SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பக்தர் தம் பாரம் சுமக்கும் கருட பகவான்

2018-09-17@ 09:47:03

நாச்சியார் கோயில் என்று வழங்கப்பட்டதாலேயே இந்தக் கோயிலில், தினமும் தாயாருக்குதான் முதல் மரியாதை செய்விக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, எம்பெருமான் உலா வரும்போது, முதலில் தாயார் செல்ல, பின்னால் பெருமான் தொடரும் வழக்கமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதோடு பெருமாளின் கருவறையில் திருமணக் கோலத்தில் வஞ்சுளவல்லித் தாயார் அருட்பாலிப்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அதே கருவறையில் பெருமானுடன் வந்த பிற நான்கு அம்சங்களும், திருமணத்தை நடத்தி வைத்த பிரம்மனும் காட்சி தருவது பார்க்க சிலிர்ப்பூட்டுகிறது. இத்திருத்தலத்தில் தரிசனம் தரும் சக்கரத் தாழ்வார் தனிப் பெருமை கொண்டவர். மேதாவி முனிவருக்கு ஸ்ரீதேவி குழந்தையாகக் கிடைத்தது போல, இவரும் விக்ரகமாக மணி முத்தாற்றில் கிடைத்தவர்தான்.

தனது வழக்கமான நீராடலின் போது இவ்வாறு இந்த சக்கரத்தாழ்வார் கிடைக்கப்பெற, அப்போது ஒரு அசரீரி, இந்த விக்ரகத்தைத் தன்னுடைய ஆசிரமத்திலேயே வைத்து முனிவர் வழிபடலாம் என்று கூறியது. அதன்படியே முனிவரும் பெருமகிழ்ச்சி கொண்டு சக்கரத் தாழ்வாரைத் தன் குடிலுக்கு எடுத்துச் சென்று வழிபட்டார். அவரே இப்போது நம் தரிசனத்துக்காக இந்தக் கோயிலில் தனி சந்நதி கொண்டிருக்கிறார். வித்தியாசமான சக்கரத்தாழ்வார் இவர். ஆமாம், இவரது காலடியில் நவகிரகங்களும், மேற்பகுதியில் திருமாலின் தசாவதாரங்களும் பொலிகின்றன. கோச்செங்கண் சோழன், மிகச் சிறந்த மன்னன். ஆழ்ந்த சிவபக்தி கொண்டவன். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக, சோழ நாயனார் என்றும் சிறப்பிக்கப்பட்டவன். ஒருசமயம் ஒரு போரில் தன் நாட்டை இவன் இழக்க வேண்டிவந்தது. பகைவரிடமிருந்து மறைந்து வாழவேண்டிய நிர்ப்பந்தம்.

மீண்டும் தன் நாட்டை கைக்கொள்வோமா என்ற ஏக்கத்திலும், துக்கத்திலும் அலைந்துகொண்டிருந்த அவன், மணிமுத்தா நதிக்கரையில் சில முனிவர்களை சந்தித்தான். அவர்களிடம் தன் ஆற்றாமையைக் கூறி அழுதான். அவனைத் தேற்றிய அவர்கள், அந்த மணிமுத்தா நதியில் நீராடி, அருகே கோயில் கொண்டிருக்கும் திருநறையூர் நம்பியை வழிபடுமாறு அறிவுறுத்தினார்கள். அவர்களுடைய வழிகாட்டுதலின் பேரில் மனம் முற்றிலும் நம்பியையே நினைந்து, நீரில் மூழ்கி நனைந்து எழுந்த அவன் திகைத்தான். ஆம், அவனது வலது கை ஒரு வாளினைப் பற்றியிருந்தது. ‘நந்தகம்’ என்ற ஆற்றல் மிகுந்த வாள்! நம்பியின் தெய்வீக அருள்தான் அது என்று நம்பிய அவன், அந்த வாளால், எதிரிகளை நிர்மூலமாக்கித் தன் நாட்டை மீண்டும் வசப்படுத்திக் கொண்டான்.

இழந்தேவிட்டோமோ என்று கவலைப்பட்ட தன் வீரம் தன்னுள் பேரூற்றாகப் பெருகி, அந்த வேகத்தில் எதிரியை ஒடுக்கி, விரட்டியதற்கு அந்த தெய்வ வாள்தான் காரணம் என்பதை உளமார உணர்ந்த கோச்செங்கண் சோழன், இதற்கெல்லாம் மூலமான இப்பெருமானுக்கு, நன்றியறிதலாக தங்கத்தால் விமானம் அமைத்தான். பூஜை செலவுக்கு உதவும்படி நிலங்களை தானமாக அளித்தான். தன் பெயரில் ஒரு திருமண மண்டபத்தையும் பொது மக்கள் நலனுக்காக உருவாக்கினான். இத்தனைக்கும் அதற்கு முன் 70 சிவாலயங்களை நிர்மாணித்தவன் இந்த சோழன் என்பது குறிப்பிடத்தக்கது. அதனாலேயே சிவன் கோயில் அமைப்பில் யாளிகளுடன் இந்தக் கோயிலை அமைத்தான். அதுமட்டுமல்ல, வெளி கோபுரத்திலிருந்து பார்த்தாலும் பெருமாளை தரிசிக்கும் வகையில் மாடக் கருவறையாக, படிகளுடன் கூடியதாக உருவாக்கினான்.இந்தச் சம்பவத்தை திருமங்கை யாழ்வார் மிகவும் சிறப்பித்துப் பாடுகிறார்: ‘‘செம்பியன் கோச்செங்கணான் சேர்ந்த

கோயில்
திருநறையூர்  மணிமாடம் சேர்மின்களே
தெய்வவாள் வளங்கொண்ட சோழன்     சேர்ந்த
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே’’

ராஜகோபுரத்துக்குள் நுழைந்ததும் நம்மாழ்வார் சந்நதி. அவரை தரிசித்துவிட்டுச் சென்றால், கருவறை மண்டபத்தில் வலது பக்கம் ராமர் சந்நதி. மிக
நேர்த்தியான, கலைநயம் மிக்க தூண்கள் இந்த மண்டபத்துக்கு அழகு சேர்க்கின்றன. பன்னிரண்டு படிகள் ஏறி மூலவர் பெருமாளை தரிசிக்கலாம். கிழக்கு நோக்கிய திருமணக் கோலம். வலது கையில் சக்கரம், இடது கையில் சங்கு. ஒரு காலை முன் வைத்த தோற்றம். திருமங்கையாழ்வாருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்வதற்காக மட்டுமல்ல; தன் பக்தர்கள் அனைவரின் துயரங்களையும் விரட்டியடித்து, அவர்கள் வாழ்வில் நன்மைகளைப் பெருக்க, தானே அடியெடுத்து, முன்வரும் அருள் அது!நாச்சியார் கோயில் என்றவுடனேயே எல்லோரும் உடனே நினைவுக்குக் கொண்டுவருவது, கல் கருடனைத்தான். சுமார் பத்தடி சதுரத்தில் தனிச் சந்நதி கொண்டிருக்கிறார் இந்த பிரமாண்டமான கருட பகவான். சாளக்கிராமத்தால் ஆனவர்.

‘கவலைகள் நீங்கிட கல்கருட பகவான் தரிசனம்’ என்று இவர் சந்நதி முன் எழுதிவைத்திருக்கிறார்கள். இவர் தன் உடலில் எட்டு நாகங்களை ஆபரணங்களாகத் தரித்திருக்கிறார். இதனாலேயே ராகுகேது பாதிப்புகளை நீக்கி பக்தர்களை மனநிம்மதி கொள்ள வைக்கிறார். திருநறையூர் பெருமாளுக்குத் திருமணம் செய்து வைத்தவர் இவர். திருமகளைத் தேடி திருமால் பூவுலகிற்கு வந்தபோது, அவரைச் சுமந்து வந்த கருடன், இத்தலத்தில் தாயாரைத் தேடுமாறு சூசகமாக அறிவித்ததாகவும், அதன் பிறகே நாராயணன் ஐந்து நிலைகளாக உருக்கொண்டு தேவியைத் தேடியதாகவும் சொல்கிறார்கள். இந்த வகையில், இந்தத் தலத்தில் தன் தலைவனுக்குத் திருமணம் செய்துவைத்த மேன்மையால் இங்கேயே தானும் கோயில் கொண்டிருக்கிறார் கருட பகவான்.

இவரை வழிபட்டால், திருமணப் பேறு கிட்டும், தோஷங்கள் நிவர்த்தி ஆகும், உத்தியோகப் பிராப்தம் கிட்டும் என்றும் சொல்கிறார்கள். நாச்சியார் கோயில் திருநறைநம்பி பெருமாளுக்கு திருவாராதனம் முடிந்ததும் கருடாழ்வாருக்கு அமுத கலசம் நிவேதிக்கிறார்கள்  ஒரு நாளைக்கு ஆறு வேளைகள். அது என்ன அமுத கலசம்? அதுதான் மோதகம், அதாவது கொழுக்கட்டை! இதனால்தானோ என்னவோ கோயில் ராஜகோபுரத்துக்கு வலதுபக்கம் பிள்ளையாருக்கென சிறு சந்நதி ஒன்று அமைத்திருக்கிறார்கள்! ‘உள்ளேயும் ஒரு மோதகப் பிரியர் இருக்கிறார், போய் தரிசனம் செய்யுங்கள்’ என்று இந்தப் பிள்ளையார் பக்தர்களை வழிநடத்தி வைப்பதுபோல இருக்கிறது! இந்த கருடன் இன்னொரு அற்புதத்தையும் இந்தக் கோயிலில் புரிகிறார். இங்கே ஆண்டிற்கு இரண்டு முறை கருடன் புறப்பாடு நடைபெறுகிறது.

அச்சமயம் அவர் கருவறையிலிருந்து முதலில் நான்கு பேர், நான்கு மூலைகளில் அவரைத் தாங்கி வெளியே கொண்டு வருவார்கள். அங்கிருந்து புறப்பட்டு கோயில் வாசலருகே வரும்போது கருட பகவானின் கனம் கூடிவிடும். சுமப்பவர்கள் நான்கு பேர் என்பது எட்டு, பதினாறு என்றாகும் வகையில் அவர் பாரமாக உணரப்படுவார். உலாவிற்காக வீதியில் இறங்கும்போது இன்னும் கனம் அதிகரிக்க, மேலும் மேலும் பக்தர்கள் அவரைச் சுமக்க வேண்டிய நிலைமை உருவாகும். ஆமாம், பதினாறு, முப்பத்திரண்டு, அறுபத்து நான்கு என்றுகூட போய்விடும்! ஊர்வலம் முடிந்தபின், மீண்டும் கோயிலுக்குத் திரும்பும்போது கனம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து சுமக்கும் பக்தர்களின் எண்ணிக்கையும் குறைந்து, நிறைவாக நான்கு பேர்களால் அவர் சந்நதியில் அமர்த்தப்படுவார்.

இவ்வாறு கனம் கூடுவதற்கும், குறைவதற்கும் என்ன காரணம் என்று இன்றுவரை யாராலும் வரையறுத்துச் சொல்ல முடியவில்லை. திருநறையூர் பெருமாள் கோயிலை விட்டு வரும் கருடன், பெருமாளுடைய பக்தர்களின் பாவங்கள், தோஷங்கள் எல்லாவற்றையும் தான் சுமப்பதால் அவர் எடை கூடியவராக உணரப்படுகிறார். அந்த கருட சேவையைப் பார்ப்போர், பார்க்காதோர், மனதால் நினைத்துக்கொண்டோர் அனைவரது திருஷ்டிகளையும் தான் தாங்கிக்கொள்கிறார். ஒரு கட்டத்தில் கோயிலுக்குத் திரும்பும்போது, அங்கிருந்தபடியே அவர், பெருமாளிடம், அந்தப் பாவங்களையும் தோஷங்களையும் நிவர்த்தி செய்யுமாறு வேண்டிக்கொள்கிறார். உடனே எம்பெருமானும் அந்த வேண்டுகோளை நிறைவேற்றிவிடுவதால், கொஞ்சம், கொஞ்சமாக அவர் எடை குறைந்து, கோயிலுக்குள் நுழையும்போது இயல்பான கனம் கொண்டவராக ஆகிவிடுகிறார்.

அதாவது, திருநறையூர் நம்பியை எங்கிருந்து வேண்டிக் கொண்டாலும், அவர் அருள் நேரடியாக, உடனடியாக நம்மீது பாயும், நம் துயரங்கள் எல்லாம் களையப்படும் என்பது இந்தச் சம்பவத்தின் உட்கருத்து. திருமணக் கோலத்தில் நம்பியுடன் அவர் கருவறையிலேயே வீற்றிருப்பதால் தாயாருக்கென்று தனியே சந்நதி இங்கே இல்லை. இவ்விருவரையும் தினந்தோறும் பிரம்மன் பூஜிப்பதாக ஐதீகம். இக்கோயிலில் 108 திவ்ய தேசப் பெருமான்களையும் உற்சவ மூர்த்திகளாக ஒருசேர தரிசிக்கலாம். ஆமாம், கருவறை மண்டபத்தில் ஒரு கண்ணாடிப் பேழையில் இந்த விக்ரகங்களைக் காணலாம்.

இதை இங்கே கொண்டு வந்து சேர்த்தது யார்? இந்த ஊரைச் சேர்ந்த ஒரு வைதீக பிரம்மச்சாரி வாலிபனுக்கு, 108 திவ்ய தேச பெருமாள்களையும் தரிசித்துவிட வேண்டும் என்ற பேராவல் ஏற்பட்டது. ஆனால், காலம், தொலைவு போன்ற அசௌகரியங்களால் அது கைகூடவில்லை. மிகுந்த ஏக்கத்துடன் அவன் திருநறையூர் நம்பியை மனமுருகி வேண்டிக்கொள்ள, அவர் இவன் கனவில் தோன்றி அந்தப் பெருமான்களின் விக்ரகங்களை வழங்க, மிகுந்த மகிழ்ச்சியுடன் அவற்றைப் பெற்றுக்கொண்ட அவன், தன் இல்லத்திலேயே வைத்து பூஜித்து வந்தான். பிறகு தன் அந்திமக்காலம் நெருங்கியதை உணர்ந்து, அவற்றை இந்தக் கோயிலுக்கு சமர்ப்பித்துவிட்டான். அந்த விக்ரகங்கள்தாம் இவை! கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. ஒப்பிலியப்பன் கோயிலிலிருந்தும் செல்லலாம்.

பிரபுசங்கர்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • srilanka_chri11

  கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்

 • india_medals11

  ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்!!

 • pudin_russiaa1

  வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை

 • shadow_111

  பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

 • nigeriaaa_twins1

  இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்