SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்களை ஒன்றுபடுத்திய மகா கணபதி

2018-09-12@ 17:25:45

மும்பை

அது ஆங்கிலேயர் ஆட்சிகாலம். பிழைப்புக்காக தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மும்பையில் குடியேறினார்கள். அவர்களில் பெரும்பான்மையினர் தாராவி பகுதியிலேயே குடிசைகளை அமைத்துக் கொண்டார்கள். வெள்ளையர்களை எதிர்ப்பதற்காகவும், பொதுமக்களை ஒன்று திரட்டவும் ‘கண்பத்’ எனும் கணபதி திருவிழாவை பாலகங்காதர திலகர் ஏற்பாடு செய்தார். அப்போதிலிருந்துதான் மகாராஷ்டிர மாநிலத்தில் கணபதி உற்சவம், 10 நாள் திருவிழாவாக உருவானது. மக்கள் உள்ளத்தில் பக்தி பெருக்கெடுத்தது. அனைவரையும் இவ்விழா ஒன்று சேர்த்தது. பக்தியோடு தேசிய உணர்வும், விடுதலை வேட்கையும் எல்லோருக்கும் வலுப்பட்டது. அதே சமயம் மும்பையில் கழலை நோய் வந்து மக்கள் அவதிப்பட்டனர். அவர்கள் தத்தமக்குப் பிடித்த வகையில் விநாயகர் உருவத்தை எடுத்துவந்து இந்த திருவிழாவில் வைத்து வணங்கி நிறைவுநாளில் அந்த மண் சிலைகளை கடலில் கரைத்தால் அந்நோய் தீர்ந்து போகும் என்ற நம்பிக்கை நிலவியது. எனவே பிள்ளையார் மீது மகாராஷ்டிராவில் வாழும் எல்லா தரப்பு மக்களுக்கும் பக்தியும், பிரியமும் உருவானது.

தமிழ் மக்கள், தாங்களும் மகாராஷ்டிரர்களைப் போலவே விநாயகர் வழிபாடு செய்ய விரும்பினார்கள். அதற்காக காசியிலிருந்து சிறு பிள்ளையாரை எடுத்து வந்து, தாம் வாழ்ந்த தாராவியில் பிரதிஷ்டை செய்தனர். அவருக்கு தினமும் பூஜை நடத்தினர். இதற்கிடையே  ஆங்கிலேய அரசாங்கம் பழைய கோயில்களை தவிர புதிதாக உருவாக்கப்பட்ட கோயிலையெல்லாம் இடிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது. அந்தவகையில் இந்த பிள்ளையார் கோயிலை பார்வையிட அதிகாரிகள் வருவார்கள் என்ற தகவல் வந்தது. இந்த பிள்ளையார் சிறு உருவினராக இருப்பதால், இது புதிய கோயில் என்று கருதி இடித்து விடுவார்கள் என்றே தோன்றியது. இவர் புராதனமானவர் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக அப்பகுதி மக்கள் ஒரு திட்டம் தீட்டினர். அதன்படி மிகப் பழமையான ஒரு அரச மரத்தினை வேரோடு பெயர்த்து கொண்டுவந்து இந்த இடத்தில் நிறுத்தி அதனடியில் பிள்ளையார் சிலையை அமைத்தனர்.

அவர்கள் எதிர்பார்த்ததுபோலவே அது பழமையான கோயில்தான் என்று ஆங்கிலேய அதிகாரிகள் பார்த்துவிட்டுச் சென்று விட்டார்கள். அதுமட்டுமல்லாமல் 13வது ஜார்ஜ் மன்னர் காலத்தில் குறிப்பிட்ட இடத்தில் மட்டும்தான் இந்துக்கள் பிரார்த்தனைகூடம் அமைக்கலாம் என்று விதி இருந்தது. ஆனால் தமிழர்களின் பிரார்த்தனை தலமாக இருந்த இந்த கணேசர் ஆலயத்திலும் கூட்டு பிரார்த்தனை செய்யலாம் என்ற அனுமதியும் கிடைத்தது. அதன்பிறகு யாருமே எதிர்பாராத ஒரு அதிசயம் நடந்தது. ஒருநாள் கூத்துக்குத்தானே என்று நடப்பட்ட அந்த அரச மரம், பட்டு போகாமல் துளிர்விட்டு வளர ஆரம்பித்தது! அது இந்த பிள்ளையாரின் மகிமைதான் என வியந்த பக்தர்கள், அவருடன் நாகர் ஒன்றையும் சேர்த்து வைத்து வணங்க ஆரம்பித்தனர். தினமும் முதலில் இந்த கணபதியை வணங்கிவிட்டு அதன் பிறகே அவர்கள் தொழிலை ஆரம்பித்தார்கள். அரசமரம் துளிர் விட்டு வளர்வதைப்போல அவர்கள் வாழ்க்கையும் வளம்பெற ஆரம்பித்தது.

நாளாவட்டத்தில் இந்த பிள்ளையார் கோயிலை பெரிதாக்க விரும்பினார்கள். அதற்கு பிள்ளையார் இருக்கும் இடத்தை விலைக்கு வாங்க வேண்டும். அதன் சொந்தக்காரரோ அதற்கு சம்மதிக்கவில்லை. ஆனால், குறிப்பிட்ட நாள் இரவில் கனவில் அவரை ஒரு யானை துரத்தியது. விநாயகரும் தோன்றி கோயில் உருவாக நிலத்தை விலைக்குக் கொடுத்து உதவுமாறும் அறிவுறுத்தினார். மறுநாளே அந்த நிலம் கோயிலுக்கு என்றானது. இவ்வாறு உருவானதுதான் அந்த மாநிலத்திலேயே இரண்டாவது பிள்ளையார் கோயில்; அதேநேரம் தமிழர்களின் முழு முயற்சியால் உருவான முதல் கோயில். ஆனால் இக்கோயிலை பெரிதாக கட்டுவதற்காக அவர்கள் அரச மரத்தினை வெட்ட முயற்சி செய்த போது எங்கிருந்தோ ஒரு பாம்பு கூட்டம் வந்து அதை வெட்ட முடியாதபடி சுற்றி நின்று தடுத்தது. எனவே மரத்தினை வெட்டும் முயற்சியைக் கைவிட்டனர். 1992ல் காஞ்சி பரமாச்சார்யார் இந்த கோயிலுக்கு வந்தார்.

கோயிலைப் பெரிதாக்க முடியாத தம் கவலையை பக்தர்கள் அவரிடம் தெரிவித்தார்கள். அவர், அவர்களை ஆறுதல் படுத்தி, அவர்கள் எண்ணம் ஈடேறும் என்று ஆசியளித்தார். அதுபோலவே தமிழக அரசின் அறநிலையத் துறை மூலம் இந்த கோயிலுக்கு 25 ஆயிரம் ரூபாய் உதவி கிடைக்க, உடனே பணி துவங்கியது. தற்போது இந்த விநாயகர் கோயில் மிக பிரமாண்டமாக நிமிர்ந்து நிற்கிறது. மூல விநாயகரையும், நாகரையும் வெட்ட முடியாத அரச மரத்தினையும் அப்படியே விட்டு விட்டு கோயிலைப் பெரிதாக்கினர். தற்போது மூலவராகக் காணப்படும் விநாயகர் புதியவர். வடக்கு நோக்கி தனிச்சந்நதியில் அருட்பாலிக்கிறார். அவருக்கு வலது புறம் முன்னால் நவகிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சுற்றுப்புற சுவரில் 32 வகையான விநாயகர் படங்கள் வரையப்பட்டுள்ளன. கோயிலை வலம் வரும் போது கிழக்கு நோக்கியபடி தமிழ் கடவுள் கார்த்திகேயன் என்ற முருகன் மிக அழகுடன் காட்சியளிக்கிறார்.

அவருக்குப் பின்னால் தலவிருட்சமாக அரச மரம், காசியிலிருந்து வந்த மூல விநாயகரையும் நாகரையும் கொண்டு பசுமையாகக் காட்சியளிக்கிறது. அருகிலேயே வடக்கு நோக்கியபடி நடராஜர் உள்ளார். அரசமரத்துக்கு அருகே தெற்கு நோக்கி மகாலட்சுமி அழகு மிளிர காட்சி தருகிறார். அடுத்து ஐயப்பன், 18 படியுடன் ஓவிய ரூபத்தில் தரிசனம் தருகிறார். இந்த ஐயப்பன் சந்நதியில், சபரிமலைக்குப் போகும் ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டிக் கொள்கிறார்கள். கர்ப்பகிரகத்தின் வெளிப்புறமாக மேற்கு நோக்கி அனுமன் அருளாட்சி புரிகிறார். முன்புறம் சிவனுக்கு தனிச்சந்நதி. இந்த சிவனுக்கு முன்னால் நந்தியும் நந்தனாரும் உள்ளனர்; இது அபூர்வமான ஒன்று. இந்த கோயிலில் விநாயகச் சதுர்த்தி விழா மிகச்சிறப்பாக 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. தமிழ் கலாச்சாரப்படி மேளதாளம், கரகாட்டம் என்று இந்த விழா களைகட்டும். இச்சமயத்தில் உற்சவராக ஒரு விநாயகர் நிர்மாணிக்கப்படுவார்.

அவருக்கு சிறப்பான பூஜை நடக்கும்.  ஒவ்வொரு மாதமும் சங்கடஹரசதுர்த்தி தினத்தன்று அனைத்துப் பிரிவு மக்களும் இந்த விநாயகரை தவறாமல் வணங்கி வருகிறார்கள். இந்த கோயிலில் திருமணம் நடக்கிறது. காது குத்துதல், மொட்டை போடுதல், பால்குடம் எடுத்தல் என பரிகார வழிபாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. கேட்ட வரம் தரும் விநாயகராக இவர் உள்ளார். இங்கு வந்து வேண்டிக்கொள்பவருக்கு திருமணத்தடை நீங்குகிறது. இந்த கோயிலில் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்கு விரைவில் குழந்தை வரமும் கிட்டுகிறது. கழலை நோய் நீங்குகிறது. படிப்பில் நல்ல தேர்ச்சி கிடைக்கிறது. தொழில் விருத்தியாகிறது. மும்பை தாதர், மட்டுங்கா, சயான் மற்றும் மாஹீம் ரயில் நிலையங்களில் இறங்கி இந்த கோயிலுக்கு வாடகை காரில் செல்லலாம். தாராவி கிராஸ் ரோட்டில் மங்கல்வாடி என்னும் இடத்தில் இந்த கோயில் உள்ளது.

முத்தாலங்குறிச்சி காமராசு படங்கள்: காளிமுத்து, ராமச்சந்திரன்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்