SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அன்னையின் அருளால் ஆரோக்யம் அடைவீர்கள்!

2018-09-18@ 15:39:25

எனது மகளின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்து விட்டது. ஏழு வயதில் மகன் உள்ளார். ஏழில் ராகு உள்ளதால் தோஷம் என்கிறார்கள். மறுமணம் எப்போது கைகூடும்? வரும் நபர் என் மகளையும், பேரனையும் பார்த்துக் கொள்வாரா? சாந்தி, திருச்சி.

பூசம் நட்சத்திரம், கடகராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகத்தின்படி தற்போது புதன்தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் சந்திரன் கேதுவின் சேர்க்கையும், திருமண வாழ்வினைப்பற்றி சொல்லும் 7ம் வீட்டில் ராகுவின் அமர்வும், களத்திர ஸ்தானாதிபதி சனியின் வக்ர சஞ்சார நிலையும் பலவீனமான அம்சத்தினை தந்திருக்கிறது. சனி ஆறில் அமர்ந்திருப்பதால் வாழ்க்கைத்துணை என்பது இவருக்கு அத்தனை சாதகமாக இல்லை. மேலும், ஜன்ம லக்னத்திலேயே உண்டாகியிருக்கும் சந்திரன் கேதுவின் இணைவு தெளிவான மனநிலையை இவருக்கு தரவில்லை.

முதலில் தனது மனநிலையில் உறுதியை கொண்டு வரவேண்டும். சந்தேக குணத்தினை விட்டொழிப்பது நல்லது. இவரது ஜாதகப்படி தனது மகனை சிறப்பான முறையில் வளர்த்து ஆளாக்க இயலும்.பெற்றோரை சார்ந்திருக்காமல் உங்கள் மகளால் தனது சொந்த காலில் நிற்க முடியும். உத்யோகத்திற்கு செல்வது அவரது எதிர்காலத்திற்கு நல்லது. உங்கள் மகள் மற்றும் பேரனின் நல்வாழ்வினை கருத்தில் கொண்டு மறுமணத்திற்கு முயற்சிக்க வேண்டாம். மகளின் மனநிலையில் உறுதியினைக் காண திங்கட்கிழமை தோறும் அருகிலுள்ள விநாயகரின் ஆலயத்தில் பாலபிஷேகம் செய்து சந்நதியை ஏழு முறை வலம் வந்து வணங்கச் சொல்லுங்கள். நல்வாழ்வு கிட்டும்.

நாற்பத்தாறு வயதாகும் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பல கோயில்களுக்குச் சென்று பரிகார பூஜை செய்துள்ளேன். எனக்கு திருமணம் நடக்குமா அல்லது சந்நியாச வாழ்க்கையா? மனதில் நிலவும் இனம்புரியாத பயம், கவலை, நிம்மதியின்மை தீர எந்த தெய்வத்தை வணங்க வேண்டுமென்று வழிகாட்டுங்கள். பழனிசாமி, கோவை.

ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சந்திரதசையில் சனி புக்தி நடந்து வருகிறது. திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் செவ்வாயும், உடன் நீசம் பெற்ற குருவும் அமர்ந்திருந்தாலும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சனியின் அமர்வுநிலை சாதகமாகத்தான் உள்ளது. 26வது வயதில் வந்த திருமண யோகத்தை தவிர்த்ததன் விளைவால் திருமணத் தடை கண்டு வருகிறீர்கள். என்றாலும் தற்போது நேரம் கூடி வந்துள்ளது. நீங்கள் பிறந்த ஊருக்கு தென்திசையில் உள்ள ஊரைச் சார்ந்த ஒரு பெண்ணை வெகுவிரைவில் சந்திப்பீர்கள்.

அவரைக் கண்டதும் தங்கள் உள்மனதிற்கு பிடித்துப் போகும். அந்தஸ்து பாராமல் கரம் பற்றுங்கள். ஒருவகையில் அந்தப் பெண்ணின் குடும்பம் உங்களுடைய தொழிலைச் சார்ந்திருக்கும். அந்தப் பெண்ணின் வீட்டிற்கு அருகில் முருகன் கோயில் இருப்பதற்கான வாய்ப்பு உண்டு. திங்கட்கிழமைநாளில் காரமடை ரங்கநாதர் ஆலயத்திற்குச் சென்று நான்கு நெய்விளக்குகள் ஏற்றி வைத்து கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி வழிபட்டு வாருங்கள். 23.11.2018 வாக்கில் மனதிற்கு பிடித்த பெண்ணை சந்திப்பீர்கள். மணவாழ்வு நல்லபடியாக அமையும்.

“லக்ஷ்மீநிவாஸே ஜகதாம் நிவாஸேஹ்ருத்பத்மவாஸே ரவிபிம்பவாஸே
க்ருபாநிவாஸே குணவ்ருந்தவாஸேஸ்ரீரங்கவாஸே ரமதாம் மநோ மே”


அறுபத்தைந்து வயதாகும் எனது தாயார் கடந்த வருடம் மனவருத்தத்துடன் வீட்டை விட்டுச் சென்று விட்டார். என் அம்மா எப்போது எங்கள் வீட்டிற்கு வருவார்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? ஈஸ்வரன், திருப்பூர்.

ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசியில் பிறந்திருப்பதாக கடிதத்தில் எழுதியுள்ளீர்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ள தேதியும், நேரமும் உத்திரம் நட்சத்திரம் முதல் பாதம் சிம்ம ராசியில் பிறந்துள்ளதாகக் காட்டுகிறது. இரண்டில் எது சரி என்பதை உறுதி செய்ய வேண்டிய தாயாரும் மன வருத்தத்துடன் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். இந்நிலை உங்கள் வம்சத்திற்கு நல்லதல்ல. உங்கள் தாயார் வீட்டை விட்டு வெளியேறிய தேதி மற்றும் நேரத்தினை சரியாகக் குறித்து வைத்திருப்பதைக் காணும்போது உங்கள் கவனத்திற்குத் தெரிந்தே நடந்த நிகழ்வு இது என்பது புரிகிறது. செய்த தவறினை உணர்ந்து காலில் விழுவது ஒன்றே பிராயச்சித்தமாகும். தாயாரிடம் மானசீகமாக மன்னிப்பு கோருங்கள்.

அவர் எங்கிருந்தாலும் உங்களுடைய பிரார்த்தனை அவருடைய உள்ளுணர்வை சென்று தாக்கும். மகனின் தேவையை நிறைவேற்றி வைப்பவளே தாய். நிச்சயமாகத் திரும்பி வருவார். வளர்பிறையில் வரும் பிரதோஷ நாளில் திருவண்ணாமலை திருத்தலத்திற்குச் சென்று பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டு அண்ணாமலையாரை தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அன்றைய தினமே கிரிவலம் வந்து வணங்குங்கள். கிரிவலம் வரும்போது கீழேயுள்ள பதிகத்தை மனதாற உச்சரித்துக் கொண்டே வாருங்கள். உங்கள் தாயாரை விரைவில் காண்பீர்கள்.

“மாப்பிணைதழுவியமாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைத்தொழ
நாப்பிணைதழுவியநமச்சிவாயப்பத்து
ஏத்தவல் லார்தமக் கிடுக்கண் இல்லையே.”


நானும் எனது அண்ணனும் இணைந்து சொற்ப வருமானத்தில் ஜெராக்ஸ் கடை நடத்துகிறோம். யாரும் முயற்சிக்காததால் எங்களின் திருமணம் இதுவரை நடக்கவில்லை. 50 வயதாகும் அண்ணாவிற்கு திருமணத்தில் விருப்பமில்லை. 46 வயதாகும் நான்,கணவரைப் பிரிந்து வாழும் பெண்ணை திருமணம் செய்ய நினைத்து அந்த முயற்சியும் தள்ளிப்போய் விட்டது. என்னுடைய எதிர்காலத்திற்கு ஒரு நல்லவழி சொல்லுங்கள். சந்தோஷ்குமார், தஞ்சாவூர்.

உத்திராடம் நட்சத்திரம், மகர ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது குருதசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் குரு பகவான் ஆட்சி பலத்துடன் அமர்ந்து உங்களை நல்வழியில் செயல்பட வழிநடத்திக் கொண்டிருக்கிறார். திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் பாவம் சுத்தமாக இருப்பதும், குடும்ப ஸ்தானத்தில் வலிமையான கிரகங்களின் இணைவும் சாதகமான அம்சமே. மேலும், ஐந்தாம் வீட்டில் ஆட்சி பெற்ற செவ்வாயின் நிலை வம்ச விருத்தியைக் காட்டுகிறது. திருமணம் நடந்தால்தான் வம்சம் என்பது விருத்தியாகும். ஆக, உங்களுக்கு ஜாதக ரீதியாக எந்தவிதமான தோஷமும் இல்லை.

நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல், யாரும் முயற்சிக்காததால் திருமணம் என்பது நடைபெறாமல் நின்றுபோய் இருக்கிறது.என்றாலும் தற்போது நடந்து வரும் தசாபுக்தியின் காலம் திருமணத்திற்கு துணை செய்கிறது. உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம் பெற்றுள்ளதால் இந்த நேரத்தில் திருமணம் நடந்து விடும். வெளிநாடு செல்ல முயற்சிக்க வேண்டாம். உங்கள் ஊரிலிருந்து வடகிழக்கு திசையில் உள்ள ஊரைச் சேர்ந்த பெண்ணாக அமைவார். வெள்ளிக்கிழமை நாளில் ஒப்பிலியப்பன் கோயிலுக்குச் சென்று பெருமாளை தரிசித்து திருமணத்தை அவர் சந்நதியிலேயே நடத்துவதாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். 20.06.2019ற்குள் மனதிற்கு பிடித்த பெண்ணோடு திருமணம் நடந்துவிடும்.

2009ல் புதுவீடு கட்டி குடியேறினேன். அதிலிருந்து எனக்கும், என் மனைவிக்கும் உடல்நிலை சரியில்லாமல் போகிறது. ஏதோ ஒரு நோய் வந்துகொண்டே இருக்கிறது. வாஸ்து பார்க்காமல் வீடு கட்டி விட்டேன். பார்மசி படித்து மருந்து கடை வைத்துள்ளேன். மற்றவர்களின் வியாதிக்கு மருந்து கொடுக்கும் என்னால் எங்கள் வியாதியை சரிசெய்ய இயலவில்லை. உரியவழி சொல்லுங்கள். செந்தில்குமார், திருச்சி.

நீங்கள் வரைந்து அனுப்பியிருக்கும் வீட்டின் வரைபடத்தை காணும்போது பெரிய அளவிலான வாஸ்து தோஷம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. கட்டிட அமைப்பில் தோஷம் இல்லை என்றாலும் வீடு கட்டியிருக்கும் மனையில் ஏதேனும் தோஷம் இருந்தால் கூட இதுபோன்ற இன்னல்களை சந்திக்க நேரிடும். மனையில் ஏதேனும் தோஷம் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள வீட்டு வாயிலில் வேப்ப மரமும், பின்புற வாயிலில் துளசி மாடம் வைத்து அதில் துளசிச் செடியையும் வளர்த்து வாருங்கள். இந்த இரண்டும் எந்தவிதமான இடைஞ்சலும் இன்றி நல்லபடியாக வளர்ந்தால் நமது மனையில் தோஷம் ஏதுமில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். இரண்டு வாயிற் கதவுகளையும் பகல் நேரத்தில் திறந்து வைத்திருக்க வேண்டும். இருபுறமிருந்தும் காற்று உள்வந்து வெளியேற வேண்டும். உங்கள் குடும்பத்தினரின் ஜாதகங்களில் ஒரு ஒற்றுமையைக் காண முடிகிறது.

தம்பதியராகிய நீங்கள் இருவரும் திருவோண நட்சத்திரத்திலும், மூத்தமகன் ரோகிணியிலும், இளையவன் ஹஸ்த நட்சத்திரத்திலும் பிறந்துள்ளீர்கள். ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ஆகிய மூன்றும் சந்திரனின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நட்சத்திரங்கள். நீங்கள் நால்வரும் சந்திரனின் அடிப்படை குணமான அன்பு, பாசம், சென்ட்டிமெண்ட் அதிகம் உடையவர்கள். இளகிய மனம் படைத்த நீங்கள் ஆங்கில மருந்துகளை நாடாமல் இயற்கை மருத்துவத்தின் மேல் அதிக நம்பிக்கை கொள்ளுங்கள். பௌர்ணமி நாளில் முழுநிலவின் ஒளி உங்கள் அனைவரின் மீதும் படுகின்ற வகையில் மொட்டை மாடியில் அமர்ந்து இரவு உணவினை உட்கொள்ளுங்கள். அந்தாதி பாடல்களை தினமும் ஒன்றாக மனப்பாடம் செய்து பூஜையறையில் சொல்லி வாருங்கள். அபிராமி அன்னையின் அருளால் ஆரோக்யம் அடைவீர்கள்.

காவல்துறையில் பணிபுரியும் என் கணவருடனான விவாகரத்து வழக்கில் ஜீவனாம்சம் தொகைக்கு மட்டும் முடிவு வந்துள்ளது. எனது நகைகளைப் பெறுவதற்கு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். எனது நகைகள் திரும்பக் கிடைக்கவும், எனது கணவரிடமிருந்து மாதாமாதம் ஜீவனாம்ச தொகை தடங்கல்  இல்லாமல் கிடைக்கவும் வழிகாட்டுங்கள். ஒரு வாசகி.

சதய நட்சத்திரம், கும்பராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சனிதசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. உங்கள் கணவரின் பிறந்த தேதி, நேரம் ஆகிய விவரத்தை நீங்கள் கடிதத்தில் குறிப்பிடவில்லை. உங்கள் ஜாதக பலத்தின்படி உங்கள் நகைகளுக்கு உண்டான தொகையை நீங்கள் அவரிடமிருந்து பெற்றுவிட இயலும். என்றாலும் நீங்கள் சற்றுஅவசரப்பட்டு விட்டீர்களோ என்று தோன்றுகிறது. திருமண நாளிலிருந்தே இரு குடும்பத்தாருக்கும் ஒத்துப்போகவில்லை என்று எழுதியுள்ளீர்கள். திருமணத்திற்குப் பின் உங்கள் குடும்பம் எது என்பதில் தடுமாற்றம் கண்டிருக்கிறீர்கள்.

நடந்து முடிந்த தவறுகளை இனி சரி செய்ய இயலாது என்றாலும் இனிமேல் நடக்க வேண்டியவற்றில் கவனத்தோடு செயல்படுங்கள். பெற்றோரின் ஆதரவில் தற்போது இருந்தாலும் உங்களுக்கென்று ஒரு வேலையைத் தேடிக் கொள்ளுங்கள். உங்கள் ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமையாக உள்ளதால் உங்களுக்கான உத்யோகம் வெகுவிரைவில் அமைந்து விடும். உங்கள் மகன்கள் வளர்ந்து சம்பாதிக்கும் வரை நீங்கள் வேலை பார்க்க வேண்டும் என்ற வைராக்யத்தினை மனதில் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். சனிக்கிழமை தோறும் அருகிலுள்ள ஆஞ்சநேயர் ஆலயத்திற்குச் சென்று 108 முறை ஸ்ரீராமநாமத்தினை ஜபம் செய்து வழிபட்டு வாருங்கள். பிரச்னைகள் தீரும்.

என் தூரத்து உறவினர் ஒருவரை ஆறு வருடமாக விரும்புகிறேன்.அவரும் என்னை விரும்புகிறார். ஆனாலும், எங்கள் திருமணத்திற்கு தடையாக அவரது அக்கா குறுக்கிடுகிறார். தனது மகளைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று அவரை வற்புறுத்துகிறார். செய்வதறியாமல் திகைக்கும் அவர் தன் அக்காள் மகளுக்கு வேறொரு இடத்தில் திருமணம் முடியும் வரை காத்திருப்போம் என்கிறார். வயதாகிக் கொண்டே போகிறது. எங்கள் பிரச்னைக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள். சரஸ்வதி, பட்டுக்கோட்டை.

பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் தற்போது சந்திர தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய் ஐந்தாம் பாவத்தில் அமர்ந்திருப்பதால் உங்கள் மனதிற்குப் பிடித்தமானவரே உங்கள் மணாளனாக அமைவார். உங்கள் ஜாதகரீதியாக எந்தவிதமான தோஷமும் இல்லை. நீங்கள் விரும்பும் நபரின் ஜாதகத்தை அனுப்பாமல் அவரது நட்சத்திரத்தை மட்டும் எழுதியுள்ளீர்கள். உங்கள் இருவருக்கும் இடையே வசியப் பொருத்தம் என்பது நன்றாக உள்ளது.

ஒருவருக்கொருவர் பரஸ்பரம் புரிந்து கொண்டு நடக்கும் தன்மை சிறப்பாக இருக்கும். அவருடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து சிறிது காலம் காத்திருங்கள். வயதாகிக்கொண்டே போகிறது என்ற உங்கள் ஆதங்கத்தினையும் மறுப்பதற்கில்லை. திங்கள் மற்றும் புதன்கிழமை நாட்களில் அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று இறைவன், இறைவி இருவரின் சந்நதியிலும் நெய் விளக்கேற்றி வைத்து கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி வழிபட்டு வாருங்கள். 16 வாரங்கள் முடிவதற்குள் உங்கள் திருமணம் நிச்சயமாகிவிடும்.

“கௌரிவிலாஸபவநாயமஹேச்வராய பஞ்சாநநாயசரணாகதகல்பகாய
ஸர்வாயஸர்வஜகதாமதிபாயதஸ்மை சம்சாரதுக்ககஹநாத் ஜகதீசரக்ஷ.”


வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nheru_soniaa11

  நாட்டின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவு தினம் : சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி

 • malar_modi12

  2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து

 • peruearthqq1

  பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவு

 • Trump_japan11

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

 • kashmir_kola11

  தீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்