SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமண யோகம் கூடி வருகிறது

2018-09-07@ 15:35:54

30 வயதாகும் என் மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவள் ஐந்து அடி உயரம்தான் இருப்பாள். வரும் வரன்கள் எல்லோரும் பெண் குட்டையாக உள்ளார் என்று கூறி போய் விடுகிறார்கள். மன வருத்தத்தில் இருக்கும் எங்களுக்கு ஒரு வழி காட்டுங்கள். - ஜெபமணி, மதுரை.

ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் செவ்வாய் மற்றும் சனி இணைந்திருப்பதால் திருமணத் தடை உண்டாகி வருகிறது. என்றாலும் தற்போது நடந்து வரும் தசாபுக்தியின்படி உத்யோக ரீதியான முன்னேற்றத்தினைக் காண்பார். உங்கள் மகள் வேலை செய்துவரும் தனியார் நிறுவனத்தில் பதவி உயர்வினையோ அல்லது வேறொரு புதிய கம்பெனியில் தற்போது பார்த்து வரும் வேலையை விட கூடுதலான பொறுப்புடைய பதவியிலோ அமருவதற்கான வாய்ப்பு சிறப்பாக உள்ளது. பதவி உயர்வினைக் கண்ட கையோடு திருமணத்திற்கான வாய்ப்பும் வந்து சேரும்.

உத்யோகத்தில் உள்ள மாப்பிள்ளையாக வந்து சேர்வார். ஏதேனும் ஒரு சனிக்கிழமை நாளில் தூத்துக்குடி தூய பனிமய மாதா திருத்தலப் பேராலயத்திற்குச் சென்று உங்கள் மகளை பிரார்த்தனை செய்யச் சொல்லுங்கள். ஆலயத்தில் பிரார்த்தனையை முடித்துக்கொண்டு வரும்போது ஆதரவற்ற நிலையில் உள்ள வறியவர்களுக்கு உங்களால் இயன்ற அன்னதானத்தினை உங்கள் மகளின் கரங்களால் செய்யச் சொல்லுங்கள். மாதாவின் திருவருளால் உங்கள் மகளின் மனதிற்கு பிடித்தமான வகையில் மணாளன் அமைவார். 2019ம் ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் உங்கள் மகளின் திருமணம் முடிவாகிவிடும். கவலை வேண்டாம்.

என் மகனுக்குத் திருமணமாகி நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை புத்திரபாக்கியம் இல்லை. சென்ற வருடம் ராமேஸ்வரம் சென்று உரிய பரிகாரம் செய்து வந்து விட்டோம். குழந்தைப்பேறு கிடைக்க நல்ல வழி காட்டுங்கள். - லலிதா, ஸ்ரீரங்கம்.

ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. அனுஷம் நட்சத்திரம், விருச்சிக ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மருமகளின் ஜாதகத்தின்படி தற்போது கேது தசையில் ராகு புக்தி துவங்கியுள்ளது. உங்கள் மருமகளின் ஜாதக பலத்தின்படி குழந்தைப் பேறினைத் தரும் ஐந்தாம் வீட்டில் குருவும் ராகுவும் இணைந்திருக்கிறார்கள். புத்திர காரகன் குருவுடன் ராகு இணைந்திருக்க, தற்போது ராகுபுக்தி துவங்கியுள்ளதால் பிள்ளைப்பேறு கிடைப்பதற்கு சாதகமான நேரம் கூடிவந்துவிட்டது. உங்கள் மருமகளின் ஜாதக ரீதியாக பிள்ளைப்பேறு கிடைப்பதில் இருந்து வந்த தடை தற்போது விலகிவிட்டது.

உங்கள் மகனின் ஜாதகத்தில் ஐந்தாம் பாவக அதிபதி சனி, புத்திர காரகன் குருவுடன் இணைந்து 12ல் அமர்ந்திருப்பது சற்று பலவீனமான நிலை ஆகும். குரு, சனி இருவரும் சூரியனின் சாரம் பெற்று சூரியனும் எட்டில் அமர்ந்திருப்பது புத்திர தோஷத்தினைத் தருகிறது. மருமகள் வராவிட்டாலும், உங்கள் மகனை மட்டுமாவது மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறச் சொல்லுங்கள். மருத்துவரின் ஆலோசனை உங்கள் மகனுக்கு அவசியம் தேவை என்பதை எடுத்துச் சொல்லுங்கள். வியாழன் தோறும் ஸ்ரீரங்கம் ஆலயத்தில் உள்ள பெரியதிருவடியின் (கருடாழ்வார்) சந்நதியை தம்பதியராக ஏழுமுறை வலம் வந்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தினைச் சொல்லி வணங்கச் சொல்லுங்கள்.  

“ஓம்நமோபகவதே பஸ்சிமமுகே கருடாய ஸகலவிஷ ஹரணாய ஸ்வாஹா.”

நான் சொந்தமாக மிட்டாய் கம்பெனி நடத்தி வருகிறேன். 30 ஆண்டு காலமாக நன்றாக இருந்த தொழில் கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக முடங்கிய நிலையில் உள்ளது. கடன்சுமை அதிகரிப்பதால் நிம்மதியின்றி வாழ்க்கையே வெறுத்து போய் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருக்கிறேன். எனது தொழில் அபிவிருத்திக்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் ஒரு வழி காட்டுங்கள். - ரவிச்சந்திரன், கும்பகோணம்.

ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகம் மிகவும் பலம் வாய்ந்தது. உங்கள் ஜாதகக் கணக்கின்படி தற்போது சனி தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. சனி தசை துவங்கிய நாள் முதல் தொழில்முறையில் சற்று சிரமத்தினை சந்தித்து வருகிறீர்கள் என்பது உங்கள் கடிதம் வாயிலாகத் தெரிய வருகிறது. சனி பகவான் உங்கள் ஜாதகத்தில் பத்தாம் இடமாகிய ஜீவன ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெற்று அமர்ந்துள்ளார். மார்க்கெட்டில் உலா வரும் இன்றைய நவீன ரகங்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கென்று இருந்து வரும் பாரம்பரியத்தை நீங்கள் அப்படியே கடைபிடித்து வாருங்கள். அதே நேரம் வெறும் மிட்டாய் கம்பெனி என்பதை ஸ்வீட்ஸ் - ஸ்நாக்ஸ் கம்பெனியாக மாற்றிக் கொள்ளுங்கள்.

மார்க்கெட்டில் ஏற்கெனவே இருந்து வரும் நற்பெயர் உங்களுடைய முயற்சிக்குக் கைகொடுக்கும். உங்களுக்கென்று இருந்துவரும் பிராண்டு நிச்சயம் வெற்றியடையும். உங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் இணைந்திருக்கும் ஐந்து கிரஹங்களும், லக்னாதிபதி சுக்கிரனின் உச்ச பலமும், லாபாதிபதி குருவின் தன ஸ்தான சஞ்சாரமும் என்றென்றும் உங்கள் உழைப்பிற்குத் துணைபுரியும். தற்போது நடந்துவரும் சனி தசையில் தொழில்முறையில் லேசான மாற்றத்தைச் செய்யுங்கள். பாரம்பரியம் அப்படியே தொடரட்டும். உழைப்பால் உயருபவர்களின் பட்டியலில் சிறந்த இடத்தினைப் பிடிப்பீர்கள். பரிகாரம் ஏதும் தேவையில்லை.

குடும்பத்தில் எவ்வளவு வருமானம் வந்தாலும் அதைவிட செலவு அதிகமாக உள்ளது. 2003ல் நகையை விற்று 500 சதுர அடி நிலம் வாங்கினோம். என் கணவர் கெமிக்கல் சம்பந்தப்பட்ட கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த வருடம் அவர் உடல் முழுவதும் அரிப்பு எடுத்து தடிப்பு, தடிப்பாக வந்து சிரமப்படுகிறார். வைத்தியம் பார்த்தும் சரியாகவில்லை. மாற்று வேலையும் கிடைக்கவில்லை. குலதெய்வம் எது என்பதைச் சொல்லி எங்கள் குறைகள் நீங்க ஆலோசனை வழங்குங்கள். - சுலோச்சனா, பவானி.

மிருகசீரிஷம் நட்சத்திரம், மிதுன ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் கணவரின் ஜாதகத்தின்படி தற்போது சனி தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. பொதுவாக  சனி தசையில்  ராகுபுக்தி  நடக்கும் காலத்தில் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் வருவது சகஜம்தான். உங்கள் கணவரின் உடலில் எதிர்ப்புத்திறன் குறைவாக இருப்பதால் சற்று சிரமப்படுகிறார். செக்கு இயந்திரத்தில் ஆடிய நல்லெண்ணெயை உடலில் தினமும் தடவி வாருங்கள். வாரம் ஒரு முறை சிறிதளவு கருப்பு உளுந்து களி செய்து நல்லெண்ணெய் விட்டு ஓரிரு உருண்டைகள் சாப்பிட்டு வர உடல்நலம் சீராகும். 19.09.2020 வரை உடல்நிலையில் அலர்ஜி என்பது இருந்துவரும் என்றாலும் கொஞ்சம், கொஞ்சமாக அரிப்பும், தடிப்பும் குறையத் துவங்கும்.

தொழில்முறையில் இடமாற்றத்தினைத் தவிர்க்க இயலாது. துணிகள் தயாரித்தல், பனியன் கம்பெனிகள், சாயப்பட்டறைகள் போன்றவற்றில் அவர் வேலை பார்ப்பதற்கு வாய்ப்பு கிட்டும். திருப்பூர் போன்ற ஊர்களில் வேலை தேடுவது நல்லது. அவரது ஜாதகத்தை ஆராய்ந்ததில் உங்கள் பங்காளிகள் சொல்வது போல் முனியப்ப ஸ்வாமியே குலதெய்வம் என்று தெரிகிறது. உங்கள் மாமனார் குறிப்பிடுவது போல் பெருமாள் என்பது குடும்பத்தில் வழிபாட்டிற்குரிய தெய்வமாக இருக்கலாம். பங்காளிகள் சொல்லும் முனியப்ப ஸ்வாமியின் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வாருங்கள். குறைகள் நீங்கும்.

39 வயதாகும் நான் பலசரக்கு கடை நடத்தி வருகிறேன். தொழில் அமோகமாக இல்லை என்றாலும் நட்டமில்லாமல் நடக்கிறது. சிறு வயதில் இருந்தே வேலை செய்து தங்கைகள் இருவருக்கும் மணம் முடித்து வைத்தேன். என் சொந்த முயற்சியில் திருமணமும் செய்துகொண்டேன். பூர்வீகமாக தாத்தா வழியில் ஒரு இடம் உள்ளது. அந்த இடத்தில் வில்லங்கம் ஏதுமின்றி வீடு கட்டி நல்லபடியாக வாழ என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - நீலகண்டன், வேலூர் மாவட்டம்.

உங்கள் பெயருக்கு முன்னால் ‘அதிர்ஷ்டமில்லா’ என்ற வார்த்தையை சேர்த்து கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். சிறு வயதில் இருந்து உண்மையாக உழைத்து வாழ்வினில் முன்னேறிக் கொண்டிருக்கும் நீங்கள் அதிர்ஷ்டத்தை நம்பியிருக்கலாமா? உங்கள் உழைப்பின் மீது முழு நம்பிக்கையையும் வையுங்கள். அதிர்ஷ்டம் என்ற வார்த்தைக்கு ‘கண்ணிற்குத் தெரியாத’ என்று பொருள். அந்த வார்த்தைக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய ஜென்ம ராசி விருச்சிகம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். விருச்சிகம் என்பது உங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்துச் சொல்லப்படும் ராசி ஆகும்.

உங்கள் பிறந்ததேதி மற்றும் நேரத்தை வைத்துக் கணக்கிடும்போது நீங்கள் கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, மிதுன லக்னத்தில் பிறந்தவர் என்பது புலனாகிறது.
உங்களுடைய ஜாதக பலத்தின்படி நீங்கள் சொந்தமாக வீடு கட்டுவது என்பது பூர்வீக இடத்தில் இல்லாமல் இருத்தல் நலம். வேறு ஒரு இடத்தினை சொந்தமாக வாங்கி அந்த இடத்தில் வீடு கட்டி வாழ்வதே உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் நலம் பயக்கும். பூர்வீக இடத்தினை உங்கள் தொழிலிற்கு வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போதைய உங்கள் நேரத்தின்படி சொந்தமாக ஒரு இடத்தினை வாங்கி பதிவு செய்யுங்கள். 2021ம் ஆண்டில் சொந்தவீடு கட்டி க்ருஹப்ரவேசம் செய்ய இயலும். பரிகாரம் ஏதும் தேவையில்லை.

சிறந்த கல்வி, சீரிய ஒழுக்கம், தோற்றப் பொலிவுடன் மத்திய அரசு பணியில் உள்ள எனது ஒரே மகன் திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை என்கிறான். ஏழு வருடங்களுக்கு முன் கணவனை இழந்த என்னால், என் மகனுக்கு வழிகாட்ட இயலவில்லை. என் மகனின் வாழ்வில் திருமண பந்தம் ஏற்பட்டு நல்ல முறையில் குடும்பம் நடத்திட வழிகாட்டுங்கள்.- நிர்மலா, மும்பை.

ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி புதன் வக்ர கதியில் சனியின் சாரம் பெற்று அமர்ந்திருப்பது சற்று பலவீனமான நிலையாக உள்ளது. மேலும் மனோகாரகன் சந்திரனுடன் நீசம் பெற்ற ராகு இணைந்து மூன்றில் அமர்ந்திருப்பதால் சற்றே மனக்குழப்பத்தில் உள்ளார். முதலில் அவருடைய மனதில் உள்ள குழப்பங்களுக்கு தெளிவான விடை கிடைக்க வேண்டும். அவருடைய நெருங்கிய நண்பர்கள் மூலமாக அவருடைய மனக்குழப்பத்தைப் போக்க முயற்சியுங்கள். இறைநம்பிக்கை கொண்ட உங்கள் மகன் தர்ம நெறி மாறாமல் நடப்பவர்.

உங்களுடைய சொந்த ஊரில் நடக்கும் ஆலய விசேஷங்களுக்கும், உறவினர் இல்லங்களில் நடக்கும் சுபநிகழ்வுகளுக்கும் உங்கள் பிள்ளையோடு செல்லுங்கள். அவர் மனம் மாறும் வகையிலான சம்பவங்கள் அங்கே நடக்கக் காண்பீர்கள். புதன்கிழமை தோறும் வீட்டுப் பூஜையறையில் சிறிய அளவிலான ஸ்படிக லிங்கம் வைத்து அதற்கு பால் மற்றும் பன்னீர் அபிஷேகம் செய்து வழிபட்டு வாருங்கள். நேரம் கிடைக்கும்போது மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நதிக்குச் சென்று மலர் மாலை சாற்றி பிரார்த்தனை செய்து கொள்வதும் பயன்தரும். 23.10.2018ற்கு மேல் உங்கள் மகனுக்கு திருமண யோகம் என்பது கூடி வருகிறது.

என் மகன் உறவு முறையில் தங்கையாக உள்ள பெண்ணை காதலிக்கிறான். நாங்கள் இது முறையல்ல என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை. இந்த முறையற்ற காதலில் இருந்து அவனை விடுவிப்பதற்கு தகுந்த பரிகாரம் சொல்லுங்கள். - சம்பத்குமார், தும்கூர்.

சித்திரை நட்சத்திரம், துலாம் ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தில் தற்போது குரு தசையில் சுக்ர புக்தி துவங்கியுள்ளது. திருமணத்தைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் சனி மற்றும் ராகுவின் இணைவு சிரமத்தைத் தந்துகொண்டிருக்கிறது. உறவு முறைக்கு முக்கியத்துவம் தராமல் அந்தப் பெண்ணை உங்கள் மகன் விரும்புவதன் காரணத்தை அறிய முற்படுங்கள். ஜென்ம லக்னத்தில் குரு மற்றும் கேதுவின் இணைவினைப் பெற்றிருக்கும் உங்கள் மகன் இளகிய மனம் படைத்தவராக இருப்பார். அந்தப் பெண்ணிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற பச்சாதாப உணர்வு அவர் மனதில் காதலாக உருவெடுத்திருக்கலாம். அடிப்படை காரணம் என்ன என்பதை அறிந்துகொண்டு அவருக்கு எடுத்துச் சொல்லிப் புரிய வையுங்கள்.

தற்போது 10.08.2018 முதல் நேரம் மாறியுள்ளதால் எது தர்மம் என்பதைப் புரிந்துகொள்ளும் மன நிலைக்கு வந்திருப்பார். நம்முடைய சமுதாயக் கட்டமைப்பு முறைகளைப் புரிந்துகொண்டு நடந்துகொள்வார். அதே நேரத்தில் அந்தப் பெண்ணிற்குத் தேவையான உதவிகளைச் செய்வதோடு அவருக்கு வேறொரு நல்லவாழ்க்கை அமைந்திடவும் முயற்சிப்பார். அந்த முயற்சிக்குத் தடையேதும் சொல்லாமல் பெற்றோர் ஆகிய நீங்கள் உதவி செய்யுங்கள். சனி தோறும் ஆஞ்சநேய ஸ்வாமி ஆலயத்திற்குச் சென்றும் மாதம் ஒரு முறை வடைமாலை சாற்றியும் வழிபட்டு வாருங்கள். கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி வணங்குவதால் மகனின் மனநிலையில் மாற்றத்தைக் காண்பீர்கள்.

“ஸூவர்சலா களத்ராய சதுர்ப்புஜ தராயச
உஷ்ட்ராரூடாய வீராய மங்களம் ஸ்ரீஹநூமதே.”


வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை-600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-01-2019

  15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • MakarSankrantiFestival

  வட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை

 • 14-01-2019

  14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-01-2019

  13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 12-01-2019

  12-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்