SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மஹாலட்சுமி தரிசனம்

2018-09-14@ 09:49:20

திருச்சி - ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கத்திலேயே காட்டழகிய சிங்கர் திருக்கோயில் அமைந்துள்ளது. பெருமாள் கோயிலில் பிரதோஷ பூஜை என்பது இத்தலத்தின் சிறப்பாகும்.  கருவறையில் சுமார் 8 அடி உயரத்தில் லட்சுமி நரசிம்மர் மகாலட்சுமியை தனது இடது திருத்தொடையில் அமர வைத்து ஆலிங்கன நிலையில் அருட்பாலிக்கிறார். வலது கையால் அபய ஹஸ்தம் காட்டியருள்கிறார்.

ராம்பாக்கம்

கருவறையில் பிரதான நாயகர் லட்சுமி நாராயணப் பெருமாள் எனும் திருநாமத்தோடு கம்பீரமாக வீற்றிருக்கிறார். ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் லட்சுமி தேவியை மடியில் அமர்த்தி, வலது கையில் சக்கரம், இடது கையில் திருச்சங்கும், இன்னொரு கரம் வரத ஹஸ்தமாகவும், மற்றுமொரு புறமுள்ள திருக்கரத்தால் லட்சுமியை அணைத்தவாறு காட்சி தருகிறார். பெருமாளும், அவர் தம் திருவடியும் தாமரைப்பீடத்திலேயே அமைந்துள்ளன. ராம்பாக்கம் எனும் இத்தலம் கடலூர்-விழுப்புரம் பாதையில் மடுகரையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. புதுச்சேரியிலிருந்து மடுகரைக்கு பேருந்து வசதிகள் உள்ளன.  ‘

லால்குடி - இடையாற்று மங்கலம்

இத்தலத்தின் கருவறையில் லட்சுமி நாராயணன் எனும் திருநாமத்தோடு கிழக்கு திசை நோக்கி அருட்பாலிக்கிறார். தாயாரை இடது திருத்தொடையில் அமர்த்தி சேவை சாதிக்கும் அழகை இத்தலத்தில்தான் காண வேண்டும். மேலும், கணவன் மனைவிக்கிடையேயுள்ள பிரச்னைகள் நீங்க இத்தல பெருமாளை சுற்றிலுமுள்ள ஊர்களிலிருந்து வந்து வணங்கிச் செல்கின்றனர். திருச்சி - லால்குடிக்கு  அருகேயே இத்தலமும் அமைந்துள்ளது. கொள்ளிடம் ஆற்றுக்கும் அய்யன் வாய்க்காலுக்கும் இடையே இவ்வூர் அமைந்ததால் இடையாற்று மங்கலம் என்றழைக்கின்றனர்.  

கீழையூர்

அமைதி தவழும் அழகிய கிராமம். பஞ்சரங்க க்ஷேத்ரங்கள் என்ற, அரங்கனின் ஐந்து ஆலயங்களில் இதுவும் ஒன்று. இத்தலம் கிழக்கு அரங்கமாகும். அதுவே கீழையூர் என்றாயிற்று. கோயிலை கீழரங்கம் என்கிறார்கள். ஸ்ரீரங்கத்தின் அபிமான தலம் இது. கோயிலின் மகாமண்டபத்தைக் கடந்து வரும்போது வலப்புறம் தாயார் சந்நதி உள்ளது. தாயாரின் திருநாமம் ரங்கநாயகி. இக்கோயிலின் வடக்கே உள்ள பத்மதடாகம் எனும் புஷ்கரணியில் எம்பெருமானை மணந்துகொள்ள தாயார் தவம் செய்தார். இவ்வூரிலிருந்து 1 கி.மீ. தூரமுள்ள திருமணங்குடி எனும் ஊரில் பெருமாளை திருமணம் செய்து கொண்டார். நாகப்பட்டினத்திலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

தாளக்கரை

நின்ற கோலத்தில் லட்சுமி அருட்பாலிக்கும் தலம். மகாலட்சுமியோடு பாற்கடலிலிருந்து வெளிப்பட்டவன் சந்திரன். இத்தலத்தில் சகோதர முறை கொண்ட சந்திரனே சுவாமிக்கு விமானமாக இருப்பதைப் போன்று வேறு எத்தலத்திலும் காண முடியாது. எனவே, சந்திர விமானம் என்றே பெயர் பெற்றிருக்கிறது. கருவறையில் மூலவராக நரசிம்மர் கையில் சங்கு, சக்ரத்துடன், சாந்த மூர்த்தியாகவும், மகாலட்சுமியும் சேர்ந்தே நின்ற கோலத்தில் தனியே இருப்பதையும் வேறெங்கும் தரிசிக்க முடியாது. நரசிம்மர் பீடத்தில் ஸ்ரீசக்ரம் உள்ளது.

காசியின் மகாலட்சுமி பீடம்

காசியில் மரித்தால் முக்தி கிட்டும் என்பது விஸ்வநாதரின் வேத வாக்கு. அதனாலேயே இன்று வயதானவர்கள் காசியிலேயே வாழ்ந்து முக்தியை அடைவர். இதே காசியில்தான் மகாலட்சுமி பீடமும் உள்ளது. இங்குள்ள சித்தலட்சுமி ஆலயம் தாமரை வடிவில் இருந்ததாக காசி காண்டம் கூறுகிறது. அருகேயே லட்சுமி குண்டம் அமைந்துள்ளது. வாரணாசியில் மகாலட்சுமியால் பூஜிக்கப்பட்ட லிங்கம் மகாலட்சுமீஸ்வரர் எனும் திருப்பெயரோடு இன்றும் விளங்குகிறது. தீபாவளியன்று காசிகங்கையில் ஸ்நானம் என்பதே விசேஷமாகும். அதிலும், மகாலட்சுமீஸ்வரரை தரிசிப்பதென்பது இன்னும் அதிவிசேஷமாகும்.

கொற்கை

சிவபெருமான் மீது மலர்க்கணை தொடுத்தான் மன்மதன். ஈசனின் நெற்றிக் கண்னால் எரிக்கப்பட்ட மன்மதனை உயிர்ப்பித்துத் தரவேண்டி ரதிதேவி மகாலட்சுமியை வேண்டினாள். எனவே, மகாலட்சுமியும் இத்தல ஈசனுக்கு வழிபாடுகள் செய்தார். மன்மதனை உயிர்ப்பித்தார். மகாலட்சுமி இவ்வாறு வழிபாடு செய்த லிங்கம் லட்சுமீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது. நீண்ட ஆயுளும், செல்வமும் வேண்டுவோர் இத்தல ஈசனை வழிபட்டு பயனடைகின்றனர்.

பேளூர் கரடிப்பட்டி

கரடிப்பட்டியில் லட்சுமி நாராயணப் பெருமாளின் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் அஷ்ட லட்சுமிகளின் பளிங்குச் சிலைகள் கண்களையும் மனதையும் கவர்கின்றன. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலிருந்து கொண்டு வரப்பட்டவை இச்சிலைகள். செவ்வக வடிவிலான மகா மண்டபத்தைச் சுற்றிலும் தனித் தனி சந்நதிகளில் இவை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு லட்சுமியும் அவரவர்க்குரிய திக்கு நோக்கி அருட்பாலிக்கின்றார்கள். மூலவர் லட்சுமி நாராயணர், தனது மடியில் மகாலட்சுமியை அமர வைத்திருக்கும் கோலம் கொள்ளை அழகு! எந்த திக்கிலிருந்தும் துயரம் தீண்டிவிடாதபடி அஷ்ட லட்சுமிகள் பக்தர்களைக் காக்கிறார்கள். சேலம் மாவட்டம், வாழப்பாடியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

திருநின்றியூர்

திருமாலின் திருமார்பினில் நீங்காதிருக்கும் வரம் வேண்டி அலைமகளாம் லட்சுமிதேவி இங்கு ஈசனைப் பூஜித்து பேறு பெற்றதாக தல புராணம் கூறுகிறது. கருவறைக்குள் கருணையோடு மகாலட்சுமீஸ்வரர் என்கிற திருப்பெயரோடு, ருத்ராட்சப் பந்தலின் கீழ் அருட்பாலிக்கிறார். தேவாதி தேவர்கள் நித்தமும் வந்து இந்த பெருமானைத் தொழுகிறார்கள். வழக்கமான தேவகோஷ்ட மூர்த்தங்களோடு மகாவிஷ்ணுவும், கஜலட்சுமியும் தனி அழகோடு காட்சியளிக்கின்றனர்.

நீலி மலர்ப் பொய்கை லட்சுமி தீர்த்தமாகவும், விளா மரம் தல விருட்சமாகவும் விளங்குகின்றன. அனுஷ நட்சத்திரக்காரர்கள் வழிபட உகந்த தலம் இது. ஏனெனில், அனுஷத்திற்கு அதிதேவதையே மகாலட்சுமிதான். செல்வச் செழிப்பு உண்டாக லட்சுமி ஹோமம் நடத்தப்படுகின்றது. தாமரை இதழில் தேனூற்றி ஹோமாக்னியில் இட்டு யாகங்கள் செய்யப்படுகின்றன. இத்தலம் மயிலாடுதுறை வட்டத்தில், சீர்காழி-மயிலாடுதுறை பேருந்து சாலையில் அமைந்துள்ளது.

சென்னை - மயிலாப்பூர்

சென்னை மயிலாப்பூரிலுள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் தனிச் சந்நதியில் மயூரவல்லித் தாயார் கோயில் கொண்டிருக்கிறார். மயூரபுரி என்றும் மயிலாப்பூருக்கு வேறொரு திருநாமம் உண்டு. எனவே, இங்கு எழுந்தருளியிருக்கும் மகாலட்சுமிக்கு வில்வ தளங்களைக் கொண்டு அர்ச்சித்தால் மகாலட்சுமியின் பூரண அருள் கிட்டும். மயூரவல்லித்தாயார் மேலிரு கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கி கீழிரு கரங்கள் அபய&வரத ஹஸ்தம் காட்டி அருள்கிறாள். வெள்ளிக்கிழமை அன்று மயூரவல்லித்தாயார் சந்நிதிக்கு வந்து சந்நதியின் கதவில் மணிக்கட்டி பிரார்த்தனை செய்து கொண்டு, வில்வார்ச்சனை செய்து வழிபட, வேண்டும் வரம் தருகிறாள்.  

திருச்சி - ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கத்திலேயே காட்டழகிய சிங்கர் திருக்கோயில் அமைந்துள்ளது. பெருமாள் கோயிலில் பிரதோஷ பூஜை என்பது இத்தலத்தின் சிறப்பாகும். கருவறையில் சுமார் 8 அடி உயரத்தில் லட்சுமி நரசிம்மர் மகாலட்சுமியை தனது இடது திருத்தொடையில் அமர வைத்து ஆலிங்கன நிலையில் அருள்பாலிக்கிறார். வலது கையால் அபய ஹஸ்தம் காட்டி அருள்கிறார்.

திருப்பத்தூர்

சிவபெருமான் எத்தனையோ அடியார்களுக்காக தனது திருத்தாண்டவத்தினை காட்டியருளினார். அப்படியொருமுறை திருமகளின் வேண்டுகோளுக்கு இணங்கி இத்தலத்தில் திருத்தாண்டவம் புரிந்தார். இந்த தாண்டவத்திற்கு லட்சுமி தாண்டவம் என்று பெயர். இந்த அரும்பெருங் காட்சியை கண்ட திருமகள் இத்தல ஈசனை போற்றி வணங்கி பூசித்தாள். எனவே, இங்குள்ள தீர்த்தத்திற்கு ஸ்ரீ தீர்த்தம் என்று பெயர்.

திருநின்றவூர்

மகாவிஷ்ணுவிடம் கோபித்துக் கொண்டு வைகுண்டத்தை விட்டு திரு என்கிற மகாலட்சுமி இங்கு வந்து நின்றதால் இத்தலம் திருநின்றவூர் என்றானது. சமுத்திர ராஜனே சமாதனமாக ‘என்னைப் பெற்ற தாயே’ என்று இறைஞ்சி வேண்டிக் கொண்டதாலேயே இவளுக்கு இத்தலத்தில் என்னைப் பெற்ற தாயே என்றே திருப்பெயர். குபேரன் தன் நிதியை இழந்து இத்தலத்திற்கு வந்து வேண்டிக் கொண்டதாலேயே மீண்டும் பெரும் நிதியை அடைந்தான். நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்றாகும். சென்னை, திருவள்ளூர் ரயில் பாதையில் அமைந்திருக்கிறது திருநின்றவூர்.

திருவாலி

மகாலட்சுமியோடு பெருமாள் நரசிம்ம கோலத்தில் வீற்றிருப்பதால் இத்தலத்திற்கு லட்சுமி நரசிம்ம க்ஷேத்ரம் என்றே பெயர். திருமங்கையாழ்வாருக்கு அருள்பாலிக்க வேண்டுமென்று லட்சுமி தேவி பெருமாளை இடைவிடாது வேண்டினாள். லட்சுமியும் திருவாலியில் தவமியற்றும் பூர்ண மகரிஷிக்கு மகளாக அவதரித்தாள். பெருமாளை லட்சுமி தேவியார் மணம் புரிந்து வரும்போது திருமங்கை மன்னன் வழிப்பறி செய்ய அவரது காதில் பெருமாள் அஷ்டாட்சர மந்திரத்தை கூறி ஆட்கொண்டார். மூலவராக இருக்கும் நரசிம்மர் லட்சுமியாகிய திருவை ஆலிங்கனம் செய்து கொண்டிருப்பதால் திரு ஆலிங்கன ஊர் என்பது திருவாலி என்று மருவியது. நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலம் சீர்காழிக்கு அருகேயுள்ளது.

- கிருஷ்ணகுமார்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • germanybuilding

  ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

 • siriyaa

  ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

 • londonprotest

  பிரிட்டன் பிரதமருக்கு எதிராக மீண்டும் தலைதூக்கும் போராட்டம்: பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை எதிர்த்து மக்கள் பேரணி!

 • 25-03-2019

  25-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-03-2019

  24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்