SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோயில்களின் சிறப்புகள்

2018-09-12@ 09:45:24

வரகூர்
               
இத்தலத்தில் லட்சுமி நாராயணர், வராக மூர்த்தி, கிருஷ்ணர் என்று மூன்று கோலங்களில் பெருமாள் அருட்பாலிக்கிறார். இத்தலத்தில் நடைபெறும் உறியடி உற்சவம் உலகப் பிரசித்தி பெற்றதாகும். கருவறையில் லட்சுமி நாராயணர் பத்ம விமானத்தின் கீழே இடது திருத்தொடையில் மகாலட்சுமியை அமர்த்தியபடி சேவை சாதிக்கிறார். லட்சுமி நாராயணரையே கிருஷ்ணராக பாவித்து வணங்குகின்றனர். நாராயண தீர்த்தருக்கு லட்சுமி நாராயணரே நேரடியாக பாமாருக்மிணி சமேத கிருஷ்ணராக தரிசனம் கொடுக்க, உடனே தீர்த்தர் கிருஷ்ண லீலா தரங்கிணியை இயற்றினார். இக்கோயிலில் துளசி, ஏலக்காய், பச்சைக் கற்பூரம், ஜாதிக்காய், கிராம்பு உள்ளிட்ட மூலிகைகள் சேர்த்து இடித்த பொடியை பிரசாதமாகத் தருகிறார்கள். தஞ்சைக்கு அருகேயே இத்தலம் அமைந்துள்ளது.     

கூடலூர்


இக்கோயிலை கூடல் அழகிய பெருமாள் கோயில் என்பர். தல விருட்சமாக புளிய மரம் அமைந்துள்ளது. தாயாரின் திருநாமம் மகாலட்சுமி என்பதேயாகும். கூடலழகர் அஷ்டாங்க விமானத்தின் கீழ் எழுந்தருளியிருக்கிறார். கோயில் முன் மண்டபத்தில் மகாலட்சுமி மற்றும் கையில் வெண்ணெயுடன் நவநீத கிருஷ்ணர் தரிசனம் அருள்கின்றனர். கோயிலின் முன் மண்டப மேற்சுவரில் ராசி சக்கரம் உள்ளது. இதன் மத்தியில் மகாலட்சுமியும் காட்சி தருகிறாள். கருவறையில் கூடல் அழகிய பெருமாள் நின்ற கோலத்தில் தாயார்களோடு சேவை சாதிக்கிறார். இத்தலம் தேனிக்கு அருகே உள்ளது.

திண்டிவனம்

இத்தலத்தில் நரசிம்மரின் உக்கிரம் தணிய வேண்டி, தாயாராகிய லட்சுமி அவரை வணங்கிய நிலையில் நிற்கிறார். நரசிம்மரையும், மகாலட்சுமியையும் இந்த கோலத்தில் காண்பது என்பது மிகவும் அரிதாகும். மூலவராக லட்சுமி நரசிங்கப் பெருமாள் எனும் திருநாமத்தோடு அருட்பாலிக்கிறார். இங்குள்ள அனுமன் சங்கு, சக்கரம் அலங்கரிக்க, நான்கு திருக்கரங்களோடு அருட்பாலிக்கிறார். ஏனெனில், நான்கு அரக்கர்களை வதம் செய்வதற்காக பெருமாளே அனுமனை அனுப்பினாராம். சென்னை  திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூருக்கு அருகே திண்டிவனத்தில் இத்தலம் அமைந்துள்ளது.

திருக்கண்ணமங்கை


நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றாகும். திருவாரூருக்கு அருகேயுள்ளது. மூலவருக்கு பக்தவத்சலப் பெருமாள் எனும் திருநாமம். இத்தலத்தில் திருமாலுக்கும், திருமகளான மகாலட்சுமிக்கும் நடந்த திருமணத்தைக் காண தேவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டேயிருந்தார்கள். மேலும், தேனீக்களின் வடிவில் கூடு கட்டி பெருமாளை தரிசித்தபடி இருந்தனர். பாற்கடலிலிருந்து வெளிப்பட்ட மகாலட்சுமி முதலில் பெருமாளின் அழகிய திருமுகத்தை கண்டாள். அதை உள்ளத்தில் நிறுத்தி இத்தல நாயகனையே திருமணம் செய்ய வேண்டுமென்று இங்கு வந்து தவமியற்றினாள். பெருமாளே தன் பாற்கடலை விட்டு இங்கு வந்து மகாலட்சுமியை மணம் புரிந்ததால் பெரும்புறக் கடல் என்கிற திருநாமமும் பெருமாளுக்கு உண்டு. மேலும், இந்த க்ஷேத்ரத்திற்கே லட்சுமி வனம் எனும் திருப்பெயர் உண்டு. பஞ்ச கிருஷ்ண தலங்களில் இதுவும் ஒன்று.

கிருஷ்ணகுமார்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-11-2018

    19-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்