SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உஞ்சவிருத்தி என்கிற பாகவத தர்மம்!

2018-09-11@ 15:49:40

ஞானியர் தரிசனம்  - 24

சத்குரு சுவாமிகள் இல்லறத்தை ஏற்றுக் கொண்டும், பெற்றோருக்கு பணிவிடை செய்தபடியும் இருந்தார். சதாசர்வகாலமும் தன் இதயத்தில் ராமச்சந்திர மூர்த்தியை தியானித்தபடி இருந்தார். தினமும் ராமரின் முன்பு நாமசங்கீர்த்தனம் செய்தபடி இருந்தார். திடீரென்று ஒருநாள் தந்தையார் வயோதிகத்தால் இறைவனடி சேர்ந்தார். திருவிசநல்லூருக்கு அருகேயே வேப்பத்தூர் எனும் ஊரும் அமைந்துள்ளது. இங்குள்ள செல்வந்தர் தன் பிள்ளைக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். மறுநாளே சுவாமிகள் அவர்களின் இல்லத்தை அடைந்தார். கையிலேயே அன்னத்தை கொண்டு செல்லும் வழக்கம் கொண்டவர் சுவாமிகள். அவரின் இல்லத்திற்குச் சென்று அன்ன மூட்டையை பிரித்து அங்கு படிப்பதற்காக வந்திருந்த குழந்தை களுக்கு அன்னத்தை பிரசாதமாகக் கொடுத்தார். அந்தக் குழந்தைகளின் முகமே ஜொலித்தது. சுவாமிகள் எந்தவிதமான பாடத்தையும் நடத்தாமலேயே அவர் களுக்கு வேதங்களும் உபநிஷதங்களும் புரியத் தொடங்கி சொல்லத் தொடங்கினர்.

ஒருமுறை பௌராணிகர் ராமாயணத்தை கூறத் தொடங்கினார். சத்குருசுவாமிகள் தன்னை மறந்து கேட்கத் தொடங்கினார். ‘‘எப்பேற்பட்டவர் ராமர். இறைவன், தான் இறைவன் என்று சொல்லிக்கொண்டு வந்து லீலைகளை நிகழ்த்துவது நம் பாக்கியமல்லவா. மனிதன் தெய்வ நிலையை அடைந்து அங்கேயே நின்று அடியார்களை அணைத்தும், பண்படுத்தியும் பலரை ஆட்கொண்டு கரையேற்றுவது என்பது புண்ணிய பூமியில் நிகழும் வழக்கம். ஆனால், இறைவன் தன் தெய்வத் தன்மையை முற்றிலும் மறைத்துக் கொண்டு சாதாரண மானிடரைப்போல வாழ்வது என்பது அசாதாரணமானது. அதுதான் ஸ்ரீராமாவதாரத்தில் நிகழ்ந்தேறியது. ராமருடைய அவதாரம் தியாகத்தைத்தான் சொன்னது. தியாகத்தின் மூலமாக தர்மத்தை உணர்த்தியது. எல்லாவற்றிலும் மேலாக தானே அதை வாழ்ந்தும் காட்டியது. வெறும் ராஜாவல்ல ராமர். அவர் தியாகராஜராக மிளிர்ந்தார். ராஜபோகம் காலுக்கு கீழ் இருந்தாலும், யோகியைப் போல மரவுறிதரித்து கானகம் சென்றார்.

இப்படிப்பட்ட ராமயோகியை புரிந்து கொள்ள முடிகிறதா, நாளை விடிந்தால் பட்டாபிஷேகம். ஆனால், முதல் நாள் அழைத்து ‘நீ இன்றிலிருந்து பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டும்’ என்றபோது முகம் சுருங்கவில்லையே. மலர்ந்த தாமரையையும் விட பிரகாசத்தோடு அரண்மனையை தாண்டி கானகம் சென்றாரே. இங்கு தந்தை சொன்னால் கேட்பதுதான் மகன் கடமை என்று மகனுக்குரிய தர்மத்தை வாழ்ந்து காட்டினார். அன்னையாக தன்னை வளர்த்த கைகேயியின் மனம் கோணக்கூடாது என்று கைகேயியை கருணையோடு பார்த்தார். கானகமென்ன, ராமருக்கு ஒன்றும் புதிதல்ல. விஸ்வாமித்திரரோடு அவரின் தவத்திற்கு காவலாக சென்றிருக்கிறார். ஆனால், இங்கு ராமர் என்கிற மனித தெய்வத்தின் தியாகத்தை பார்க்க வேண்டும். தனக்கு இன்னது பிடிக்கும் எனும் தன் ஆவலை மறைத்து, மற்றவர்களுக்கு பிடித்ததை செய்தவரே ராமர். அது சீதையின் விஷயத்திலும் தொடர்ந்ததல்லவா.

எல்லா தர்மங்களையும் விட பாகவத தர்மத்தையும் காட்டியவரல்லவா அவர். அதென்ன பாகவத தர்மம். அகலிகை நிஜத்திலேயே அறியாது பாதை மாறியவள். ஆனால், தன் திருவடியின் நிழல்பட்டதினாலேயே சாப விமோசனம் பெற்றாள். இங்கு அவர் காட்டியது சாதாரண தர்மமல்ல. பாகவத தர்மம். ஆனால், சீதாப் பிராட்டி விஷயத்தில் அக்னிப் பிரவேசம் செய்யச் சொன்னார். தன்னைத்தானே மறைத்துக் கொண்டாலும், மதகு உடைந்த ஏரியைப்போல தன்னிலிருந்து கருணை மழையை எல்லோர் மீதும் தெளித்தபடி நகர்ந்தார். சீதையும் அதற்கு கட்டுப்பட்டாள்.  சீதாப் பிராட்டியை காணவில்லையென்று தெரிந்தபோது, மரமே நீ கண்டாயா, மலையே நீ பார்த்தாயா... என்று சாதாரண மனிதனாக வேதனைப்பட்டார். போர்க்களத்தில் எளிதாக வதம் செய்ய வேண்டிய ராவணனை நாளை வா என்று திருப்பியனுப்பிய கருணாமூர்த்திதான் ராமர்.

யோகிகளுக்கெல்லாம் மகாயோகியான ஸ்ரீமன் நாராயணன் ராமராக அவதரிக்கும்போது, அந்த யோக விஷயங்களையெல்லாம் எனக்கும் சொல்லுங்களேன் என்று வசிஷ்டரிடம் கைகட்டி நின்ற பாங்கு யாருக்கு வரும். யோகவாசிஷ்டம் எனும் அந்த விஷயங்கள் எத்தனை ஆழமானவை. எங்கேயோ காட்டில் தனக்காக காத்துக் கொண்டிருந்த சபரிக்கு மோட்சம் கிட்ட வேண்டும் என்று ஓடினாரே. விபீஷண சரணாகதியின்போது தானாக விபீஷணனை ஏற்காது அனுமனின் அபிப்ராயத்தை ஏற்றுக் கொண்ட ராஜ விநயம் யாரிடம் பார்க்க முடியும். இறைவனையும், பக்தனையும் இணைத்து வைத்த அனுமனை குருவாக உயர்த்திய மாண்பு ராஜாராமனுக்குத்தான் வரும். யுத்த களத்திலிருந்து மீண்டு ஒருவன் ராவணனிடம் வந்தானாம். ராவணன், நீ மட்டும் எப்படி தப்பித்தாய் என்று கேட்டான். அதற்கு அவன் நான் காலில் கொலுசோடு பெண் வேடமிட்டு வந்தேன். ராமன் என்னை பார்க்கவில்லை என்றானான். சீதையைத் தவிர வேறொரு பெண்ணை பார்க்காத ஏகபத்தினி விரதனாக விளங்கினார், ராமர்.

ராம எனும் சப்தப் பிரம்மம் அவதாரம் செய்தது. ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியாக வாழ்ந்து காட்டியது. ஸ்ரீமன் நாராயணன் எனும் பிரம்மசக்தி ராம எனும் திருப்பெயரில் உறைந்திருந்தது. எப்படிப் பார்த்தாலும் வைரம் மின்னுவதுபோல ராம நாமமும், ராமரும், அவரின் சரிதமும் ஒன்றே. நாமத்தை பிடித்துக் கொள்ளுங்கள். நாமியை அடைந்து விடலாம் என்பார்கள் பாகவதர்கள். ராம எனும் நாமத்தை பிடித்தால், நாமி எனும் அந்தப் பெயருக்குரிய பிரமாண்டமான அந்த சக்தி அதனிலிருந்து வெளிப்படுவதை உணர்வீர்கள். ஒலியாக விளங்கும் ராம சப்தத்தை நாவால் புரட்டுங்கள். அது உள்ளத்தில் ஊறி அமுத ரசமாக பொங்குவதை உணருங்கள். உங்கள் இதயத்தில் மீண்டும் ராமரின் பட்டாபிஷேகத்தை பார்ப்பீர்கள் என்று அந்த பௌராணிகர் மிகமிக உருக்கமாக சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது ராமர் வனத்திற்கு செல்லும்முன்பு தாயாரிடம் அனுமதி பெறும் இடத்தை மிகமிக உருக்கமாக சொல்லிக் கொண்டே வந்தார்.

அப்போது கௌசல்யை இப்படி கானகத்திற்குச் செல்பவன் எப்படி தன்னை காப்பாற்றிக் கொள்வான். இங்கேயே எங்கேயாவது உஞ்சவிருத்தி செய்து கொண்டிருக்கலாமே எனும்  இடத்தை கேட்டவுடனே, சத்குரு சுவாமிகள் ஹா... ஹா... என் ராமன் காட்டிற்குச் செல்கிறானா... என்று அழுது புரண்டார். துடித்தார். கண்கள் நிலைகுத்தியபடி இருக்க, பெரும் ஆவேசத்தோடு சத்குருசுவாமிகள் பேசத் தொடங்கினார். ‘‘சென்ற அவதாரத்தில் தந்தை தசரதனின் வாக்கை தட்டாது கானகம் சென்றேன். பித்ரு வாக்கியத்தை பரிபாலனம் செய்தாகிவிட்டது. என் தாயார் கௌசல்யை என் தந்தையாரிடம் எங்கேயாவது பிச்சை எடுத்தாவது வீட்டில் வசிக்கட்டும் என்று சொன்னது தெரியாமல் போய்விட்டது.

எனவே, அந்த அவதாரத்தில் தாய் என்ன சொன்ன வாக்கியத்தை காப்பாற்ற முடியவில்லை. இனி, இதோ இந்த அவதாரத்தில் நான் மாத்ரு வாக்கிய பரிபாலனமெனும் தாயின் வாக்கை தட்டாது காப்பாற்றுவேன். மிஞ்சிய காலம் முழுவதும் உஞ்சவிருத்தி எடுத்து ஜீவிப்பேன். இது சத்தியம்... சத்தியம்...’’ என்று பூமியில் அறைந்து மூர்ச்சையானார். அன்றிலிருந்து உஞ்சவிருத்தி தர்மத்தையே கைக்கொண்டார். உஞ்சவிருத்தியினால் எது கிடைக்கிறதோ அதைக் கொண்டு நிறைவானார். எதிலும் அதிகப்பற்றுதல் இல்லாது ஆத்ம ஸ்தானத்தை நோக்கியே தன்னுடைய பார்வையை வைத்துக் கொண்டு அமைதியாக இருந்தார். பாகவத தர்மம் என்கிற விஷயத்தை தானே நடத்திக் காட்டியபடி இருந்தார்.

கிருஷ்ணா

(ஞானியர்  தரிசனம் தொடரும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • colorado

  கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

 • trainchina

  சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

 • 24-05-2019

  24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்