SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சந்திரன் பூஜித்த விருச்சிகப் பிள்ளையார்

2018-09-12@ 16:31:10

ஈசன் உவந்து அருளிய எருக்கம்பூ மாலையைப் பணிந்து பெற்றுக்கொண்ட துர்வாச முனிவர், அமராவதியின் எல்லையை அடைந்தார். அவரை இந்திரன் இனிதாய் வரவேற்றான். தன்னிடமிருந்த எருக்கம்பூ மாலையை ஆசிர்வாதமாக இந்திரனிடம் நீட்டினார் முனிவர். அவன் ஐராவதத்திலிருந்து இறங்காது கால் அகட்டி அம்மாலையை பெற்றுக் கொண்டான். எருக்க மாலையை ஏற்கெனவே தலைகனத்தால் திமிறிக் கொண்டிருந்த ஐராவதத்தின் தலையில் தூக்கிப் போட்டான். அகங்கார யானை கோபமும் கொண்டது. துதிக்கையை வளைத்து பூமாலையைப் பற்றி இழுத்தது. பிறகு வானோக்கித் தூக்கிச் சுழற்றியது. சட்டென்று தரையில் வீசி எறிந்து காலால் மிதித்தது. துர்வாசர் கோபத்தில் தணலானார். கண்களில் தீப்பொறி பறக்க அதனைப் பார்த்தார்.

உடனே வெண் யானை தன் ஒளியிழந்து, களையிழந்து கருமையாக மாறியது. கரும்பெரும் உடல் சிறுத்து, செதில் செதிலாய் தோல் உரிந்து கோர உருவமாகியது. துர்வாசரின் திருவடிகளில் வீழ்ந்தது. இந்திரன் இடிந்து போயிருந்தான். அவனும் எழக்கூட வலிமையற்று கால் தடுமாறி விழுந்தான். ‘‘ஐராவதமே உன் செருக்குக்கு இந்த தண்டனை உனக்கு அவசியம் தேவை. பூலோகத்தில் தனியே திரிந்து, கர்வத்தை உதறி, ஆணவம் அழித்து வா” என்றார். பிறகு இந்திரனிடம், ‘‘இந்திரா, இந்த யானை நீ அலங்காரமாய் வலம் வருவதற்கு மட்டுமே. ஆனால், நீ அதன் அகங்காரத்தை வளர்த்து அதை மதங்கொள்ளச் செய்திருக்கிறாய்.  இந்த சிவநிந்தனைக்கும் நீதான் மூல காரணம். வெகு விரைவில் அதுவும் உனக்குப் புரியவரும்’’ என்றார். அகங்காரம் கொண்ட எந்தத் தலைவனும் தலையெடுத்ததில்லை என்பதை ஐராவத யானையை முன்நிறுத்தி ஈசன் தன் விளையாடலை தொடங்கினார்.

நான்கு வேதங்களையும் பழுதறக் கற்றறிந்த வேதியன் ஒருவன் மலை மலையாய் எள்ளைக் குவித்து வைத்தான். ஆனால், எள்ளை தானம் வாங்குபவன் அதற்குச் சமமானதை ஈய வேண்டும் என்று தர்ம சாஸ்திரத்தை அறிந்தும் உணராமல் இருந்தான். அந்த எள்ளின் கருமை அவன் அகத்தில் பிரதிபலித்தது. ஆகவே தன் இயல்பு மாறி கரிய நிறத்தோடும், உயர்ந்த மலைபோல உருவம் தாங்கி பிரம்ம ராட்சசனாக ஆனான். கானகத்திற்குள் புகுவோரை பிடித்துத் தின்றான். அப்போது அங்கு வந்த மகாமுனிவரும் சிவத் தொண்டருமான வாமதேவரையும் புசிக்க எண்ணி அவரைத் தீண்ட, முனிவரின் மகத்தான அருளால் தன்னைப் பற்றிய உண்மை உள்ளுக்குள் ஒளிர்ந்தது. ‘என் சுயரூபம் எப்போது எனக்குக் கிட்டும்?’ என அவரிடம் கெஞ்சிக் கேட்டான். அவர் யோசனைப்படியே
வில்வாரண்யத்துக்கு வந்து சேர்ந்தான்.

அந்த எல்லையைத் தொட்டபோதே பிரம்மராட்சசனுக்கு அசுர ரூபம் மறைந்தாலும், இன்னும் சிறிது அசுரத்தன்மை மட்டும் ஒட்டிக்கொண்டிருந்தது. அவன் ஓடிவந்து பரமனின் பாதத்தில் விழுந்தான். பேராசையுடன் ‘மூவுலகையுமே தானே ஆளவேண்டும்’ எனக் கேட்டான். ‘அப்படியே ஆகட்டும்’ என்றார், ஐயன். உடனே தன் அரக்கத்தனத்தை உலகெங்கும் விஸ்தரிக்க ஆரம்பித்தான். வரம் பெற்ற அரக்கர்களுக்கு தேவர்களை திணறடித்து விரட்டுவது விளையாட்டு. அந்த வகையில் இந்திரனைத் துரத்திக்கொண்டு மருத்துவாசுரனான பிரம்மராட்சசனும் அதே வில்வாரண்யம் நோக்கி வந்தான். இதற்கிடையில் துர்வாசரால் சபிக்கப்பட்ட ஐராவத யானையும் வில்வாரண்யம் நோக்கிச் சென்றது. மருத்துவாசுரனால் மிரண்டுபோன இந்திரன், பரமனின் பாதத்தை இறுக்கப் பிடித்துக் கொண்டான். உடனே, கரிய நிறமாய், எண்கரங்களிலும் ஆயுதம் ஏந்தி சிவனின் அம்சாவதாரமான அகோர மூர்த்தி அந்த மருத்துவாசுரனின் முன்பு நின்றார்.

திகைத்தான் அசுரன். ஆனாலும், ஆவேசமாய்த் தாக்கினான். அகோரமூர்த்தி மருத்துவாசுரன் மார்பில் சூலத்தைப் பாய்ச்ச மிகப்பெரிய அலறலோடு
பூமியில் விழுந்தான். மருத்துவாசுரனின் வதம் நிகழ்ந்ததால் இத்தலம் ‘மருத்துவக்குடி’ என்று பெயர் பெற்றது. புராணப் பெருமைமிக்க இக்கோயிலின் ராஜகோபுரம் நெடிதுயர்ந்து விளங்குகிறது. கோயிலுக்கு இடப்புறம் அம்பாள், அபிராமி எனும் திருநாமத்தோடு நின்ற கோலத்தில் அருள் பொழிகிறாள். திருஆனைக்கா அகிலாண்டேஸ்வரி காதில் தாடங்கம் எனும் ஆபரணம் அணிந்து ‘தாடங்க பீடேஸ்வரி’ என்று விளங்குவதுபோல், இத்தல அபிராமி, ஒட்டியாண ஆபரணம் ஏற்று ‘ஒட்டியாண பீடேஸ்வரி’யாகத் திகழ்கிறாள். மூலவர் சந்நதியில், ஐராவதத்தால் பூஜிக்கப்பட்ட ஐராவதேஸ்வரர் அருள் வெள்ளம் பெருக்குகிறார். வெண் யானை பூஜித்ததால் லிங்கத் திருமேனி இன்னும் வெண்மையாகவே உள்ளது.

மருத்துவக்குடியின் மகிமை சொல்லும் இன்னொரு விஷயம், இங்குள்ள விருச்சிகப் பிள்ளையார். சந்திரன் சுய ஒளியை இழந்து மங்கித் தேய்ந்து வந்தபோது, இத்தல ஈசனை வழிபட்டு தீர்த்தம் உண்டாக்கினான். மூலநாயகனான பிள்ளையாரையும் நிறுவி பூஜித்தான். விநாயகரின் உடலமைப்பு தேள்போன்று வரிவரியாகத் திகழ்கிறது.  ஜோதிட ரீதியாகவும் சந்திரன் நீசமானது விருச்சிக ராசியில்தான். ஆகவே, விருச்சிகத்தில் மங்கித் தேய்ந்தவன், இங்கு விருச்சிகப் பிள்ளையாரை நிறுவி பூஜித்திருக்கிறான். விருச்சிக ராசிக்காரர்கள் இந்தப் பிள்ளையாரை வணங்க, அவர்கள் வாழ்வு விண்ணுயரும் என்பது உறுதி. இத்தலம் கும்பகோணத்திற்கு அருகேயுள்ள ஆடுதுறையிலிருந்து  மூன்று  கிலோ  மீட்டர்  தொலைவில் உள்ளது.
 
கிருஷ்ணா 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • yoga

  சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

 • octopus

  ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

 • brainfever

  பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

 • pandacub

  உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

 • 17-06-2019

  17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்