SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திறவுகோலாய் இலங்கும் திருக்குறள்!

2018-09-11@ 16:04:01

குறளின் குரல் - 88

திருவள்ளுவர் காலத்திலேயே திறவுகோல் இருந்திருக்கிறது. மக்கள் இல்லங்களைப் பூட்டி வைத்துக் கொண்டார்கள். தாழ்ப்பாள் போட்டுக் கொண்டார்கள். இதையெல்லாம் திருக்குறளைப் படிக்கும்போது புரிந்துகொள்ள முடிகிறது. திருவள்ளுவர் கதவு, தாழ் ஆகிய சொற்களைச் சில இடங்களில் கையாள்கிறார்.

'அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்!’ (குறள் எண் 71)

அன்புக்கு ஏது தாழ்ப்பாள்? அன்புடையவர் சிந்தும் விழிநீர் மற்றவர் இதயப் பூட்டை உடைத்துத் திறந்துவிடும். அன்பால் திறக்காத இதயம் ஏது?

'காமக் கணிச்சி உடைக்கும் நிறைஎன்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.’ (குறள் எண் 1251)

வெட்கம் என்ற தாழ்ப்பாளைக் கொண்டு அடைபட்டிருந்தது தலைவியின் உள்ளம் என்ற கதவு. ஆனால் காதல் எல்லை மீறியவுடன் வெட்கமின்றி வாய்விட்டுப் புலம்பும் நிலைக்குத் தலைவி வந்துவிட்டாள். அவளின் உள்ளக் கதவைக் காதல் என்னும் வேட்கை தாக்கித் தகர்த்துவிட்டது.

'சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.’ (குறள் எண் 57)

பெண்களைச் சிறையிலிட்டுக் காவல் வைத்துக் காப்பாற்ற இயலாது. அவர்கள் தங்கள் கற்பினால் தாங்களே தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அதுவே சிறந்தது. இவ்விதம் சிறை பற்றியும் கதவு பற்றியும் தாழ்ப்பாள் பற்றியும் குறட்பாக்களில் கூறுகிறார் வள்ளுவர். வேதாரண்யம் எனப் பெயர் பெற்ற திருமறைக்காட்டில் உள்ள ஆலயத்தில் உறைபவர் வேதாரண்யேஸ்வரர் எனப்படும் திருமறைக் காடர். அந்த ஆலயத்தின் பிரதான கதவு எப்போதும் மூடியே இருந்தது. பொதுமக்கள் பிரதான வாயில் வழியே செல்ல இயலாததால் பக்கவாட்டில் உள்ள வழி மூலமாகத் தான் ஆலயத்தின் உள்ளே சென்று சிவபெருமானை
தரிசித்து வந்தார்கள்.
 
திருத்தல தரிசன யாத்திரையில் ஒருமுறை திருமறைக் காட்டிற்கு வருகை தந்தார்கள் புகழ்பெற்ற சிவனடியார்களான அப்பரும், ஞானசம்பந்தரும். பூட்டிக் கிடந்த கதவைக் கண்டு வருந்தியது அவர்கள் உள்ளம். இறையருளால் நாம் பாடும் தமிழே சாவியாகி இந்தப் பூட்டைத் திறக்கட்டும் என மனமாற வேண்டிக் கொண்டார்கள். 'பண்ணினேர் மொழியாள்’ எனத் தொடங்கும் பதிக த்தைத் திருநாவுக்கரசர் பாடினார்.

'கண்ணினால் உமைக்காணக் கதவினைத் திண்ணமாகத் திறந்தருள் செய்ம்மினே!’  

என்று உள்ளம் உருகப் பாடினார். அவர் பாடப் பாட, என்ன ஆச்சரியம்! பூட்டிய கதவு சிவபெருமானின் திருவருளால் படீரெனத் தானே திறந்துகொண்டது. அன்பர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். பூட்டிய கதவைத் திறக்கும் பக்தித் தமிழின் பெருமையுணர்ந்து மகிழ்ந்தார்கள். மக்களோடு சேர்ந்து நாவுக்கரசரும், ஞானசம்பந்தரும் ஆலயத்தின் உள்சென்று சிவபெருமானைத் தரிசித்தார்கள். வெளியே வந்ததும் நாள்தோறும் இனி இக்கதவு திறக்கவும் பூட்டவும் படவேண்டும் என எண்ணியது ஞானசம்பந்தர் உள்ளம். எனவே அவர் ஒரு பதிகம் பாடினார். திறந்த கதவு தானே மறுபடி மூடிக் கொண்டது. அன்றுதொட்டு, மற்ற கோயில் கதவுகளைப் போலவே,

அந்த ஆலயக் கதவையும் காலையில் திறந்து, இரவில் மூடப்படும் வழக்கம் மேற்கொள்ளப்பட்டது. பூட்டு சாவி என்ற இரண்டையும் கொண்டு கம்பராமாயணத்தில் உள்ள ஓர் அரிய நயத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் தமிழறிஞரும் சிலம்புச் செல்வருமான ம.பொ.சிவஞானம் அவர்கள். ராவணன் இறந்தபோது மண்டோதரி அவன் உடலில் விழுந்து புலம்பி அழுகிறாள். அந்த சந்தர்ப்பத்தில் கம்பர் மண்டோதரி புலம்பலாக எழுதியுள்ள ஒரு பாடல் புகழ்பெற்றது.

'வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்
எள்ளிருக்கும் இடமின்றி உயிரிருக்கும் இடம்நாடி இழைத்த வாறோ?
கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் ஜானகியை மனச் சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக் கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி?’

ராமபிரானின் அம்பு ஒருமுறை இதயத்தில் தைத்தாலே போதும். ராவணன் உயிர் போய்விடும். ராமபாணம் அத்தனை வலிமை உடையது அல்லவா? அப்படியிருக்க எள்ளிருக்கக் கூட இடமில்லாதபடி அது மறுபடி மறுபடி ராவணன் மார்பைத் தைத்திருக்கிறதே ஏன் எனக் கேட்டுக் கொள்கிறாள் மாதரசி மண்டோதரி. பின் அதற்கான விளக்கத்தையும் கழிவிரக்கத்தோடு அவளே சொல்கிறாள்.

அசோக 'வனச் சிறையிலிருந்து’ சீதையை மீட்டுவிடலாம். ஆனால் ராவணனின் 'மனச் சிறையிலிருந்தும்’ அவளை வெளியேற்ற வேண்டும் அல்லவா? அதனால் மனத்தின் மூலையில் எங்காவது சீதையின்மேல் கொண்ட காதல் இருக்கிறதோ என்றெண்ணி அதையும் அழிக்க வேண்டி மறுபடி மறுபடி அந்த அம்பு துளைத்ததோ எனக் கண்ணீர் சிந்துகிறாள் தேவி மண்டோதரி.

இந்தப் பாடலில் தனக்கு முன் யாரும் சொல்லாத ஒரு நயத்தைக் கண்டுபிடித்துச் சொல்கிறார் மாமேதையான ம.பொ.சி.! அவர் இந்தப் பாடலைப் பூட்டுப் பாட்டு என்கிறார். இதைத் திறக்கும் சாவி முன்னரே இன்னொரு பாடலில் உள்ளது என்றும் சொல்கிறார். ராவணன் சூர்ப்பணகை மூலம் சீதையின் அழகைப் பற்றிக் கேள்விப்படுகிறான். அவள் சொன்ன வர்ணனைகளில் மயங்குகிறான். அப்போது கம்பர் ராவணனின் மன நிலையை விவரித்து ஒரு பாடல் எழுதுகிறார்:

'மயிலுடைச் சாயலாளை வஞ்சியா முன்னம் நீண்ட
எயிலுடை இலங்கை நாதன் இதயமாம் சிறையில் வைத்தான் அயிலுடை அரக்கன் உள்ளம் அவ்வழி மெல்ல மெல்ல வெயிலுடை நாளில் உற்ற வெண்ணெய்போல் வெதும்பிற்று அன்றே!’

- என்பது அந்தப் பாடல். இதயச் சிறையில் இராவணன் சீதையை வைத்ததை முன்பே சொல்லிவிட்டார் கம்பர். அந்தச் சாவிப் பாடலை வைத்துப் பின்னால் வரும் இந்தப் பூட்டுப் பாடலைத் திறக்க வேண்டும். எள்ளிருக்கும் இடமின்றி அம்பு துளைக்கக் காரணம் இதயச் சிறையிலிருந்து சீதையை விடுவிக்கத்தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பது சிலம்புச் செல்வரின் அற்புதமான விளக்கம்!

ஜெயங்கொண்டார் எழுதிய கலிங்கத்துப் பரணியில் ஒரு கதவு வருகிறது. அது சாதாரணக் கதவல்ல, காதல் கதவு! இரவு நேரம் தலைவன் வருவார் என்று கதவைத் திறக்கிறாளாம் தலைவி. அவர் வரவில்லை. சரி, வரமாட்டார் என ஏக்கத்தோடு கதவை மூடுகிறாளாம். மறுபடியும் ஒரு நப்பாசை. அவர் வருகிறாரோ? மீண்டும் கதவைத் திறந்து பார்க்கிறாளாம். அவர் வரவில்லையே? பெருமூச்சோடு மறுபடி கதவை மூடுகிறாளாம். இப்படி அடிக்கடித் திறந்து திறந்து மூடுவதால் கதவு தேய்கிறதாம்.

வருவார் கொழுநர் எனத் திறந்தும்
வாரார் கொழுநர் என அடைத்தும்
திருகும் குடுமி விடியளவும்
 தேயும் கபாடம் திறமினோ!’
 
பெண்கள் தங்கள் கூந்தலில் மலர்களை மட்டுமா சூடுகிறார்கள்? முதிரா இளைஞர்களின் ஆருயிரையும் சேர்த்தல்லவா சூடுகிறார்கள்? அப்படிப்பட்ட பெண்களிடம் கதவைத் திறக்கச் சொல்கிறான் தலைவன்.

'முருகிற் சிவந்த கழுநீரும்
  முதிரா இளைஞர் ஆருயிரும்
 திருகிச் செருகும் குழல் மடவீர்
  செம்பொற் கபாடம் திறமினோ!’

கலவி மயக்கத்தில் என்னென்னவோ பேசினாளே அந்தத் தலைவி, அவற்றையெல்லாம் அவள் வளர்க்கும் கிளி கேட்டுக் கொண்டிருந்ததாம். மறுநாள் காலை அந்தக் கிளி அந்தப் பேச்சையெல்லாம், தான் பேசத் தொடங்கிற்றாம். சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளை அல்லவா? தலைவிக்கு வெட்கம் பிடுங்கித் தின்கிறது. அந்தக் கிளியின் வாயை அவசர அவசரமாகப் பொத்துகிறாளாம் அவள்.

'நேயக் கலவி மயக்கத்தே
 நிகழ்ந்த மொழியைக் கிளியுரைப்ப
வாயைப் புதைக்கும் மடநல்லீர்
 வண்பொற் கபாடம் திறமினோ!’

இப்படிக் கதவைத் திறக்கச் சொல்லும் பாடல்களாக ஏராளமான பாடல்களை எழுதி அவற்றின் அபாரமான இலக்கிய நயத்தால் நம் நெஞ்சை அள்ளுகிறார் புலவர் ஜெயங்கொண்டார்.

'பூட்டைத் திறப்பது கையாலே - நல்ல
  மனந்திறப்பது மதியாலே
பாட்டைத் திறப்பது பண்ணாலே - இன்ப
 வீட்டைத் திறப்பது பெண்ணாலே’

- எனப் பூட்டைத் தம் பாடலொன்றில் குறிப்பிடுகிறார் பாரதியார்.

'ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்று
  எண்ணியிருந்தோர் மாய்ந்து விட்டார்!
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற
  விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்!’

- எனப் பெண்கள் விடுதலைக் கும்மி என்ற பாடலில் கைகொட்டிப் பாடுகிறார் மகாகவி. வானகம் இங்கு தென்படவேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள் புதுச்சேரி  ஸ்ரீஅரவிந்தரும் ஸ்ரீஅன்னையும். இறைச் சக்தியை மண்ணில் கொண்டுவரப் பாடுபட்டவர்கள் அவர்கள். மகாகவி பாரதியார், வ.வே.சு. ஐயர் போன்றோரோடு அரவிந்தர் தியானம் பழகியதும் இந்தச் சாதனையை நிகழ்த்தத்தான். ஒருநாள் அன்னை ஒரு தரிசனம் கண்டார். சொர்க்கத்தின் தங்கமயமான கதவு பிரமாண்டமான தங்கப் பூட்டால் பூட்டப்பட்டிருந்தது. அதை மாபெரும் தங்கச் சுத்தியல் கொண்டு உடைக்கத் தொடங்கினார் அன்னை.

பூட்டு உடைந்ததும் சொர்க்கத்தின் ஆனந்தத் துகள்கள் பூமியில் சரசரவென விழத் தொடங்கின. ஆனால் மண்ணை அந்தத் துகள்கள் எட்டுவதற்குள் தீய சக்திகள் அதைத் தங்கள் கொடூரமான நாக்கால் எடுத்து விழுங்கி பூமியில் அந்தத் துகள்கள் சங்கமிப்பதைத் தடுத்துவிட்டன. தொடர்ந்து தியானமும் தவமும் நிகழ்த்தி சொர்க்கத்தை பூமிக்குக் கொண்டுவரலாம், அந்த முயற்சியைத் தொடரவேண்டும் என்கிறார் ஸ்ரீஅன்னை. ஸ்ரீஅரவிந்தர், ஸ்ரீஅன்னை இருவரது தவத்தின் நோக்கமே இறைச்சக்தியை மண்ணுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதுதானே?

அரவிந்தர் ஸித்தி அடைந்து அவர் உடல் மண்ணுக்குள் அடக்கம் செய்யப்பட்ட போது அரவிந்த அன்பர் ஒருவருக்குத் துயரம் பெருகியது. இறைச் சக்தி பூமியில் இறங்கத்தானே தவம் செய்தார் அரவிந்தர்? அந்தப் பணியை இனி யார் செய்வார்கள்? இறைச் சக்தி மண்ணில் இறங்குகிற அந்தக் கனவு நிறைவேறுமா? அது நடக்குமா? உருக்கத்துடன் வங்காள மொழியில் மனத்திலேயே வேண்டினார் அவர். உடனே அவருக்குக் காற்று வெளியில் தெளிவாக ‘ஹொபே ஹொபே ஹொபே’ என அரவிந்தர் குரலில் பதில் கேட்டது. ‘நடக்கும், நடக்கும், நடக்கும்’ என வங்காள மொழியிலேயே அரவிந்தர் சொன்ன பதிலைக் கேட்ட அவர் வியப்போடு தன் விழிகளைத் துடைத்துக் கொண்டார்.

சனி சிங்கனாப்பூர் என்று வட இந்தியாவில் புனேயைத் தாண்டி அகமத்நகர் அருகில் ஒரு கிராமம் உள்ளது. புகழ்பெற்ற சனீஸ்வரன் ஆலயம் ஒன்றும் அங்கே உள்ளது. சபரி மலையில் உள்ளதைப் போலவே அந்தக் கோயிலின் உட்பிராகாரத்தில் பெண்கள் நுழைய அனுமதி இல்லை. ஜோதிட ரீதியாக ஏழரை நாட்டுச் சனியின் பாதிப்புக்கு உட்பட்டவர்கள் அந்தக் கோயிலுக்கு வந்து, அங்கு சுயம்புவாக உள்ள சனி பகவானை வழிபட்டால் பாதிப்பிலிருந்து விடுபடுவார்கள் என்பது நம்பிக்கை. அந்த ஊர் ஒரு விஷயத்திற்காக உலக அளவில் பிரசித்தி பெற்றது.

அந்த ஊரில் எந்த வீட்டுக்கும் கதவு கிடையாது. உள்ளே செல்லும் வாயில் என்பதை உணர்த்தும் வகையில் கதவுக்கான நிலைச் சட்டம் இருக்குமே தவிர, கதவே எந்த வீட்டிலும் இராது. எனவே பூட்டுக்கும் அங்கு வேலையில்லை. அந்தக் கிராமத்தில் எந்தப் பொருளும் திருட்டுப் போவதில்லை என்று சொல்லப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் என்ற ஒரு தனி வாசலைத் திறப்பது பெருமாள் கோயில்களில் உள்ள வழக்கம். திருச்சி ஸ்ரீரங்கம் முதல், சென்னைத் திருவல்லிக்கேணி வரை எல்லாப் பெருமாள் கோயில்களிலும் இந்த வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

வைகுண்ட ஏகாதசி அன்று அந்த வாசல் வழியாகச் சென்று இறைவனைத் தரிசிக்கக் கூட்டம் அலைமோதும். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் அந்தப் பரமபத வாசல் வழியே சென்றால், இப்பிறவி முடியும்போது வைகுண்டம் சென்று சேரலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சாவி என்ற பெயரிலேயே தமிழில் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் இருந்தார். ஆனந்தவிகடனிலும் பின்னர் தினமணிகதிரிலும் பணிபுரிந்த அவர் கொஞ்சகாலம் குங்குமம் வார இதழின் ஆசிரியராகவும் இருந்தார்.

கலைஞர் கருணாநிதியின் நெருங்கிய நண்பரான அவர், சாவி என்ற தன் பெயரிலேயே பிறகு ஒரு பத்திரிகையும் தொடங்கினார். 'விசிறி வாழை’, ‘வழிப் போக்கன்’, ‘வேதவித்து’ போன்ற சமூக நாவல்களையும் 'கோமகனின் காதல்’, ‘நவகாளி யாத்திரை’ போன்ற வரலாற்று நூல்களையும் எழுதிய அவர், தமது 'வாஷிங்டனில் திருமணம்’ என்ற நகைச்சுவை நவீனத்திற்காகப் பெரும் புகழ் பெற்றவர். ஆனால் அவரது சாவி என்ற புனைபெயர், பூட்டைத் திறக்கும் சாவி என்ற கண்ணோட்டத்தில் வைத்துக் கொள்ளப்பட்டதல்ல. சா. விஸ்வநாதன் என்ற தன் பெயரையே சாவி எனச் சுருக்கிக் கொண்டார் அவர்.

'பூங்கதவே தாள்திறவாய்’ என 'நிழல்கள்’ திரைப்படத்தில் ஒரு பாடல் உண்டு. காதலியின் மனக் கதவைத் திறக்கச் சொல்கிறது அந்தப் பாடல். கங்கை அமரன் எழுதிய அந்தப் பாடலின் காட்சியில் அடுத்தடுத்து ஏராளமான அழகிய கதவுகளைத் திறக்கச் செய்திருக்கிறார் இயக்குநர். திருக்குறளில் சில குறட்பாக்களில் திறவுகோல் பற்றிய செய்திகள் உள்ளன என்பது மட்டுமல்ல, திருக்குறளே தமிழ்ப் பண்பாட்டுக்கு ஒரு திறவுகோல்தான் என்பது உண்மைதானே! 

- திருப்பூர் கிருஷ்ணன்

(குறள் உரைக்கும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-06-2019

  19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • bji

  முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

 • suvami

  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

 • mango

  கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

 • earth

  சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்