிறது. நன்றாகத் தூங்கி எழுந்த பிறகு படிக்க போனாலும் அரைமணி நேரத்தில் தூக்கம் வந்து விடுகிறது. அவன் தேர்ச்சி பெற என்ன செய்ய வேண்டும்? தமிழ் செல்வி, வேலூர்.

பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, கன்னியா லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி புதனும், கல்வியைக் குறிக்கும் நான்காம் வீட்டிற்கு அதிபதி குருவும் இணைந்து 12ல் அமர்ந்திருக்கிறார்கள். 12ம் வீடு தூக்கத்தைக் குறிப்பது. பாடப் புத்தகத்தை படிக்கும் போது மட்டும் தூக்கம் வருகிறதா அல்லது செய்தித்தாள், வார இதழ்கள், கதைப் புத்தகங்கள் என்று எதைப் படித்தாலும் தூக்கம் வருகிறதா என்று பரிசோதியுங்கள். இவருடைய கண்களில் பிரச்னை இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

முக்கியமாக நரம்பு பலவீனம் காரணமாகவும் இதுபோன்ற பிரச்னை உண்டாகலாம். கண் மருத்துவத்தில் நரம்பியல் சார்ந்த நிபுணர்களிடம் உங்கள் மகனை அழைத்துச் சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள். தினமும் காலையில் சூரியஒளி படும் இடத்தில் உட்கார்ந்து படிக்க வையுங்கள். பச்சைப் பயறு, கொண்டைக் கடலை தானியங்களை சிறிதளவு ஊறவைத்து தண்ணீரை வடித்து பச்சையாக தினமும் சாப்பிட்டு வரச் செய்யுங்கள். புதன்கிழமை நாளில் தட்சிணாமூர்த்தி சந்நதியில் விளக்கேற்றி வைத்து இந்த ஸ்லோகத்தை சொல்லி வணங்கச் சொல்லுங்கள். 09.12.2018க்கு மேல் அவரது பிரச்னை சரியாகி விடும்.

“ஓம் நமோ பகவதேதக்ஷிணாமூர்த்தயேமஹ்யம் மேதாம்
ப்ரக்ஞாம் ப்ரயச்சஸ்வாஹா,”


முப்பது வயதாகும் என் மகன் வங்கியில் பணிபுரிகிறார். இன்னும் திருமணம் முடியவில்லை. அவருக்கு பேசும்போது முதலில் கொஞ்சம் பேச்சு வராது. பிறகு நன்றாக பேசுவார். இதனால் அவர் அடிக்கடி திருமணம் வேண்டாம் என்று கூறுகிறார். அவருக்கு நல்லபடியாக மணவாழ்வு அமைய என்ன செய்ய வேண்டும்? சேலம் வாசகி.

இது ஒன்றும் பெரிய பிரச்னை அல்ல என்பதை உங்கள் மகனிடம் அவ்வப்போது சொல்லிப் புரிய வையுங்கள். சித்திரை நட்சத்திரம் (ஹஸ்தம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்), கன்னி ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. வாக்கு ஸ்தானமாகிய இரண்டாம் வீட்டில் செவ்வாயும், சனியும் இணைந்திருப்பதால் புதிதாக ஒரு விஷயத்தைப் பேசத் துவங்கும்போது சற்று தடுமாற்றம் உண்டாகிறது. ஸ்தான அதிபதி செவ்வாய் சனியின் சாரம் பெற்றிருப்பதால் இந்தப் பிரச்னையை சரி செய்ய இயலாது. என்றாலும் இது ஒரு குறையே அல்ல. நன்கு பழகியவர்களிடம் ஏற்கனவே பேசிய விஷயமாக இருந்தால் எந்தவிதமான தயக்கமுமின்றி சரளமாகப் பேசுவார்.

இதனை திக்குவாய் என்று கூற இயலாது. பேசும்போது தவறு நேர்ந்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை உணர்வு என்று எடுத்துக்கொள்ள வேண்டும். திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய் ஆட்சி பலத்துடன் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளதாலும், தற்போது நடந்து வரும் தசாபுக்தியின் காலம் திருமணத்திற்கு துணை செய்வதாலும் 11.09.2019க்குள் அவரது திருமணம் நடந்து விடும். தொடர்ந்து நான்கு செவ்வாய்க் கிழமை நாட்களில் அருகிலுள்ள முருகன் கோயிலில் துவரைப் பொடி சாதம் நைவேத்யம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்யுங்கள். முருகனின் அருளால் உங்கள் மகனின் மணவாழ்வு சிறப்பாக அமையும்.

பொறியியல் நான்காம் ஆண்டில் படித்துக் கொண்டிருக்கும் என் மகன் யு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் தேர்விற்கு படிக்கப் போவதாக சொல்கிறான். அதற்கான முயற்சிகளையும் செய்து வருகிறான். ஆனால், படிக்க வைப்பதற்கு பொருளாதார வசதி இல்லை. தெரிந்த குடும்பத்தினர் என் மகனின் படிப்பிற்கு உதவுவதாக சொல்கிறார்கள். அவர்களின் உதவியுடன் என் மகனை படிக்க வைக்கலாமா? உரிய வழி காட்டுங்கள். கணேஷ், பெங்களூரு.

உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது புதன் தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் சூரியன்  குருவின் இணைவு அவரை அரசுப் பணிக்கு ஆசைப்பட வைத்திருக்கிறது. அவருடைய ஜாதக பலத்தின்படி உத்யோகத்தைப்பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் 12ம் வீட்டில் அமர்ந்துள்ளார். அவருடைய ஜாதக அமைப்பின்படி அதிக அலைச்சலைத் தரக் கூடியதாகவோ அல்லது தொலைதூரத்திலோ உத்யோகம் என்பது அமையும். மூன்றாம் வீட்டில் சந்திரன், சனி, கேது ஆகியோரின் இணைவு சற்று பலவீனமான நிலை ஆகும்.

தற்போது நடந்து வரும் நேரம் உத்யோகரீதியாக சாதகமாக உள்ளதால் கல்லூரியில் நடைபெறும் கேம்பஸ் இன்டர்வியூக்களில் கலந்து கொள்ளச் சொல்லுங்கள். நிச்சயமாக ஏதேனும் ஒரு உத்யோகம் கிடைத்து விடும். கிடைக்கின்ற வேலையில் முதலில் சேரச் சொல்லுங்கள். உத்யோகம் பார்த்துக் கொண்டே யுபிஎஸ்சி தேர்விற்கான பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வது நல்லது. அவருடைய ஆசை நிறைவேற இன்னும் சிறிது காலம் பிடிக்கும். அதுவரை அடுத்தவர் கையை எதிர்பார்த்துக் காத்திருப்பது என்பது அவரது மனஉறுதியை குலைத்து விடும். கிடைக்கும் உத்யோகத்தை பொருளாதார ரீதியாக பயன்படுத்திக் கொண்டு பார்ட் டைமில் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வதே அவரது எதிர்காலத்திற்கு நல்லது. சிறப்பான எதிர்காலம் நிச்சயம் உண்டு.

நாற்பது வயதினைக் கடந்தும் எனக்கு இதுவரை திருமண யோகம் வரவில்லை. எனக்கு மறுபிறவி கிடையாது என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். எனக்கு முக்தி கிட்டுமா? இறை பக்தியிலும் திளைத்து இருக்கிறேன். எனக்கு நிலையான தொழிலும், மண வாழ்வும் அமையுமா? நான் என்ன செய்ய வேண்டும்? முரளி, வேலூர் மாவட்டம்.

முதலில் நிலையான தொழிலை அமைத்துக் கொள்ள வேண்டும். ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் தற்போது குருதசையில் ராகு புக்தி நடந்து வருகிறது.  திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய் பத்தாம் பாவத்தில் நீசம் பெற்று சனியின் சாரத்தில் அமர்ந்திருப்பதால் திருமணம் தடைபட்டு வருகிறது. 12ம் வீட்டில் ராகு மற்றும் சந்திரனின் இணைவு மனதில் குழப்பத்தைத் தந்துள்ளது. ஒன்பதாம் வீட்டில் வக்ரம் பெற்றுள்ள குருவின் தசை கடந்த 15 ஆண்டுகளாக நடந்ததால் எதிலும் ஒரு ஸ்திரமற்ற நிலையைக் கண்டிருக்கிறீர்கள். ஜென்ம லக்னத்தில் சூரியன், சுக்கிரனின் இணைவினைப் பெற்றிருக்கும் நீங்கள் முதலில் சுயமாக ஒரு தொழிலை அமைத்துக் கொள்ளுங்கள்.

செங்கல் சூளை, கல், மணல், ஜல்லி வியாபாரம் முதலான பூமி மற்றும் சாலை போக்குவரத்து சார்ந்த துறையில் உங்களுக்கான தொழிலை அமைத்துக் கொள்ளுங்கள். ஏழாம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய் பத்தில் உள்ளதால் இதே தொழிலிலுள்ள குடும்பத்தைச் சேர்ந்த பெண் உங்களுக்கு மனைவியாக வருவார். வேறு ஜாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள். மறுபிறவியின்மை, முக்தி, சந்யாச யோகம் என்று எதைஎதையோ எண்ணி மனதைக் குழப்பிக் கொள்ளாமல் தொழிலில் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள். செவ்வாய்தோறும் சக்கரத்தாழ்வார் சந்நதியில் விளக்கேற்றி வைத்து கீழேயுள்ள ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட்டு வாருங்கள். வாழ்விற்கான அர்த்தம் புரிய வரும்.

“நிகிலதுஷ்கர்மகர்சனநிகம ஸத்தர் மதர்சன
ஜயஜய ஸ்ரீஸூதர்சன ஜயஜய ஸ்ரீ ஸூதர்சன,”

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா்  திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-06-2019

  16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-06-2019

  15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • china

  சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

 • oaman_thee11

  மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

 • AftermathProtestHK

  ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்