SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமணத் தடை நீக்கும் கேரளத்துத் திருமணஞ்சேரி

2018-09-07@ 17:25:59

ஜாதக ரீதியான திருமணத் தடைகள் விலகி, உரிய காலத்தில்  திருமணம் கை கூடி  மகிழ்ச்சியான மண வாழ்க்கை அமைய, ஏராளமான பக்தர்கள் நாடிச் செல்லும் திருமணத் திருத்தலம். தமிழ்நாடு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமணஞ்சேரி. தேவாரப் பாடல் பெற்ற இத்தலத்தில் சிவபெருமான், பார்வதி தேவியை மணம் புரிந்து கொண்டதாக ஒரு ஐதீகம் உள்ளது. எனவே இங்குள்ள இறைவனுக்கு கல்யாண சுந்தரேஸ்வரர் (உத்வாக நாதர்) என்ற பெயர் அமைந்தது. திருநாவுக்கரசரும், திருஞான சம்பந்தரும் பாடிய அருளிய இத்தலத்தில் திருமணத் தடைகள் நீங்க சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

மனித முயற்சிகளோடு, இறையருளும் இணைந்தால்தான் மட்டுமே திருமணம் கைகூடும் என்பதை பறை சாற்றும் திருத்தலமாக இது அமைந்துள்ளது. இவ்வூருக்கு அருகில் உள்ள எதிர்கொள்பாடி மேலைத் திருமணஞ்சேரி என்று அழைக்கப்படுகிறது. இதே போன்று காவிரித் தென்கரைத் தலமான மருதாநல்லூர், திருவாரூர், திருச்செங்கோடு, திருச்சத்தி முற்றம், திருநல்லூர், திருக்கோலக்கா, கோவை வேடப்பட்டி ஸ்ரீஉமா மஹேஸ்வரர் ஆலயம் மற்றும் வைணவ திவ்ய தேசங்களான திருவிடந்தை, உறையூர், மேலும் ஆந்திர மாநிலம் காளஹஸ்தி போன்ற பல சைவ, வைணவத் தலங்கள் திருமணத் தடை நீக்கும் ஆலயங்களாக திகழ்கின்றன.

திருமணஞ்சேரி போன்றே கேரள மாநிலத்திலும், திருமணத் தடைகளை விலக்கி உரிய காலத்தில் திருமணப் பேற்றினை அருளும் ஆலயம் ஒன்று கொல்லம் மாநகரில் உள்ளது. பெரும்பாலான சிவாலயங்களில் சிவபெருமான் லிங்கத் திருமேனியாக கருவறையில் காட்சி தருவதையே நாம் தரிசிக்க  முடியும். ஆனால் தெய்வீகத் தம்பதிகளான சிவபெருமானும் பார்வதி தேவியும் உருவத் திருமேனியாக ஒரே பீடத்தில் அமர்ந்து, அருட்காட்சி அருளும் அற்புத திருத்தலம் இது. தட்சனின் மகளாக அவதரித்து, தாட்சாயணி என்று அழைக்கப்பட்ட தேவி, தன் தந்தை நடத்திய யாகத்தில் அவமானப் படுத்தப்பட்டபோது உயிர்நீத்து, பர்வத ராஜன் மகளாக அவதரித்து பார்வதி என்ற பெயர் பெற்றாள்.

பார்வதிதேவி கன்னிப் பெண்ணாக இருந்தபோது சிவபெருமானையே தன் கணவராக  அடையவேண்டுமென்று கடுந்தவமியற்ற, அவள் பெற்றோர் தவமியற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு, உமா என்று அழைத்தனர். (‘உ’ மகளையும், ‘மா’ வேண்டாம் என்பதையும் குறிக்கும்!) சிவபெருமானின் 64 உருவத் திருமேனிகளில் சோமாஸ்கந்தர், உமேசம் மற்றும் உமாபதி போன்ற உமையம்மையுடன் இருக்கும் திருக்கோலங்கள் தரிசிக்கப் பலனளிப்பவையாகும்.  புரட்டாசி அல்லது கார்த்திகை  பௌர்ணமி நாளன்று இந்தியாவின் பல மாநிலங்களில் உமா மஹேஸ்வர விரதம் சுமங்கலிப் பெண்களால் அனுஷ்டிக்கப்படுகிறது.

சிவபெருமானைக் குறித்த அஷ்ட மஹாவிரதங்களில் இதுவும் ஒன்று. இந்நாளில் கடும் விரதம் அனுஷ்டித்து சிவ பார்வதி படம் அல்லது பிரதிமை மற்றும் கும்பம் வைத்து பகல் நேரத்தில் இந்தப் பூஜையை விரிவாகச் செய்வதுடன் மாலையில் சிவாலயங்களுக்குச் சென்று வழிபடவும் செய்கிறார்கள். கந்த புராணத்தில் உமா மஹேஸ்வர விரத மஹான்மியம் என்ற பகுதியில் இந்த விரதம் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சிவபெருமான் உமா மஹேஸ்வரராக எழுந்தருளியிருக்கும் பிரபலமான திருத்தலம், பாடல் பெற்ற திருநல்லம் என்ற கோனேரிராஜபுரம் ஆகும்.

கோவையில் உள்ள 500 ஆண்டு பழமையான வேடப்பட்டி, தெலங்கானா மாநிலம் ஜுடிமட்லா, மற்றும் உமா மஹேஸ்வரம், ஆந்திரா ஸ்ரீசைலத்தின் அருகில் உள்ள  உமாமஹேஸ்வரம், மற்றும் யாகண்டி ஸ்ரீஉமா மஹேஸ்வரர் ஆலயம்,  திருச்சூர் மணிகண்டேஸ்வரம் போன்றவை பிரபலமான உமாமஹேஸ்வரத் திருத்தலங்களாகும். கொல்லம் மாநகரின் நடுநாயகமாக அமைந்துள்ள ஸ்ரீஉமாமஹேஸ்வரஸ்வாமி ஆலயத்தின் பின்னணியில் ஒரு சுவாரசியமான புராணக் கதை கூறப்படுகிறது. ஒருமுறை கைலாயத்திலிருந்து சிவபெருமான் உமாதேவியோடு தென்னாட்டில் உள்ள அகத்திய மலையை நோக்கிப் பயணித்த போது கொல்லத்திற்கு வந்தனராம்.

இப்பகுதியின் இயற்கை எழிலில் தன் மனதைப் பறி கொடுத்த உமா தேவி இங்கு இரவு தங்கிவிட்டுச் செல்ல விரும்பினார். சிவபெருமானும் அதற்குச் சம்மதித்தாலும், ‘கொல்லத்தின் இயற்கை அழகில் மனதைப் பறி கொடுத்தவர்கள் வீடு திரும்ப மாட்டார்கள்,’ என்று கூறினாராம். (“கொல்லம் கண்டவன் இல்லம் வேண்டா” என்பது மலையாளப் பழமொழி).  கொல்லத்தின் எழிலில் மயங்கி தெய்வீகத் தம்பதிகள் அங்கிருந்த ஓர் ஆலமரத்தின் அடியில்  நித்திரை செய்தனர். சிவ, பார்வதி தங்கிய ஆல மரத்தின் அருகே மன்னரின் ஸ்தபதி வேங்கடேஸ்வரன் என்பவர் குடியிருந்தார். அவரது  கனவில் தாம் தம்பதி சமேதராகத் தங்கிய இடத்தில் ஓர் ஆலயம் எழுப்புமாறு சிவபெருமான் கட்டளையிட்டதாக அவருக்குத் தோன்றியது.

மறுநாள் காலை ஸ்தபதி மன்னரிடம் சென்று விவரம் தெரிவித்து, மன்னரின் அனுமதியோடு அங்கு ஒரு பீடம் அமைத்து, அதன் மீது சிவ பார்வதி  திருமேனிகளை களி மண்ணினால் வடித்து ஆராதித்து வந்தார். அந்தப் பழமையான  ஆலயமே பின்னாளில் வளர்ந்து தற்போதுள்ள ஸ்ரீஉமா மஹேஸ்வர ஸ்வாமி ஆலயம் என்ற மஹா க்ஷேத்திரமாக உருவாகியிருக்கிறது. இந்த ஆலயம் அமைந்துள்ள பகுதி உமாமஹேஸ்வரம் சந்திப்பு (ஜங்ஷன்) என்றே அழைக்கப்படுகிறது. மிகவும் சுறுசுறுப்பான பிரதான சாலையில் அமைந்துள்ள இந்த அழகிய கோயில் வெளிப்புறம் தமிழ்நாட்டுப் பாணியிலும், உள்ளே கேரள சம்பிரதாயத்திலும் அமைந்துள்ளது.

ஆலய நுழைவாயிலில் மேலே சிவன்-பார்வதி, இரு மருங்கிலும் விநாயகர், முருகப் பெருமான் சுதைச் சிற்பங்களைக் காணலாம். கருவறை மற்றும் உபாலயங்கள் செம்புத் தகட்டினால் வேயப்பட்டுள்ளன. நந்தியை அடுத்து கருவறை நுழைவாயிலின் இருபுறங்களிலும் விநாயகர், சுப்பிரமணியர் சந்நதிகளோடு மாடன்தம்புரானுக்கும் சந்நதி உள்ளது. கருவறையில் ஒரே பீடத்தில் சிவபெருமானும் அவருக்கு இடப்புறம் உமா தேவியான பார்வதி தேவியும் அருகருகே அமர்ந்த கோலத்தில் அருட்காட்சி தருகின்றனர். (கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வடக்கேகாடு கிராமத்தில உள்ள 2000 ஆண்டு பழமையானதாகக் கருதப்படும் மணிகண்டேஸ்வரம் உமா மகேஸ்வரர் ஆலயத்திலும் சிவபெருமானும் பார்வதியும் இவ்வாறு காட்சி தருகின்றனர்.)

மிக அழகிய வேலைப்பாடு கொண்ட இந்த கருங்கல் திருமேனிகள் சந்தனக் காப்பில், மலர் மாலைகள், ஆபரண அலங்காரத்தோடு பக்தர்களை நோக்கி கருணையோடு நோக்கும் திருவிழிகள் ஒளிர்கின்றன. கேரள ஆலயங்களுக்கே உரிய வரிசையான எண்ணெய் தீபங்களின் ஒளியில் இந்த தெய்வத் தம்பதியை தரிசனம் செய்யும் போது பரவசப்படாத பக்தர்களே இருக்க முடியாது. ஜாதக ரீதியாக பல்வேறு தோஷங்களால் திருமணம் தடைப்பட்டு நிற்கும் எண்ணற்ற பக்தர்கள் இந்த ஆலயத்தைத் தேடி, வரம்  கிடைக்கும் பொருட்டு வருகை தருகின்றனர். திருமணத் தடை உள்ளவர்களுக்கு அவர்களது ஜாதகங்களுக்கேற்ப சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

மாங்கல்ய சித்தி,  தீர்க்க செளமாங்கல்யம் மற்றும்  தம்பதி ஒற்றுமை ஆகியவற்றுக்கு ஸ்ரீஉமா மகேஸ்வர பூஜை,  சுயம்வர புஷ்பாஞ்சலி,  சுயம்வர பார்வதி ஹோமம் போன்றவை செய்யப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும்  திங்கள் கிழமை நாளன்று சுமங்கலி பூஜை, மாங்கல்ய பூஜை மற்றும் சுயம்வர அர்ச்சனையும்  செய்யப்படுகின்றன. வியாழக்கிழமை அன்று மாங்கல்ய பூஜையும், சுயம்வர அர்ச்சனையும் சிறப்புப் பூஜைகளாகப் பக்தர்களுக்குச் செய்யப்படுகின்றன. வெள்ளிக்கிழமை ராகுகால பூஜை முக்கிய இடம் பெறுகிறது. சோமவாரம் எனப்படும் திங்கட் கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

மேலும் மஞ்சப் பரா (பரா எனப்படும் மரக்காலில் மஞ்சள் கிழங்குகளை அளப்பது), எற்றுப் பரா, பட்டுந்தாலியும் போன்ற கேரள மாநிலத்திற்குரிய சடங்குகளும் நடத்தப்படுகின்றன. இந்த ஆலயத்தில் செய்யப்படும் வழிபாடுகளில் கலந்து கொண்டு திருமணம் கைகூடப் பெற்றவர்கள் தவறாது தங்கள் திருமணப் பத்திரிகைகளை அதற்கென்று வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையில் செருகி வைத்திருப்பதைக் காண முடிகிறது. ஸ்ரீஉமா மஹேஸ்வரஸ்வாமி ஆலயத்தில தை மாதம் திருவாதிரைத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் தனப் பொங்காலா எனப்படும், பெண்கள் பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது.

மேலும் மகர விளக்கு, மகா சிவராத்திரி, அட்சய திருதியை, நவராத்திரி, மண்டல பூஜை, போன்றவை பிற உத்சவங்களாகும். கொல்லம் மாநகர பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும், இரயில் நிலையத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிலும் உமா மஹேஸ்வரா ஜங்ஷன் என்ற இடத்தில் ஆலயம் அமைந்துள்ளது. ஆட்டோ அமர்த்திக் கொண்டு பத்து நிமிடங்களுக்குள் ஆலயத்தைச் சென்று  அடையலாம். ஆலயம் காலை 5 முதல் 11 மணிவரையிலும் மீண்டும் மாலை 5 முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்து வைக்கப்படுகிறது.

ஆலய தொலைபேசி தொடர்பு எண்: 0474-2743572 கொல்லம் செல்பவர்கள், ஸ்ரீஉமா மஹேஸ்வர ஸ்வாமியைத் தரிசித்துவிட்டு, கொல்லத்திற்கு அருகில் உள்ள சாஸ்தாங்கோட்டா தர்மசாஸ்தா, குளத்துப்புழா சாஸ்தா, கொட்டாரக்கரா மஹாகணபதி, ஓச்சரா பரப்பிரம்மம்,  பொன்மனா காட்டில் மேக்கத்தில் தேவி,  சவரா கொட்டங்குளங்கரா பகவதி ஆகிய ஆலயங்களையும் தரிசித்து வரலாம்.

- விஜயலட்சுமி சுப்பிரமணியம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • thaneer_laari_kudam11

  குடிநீர் பஞ்சம் எதிரொலி : 'குடம் இங்கே, தண்ணீர் எங்கே?’.. தமிழக அரசை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்

 • kali_dogsa1

  கலிபோர்னியாவில் அழகற்ற நாய்களுக்கான போட்டி : 19 நாய்கள் பங்கேற்பு

 • firoilsuthigari11

  அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 2 நாட்களாக பற்றி எரிந்த தீ : மாபெரும் போராட்டத்திற்கு பின் அணைப்பு

 • 24-06-2019

  24-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-06-2019

  23-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்