SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதுவரை மனிதன், அதற்கு மேல் இறைவன்!

2018-09-07@ 15:31:23

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன் - 8

மனைவி, மக்கள், மனை, செல்வம் என அனைத்து வசதிகளும் வாய்க்கப்பெற்று அனுபவித்து மகிழும் ஒவ்வொருவரும் பூரண நிறைவோடு பொலிகின்றார்கள். அன்றாட வாழ்க்கைச் செலவுகளைச் செய்வதற்கே அவதிப்படும் நிலைமையும், அதிகப்படியான வளம், வசதிகள் இருந்தும் நோயால் அவதிப்படும் சூழலும் அமையுமானால், அத்தகைய ஒரு வாழ்க்கை சுமையாகத் தானே தோன்றும்?

‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை
அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை’

- என்கிறார் திருவள்ளுவர். மண்ணுலகிலும், மேல் உலகிலும் சிறப்பாக வாழ ஆன்மிகம் வழிகாட்டுகின்றது.

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்!
எண்ணில் நல்லகதிக்கு யாதும் ஓர் குறைவில்லை!
கண்ணில் நல் அஃதுறும் கழுமல வளநகர்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே!

- என்று ஆலய வழிபாட்டின் அவசியத்தை திருமுறை அழுத்தம் திருத்தமாக உரைக்கின்றது. மாளிகை, நிலம், நவீன வசதிகள், அறிவியல் தந்துள்ள ஆடம்பரங்கள் என அனைத்தையும் ஒரு மனிதனால் தன் உழைப்பின் மூலம் பெற்றுவிட இயலும். ஆனால் அவற்றை அனுபவித்து, மகிழ்ந்து, நிறை வயதுவரை நிம்மதியாக வாழ்வது அவன் கையிலா இருக்கிறது? ஊரில் உள்ள பெரிய சர்க்கரை ஆலை ஒன்றின் அதிபரோடு நெருக்கமான நட்பு பூண்டிருந்தார் பேராசிரியர் ஒருவர். ஒரு நாள் பேராசிரியரிடம் அதிபர் கூறினார்:

‘‘இன்று நீங்கள் என் ஆலை முழுவதையும் சுற்றிப் பாருங்கள். என் உதவியாளர் ஒருவர் உங்களுக்கு அனைத்தையும் விளக்கமாக எடுத்துக் கூறுவார். பின்பு மதியம் என் மாளிகைக்கு வந்தவுடன் தங்களுடன் நானும் விருந்து அருந்துகிறேன்.’’ அதிபரின் அன்புக்கட்டளையை ஏற்றார் பேராசிரியர். அந்த மாபெரும் ஆலையைச் சுற்றிப் பார்த்த பேராசிரியர் மலைத்துப் போனார். ‘அப்பப்பா! என்ன ஆச்சர்யம்! ஆலையின் நுழைவுவாயில் அருகே லாரி லாரியாக, டன் டன்னாக கரும்புகள் வந்து இறங்குகின்றன. வெவ்வேறு எந்திரங்களின் இயக்கங்களில் கரும்புகள் துண்டாக்கப்பட்டு சாறாக வடிக்கப்பட்டு சர்க்கரையாகக் கொட்டப்படுகின்றன.

பின்னர் வெளிவாயில் வழியாகச் செல்லும் வாகனங்களில் மூட்டை, மூட்டையாக ஏற்றப்படுகிறது சர்க்கரை!’ விரிந்து பரந்த சர்க்கரை ஆலையைக் கண்ட சந்தோஷத்துடன் மதிய விருந்தில் அதிபருடன் உணவருந்தினார் பேராசிரியர். சர்க்கரை ஆலையின் முதலாளி வீட்டு விருந்தில் பாயசம், ஜாங்கிரி, அல்வா என இனிப்புப் பண்டங்களுக்கு என்ன குறைச்சல்? ஏராளமான இனிப்பு வகைகள் பேராசிரியரின் இலையில் பரிமாறப்பட அதிபரின் இலையில் மட்டும் அவை மறுக்கப்பட்டன.

அளவுக்கதிகமான சர்க்கரையால் உடல் நலிவுற்ற அதிபர் இனிப்புப் பண்டங்களைத் தொட்டுக்கூட பார்க்கக்கூடாது என்பது மருத்துவரின் அறிவுரை! மேற்கண்ட சம்பவத்தைச் சற்று சிந்தித்துப் பார்ப்போம். பேராசிரியருக்கு சர்க்கரை ஆலை சொந்தம் இல்லை. ஆனால் இனிப்பைத் தாராளமாகச் சாப்பிட்டு அனுபவிக்க முடிகிறது. அதிபருக்கோ பெரிய சர்க்கரை ஆலையே சொந்தம். ஆனால் அரை தேக்கரண்டி சர்க்கரையைக் கூட தேநீர் அருந்தும்போதும் சேர்த்துக் கொள்ள முடியாத உடல் சுகவீனம். சாத்திரம் கூறுகிற முறைப்படி பார்த்தால் பேராசிரியருக்கு அமைந்துள்ளது ‘அனுபவ ராஜயோகம்’.

சர்க்கரை ஆலையின் முதலாளிக்கு வாய்த்துள்ளது ‘அபவாத ராஜயோகம்’. எவர் ஒருவர் அனைத்து வசதிகளையும் தன் முயற்சியால் கைவரப் பெற்று, அவரே தன் குடும்பத்துடனும், உறவினர்களுடனும் அவ்வசதிகளைச் செவ்வையாக அனுபவித்து மகிழ்கின்றாரோ அவர் வாழ்வது தானே அர்த்தமுள்ள வாழ்க்கை! பரம்பொருளை வழிபட்டு அவரின் பரிபூரண கருணையைப் பெற்றால்தான் மனிதர்கள் பதினாறு பேறுகளையும் பெற முடியும். அவற்றைப் பரிபூரணமாகத்  துய்க்கவும் இயலும். திருவள்ளுவர் திருக்குறளில் இதை உறுதிபடத் தெரிவிக்கின்றார்:

‘வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது!’

கோடிப் பொருட்களைக் குவிப்பது வேண்டுமானால் மானிடர்களாகிய நம் கையில் இருக்கலாம். ஆனால் அவற்றைப் பயன்படுத்தி நுகரச் செய்வது இறைவன் வகுத்த விதியிடம் தானே விடப்பட்டிருக்கிறது என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். இகலோக வாழ்விற்கு உரிய அனைத்துப் பொருட்களையும் ஒருவர் பெற்று விட்டால் ‘அவருக்கு யோகம்! மாளிகை, நிலபுலன், வாகனம் அனைத்தும் உள்ளது. கொடுத்து வைத்தவர்’ என்று ஊர் மக்கள் பாராட்டுகின்றனர்.

பேரன் பேத்திகளுடன் நூறாண்டு ஆரோக்கியத்துடன் வாழ்பவரின் வாழ்க்கையை ‘சுகபோக வாழ்வு’ என்கின்றனர். யோகமும், போகமும் தனித்து இருக்காமல் ஓரிடத்தில் தங்கச் செய்வதுதான் இறைவனின் தனிப்பெருங்கருணை! யோகமும், போகமும் ஒன்றிணைந்து வாழ்வதே இப்பூவுலகில் சீரிய வாழ்வு. இப்படிப்பட்ட வாழ்வை திருவாரூர் தியாகேசரின் திருவருளால் பெறலாம் என்று தெரிவிக்கின்றது சுந்தரமூர்த்தி நாயனார் பாடி அருளிய தேவாரப் பதிகம்:

பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை
போகமும் திருவும் புணர்ப்பானை
பின்னைஎன் பிழையைப் பொறுப்பானை
பிழையெலாம் தவிரப் பணிப்பானை
‘இன்ன தன் மையன்’ என்று அறியொண்ணா
எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயற் பழனத்து
அணி ஆரூரானை மறக்கலும் ஆமே!

மேற்கண்ட பதிகம் ‘போகமும், திருவும் புணர்ப் பானை’ என்று பொருட்செறிவுடனும், இலக்கிய நயத்துடனும் சிறப்பாக எடுத்துரைக்கின்றது. ‘புணர்ப்பான்’ என்ற சொல் ‘ஒன்றோடு இன்னொன்றைக் கூட்டுவிப்பான்’ என்று பொருள்படுகின்றது. அதாவது ‘யோகம் அமைந்த இடத்திலேயே போகத்தையும் கொண்டு சேர்க்கும் இறைவனின் இணையற்ற அருள்!’ என்கின்றார் சுந்தரர். ஒரு எல்லை வரைதான் மனித முயற்சிகள் செல்ல முடியும். அதற்கு மேல் ஆவது அனைத்தும் ஆண்டவனின் அருள்தான் என்று இலக்கியத் தேன் சொட்ட எடுத்துரைக்கின்றது, ‘அதுவரை மனிதன்! அதற்கு மேல் இறைவன்’ என்ற அற்புதக் கவிதை ஒன்று -

‘பூமியைத் திருத்தி வண்ணப் பொன் மலர்கள் கண்
மலர
பூ விதைகள் போடும் வரை மனிதன்! வானப்
புனல் பொழிந்து வளர்ப்பவன் யார்? இறைவன்!
கடல், மலை, மணற்பரப்பு காணலாம் என நினைத்துக்
கண் இமை திறக்கும்வரை மனிதன்! - காணக்
கதிர் ஒளி விரிப்பவன் யார்? இறைவன்!
வாழ்வினில் இணைந்து இன்ப வாசலில் சுகங்கள்
கண்டு
வனிதை உடல் சேரும்வரை மனிதன்! - அங்கு
வளர்மழலை தருபவன் யார்? இறைவன்!
ஆடி, ஓடி செல்வம் சேர்த்து அது இது வாய் வாங்கி
ஒன்றாய்
அழகுபடச் சேர்க்கும் வரை மனிதன்! - அவை
அனுபவிக்கச் செய்பவன் யார்? இறைவன்!

கவிச்சக்கரவர்த்தி கம்பர் போகத்தையும், யோகத்தையும் பொருத்தமாக ஓரிடத்தில் பொருத்திப் பாடுகிறார். கம்பராமாயணத்தின் பாலகாண்டத்தில் கடிமணப் படலத்தில் அப்பாடல் காணப்படுகின்றது:

மன்றலின் வந்து மணத் தவிசு ஏறி
வென்றி நெடுந்தகை வீரனும் ஆர்வத்து
இன்துணை அன்னமும் ஒன்றி இருந்தார்;
ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார்.

தசரத மைந்தன் ராமனும், ஜனகரின் செல்வி சீதையும் மத்தளம் கொட்ட, வரி சங்கம் நின்று ஊத, மணமேடையில் தம்பதியராக ஒருவரின் கையை ஒருவர் பற்றி ஈருடல் ஓர் உயிராகச் சங்கமம் ஆனது போகமும், யோகமும் பொருந்தியது போல் பொலிவு பெற்றது என்று உவமைச் சிறப்புடன் உரைக்கின்றார்
கம்பர்.

- திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

(இனிக்கும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-07-2019

  16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

 • fra

  பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

 • puyal

  கிரீஸ் நாட்டில் வீசிய தீவிர புயல் காரணமாக 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு: 23 பேர் படுகாயம்

 • nepal

  நேபாளத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு: வெள்ளத்தில் சிக்கி 65 பேர் உயிரிழப்பு

 • himasa

  இமாசல பிரதேசத்தில் தாபா இடிந்து விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 7 பேர் பலி, மீட்பு பணி தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்