SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அகழியும், கோட்டையும் கொண்டு அருட் கோலோச்சும் ஈசன்!

2018-09-14@ 17:00:48

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில்

தொண்டை மண்டலம் பாரதத்தின் வடக்குக்கும், தெற்குக்கும் பாலம் அமைத்த பெருநாடு. சான்றோர் நிறைந்த செறிவுமிக்க நாடு. இத்தொண்டை நாட்டில் ஆன்மிகமும், அரசியலும் சேர்ந்தே வளர்ந்த பெருநகர், வேலை மாநகர் எனும் வேலூர். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இவ்வூரின் பெருமைக்கு கோட்டையும், அதில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோயிலும் விளக்கங்களாக அமைந்துள்ளன என்றால் மிகையாகாது. 200 ஆண்டுகள் வழிபாடின்றி வவ்வால்கள் உலவிய கோயிலில் மீண்டும் இறைவழிபாடு செழித்தோங்கியது என்றால், அதற்கு இறைவனின் திருவருளும், மக்களின் எழுச்சியுமே காரணம்.

இத்தகைய சிறப்புமிக்க கோயிலுக்கு, அரச மரமும்,  வேப்ப மரமும் இணைந்து தழைப்பதுபோல தலவரலாறும், சரித்திர ஆதாரமும் பின்னிப் பிணைந்திருப்பது ஒன்றும் ஆச்சரியமல்ல. வசிஷ்டர், அகத்தியர், கவுதமர், பரத்வாஜர், வால்மீகி, காச்யபர், அத்ரி ஆகிய சப்தரிஷிகள் வேலூரின் கிழக்கே பகவதி மலையில் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். நாளடைவில் அத்ரியை தவிர மற்றவர்கள் சென்றுவிட, அவர் நகரில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து பூஜைகள் செய்து வந்தார். அவர் அத்தலத்தை விட்டு நீங்கியவுடன், தொடர்ந்து கவனிப்பாரின்றி இருந்த சிவலிங்கத்தை புற்று மறைத்தது.

காலங்கள் உருண்டோடின. வடக்கே ஆந்திராவில் பத்ராசலம் என்ற ஊரில் எத்தமரெட்டி என்பவரின் முதல் மனைவிக்கு பொம்மி, திம்மி என்ற இரண்டு மகன்கள். அதேபோல் இரண்டாம் மனைவிக்கு 4 குழந்தைகள். குறிப்பிட்ட காலம் வந்ததும் தனது சொத்துகளை இரண்டு மனைவிகளின் பிள்ளைகளுக்கும் எத்தமரெட்டி பகிர்ந்தளிக்க, அதை இரண்டாம் மனைவியின் மகன்கள் ஏற்றுக் கொள்ளாமல், பொம்மியையும், திம்மியையும் கொல்ல முயன்றனர். அங்கிருந்து தப்பிய சகோதரர்கள் பாலாற்றங்கரையில் திருமணி என்ற ஊரில் தஞ்சமடைந்தனர். அப்போது நாட்டை ஆண்ட மன்னர், அந்த சகோதரர்களுக்கு வேலப்பாடி என்ற இடத்தை வழங்கினார்.

அந்த நேரத்தில் வேலப்பாடியை கொள்ளைக்கூட்டம் சூழ்ந்தது. அவர்களை அண்ணன், தம்பி இருவரும் வீரமுடன் போரிட்டு துரத்தினர். இதையறிந்த மன்னர், சகோதரர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறு படையையும் அளித்தார். செல்வசெழிப்புடன் வாழ்ந்து வந்த சகோதரர்களுக்குப் பசுக்கூட்டம் ஒன்று சொந்தமாக இருந்தது. அதில் இருந்த அபூர்வ பசு ஒன்று தினமும் பால் சுரக்காமலிருந்தது. இதை கவனித்த பொம்மி, மாடு மேய்ப்பவனிடம் காரணம் கேட்க, அவன் தனக்கு ஒன்றும் தெரியாது என்று பதில் அளித்தான். இதன் ரகசியத்தை அறிய பொம்மி, அந்த அபூர்வ பசுவை பின்தொடர, அது அங்குள்ள புதரில் இருந்த புற்றின் அருகில் சென்றது.

அதிலிருந்து வெளிப்பட்ட ஐந்து தலை நாகம் பசுவின் காம்புகளில் வாய் வைத்து பால் குடித்ததை பார்த்த பொம்மி, வியப்புற்றான். கூடவே உறக்கம் அவனை அரவனைக்க, அங்கேயே படுத்துறங்கினான். அவனது கனவில் ஈசன் தோன்றினார். இறைவனிடம், ‘இறைவா உனக்கு ஒரு கோயில் கட்ட விரும்புகிறேன்’ என்றான் பொம்மி. அதற்கு இறைவன், ‘கோயில் கட்ட தேவையான பொருள், ஒரு புதையலாக பள்ளிகொண்டராய மலையில் உள்ளது’ என்று உரைத்தார்.  பொம்மி அந்த புதையலைக் கொண்டு, இமயமலை பத்ரிநாத்தைச் சேர்ந்த ஒரு சிற்பியின் மூலம் கோயில் கட்டும் பணியை, சாதவாகன ஆண்டு 1193 பங்குனி மாதம் 19ம் தேதி தொடங்கினான். அப்போது, அங்கு அதிசய நிகழ்ச்சி ஒன்று நடந்தேறியது.

புதர் அருகே தோன்றிய சில முயல்கள் வேகமாக ஓட, அவற்றை ஒரு நாய் துரத்தியது. சிறிது தூரம் ஓடிய முயல்களில் ஒன்று பளிச்சென்று திரும்பி நாயைத் துரத்தத்தொடங்கியது. இந்த துரத்தல் ஒரு வட்டப்பாதையாக சிவலிங்கம் இருந்த புற்றை சுற்றி அமைந்தது. அந்த வட்டத்தையே எல்லையாக கொண்டு கோயில் கட்டுமாறு அசரீரி ஒலித்தது. கோயில் கட்டத் தேவையான கற்கள் பள்ளிகொண்டராய மலையில் இருந்து கொண்டுவந்து சேர்க்கப்பட்டன. கோயில் கட்டும் பணி தொடங்கி நடந்தது. அப்போது அங்கு வந்த சிற்பியின் மகன், கோயில் கட்டத் தொடங்கியது ஒரு நல்ல நாளில் அல்ல;

அதனால் கோயிலில் பூஜை சில காலம்தான் நடக்கும் என்று கூறினான். இதை கேட்ட பொம்மியும், சிற்பியும் வேதனையடைந்தனர். இந்த தவறுக்கான பரிகாரமாக, கோயிலை சுற்றி கோட்டை எழுப்பினால் சரியாகிவிடும் என்றும் சிற்பியின் மகன் கூறினான். அதன்படி, கோட்டையும் அமைக்கப்பட்டது. மேலும், கோட்டையை சுற்றி வேலூர் நகரமும் உருவாக்கப்பட்டது. இது செவிவழி செய்தியாக சொல்லப்பட்டவை. ஆனால், சரித்திர சான்றுகள்படி கோட்டையின் உட்புறமும், கோயிலும் மண்கொண்ட சம்புவராயர் காலத்தில் கட்டப்பட்டவை.

அப்போது இறைவனின் திருநாமம் ஜ்வரகண்டீஸ்வரர். விஜயநகர பேரரசின் காலத்திலும் ஜ்வரகண்டீஸ்வரர் என்றே இறைவன் அழைக்கப்பட்டார். இதுவே பின்னாளில் ஜலகண்டேஸ்வரராக மருவியது. கி.பி.1566ம் ஆண்டு விஜயநகரப் பேரரசின் கீழ் ஆட்சி புரிந்த சின்னபொம்முவால் கோட்டை மற்றும் கோயில் விரிவாக்கம் நடந்தது. கோயிலுக்கு மதில்கள், ராஜகோபுரம், கல்யாண மண்டபம், வசந்த மண்டபம், உற்சவ மண்டபம், நீராழி மண்டபங்கள் ஆகியன கட்டப்பட்டன. விஜயநகர பேரரசின் சரிவுக்கு பின்னர் மொகலாயர் மற்றும் பீஜப்பூர் சுல்தான்கள் வசம் வேலூர் கோட்டை சென்றது. பீஜப்பூர் சுல்தான்களின் பிரதிநிதிகளில் ஒருவரான அப்துல்லா, மூலவரின் பீடத்தின் கீழே உயர்ந்த ரத்தினங்கள் இருப்பதாக கேள்விப்பட்டு பீடத்தை பெயர்த்து லிங்கத்தை அகழியில் வீசினார்.

அதன் பின்னர் மராட்டிய மன்னர் துக்கோஜிராவ் வேலூர் கோட்டையை கைப்பற்றி, அகழியில் இருந்த லிங்கத்தை மீட்டு மீண்டும் பிரதிஷ்டை செய்தார். இரண்டாண்டுகள் கழித்து மீண்டும் வேலூர் கோட்டை பீஜப்பூர் சுல்தான்கள் வசம் சென்றது. அதிலிருந்து 21 ஆண்டுகளுக்கு கோயிலில் வழிபாடுகள் ஏதும் நடைபெறவில்லை. இதையடுத்து மீண்டும் மராத்தியர் வசம் கோட்டையும், கோயிலும் சென்றன. அவர்கள் ஆட்சியில் 30 ஆண்டுகள் கோயிலில் பூஜைகள் தொடர்ந்து நடந்தன. அதன் பின்னர் மீண்டும் இஸ்லாமியர் வசம் கோட்டை சென்றது. அப்போது ஜலகண்டேஸ்வரரை எதிரிகள் சேதப்படுத்திவிடுவார்களோ என்று அஞ்சிய மக்கள் ஜலகண்டேஸ்வரரை மட்டும் பெயர்த்து எடுத்து சத்துவாச்சாரி ஜலகண்ட விநாயகர் கோயிலில் வைத்தனர்.

மற்ற விக்ரகங்கள் எதிரிகளால் சேதப்படுத்தப்பட்டன அல்லது அகழியில் வீசப்பட்டன என்று கூறப்படுகிறது. அன்று முதல் 200 ஆண்டுகள் சத்துவாச்சாரி ஜலகண்ட விநாயகர் கோயிலிலேயே ஜலகண்டேஸ்வரர் விக்ரகம் இருந்தது. 200 ஆண்டுகளும் ஜலகண்டேஸ்வரர் சந்நதி இருட்டின் பிடியில் சிக்கி, வவ்வால்கள் உறையும் இடமாக மாறியது. தொல்லியல்துறையால் இரும்பு கம்பிகளால் அடைக்கப்பட்ட இறைவன் சந்நதியை அவ்வப்போது செல்லும் உள்ளூர் மக்களும், வெளியூர் சுற்றுலா பயணிகளும் தீக்குச்சி வெளிச்சத்தில் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டு வந்தனர்.

அதேநேரத்தில் இங்கு மூலவரை மீண்டும் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற முயற்சி 19ம் நூற்றாண்டில் தொடங்கியது. 1928ம் ஆண்டு வி.எம்.புருஷோத்தமன், வீரசாவர்க்கர், மூஞ்சே போன்ற இந்து மகாசபா அமைப்புகளின் பிரதிநிதிகளும், ராஜாஜி, கிருபானந்தவாரியார் முதலான பிரமுகர்களும், தொண்டு நிறுவனங்களும், பொதுமக்களும் கோயிலில் மீண்டும் வழிபாடு தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். இறுதி கட்ட முயற்சியாக கடந்த 1981ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய கலெக்டர் கங்கப்பாவிடம், வேலூர் பிரமுகர் கே.எஸ்.மணி கோயிலில் வழிபாடு தொடங்குவதன் அவசியத்தையும், மக்களின் விருப்பத்தையும்
எடுத்துரைத்தார்.

இதை தொடர்ந்து கலெக்டர் கங்கப்பாவின் வேண்டுகோளுக்கு இணங்க, தஞ்சை ராமானந்தேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் வேலூர் வந்து கோயிலையும், சத்துவாச்சாரியில் உள்ள ஜலகண்டேஸ்வரரையும் பார்த்தார். பின்னர் அவர் கோயிலில் சுவாமி மறுபிரதிஷ்டை செய்விக்கத் தகுதியானவர் மயிலை குருஜி சுந்தரராம் ஸ்வாமிகள் என்று அடையாளம் காட்டினார். இதையடுத்து 16.03.1981ம் ஆண்டு காலை 9 மணிக்கு முறைப்படி சத்துவாச்சாரியில் சாஸ்திர சம்பிரதாயப்படி ஜலகண்டேஸ்வரர் லிங்க பாகங்கள் கோட்டை கோயிலுக்குள் கொண்டு வரப்பட்டன. மதியம் 12 மணிக்கு மேல் ஆகம விதிப்படி ஜலகண்டேஸ்வரர் தனது பழைய நிலைக்கு 200 ஆண்டுகளுக்கு பிறகு அமர்ந்தார், அருட்பாலித்து வருகிறார்!

அப்போது, நகரில் இடி, மின்னல், காற்றுடன் பலத்த மழை பெய்தது. அவற்றையும் மீறி எழுந்த பக்தர்களின் ஹரஹர மகாதேவா கோஷங்கள் விண்ணை பிளந்து இடியின் ஓசையையும் விஞ்சின. இவ்வாறு மக்களின் எழுச்சியின் இடையே மகத்துவம் புரிந்த ஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலுக்கு இன்று உ்ள்ளூர் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து தங்கள் குறைகளை கூறி நிவர்த்தி பெறுகின்றனர்.

கோட்டை அமைப்பு

இந்தியாவிலேயே அகழியுடன் கூடிய வலுமிக்க தரைக்கோட்டை, வேலூர் கோட்டை மட்டுமே. 136 ஏக்கர் பரப்பளவில் வெளிமதிலோடு இணைந்த அகழியுடன் கோட்டை காட்சி அளிக்கிறது. வெளிமதிலுக்கும், உள்மதிலுக்கும் இடையே பாதையும் உண்டு. உள்மதிலின் மேலே கோட்டையின் ஆறுபுறங்களிலும் உயர்ந்த வட்ட வடிவ அமைப்புகளும், பகைவர்களை கண்காணிக்கும் கட்டமைப்புகளும் வியக்க வைப்பவை.

கோட்டையின் கிழக்குப் பக்கம் உள்ளே செல்வதற்கான பாதை உள்ளது. தெற்கே பூங்காவில் இருந்து சிறிய திட்டிவாசலும் கோட்டைக்கு உண்டு. தற்போது இது மூடப்பட்டு விட்டது. இதுதவிர கோட்டைக்குள்ளிருந்து அகழி வழியாக வெளியேற கிழக்கு, வடக்கு பக்கங்களில் சிறிய வழியும் உள்ளது. அகழியில் மூன்று பக்கங்களில் மட்டுமே தண்ணீர் உள்ளது. அந்நாளில் கோட்டை என்றால் அதனுள்ளே அரண்மனை இருப்பதுதானே முறை? ஆனால், அதுபோன்ற கட்டிட அமைப்பு எதுவும் உள்ளே இல்லை என்பதும் வியப்பே.

கோயில் அமைப்பு

கோயிலின் தெற்கே 7 நிலை ராஜகோபுரத்துடன் பிரதான நுழைவாயில் உள்ளது. நுழையும் போது வலது புறத்தில் திருக்குளமும், இடதுபுறம் கல்யாண மண்டபமும் உள்ளன. கவினுறு சிற்பங்களைக் கொண்ட கம்பீரமான தூண்கள் கொண்ட பிராகார மண்டபத்தில் நடந்து செல்லும்போது வடமேற்கே வசந்த மண்டபம், அதையொட்டிய சிம்மக் கிணறு மற்றும் நீராழி மண்டபத்துக்குள் இறங்கும் வழி (இது மூடப்பட்டுள்ளது), வடகிழக்கில் யாகசாலை மண்டபம், தென்கிழக்கில் உற்சவ மண்டபம் மற்றும் மடப்பள்ளி ஆகியவற்றைக் காணலாம்.

இவற்றை பார்த்தவாறு உட்பிராகார கோபுரத்தை கடந்தால் வலம்புரி விநாயகரை தரிசிக்கலாம். இடதுபுறம் திரும்பி மகா கணபதி, வெங்கடாஜலபதி, வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி, மாதேஸ்வரி, சரஸ்வதி ஆகியோரை வணங்கி சென்றால் அகிலாண்டேஸ்வரியின் அருளைப் பெறலாம். அதையடுத்து நவசக்தி தீபங்களை தரிசிக்கலாம். இவற்றைக் கடந்து சென்றால் கோயில் கிணறு உள்ளது. அதன் அருகே கங்கா பாலாறு ஈஸ்வரர், காலபைரவர், நவகிரக சந்நதி, சனீஸ்வரர், ஆதிசங்கரர், மகாதேவரை நோக்கிய நந்தியம்பெருமான் மற்றும்  கொடி மரம் அமைந்துள்ளன.

கொடி மரத்தை அடுத்து, வேலைப்பாடுகள் கொண்ட ஒற்றைக்கல் சாளரம் வழியாக மூலவரை தரிசிக்கலாம். கொடிமரத்தையும், நந்தியம் பெருமானையும் வணங்கி மகா மண்டபம் வழியாக உள்ளே சென்றால், மூலவர் ஜலகண்டேஸ்வரர் நம்நெஞ்சில் நிறையும் வண்ணம், அர்த்தபுஷ்டியுடன் அருட்பாலிப்பதை உணர்ச்சிப் பெருக்குடன் உணர முடியும். மூலவர் தரிசனம் முடித்து கருவறை சுற்றுப்பாதையில் வலம் வந்தால் கணபதி, தட்சிணாமூர்த்தி, விஷ்ணுதுர்க்கை ஆகியோரையும், சோமாஸ்கந்தர்,

வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி, நால்வர் உட்பட சுவாமிகளின் உற்சவ மூர்த்திகளையும் தரிசனம் செய்யலாம். அங்கிருந்து மீண்டும் மகா மண்டபம் வந்தால் வடதிசையில் சிவகாமி சமேத நடராஜப் பெருமானின் ஆனந்த தாண்டவத்தை தரிசிக்கலாம். இம்மண்டத்திலும் நடராஜரின் பீடத்துக்குக் கீழே படிகளுடன் கூடிய சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இது விரிஞ்சிபுரம் கோயில் வரை செல்வதாகக் கூறப்படுகிறது. நடராஜப் பெருமானை தரிசித்து முடித்து மகா மண்டபத்தை விட்டு வெளியே வரும் போது எதிரில் 63 நாயன்மார்களையும் தரிசிக்கலாம்.

கல்வெட்டுச் செய்திகள்

ஜ்வரகண்டீஸ்வரர் என்றே அந்நாளில் ஜலகண்டேஸ்வரர் அழைக்கப்பட்டுள்ளார். ஜுரத்தை நீக்கும் ஈசன் என்று பொருள். இக்கோயிலுக்கு வேலூரை சுற்றியுள்ள அரப்பாக்கம், அரியூர் முருக்கேரி, அரும்பருதி, சதுப்பேரி, சத்துவாச்சாரி, ரங்காபுரம், பெருமுகை, அரப்பாக்கம், சேக்கனூர், சம்பங்கிநல்லூர் ஆகிய கிராமங்கள் விஜயநகர பேரரசால் மானியமாக தரப்பட்டவை. கோயிலின் முதல் கோபுர நுழைவாயிலின் இரண்டாவது நிலையில் சதாசிவதேவராய மன்னர் மற்றும் சின்னபொம்முவின் புடைப்பு சிற்பங்கள் உள்ளன. இக்கோயிலின் உட்புறமும், உட்சுவருடன் கூடிய உள்கோட்டையும் மண்கொண்ட சம்புவராயரால் கட்டப்பட்டதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

கோயில் நிர்வாகம்

கோயிலில் ஜலகண்டேஸ்வரர் மறுபிரதிஷ்டை ஆனவுடன் கோயிலை நிர்வாகம் செய்ய திருமுருக கிருபானந்தவாரியார் தலைமையில், வேலூர் முக்கிய பிரமுகர்களை கொண்டு ஜலகண்டேஸ்வரர் தர்ம ஸ்தாபனம் அமைக்கப்பட்டது. தற்போது கலவை சச்சிதானந்தா சுவாமிகளை தலைவராகக் கொண்டு இந்த ஸ்தாபனம் செயல்பட்டு வருகிறது. கோயிலின் அன்றாட பூஜைகள், விழாக்கள் மட்டுமே இக்குழுவால் மேற்கொள்ளப்படுகிறது. கோயில் பராமரிப்பு தொடர்ந்து மத்திய தொல்லியல்துறை வசமே உள்ளது.

நேபாள மன்னரின் ருத்ராட்ச பந்தல்

இங்குள்ள சிவன், நேபாள மன்னர் காணிக்கையாக வழங்கிய ருத்ராட்சப் பந்தலின் கீழ் அருளாட்சி செய்கிறார். பக்தர்கள் இவ்விறைவனுக்கு அதிகளவில் ருத்ராபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். பெண்கள் தாங்கள் தீர்க்க சுமங்கலியாகத் திகழ, தாங்கள் அணிந்திருக்கும் திருமாங்கல்யத்தை காணிக்கையாக செலுத்தி வணங்கும் வழக்கமும் இங்கு உள்ளது. அதேபோல் இங்கு திருமணங்களும், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேக நிகழ்ச்சிகளும் அதிகளவில் நடைபெறுகின்றன.

காசிக் கிணறு

கோயில் பிராகாரத்தில் நவகிரக, பைரவர் சந்நதி அருகில் கங்கை நதி கிணறு வடிவில் உள்ளது. இதன் அருகிலேயே கிணற்றில் கிடைத்த கூம்பு வடிவ லிங்கம், சிவன் கங்கா பாலாறு ஈஸ்வரர் என்ற பெயரில் அருட்பாலிக்கிறார். கங்கை நதியே இங்கு பொங்கியதாக கூறப்படுகிறது. இந்த சிவனுக்கு பின்புறம் பைரவர் அருட்பாலிக்கிறார். காசியை போன்று இங்கும் மூவரையும் ஒருசேர தரிசிக்க முடியும். இங்கு வேண்டிக் கொள்ள, காசி விஸ்வநாதரையே வழிப்பட்ட பலன் கிடைக்கும் என்கிறார்கள். தட்சிணாமூர்த்தி நான்கு சீடர்களுடனும், சனீஸ்வரர் ஜேஷ்டாதேவி, மாந்தியுடன் உற்சவமூர்த்தியாக காட்சி தருகின்றனர்.

கோயில் ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது இடதுபக்கம் அமைந்துள்ள கல்யாண மண்டபத்திலுள்ள சிற்பங்கள் மனதை கொள்ளை கொள்பவை. மணமேடை ஆமையின் மேல் ஓடுபோல அமைக்கப்பட்டுள்ளது. சந்திரன்-சூரியனை விழுங்கும் ராகு-கேது சிற்பங்களுடன் கூடிய ராசிக்கட்டங்கள், மண்டப சுவரில் ஆங்காங்கே பல்லிகள் ஊர்ந்து செல்வது போன்ற சிற்பம், மண்டபத்தின் ஒரு பக்க மூலையின் கீழே யானையும், காளையும் இணைந்த சிற்பம், வெண்ணெய் பானையுடன் கிருஷ்ணர், பைரவர், நடராஜர், சரபேஸ்வரர், சிவமூர்த்தங்கள், கண்ணனைப் போல் தவழ்ந்த பால விநாயகர், கண்ணப்பர் வரலாறு,

நரசிம்மர் பாதத்தை வணங்கும் கருடாழ்வார், மத்தளம் வாசிக்கும் பெருமாள், யோகாசனம் செய்யும் மகரிஷி, யாளியின் மேல் அமர்ந்த வீரர்கள்,  விதானத்தில் கிளிகளுடன் கூடிய அலங்காரம், மணமேடை மண்டபத்தில் நுண்ணிய வேலைப்பாடுகள் மிகுந்த தூண்கள் என்று இதன் அழகில் மயங்கிய வெள்ளையர் தளபதி மண்டபத்தை இருக்கும் நிலையில் எண்களிட்டு பெயர்த்து எடுத்துச் சென்று லண்டன் அரண்மனையில் அமைக்க விரும்பினார். இதற்காக வந்த கப்பல், வழியிலேயே கடலில் மூழ்கியதால் அத்திட்டம் கைவிடப்பட்டது.

சிற்பத்தூண்களுடன் நீராழி மண்டபம்

கோட்டையின் திருமண மண்டபத்தின் வடமேற்கே வசந்த மண்டபத்தை ஒட்டி அமைந்துள்ள இரும்பு கம்பிகளால் மூடப்பட்டுள்ள சிம்மக்கிணறு, அதனுடன் இணைந்த நீராழி மண்டபம் சிற்பத் தூண்களுடன் மேலே உள்ள வசந்த மண்டபத்தைப் போன்றே அமைந்துள்ளது. பார்வையாளர்களின் பாதுகாப்பு கருதி இது இரும்பு கம்பிக் கதவால் மூடப்பட்டுள்ளது. இந்த நீராழி மண்டபம் கோயில் கருவறைவரை நீண்டிருப்பதாகவும்.

இந்த பாதை முடிவில் அகழியுடனும், சுரங்கப்பாதையுடனும் இணைவதாகவும் கூறப்படுகிறது. இந்த நீராழி மண்டபத்துக்குள் கோயில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகத்துக்காக நடந்த சீரமைப்பின்போது இறங்கி பார்த்த தொல்லியல்துறையை சேர்ந்தவர்கள் அசந்து போயினர். இடுப்பு வரை தண்ணீர் நிறைந்துள்ளதுடன், சிற்ப வேலைப்பாடுகளுடன் கொண்ட மிகப்பெரிய மண்டபம் அவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

சுரங்கப்பாதை

கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் நடராஜர் சந்நதியில் நடராஜர் உற்சவ மூர்த்தி மரப்பலகையின் மீது வைக்கப்பட்டிருப்பதை காணலாம். இந்த மரப்பலகையை அகற்றினால் பாதை ஒன்று படிகளுடன் தொடங்குகிறது. இது நீராழி மண்டபம் வரை நீண்டு ஒரு பாதை அகழிக்கும், மற்றொரு பாதை 15 கி.மீ தூரத்தில் வடமேற்கில் அமைந்துள்ள விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில்வரையிலும் செல்கிறது. இந்த பாதையின் மறுபுற வாயில் மார்க்கபந்தீஸ்வரர் கோயில் சிம்மக்குளத்தில் அமைந்துள்ளது. சிம்மக்குளத்தில் உள்ள அந்த வாயிலும் இரும்பு கதவால் மூடப்பட்டுள்ளது. நாளடைவில் நீர்நிலைகள் உருவாக்கம், கிணறுகள்,

போர்வெல்கள் அமைப்பு, கட்டுமானங்கள் போன்றவற்றால் சுரங்கப்பாதை தூர்ந்து போயிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதேநேரத்தில் வரலாற்று ஆய்வாளர்கள், கோட்டையின் நடராஜர் மண்டபத்திலிருந்து அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை, சதுப்பேரியின் வடமேற்கு கரைவரை அமைந்திருந்தது என்கிறார்கள். அந்த இடத்தில் இருந்த மேடான பகுதி சுரங்கமேடு என்றே அப்பகுதி மக்களால் சமீப காலம் வரை அழைக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த மேடும், சதுப்பேரியின் வடக்கு கரை முழுவதும் நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்டதால் காணாமல் போயின.

பூஜைகள், விழாக்கள்

தினமும் 6 கால பூஜைகள் நடக்கிறது. இதுதவிர மாதாந்திர சிவராத்திரி, சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷ பூஜைகளும் நடக்கின்றன. சித்திரையில் பிரம்மோற்சவமும், ஆடிப்பூரம், சிவராத்திரி, நவராத்திரி, திருக்கார்த்திகை, கந்தர் சஷ்டி விழா, தைப்பூச விழா ஆகியன கோலாகலமாக நிகழ்கின்றன. ஐப்பசி பவுர்ணமியில் சிவனுக்கு அன்னாபிஷேகமும், அம்பிகைக்கு சாகம்பரி அலங்காரமும் நடக்கிறது.

கோயில் திறக்கும் நேரம்

காலை 6.30 முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 3 முதல் இரவு 8.30 மணிவரையும் கோயில் திறந்திருக்கும். இத்தல இறைவன் பத்ம விமானத்தின் கீழ் அருட்பாலிக்கிறார். சிவன் சந்நதியின் பின்புறம் திருப்பதி ஏழுமலையானின் தோற்றத்தில் வெங்கடேசப் பெருமாள் காட்சி தருகிறார். புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு மகாபிஷேகம் நடக்கும். இது ராகு-கேது தோஷம் போக்கும் தலமாகவும் திகழ்கிறது.  சூரியன் சந்திரனை விழுங்கும் ராகு, கேது மற்றும் தங்க, வெள்ளி பல்லிகள் பிராகாரத்தில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன.

நாகதோஷம் உள்ளவர்களும், பல்லி தொடர்பான தோஷம் உள்ளவர்களும், சிவனோடு இவற்றையும் வணங்கிச் செல்கிறார்கள். பிராகாரத்தில் அமர்ந்து அருட்பாலிக்கும் ஆதிசங்கரருக்கு சித்திரையில் சங்கர ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. சித்திரை பிரமோற்சவ விழாவின் போது 8 சப்பரங்களில் 8 நாயன்மார்கள் வீதம் 63 நாயன்மார்களும் வீதியுலா செல்வர். இவர்களுடன் சிவன், யானை வாகனத்தில் பவனி வருகிறார். இது இங்கு விசேஷமாக நடக்கிறது. அதேபோல் சனி, குரு, ராகு-கேது பெயர்ச்சிகளின் போது விசேஷ ஹோமங்களும் நடக்கின்றன. இத்தல விநாயகர் செல்வம் அருளும் செல்வ விநாயகராக போற்றப்படுகிறார்.

ஆயுள் விருத்தி பெற, விபத்து பயம் நீங்க, தடைப்பட்ட திருமணம் நடக்க, சகல திருஷ்டிகளும் விலக இத்தல இறைவனை வேண்டிக் கொள்ளலாம். அதோடு தீராத நோய் கண்டு சிகிச்சை பெறுபவர்கள் ஜலகண்டேஸ்வரரை வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டால், நோய் தீர்ந்துவிடுகிறது என்பது நம்பிக்கை. அதற்கேற்ப இங்கு உள்ளூர் மட்டுமின்றி பிரபல தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடையும் நோயாளிகள் வந்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவதை தினமும் காணலாம். சுவாமிக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்தும், தங்க ரதம் இழுத்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர், பக்தர்கள்.

தலபெருமை

பிரம்மா, திருமால் இருவரின் அகந்தையை அடக்க சிவன் ஜோதி ஸ்வரூபனாக காட்சி தந்த நாள், திருக்கார்த்திகை. இந்நாளில் மும்மூர்த்திகளும் ஒன்றாக காட்சி தந்ததன் அடிப்படையில் இங்கு மும்மூர்த்திகளும் அன்று ஒரே பல்லக்கில் எழுந்தருளுகின்றனர். அன்று மாலையில் ராஜகோபுரத்தில் தீபமேற்றி, மும்மூர்த்திகளுக்கும் விசேஷ அபிஷேகம் நடக்கிறது. பின்னர் வீதியுலா நடக்கிறது. இந்த ஒரு நாளில் மட்டுமே, இவ்வாறு மும்மூர்த்திகளையும் ஒருசேர தரிசிக்க முடியும். கார்த்திகை கடைசி சோமவார நாளன்று சிவனுக்கு 1008 சங்காபிஷேகம் நடக்கிறது.

தீப சிறப்பு

அம்பாள் அகிலாண்டேஸ்வரி சந்நதி எதிரில் ‘அணையா நவசக்தி ஜோதி தீபம்’ உள்ளது. அம்பிகை தீபத்தின் வடிவில் நவசக்திகளாக அருட்பாலிக்கிறாள். வெள்ளிக்கிழமைகளில் இந்த விளக்கிற்கு மேளதாளத்துடன் சுத்தான்ன நைவேத்தியம் நடக்கிறது. அம்பாள் சந்நதி முன்மண்டபத்தில் சரஸ்வதி, மகாலட்சுமி காட்சி தருகின்றனர். மும்மூர்த்திகளை போன்று, மூன்று தேவிகளையும் ஒருசேர இங்கு தரிசிக்கலாம். மேலும் இங்குள்ள நந்தியம்பெருமான் முன்பு பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகள் நிறைவேற தீபம் ஏற்றாத அகல்விளக்கை வைப்பது வித்தியாசமான ஒன்று. நந்தியம்பெருமானுக்கு மாட்டுப்பொங்கல் அன்று விசேஷ பூஜை உண்டு.

கோயிலுக்கு செல்லும் வழி

சென்னை உட்பட வெளியூர்களிலிருந்து வருபவர்கள் ரயில் மூலம் காட்பாடி வந்து டவுன் பஸ்கள் மூலம் வேலூர் பழைய பஸ் நிலையம் வர வேண்டும். அங்கிருந்து சாலையை கடந்தால் கோட்டையையும், கோட்டைக்குள் அமைந்துள்ள கோயிலையும் அடைய முடியும். அதேபோல் பஸ் மூலம் வேலூர் புதிய பஸ் நிலையம் வந்து அங்கிருந்து ஆட்டோ அல்லது டவுன் பஸ்கள் மூலம் பழைய பஸ் நிலையம் வர வேண்டும்.
ஜலகண்டேஸ்வரரை தரிசித்துச் செல்ல தங்குவதற்கு ஏராளமான தனியார் விடுதிகள் உள்ளன.

- எஸ். தன்சிங்      
படங்கள் : வி. ஸ்ரீதர்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • germanybuilding

  ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

 • siriyaa

  ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

 • londonprotest

  பிரிட்டன் பிரதமருக்கு எதிராக மீண்டும் தலைதூக்கும் போராட்டம்: பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை எதிர்த்து மக்கள் பேரணி!

 • 25-03-2019

  25-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-03-2019

  24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்