SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சகலகலா வல்லவனான புதன்?

2018-09-05@ 16:53:09

நவகிரகங்களில் எல்லா கிரகங்களுக்கும் பலவகையான ஆளுமை, காரகத்துவம், உரிமை, அதிகார அமைப்புக்கள் உள்ளது. ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜாதக அமைப்பில் ஒரு கிரகத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் இருக்கும். அதாவது அந்த ஜாதகருக்கு யோகத்தை செய்யக்கூடிய தன்மையில் இருக்கும் இன்னொருவரின் ஜாதகத்தில் வேறு கிரகத்திற்கு முக்கியத்துவம் இருக்கும். இது அந்த அந்த ஜாதக லக்ன அமைப்பின்படி வருவதாகும். பொதுவான கிரக இயல்புகள், தன்மைகள் என்று எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு குறிப்பிட்ட கிரகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள காரகம் எல்லா ஜாதகத்திற்கும் பொதுவானவை. அந்த வகையில் வித்யாகாரகன், மாதுலகாரகன் என்று சொல்லப்படும் புதன் கிரகம் அளப்பரிய ஆற்றல்களை கொண்டுள்ளது. சர்வம் புதன் மயம் என்று ஒரே வார்த்தையில் ரத்தினச் சுருக்கமாக சொல்லி விடலாம். சர்வம் பிரம்ம மயம் என்று சொல்வார்கள் அந்த அடிப்படையில் புதன் எங்கும், எல்லாமுமாக வியாபித்து உள்ளார். அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, அதனினும் அரிது புதன் பலத்துடன், அம்சத்துடன், அருளுடன் பிறப்பது அரிது. அந்த அந்தளவிற்கு புதனின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.

புதன் ஆதிக்கம்

சௌம்யன், புத்திதாதா, தனப்பிரதன் என்று அழைக்கப்படும் புதன் புத்திக்கும், வித்தைக்கும் அதிபதியாக இருப்பவர். அறிவு, ஆற்றல், வித்தை, கல்வி, சொல், வாக்கு ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குபவர். வித்தையின் நாயகன், அறிவை ஆள்பவன், எழுத்தறிவிப்பவன், சிந்தனையின் ஊற்று, வாக்கில் நிற்பவன், கணக்கிற்கு அதிபதி, கல்வியின் கர்த்தா, விவேகத்தின் வேந்தன், பகுத்தறிபவன், அறிவுச் சுரங்கம், நுண்கலை வல்லுனர், விகடகவி, நகைச்சுவையின் நாயகன், இன்னும் அறிவு சார்ந்த, மூளை சார்ந்த, விஷய ஞானங்களை எல்லாம் அருளும் வியக்கத்தக்க விந்தை மிகுந்த கிரகம் புதன் என்றால் அது மிகையாகாது. எண்ணங்களின் சேர்க்கையே மனம். மனத்தை ஆள்பவன் மனோகாரகன் சந்திரன். அந்த சந்திரனின் மகன்தான் புதன் என்பது நவகிரக புராண வரலாறு. சித்தம், மனம், எண்ணங்கள், சிந்தனை, அறிவு, ஆற்றல் ஆகியவை ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்பு உள்ளவை.

பேச்சாற்றல், சொல்லாற்றல், கணிதம், சாதூர்யம், கபடம், கவிதை, கதை, இயல், இசை, நாடகம், நடிப்பு, அகட விகடம், சிற்பம், சித்திரம், ஓவியம், ஞாபக சக்தி, தூய சித்தம், திட சித்தம், இளமை, இனிமை, புதுமை, ஜோதிடம், வான சாஸ்திரம், வியாபாரம், மேதா விலாசம், கம்ப்யூட்டர் துறை, தகவல் தொடர்புத்துறை, பொது அறிவு, கணிப்பு, யூகம், நயம், நளினம், நகைச்சுவை, நையாண்டி, மொழியில் புலமை, உச்சரிப்பு, உரைநடை, வாதத்திறன், கைத்திறன், கைப்பக்குவம், ரசனை, இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள், பச்சைப் பயிர்கள், பசும் புற்கள், மலை வாசஸ்தலம், ஆறுகள், அணைக்கட்டுகள், நீர்நிலைகள், நீர்வீழ்ச்சிகள், மனம், நரம்பு மண்டலம், மூளை, தண்டுவடம் என மனிதன் முழுமை பெற்றவனாக, பகுத்தறிபவனாக செயல்பட வைக்கும் ஆற்றலுடைய கிரகம் புதன். சுருக்கமாகச் சொன்னால் ஆய கலைகள் அறுபத்து நான்கிலும் இவரின் ஆளுமை மிக முக்கியமாக உண்டு.

புதனின் அருட்கொடை

புதனின் அமைப்பு ஜாதகத்தில் மிகமிக பலமாக இருந்தால் தான் ஒருவர் எந்த துறையைச் சார்ந்தவராக இருந்தாலும் அந்தத் துறையில் மாபெரும் வெற்றியாளராகவும், வைரம்போல் ஜொலிக்கச் செய்யும் ஆற்றலும் வெளிப்படும். புத்தி, அறிவு, ஆற்றல், தொழில், வியாபாரம், கணக்கு போன்றவற்றை தரும் கிரகமாக புதன் திகழ்கிறார். கல்வி என்பது ஓர் அழியாச் செல்வம். கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்புடன், தற்போது மிகவும் செழிப்பும் உண்டாகிறது. இன்றைய காலக்கட்டத்தில் கல்வி என்ற சரஸ்வதி நம்மிடம் இருந்தால், சகல ஐஸ்வர்யங்களையும் தரும் மகாலட்சுமி தானாக நம் இல்லத்திற்கு வந்து விடுகிறாள். எந்த துறையாக, தொழிலாக இருந்தாலும் அதில் நுட்பம் இருக்குமென்றால் அதை தருபவர் புதன் தான். உலகமெங்கும் அறிவு, மூளையை பயன்படுத்தி உழைப்பவர்கள் எல்லோரையும் ஆளுகின்றார்கள், முன்னிலை வகிக்கின்றார்கள்.

இதற்கு மூலகாரணம் புதனின் அருள்தான். சட்டத்தின் சாராம்சம், அதில் உள்ள நெளிவு சுளிவுகள், வாதப் பிரதிவாதங்கள், நுணுக்கங்கள், சமயோசித புத்தி போன்றவைதான் வக்கீல் தொழிலுக்கு மிகவும் முக்கியமானது.  புத்தி சாதுர்யமுடைய வக்கீல்களை உருவாக்குபவர் புதன். கணக்கு சம்மந்தமான ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஆடிட்டர்கள், வித்தகர்கள், சிந்தனைத்திறன், கற்பனைத்திறன், எழுத்தாற்றல், சொல்லாற்றல் மிக்க பத்திரிக்கையாளர்கள், நிரூபர்கள், கதாசிரியர்கள், புத்தக பதிப்பாளர்கள், பல்வேறு நுணுக்கங்களை அலசி ஆராயும் திறன் படைத்த ஜோதிடர்கள், வானசாஸ்திர நிபுணர்கள், வேத ஞான சாஸ்திர விற்பன்னர்கள். கம்ப்யூட்டர் மூலம் உலகை ஆளும் நிபுணர்கள். ஐ.டி.துறை, தொலைத்தொடர்புத் துறை, அஞ்சல் துறை, நிதித்துறை, வங்கித்துறை போன்றவற்றில் அறிவு, மூளையை பயன்படுத்தி நமக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்து சாதனை படைக்க புதபகவானின் அருள் கடாட்சம் மிக மிக உறுதியாக தேவை.

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது பொன் கிடைத்தாலும், புதன் கிடைக்காது என்பது காலம் காலமாக தொன்று தொட்டு எல்லோரும் சொல்கின்ற வழக்கு மொழியாகும். பல பழமொழிகளை நாம் தவறாக அர்த்தம் செய்து கொண்டிருப்பதைப் போலவே, இதை சிலர் தவறாக புதன்கிழமை என்று அர்த்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். அதாவது ஜோதிட சாஸ்திர அமைப்பின்படி இந்த இடத்தில் பொன் என்பது பொன்னவன் என்று அழைக்கப்படும் தனம், புத்திரத்திற்கு ஆதிக்கம் செலுத்தக்கூடிய குருவைக் குறிக்கும். குரு தனம் எனும் பணத்தையும், தங்கத்தையும், குழந்தை செல்வத்தையும், செல்வம், செல்வாக்கு, அந்தஸ்துள்ள பதவிகளை தரவல்லவர். இருந்தாலும் பொன்னவன் என்றழைக்கப்படும் குருவின் பாக்கியமும், புதனின் ஆற்றல்.

மிக்க பலமும் சேருவது மிக அவசியம். ஏன் என்றால் ஒருவரிடம் ஏராளமான பொன், பொருள், பணம், சொத்து இருந்தாலும் அதை சரியான முறையில் தக்கவைத்து ஒன்றுக்கு பத்தாக ஈட்டிப் பெருக்கி, அந்தச் செல்வத்தை பாதுகாத்து சரியான வகையில் முதலீடு செய்து கணக்கு வழக்கு பார்க்க புதனின் கருணை அவசியம் தேவை. அதே போல் புத்திரகாரகன் என்று குரு முன்னிலைப்படுத்தப்பட்டாலும், குரு போககாரகன் ஆகையால் போக சக்தியை தருபவராக இருந்தாலும், சுக்கிலமும், சுரோணிதமும் இணைந்து கரு உற்பத்தியாவதற்கு உறுதுணையாகவும், ஆரோக்கியமான தாம்பத்திய உறவுக்கு முக்கிய காரணமாக இருக்கின்ற நரம்பு மண்டலத்தை ஆள்பவர் புதன் என்பதால் நரம்புகள்தான் வீரியத்தை கொடுக்கும் என்ற மருத்துவ உடற்கூறு அடிப்படையில் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற சொற்றொடர் ஏற்பட்டது.

சந்திரன் புதன்

விதி, மதி, கதி என்று சொல்வார்கள் அதாவது விதி என்றால் லக்கினம், மதி என்றால் சந்திரன், கதி என்றால் சூரியன். இந்த மூன்று விஷயங்களும் ஜாதகத்தில் முக்கியமான அம்சமாகும். லக்னத்திற்கு அடுத்தபடியாக ராசியை குறிப்பிடுவார்கள். இந்த ராசி என்பது சந்திரன் இருக்கும் இடம், சந்திரன் மனோகாரகன், மனத்தை ஆள்பவன், புதன் வித்யாகாரகன், புத்தியை ஆள்பவன். புதன் என்றால் ஆற்றல், மறைந்து இருக்கும் சக்தி, அறிஞன், உணர்த்துபவன், மனம் என்பது நிலையானது கிடையாது. ஆழ்ந்த உறக்கத்தில் மனம் இருக்காது. பலவகையான சிந்தனைகள், எண்ணங்களின் சேர்க்கையே மனம். நமக்கு எல்லா விஷயங்களும் சாதகமாக, சீராக, சந்தோஷமாக, திருப்திகரமாக நினைத்தது நினைத்தபடியே நடைபெறும் பொழுது மனம் என்ற ஒன்று இருக்காது அல்லது அது செயல்படுவது தெரியாமல் நிர்மலமாக, தூய்மையாக தெளிவாக இருக்கும்.

குழப்பங்கள் பிரச்னைகள், தோல்விகள், குளறுபடிகள், கஷ்டநஷ்டங்கள், தொடரும்போது டென்ஷன். மனச்சோர்வு, மனச்சிதைவு, கோபதாபங்கள் உண்டாகும். சாதகமான, சந்தோஷமான மனநிலை இருக்கும்போது நல்ல குணம் வெளிப்படும். இறுக்கமான, கோபமான தருணத்தில் ஒருவரின் உள்ளே மறைந்து இருக்கும் மிருகத்தனமான மூர்க்ககுணம் வெளிப்படும். ஆகையால் புத்தியும், மனமும் வேறு வேறு. மனம் சீராக இருக்கும்பொழுது புத்தி நன்றாக வேலை செய்யும். இந்த இரண்டு விஷயங்களும் தான் மனிதர்களை ஆட்டிப் படைக்கின்றது. இதுதான் சந்திரன், புதன் செய்யும் விநோதங்கள். சந்திரன், புதன் நல்ல அமைப்பில் தொடர்பு ஏற்படும்போது எதையும் சீர்தூக்கி பார்த்து தெளிவாக முடிவெடுப்பார்கள். நவகிரக புராண அமைப்பின்படி சந்திரனில் இருந்து தோன்றியவன் புதன்.

புதனின் சாகசங்கள்

ஒருவர் ஜாதகத்தில் புதன் உயர்ந்த உச்சநிலையில், நல்ல யோக அம்சத்தில் இருக்கிறார் என்றால், அது அவர்களின் நடை, உடை, பாவனை, செயல்பாடுகளில் வெளிப்பட்டு விடும். அமைதியும், ஆழ்ந்த சிந்தனையும், சூழ்நிலைகளை உணர்வதும் இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்படுவதும், எதையும் கிரகித்து உள்வாங்கி உணர்வதும் புதனின் சாகசமாகும். எந்தச் சூழ்நிலையிலும் தன் நிலை இழக்காமல் எதை எப்படி செய்ய வேண்டும் என்று கணக்கு போட்டு செயல்படுவார்கள். புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம். இவர்கள் பம்மி பதுங்குவதுபோல் தெரிந்தாலும் பக்குவமாக காய் நகர்த்தி சிக்கல்களின் முடிச்சை அவிழ்க்கும் திறன் பெற்றவர்கள். தற்காலத்தில் பிள்ளைகளின் ஜாதகத்தை பார்ப்பவர்கள் ஜோதிடரிடம் கேட்கும் முதல் கேள்வி படிப்பு எப்படி, அறிவு, ஆற்றல், எந்த துறையில் படிக்கலாம் என்றுதான் கேட்கிறார்கள். அந்தக் கேள்வியின் நாயகனும், விடை தருபவனும் புதன்தான். உடலால் உழைப்பவர்கள் ஆளப்படுகின்றனர். மூளையால், அறிவால், வாக்கால் உழைப்பவர்கள் பிறரை ஆளுகின்றனர்.

உடலால் கடினமாக, கடுமையாக உழைப்பவர்கள், இரும்பு, எந்திரம், கட்டுமானப் பணிகள், ஓய்வில்லாத உடல் உழைப்பு, போலீஸ், தீயணைப்புத்துறை, ராணுவம், வனத்துறை போன்றவற்றில் உடல்திறனை பயன்படுத்தி வேலை செய்பவர்கள் சனி மற்றும் செவ்வாயின் அம்சத்தில் ஆதிக்கத்தில் பிறந்திருப்பார்கள். மூளையை பயன்படுத்தி இருக்கும் இடத்தில் இருந்தே பலரை வேலை வாங்கும் நிர்வாகத்திறன் புதன் அம்சம். ஜாதகத்தில் புதனுடைய பலத்தை, யோகத்தை வைத்துத் தான் ஒருவரின் வாழ்க்கைப் பாதையை முடிவு செய்ய முடியும். புதன் அருள் பெற்றவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் தான், தன் சுகம், தன் காரியம் என்பதில் குறியாக இருப்பார்கள். இவர்களின் போக்கை யாராலும் எளிதில் கணித்து விட முடியாது. வெளிப்படையாக, திறந்த மனத்துடன் பேசுவது போல் தோன்றினாலும் எதை மறைக்க வேண்டுமோ அதை சாதுர்யமாக மறைத்து விடுவார்கள். இவர்களாக சொன்னால் தவிர இவர்களிடம் இருந்து எந்த விஷயங்களையும் நாம் தெரிந்து கொள்ள முடியாது. கொச்சையாக சொன்னால் பெரிய கல்லூளிமங்கன் என்று கிராமப்புறங்களில் சொல்வார்கள். அந்தளவிற்கு அழுத்தமும், கபட நாடகங்களும் இவர்களுக்கு கைவந்த கலையாகும். அறிவு, புத்தியை வைத்துத்தான் எல்லா விஷயங்களும் இயங்குகின்றது.

மூளை, நரம்பு மண்டலங்களின் செயலாற்றல் இல்லாமல் மனிதனால் எதுவும் செய்ய இயலாது. பள்ளி, கல்லூரி படிப்புக்களில் பாடங்களை சட்டென்று புரிந்து கொண்டு அதிக சிரமம் இல்லாமல் மதிப்பெண்கள் பெறுவார்கள். இவர்களை கற்பூரபுத்தி என்று சொல்வார்கள். சிலருக்கு மிகவும் சிரமப்பட்டு படிக்க வேண்டி இருக்கும். பலர் மிக மந்த நிலையிலேயே இருப்பார்கள். கண் பார்த்தால் கை செய்யும் என்று சொல்வார்கள் அந்தளவிற்கு வித்தை கை வரப் பெறும். இவை எல்லாமே புதனின் சாகசம் தான். எல்லாமே புதன் என்றால் மற்ற கிரகங்களுக்கு வேலை இல்லையா என்று கேட்கத் தோன்றும், ஆம் உண்மை தான் எல்லா கிரகங்களின் காரகத்துவத்திலும், இலாக்காக்களிலும் புதனின் பங்கு, ஊடுருவல் இருக்கும். காரணம் எந்த விஷயமாக இருந்தாலும் புத்தி சாதுர்யம் அவசியம் தேவை. உதாரணமாக சூரியன் பலமாக இருப்பவர்கள் ஆட்சி, அதிகாரப் பதவியில் இருப்பார்கள். கூடவே புதனின் ஆற்றல் சேரும்போது பேச்சாற்றல், நிர்வாகத் திறமை, பெயர், புகழ் பட்டங்கள் வந்து சேருகின்றன.

சுக்கிரனின் முக்கியமான பங்கு கலைத்துறை, இயல், இசை, நாடகம் போன்றவற்றில் உள்ளது சுக்கிரன் கவர்ச்சி, காந்த சக்தி, அழகு போன்றவற்றை தருவார். ஆனால், புதனின் அருள் இருந்தால் தான் வசன உச்சரிப்பு, நடிப்புத்திறன், நகைச்சுவை, ஞாபகசக்தி போன்றவை வெளிப்படும். கதை வசனம், பாடல்கள் எழுதுவதற்கும், பிறருக்கு நடிக்க சொல்லிக் கொடுக்கும் டைரக்‌ஷன் துறை புதனின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்க அசைவுகள், நடை, உடை, பாவனை, மிமிக்ரி என்ற பல குரல்களில் பேசும் வல்லமை எல்லாம் புதனின் அருட்கொடையே. காவல்துறையில் புலனாய்வு துறை, உளவுத்துறை, நுண்ணறிவுப் பிரிவு போன்றவற்றில் சிறப்பாக பணியாற்றுவதற்கு புதனின் அருள் தேவை. இசைத்துறையில் அசுரப் பயிற்சியும், ஞானமும், கணக்கும், காலப்பிரமானமும் மிக முக்கியமானதாகும். வாத்தியக் கருவிகளை வாசிப்பதற்கு கை விரல்களின் ஜாலங்கள் மிக அவசியமாகும் இந்த ஞானத்தை புதன் ஒருவரால் மட்டுமே தர முடியும். இதைப் போன்றே எல்லா துறைகளிலும் புதனின் ஆளுமை, பங்கு மிக முக்கியமானதாகும்.

புதனின் முரண்பாடுகள்

புதன் சமநிலைக் கிரகம், புதனின் பலம் ஜாதகத்தில் எவ்வளவு உயர்ந்து இருந்தாலும், தாழ்ந்து இருந்தாலும் பிற கிரகங்களின் சேர்க்கை, பார்வையை பொருத்து தான் ஒருவரின் வாழ்க்கையை தீர்மானிக்க முடியும். புதன் ஒருவரை நல்வழியிலும் கொண்டு செல்லும், தீய வழியிலும் கொண்டு செல்லும். மிகவும் ஆச்சாரம் உள்ளவராகவும், சாஸ்திர சம்பிரதாயங்களை, பாரம்பரியத்தை பேணிக் காப்பவர்களாகவும் இருப்பார்கள். அதே நேரத்தில் எந்தவிதமான பாவச் செயல்களையும் செய்ய தயங்க மாட்டார்கள். மனிதனின் எல்லா வகையான போதைப் பழக்க வழக்கங்களுக்கும் பலம் குறைந்த புதன்தான் காரணம். இதற்கு முக்கிய காரணம் தசாபுக்திகள். புதன் 6, 8, 12 ஆம் அதிபதிகளின் சேர்க்கை, பார்வை, சாரம் பெற்று நீச்ச அம்சத்தில் இருக்கும்போது வாழ்க்கைப் பாதை மாறி விடும். எவ்வளவு பவித்திரமாக கோவில், சத்சங்கம் என்று இருந்தவர், இப்போது மது, மாது, சூது என்று மாறி விட்டார் என்பார்கள்.

இந்த சூழ்நிலைகள் எல்லாம் புதனின் லீலா விநோதகங்கள். பலம் குறைந்த புதன் நரம்பு மண்டலத்தை பாதிக்கச் செய்வார் அதனால் சிந்திக்கும் திறன் மழுங்கி விடும். ஜாதகரின் அறிவு புத்தி, ஆற்றல் எல்லாம் தீய வழிகளில் வேலை செய்யும். தான், தன் சுகம் என்பதை பெரிதாக நினைப்பார்கள். தம் ஆசைகள், இச்சைகளை தீர்த்துக் கொள்ள எவ்வளவு கீழ்த்தரமான செயல்களை செய்வதற்கும் தயங்க மாட்டார்கள். காதல், கள்ளத் தொடர்பு, காம களியாட்டங்களுக்கு எல்லாம் வித்திடுபவர் புதன் தான். இவர்களின் நடவடிக்கைகளை தெரிந்து கொள்வது மிகவும் கடினம். பொய்யை சொன்னாலும் பொருந்தச் சொல்வார்கள். இடத்திற்கு தக்கவாறு, நேரத்திற்கு தக்கவாறு தங்களை மாற்றிக் கொள்வார்கள். இவர்களின் ஆசைகள், தேவைகள், இச்சைகளை புரிந்து கொண்டு சிலர் இவர்களை தங்கள் கைப்பாவையாக ஆக்கி விடுவார்கள். தீவிரவாத சிந்தனைகள் எளிதில் பற்றிக் கொள்ளும். பல அழிவு வேலைகளை தர்ம நியாயம் பார்க்காமல் செய்யத் துணிவார்கள். இவர்கள் செய்யும் பொய், பித்தலாட்டங்கள், தகிடுதத்தங்களை கண்டுபிடிப்பது மிகவும் சிரமம்.
 
புதனின் வக்கிர காலம்

புதனுக்கு வக்ரம், அஸ்தங்கம், நீசம், நீச கிரகத்துடன் சேர்க்கை, நீச கிரக பார்வை போன்ற பலம் குறையும் காலக்கட்டங்கள் உண்டு. இந்த கால நேரத்தில் பிறந்தவர்கள் புதனின் ஆற்றலை குறைவாக பெற்றிருப்பார்கள். அதே நேரத்தில் கிரகபெயர்ச்சிகள் என்று சொல்லக்கூடிய கோச்சார அமைப்பின்படி புதன் வக்கிரமாக இருக்கும்போது சில முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடாது. புதிய தொழில்கள், திட்டங்கள் போடக் கூடாது. தொழில், வியாபார சம்மந்தமான, கல்வி சம்மந்தமான விஷயங்களை ஆரம்பித்தால் அதில் தடை, தாமதம் ஏற்படும். வேலை முடியாமல் இழுத்தடிக்கும். திருமண விஷயங்களில் திடீர் தடைகள் வர வாய்ப்புள்ளது. காதல் பிரசனைகளில் சிக்கல்கள் வரும். வண்டி, டிராவல்ஸ், டிரான்ஸ்போர்ட், கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், தொலைத்தொடர்பு, கமிஷன், காண்ட்ராக்ட், பங்குச்சந்தை, வியாபார, அலுவலக இடமாற்றம், ஏஜென்ஸி சம்மந்தப்பட்ட விஷயங்களில் புதனின் கோட்சார நிலையை அறிந்து செய்வது நல்லது. புதன் வக்கிரமாகவும், அஸ்தங்கமாகவும், நீச்சமாகவும் இருக்கும் காலங்களை தளர்ப்பது மிகவும் அவசியம்.

புதனும்  நோய்களும்

புதன் உடற்கூறு இயக்கத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இவர் மூளை மற்றும் நரம்பு மண்டலங்களை ஆள்பவர். இவர் ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத அலி. கிரகம் சனி ஆண் அலி கிரகம், புதன் அலி கிரகம். இவர்கள் இருவரின் சேர்க்கை காரணமாக அலித் தன்மை உண்டாகும். ஆண்களுக்கு வீரியத்தன்மை குறைவாக இருக்கும். இதனால் உடல் உறவில் சந்தோஷம் இல்லாத தாம்பத்யம் இருக்கும் குழந்தை பிறப்பதில் சிக்கல்கள் ஏற்படும். ஆண்களுக்கு ஆண்மைக் குறைவையும், பெண்களுக்கு பெண்மைக் குறைவையும் ஏற்படுத்தக் கூடியவர். மூளை, நரம்பு, தண்டுவடம் ஆகியவற்றிற்கு காரணகர்த்தாவாக இருக்கிறார். புதன் பலவீனமாக இருந்து தசாபுக்தி நடைபெறும் பொழுது மனரீதியான கோளாறுகள் ஏற்பட்டு நரம்புத் தளர்ச்சி, பலவீனம் உண்டாகி உடல்நலம் பாதிக்கும். புதன் நீசமாகவும் 6, 8, 12 ஆம் அதிபதிகளுடன் சம்மந்தப்பட்டாலும் தலையில் நீர் கோர்த்தல், தலை பாரம், சைனஸ், ஒற்றைத் தலைவலி, நரம்புகளில் வலி, வீக்கம், மூட்டுக்களில் நீர் கோர்த்தல், நரம்புத் தளர்ச்சி, துரிதஸ்கலிதம், பய உணர்வு, ஆசை இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை, முடக்குவாதம், சஞ்சலம், சபலம், மன உளைச்சல், காக்கை வலிப்பு, மறதி, சோர்வு, அசதி, தனக்குத் தானே பேசுவது, பிதற்றுவது என மனம், சித்தம் சம்பந்தப்பட்ட உடல்நலக் கோளாறுகள் ஏற்படும்.

ஜோதிட முரசு மிதுனம் செல்வம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-09-2019

  19-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • china_shankaiii1

  பியானோ வாசிக்கும் ரோபோ, வெல்டிங் ரோபோ, பயோனிக் ரோபோ... வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் அடங்கிய சர்வதேச தொழில் கண்காட்சி

 • paris_taksi11

  போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பிரான்சில் ஃபிளையிங் டேக்ஸி எனும் பெயரில் நதியில் மிதவை வாகனம் வடிவமைப்பு

 • 18-09-2019

  18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • guiness_sathana

  எவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்