SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சகல நன்மைகளும் அருளும் திருக்கரம்பனூர் கோயில்

2018-09-19@ 09:36:34

திருச்சி அடுத்த பிச்சாண்டார்கோவிலில் உத்தமர் கோயில் உள்ளது. முப்பெருந்தேவியருடன் மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள ஒரே ஆலயம் இதுதான்.  வேறெந்தக் கோயில்களிலும் இல்லாத தனிச்சிறப்பாக சப்த குருக்கள் எனப்படும் ஏழு குரு பகவான்களும் ஒருங்கே அமைந்துள்ளனர். இங்கு குருப்பெயர்ச்சி மற்றும்  லட்சார்ச்சனையில் பங்கு கொள்வது எண்ணிலடங்கா நற்பலன்களை நல்கும். உலகில் வேறெந்த கோயிலிலும் இல்லாத சிறப்பாக படைப்புக் கடவுள் பிரம்மாவே  குருபகவான் ஸ்தானத்தில் விமானத்துடன் கூடிய தனி சன்னதியில், தென்முகமாக அனுக்கிரக மூர்த்தியாக அமர்ந்து, அருகில் தனி சன்னதியில் சரஸ்வதி தேவியை தன்னுடன் கொண்டு அருள் வழங்கி வருகிறார். பிச்சாண்டார்கோவில் என்றழைக்கப்படும் இவ்வூரும், உத்தமர் கோயிலும் சைவ, வைணவ  ஒருமைப்பாட்டுக்குச் சான்றாக விளங்குகின்றன. வைணவ புராணத்தின் படி பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டிருந்த சிவபெருமான், பிச்சைக்காரன்  வடிவத்தில் வந்து அவரது தோஷம் நீங்கப் பெற்றதால், பிச்சாண்டார் கோவில் என்ற காரணப்பெயரை இவ்வூர் பெற்றது.

சிவபெருமானின் புராண வரலாற்றின் படி அவருக்குரிய 63 வடிவங்களில் ‘பிச்சாடனர்’ அதிமுக்கியமானது. உலகில் நன்னெறி போதிக்க வந்த முனிவர்களும் அவர்தம் மனைவியரும் கர்வத்தால் அறிவிழந்து நின்ற போது அவர்களை நெறிப்படுத்த சிவபெருமான் பிச்சாண்டவராகத் தோன்றியது இவ்வூரில் தான். பிச்சாண்டார்கோவில் என்ற காரணப்பெயர் மிகப் பொருத்தமானது. இப்பூவுலகில் உயிர்களைப் படைப்பதற்காக பெருமாளின் நாபிக்கமலத்தில் பிரம்மா தோன்றி இக்கோயிலில் குடிகொண்டு விளங்குவதால் பிரம்மபுரி, ஆதிபிரம்மாபுரம், பிரம்மாபுரம் என்று பண்டைய பெயர் கொண்டு விளங்குகிறது. முன்னொரு காலத்தில் பிரளயத்தின்போது உலகம் முழுவதும் ருத்ரமூர்த்தியிடம் ஒடுங்கிய போது நித்தியமாகிய வேதங்களே தங்களுக்கு இருப்பிடமின்றி தன்னைச் சரணடைந்தபோது சோமேசக்கடவுள் தான் பூலோகத்தில் அவதரிக்கப் போவதாகக் கூறி வேதங்கள் கதம்ப மரங்களாகவும், ஆகமங்கள் புஷ்பங்களாகவும், இதிகாசங்கள் பழங்களாகவும், புராணங்களைப் பறவைகளாகவும் மாறி தனக்கு மனோகரமான நிழலைத் தர உத்தரவிட்டார்.

அதன்படி, வேதங்கள் கதம்ப மரங்களாக தோன்றியதால் இவ்வூர் கதம்பவனம், திருக்கரம்பந்துறை என்ற பெயர் பெற்றது. பிரம்மா பூஜையைச் சோதிக்க பெருமாள்  கதம்ப மரங்களினூடே மறைந்து நின்று பின்னர் தன்னை வெளிப்படுத்தியதால் கதம்பனூர் என்றும், கதம்ப மரங்களின் மற்றொரு பெயராகிய நீபமரங்களின்  பெயரால் நீபவனம் என்றும் அழைக்கப்பட்டது. கதம்ப முனிவர் என்ற மகரிஷியின் தவத்திற்கு மனமிறங்கி மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்ததால் கதம்பனூர்  என்றும் பின்னர் மருவி கரம்பனூர் என்றும், ‘திரு’ என்ற அடைமொழியுடன் ‘திருக்கரம்பனூர்’ என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது. உத்தமர் கோயில் என்று  இவ்வாலயம் அழைக்கப்படுவதும் காரணப் பெயர் தான். கோயிலில் படைப்புத் தொழில் புரியும் பிரம்மா தனி சன்னதியில் குரு பகவான் ஸ்தானத்தில் தெற்கு  முகமாக அமர்ந்து பக்தர்களுக்கு வேண்டுவன அனைத்தையும் அருளி வருகிறார். அவரது இடப்புறம் கல்விக் கடவுள் கலைவாணி ஞானசரஸ்வதி குடி கொண்டு  கல்வி, கலை, ஞானம், நல்லறிவு ஆகியவற்றை வழங்கி வருகிறார்.

காக்கும் கடவுளாகிய திருமால், புருஷோத்தமர் என்ற திருநாமத்துடன் ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டுள்ளார். இவரது இடப்புறம் தனி சன்னதியில்,  பிச்சாடனரின் பிரம்மஹத்தி தோஷம் நீங்க அவரது பிச்சைப் பாத்திரம் பூரணமாக நிரம்பும் அளவு அன்னமிட்ட பூரணவல்லித் தாயார் குடிகொண்டு சகல  ஐஸ்வர்யங்களையும் நல்கி அழிவில்லாமல் சகல உயிர்களையும் காத்து வருகிறார். அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய தொழில்களை புரிந்து வரும்  சிவபெருமான் பிச்சாண்டவர் என்ற திருநாமத்துடன் சவுந்தர்யபார்வதியை தென்முகமாகக் கொண்டு விளங்குகிறார். பிச்சாடனராக இத்தலத்தில்  அவதரித்த இறைவன், நெறி கெட்டு கர்வத்துடன் இருந்த ரிஷிகளையோ அவர்களது பத்தினிகளையோ அழிக்காமல் அவர்களின் அகம்பாவத்தை மட்டும்  அழித்ததால் அவர் உத்தமராக விளங்குகிறார். திருச்சியில் இருந்து சேலம் நெடுஞ்சாலையில் 5 கி.மீ தொலைவில் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உத்தமர் கோயில் அமைந்துள்ளது.

ஆரோக்கியம், தொழில் மேன்மை, வேலைவாய்ப்பு, சுயதொழில், உத்யோக உயர்வு, திருமணம், புத்திரபாக்கியம், உயர்கல்வி, வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு,  மனநலம், வழக்குகளில் வெற்றி, மனநிம்மதி உள்ளிட்ட அனைத்து பிரார்த்தனைகளும் 11 வாரங்கள் தொடர்ந்து அர்ச்சனை செய்வதனால் பிரம்மாவினால்  நிறைவேற்றி வைக்கப்படுகின்றன. பிரார்த்தனை கை கூடிய பிறகு கோயிலில் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை அல்லது தயிர் சாதம் தளிகை செய்து  அர்ச்சனை செய்து வேண்டுதலை நிறைவு செய்ய வேண்டும். பக்தர்களுக்கு ஜாதகத்தில் விஷ்ணு தோஷம் இருந்தால் புதன் கிழமையிலும், சிவன் மற்றும் குரு  தோஷம் இருந்தால் வியாழக்கிழமையிலும், நாகதோஷம் மற்றும் சுமங்கலி தோஷம் இருந்தால் வெள்ளிக்கிழமையிலும் பிரம்மாவிற்கு உகந்த ஆத்தி இலையில்  அர்ச்சனை செய்வது நலம். புத்திரபாக்கியம் வேண்டுவோர் ராமபிரானின் தந்தை தசரதமகாராஜா பூஜித்த தசரதலிங்கத்தை வில்வ இலையால் எந்தநாளும்  அர்ச்சனை செய்து பலன் பெறலாம். தசரதலிங்கத்திற்கு தொடர்ந்து 48 வாரங்கள் அர்ச்சனை செய்து குழந்தைப் பேறு பலருக்கு கிடைத்துள்ளதாக பக்தர்கள்  கூறுகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • china_cloning11

  செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

 • snow_river_falls11

  மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

 • christmas_planeealm1

  உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

 • sutrula_12Icehotel1

  சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

 • mumbai_theevibathu11

  மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்