SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தெய்வத்தை அணுகும் முறை

2018-09-03@ 17:40:47

அர்த்தமுள்ள இந்து மதம் - 62

உலகத்திலேயே மனிதன் அதிகமாக நேசிக்கக் கூடியது அமைதியையும்,  நிம்மதியையுமே. பணம் வரலாம்; போகலாம், பல தாரங்களை மணந்துகொள்ளலாம்; வீடு  வாங்கலாம்; விற்கலாம்; நிலம் வாங்கலாம்; சொத்தைப் பெருக்கலாம்; எல்லாம் இருந்தும்கூட நிம்மதி இல்லை என்றால் அவன் வாழ்ந்து என்ன பயன்?  சேர்க்கின்ற சொத்து நிம்மதிக்காக. கட்டுகிற மனைவி நிம்மதிக்காகவே. தேடுகின்ற வீடும், நிலமும் நிம்மதிக்காக. எப்போது அவன் நிம்மதியை நாடுகிறானோ,  அப்போது அவனுக்கு அவஸ்தை வந்து சேருகிறது.

ஆரம்பத்தில் மனிதன் விரும்பியோ விரும்பாமலோ பல சிக்கல்களைத்தானே உண்டாக்கிக் கொள்கிறான். தானே கிணறு வெட்டுகிறான்; அதில் தானே விழுகிறான்.  தானே தொழில் தொடங்குகிறான்; தவியாய்த் தவிக்கிறான். தானே காதலிக்கிறான்; அதற்காக உருகுகிறான். தானே ஒரு பெண்ணை விரும்பிக் கல்யாணம்  செய்துகொள்கிறான்; பிறகு இது பெண்ணா, பேயா என்று துடியாய்த் துடிக்கிறான். எந்தக் கோணத்தில் நின்று பார்த்தாலும் மனித வாழ்க்கை துன்பகரமாகவே  காட்சியளிக்கிறது.

ஆகவேதான், மனிதன் ஏதாவது ஒரு புகலிடத்தை நாடுகிறான். தனக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடியவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடுகிறான்.  மனிதர்களோ அவதூறு பேசுகிறார்கள்; கேலி செய்கிறார்கள். ஆகவே, அவன் தெய்வத்தைச் சரணடைகிறான். அந்தத் தெய்வம் அவன் குறையைக் கேட்கிறதோ  இல்லையோ, காட்சியிலேயே நிம்மதியைத் தருகிறது. இந்தத் தெய்வ பக்தியில் மிக முக்கியமானது அணுகும் முறை. எல்லோரையும்போல கோயிலுக்குப்  போனோம்; ஒரு தேங்காய் உடைத்தோம்; இரண்டு பழங்களை வாங்கிச் சென்றோம் என்பதில் லாபமில்லை.

கோயிலில் பாடப்படும் ‘கோரஸ்’ அல்லது கோஷ்டி கானத்தால் பெரும் பயனடைவதில்லை. ஏழை ஒருவன், வள்ளல் வீட்டுப் படிக்கட்டுகளில் நம்பிக்கையோடு  ஏறுவதுபோல், இறைவனை அணுக வேண்டும். இறைவனை ஒரு உன்னதமான இடத்தில் வைத்து, தான் அடிமையைப்போல் இருக்க வேண்டிய அவசியம்  இல்லை. அவனைத் தோழனாகவே பாவிக்கலாம். தனியறையில் உட்கார்ந்துகொண்டு, ஒரு தெய்வப் பிரதிமையின் முன்னால் குறைகளைச் சொல்லி அழுவதில்  பயனிருக்கிறது. எங்கள் கிராமங்களில் ஒரு காரியம் நடக்குமா நடக்காதா என்பதற்குப் பூக்கட்டி வைத்துப் பார்ப்பார்கள்.

வெற்றிலைப் பாக்கு வைத்துக் கேட்பார்கள். சாமி அனுமதித்தால் மட்டுமே அந்தக் காரியத்தைச் செய்வார்கள். எல்லாவற்றிற்குமே தெய்வத்தை நம்பி, அதன்மூலம்  அவர்கள் நிம்மதி அடைந்திருக்கிறார்கள். ‘திருவுளம்’ கேட்பது என்பது கிராமங்களில் இருக்கும் ஒருமுறை. ‘நான் மேற்கொண்ட காரியம் நடக்கும் என்றால்  பல்லி சொல்ல வேண்டும்’ என்று வேண்டிக்கொள்வார்கள். கோயிலின் ஏதாவது ஒரு பகுதியில் பல்லி சொன்னால், இறைவனின் திருவுளம் இரங்கிவிட்டதென  மகிழ்வார்கள். அது சொல்லவில்லை என்றால், அந்தக் காரியத்தில் ஈடுபடமாட்டார்கள்.

மனிதனின் மிகவும் குறைந்தபட்சத் தேவை நிம்மதி. அதைத் தெய்வத்திடம் இருந்து பெற்றுக் கொள்பவனுக்குப் பெயர் தான் இந்து. தெய்வத்தை அணுகுவதில்  திறமையுள்ளவர்கள் தங்கள் காரியங்களைக் கண் முன்னாலயே சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.‘முருகா முருகா’ என்று எல்லோரும்தான் கூவுகிறோம்;  சிலருக்கு மட்டும் தொட்டதெல்லாம் பலிக்கிறதே, ஏன்? அவர்கள் தெய்வத்தை அணுகத் தெரிந்துகொண்டு விட்டார்கள் என்பதே, அதன் பொருள். கல்கத்தா காளி  கோயிலைப் பற்றி ஒரு கதை சொல்வார்கள். ஒரு ஏழை உழைப்பாளி, அந்தக் கோயில் வாசலில் போய்ப் படுத்துக் கொள்வானாம்.

காலையில் சந்நிதானத்தில்தான் கண் விழிப்பானாம், காளிதேவியிடம் வேண்டிக்கொண்டுதான் தொழிலுக்குப் புறப்படுவானாம். எப்படியும் அன்றைக்குப் பத்து  ரூபாய் சம்பாதித்து விடுவானாம். என்றைக்கு அவன் ஞாபக மறதியாகச் சந்நிதானத்தைப் பார்த்துக் கண் விழிக்காமல் தெருவைப் பார்த்து விழிக்கிறானோ,  அன்றைக்கு அவன் வாழ்க்கையில் சிரமம் ஏற்படுமாம். இதை எப்படிச் சொல்கிறார்கள் என்றால், ‘இன்றைக்கு இவனுக்கு லாபமில்லாத நாள் என்று தெரிந்து,  ஈஸ்வரியே அவனை வேறு பக்கம் விழிக்க வைக்கிறாள்’ என்கிறார்கள்.

இதுதான் உண்மை என்று நான் நம்புகிறேன். எனக்கும் இதில் ஒரு அனுபவம் உண்டு. நான்கு ஆண்டுகளுக்கு முன் நான் என் கவிதா ஹோட்டல், தேவர் திருமண  மண்டபத்தில் உட்கார்ந்திருந்தபோது கேரளத்து நண்பர் ஒருவர் என்னைப் பார்க்க வந்தார். வந்தவர் ஒரு சிறிய குருவாயூரப்பன் புகைப்படத்தைக் கொடுத்துவிட்டுப்  போனார். அதை நான் என் சட்டைப் பையிலே வைத்திருந்தேன். காலையில் சட்டை மாற்றும்போது எதை வைக்க மறந்தாலும், அந்தப் படத்தை வைக்க மறக்க  மாட்டேன். அது பெதடின் பழக்கத்தை விட்டு விட்ட நேரம். உடம்பிலே சில எதிரொலிகள் ஏற்பட்டு அடங்கிவிட்டன.

குருவாயூரப்பன் படம் வந்ததில் இருந்து உடம்பு மிக நன்றாக இருந்தது. காலையில் குளித்துப் பலகாரம் சாப்பிட்டு விட்டு ‘இன்சுலின்’ போட்டுக் கொண்டால்,  மதியம் வரையிலே சுறுசுறுப்பாக இருக்கும். மதியம் நல்ல கீரையோடு சாப்பாடு சாப்பிட்டு விட்டுப் படுத்தால், மாத்திரை இல்லாமலே தூக்கம் வரும். சாயங்காலம்  எழுந்து குளித்தால், உலகமே புதிதாகத் தோன்றும். உடனே மண்டபத்துக்கு வந்து மாலைப் பத்திரிகைகள் அனைத்தும் படித்து முடிப்பேன். ஏதாவது எழுதுவேன்.  உடம்பு அவ்வளவு நன்றாக இருந்தது.

அப்போது எனக்கு மலேசியாவில் இருந்து அழைப்பு வந்தது. ‘உடம்பு தான் நன்றாக இருக்கிறதே, போய் வரலாம்’ என்று முடிவு கட்டினேன். புறப்படுவதற்கு  முதல் நாள் இரவு நான் நீர் அருந்தும் கண்ணாடித் தம்ளர் விழுந்து உடைந்தது. என்னுடைய கைக்கடிகாரம் கழன்று விழுந்தது. ‘என்ன துர்ச்சகுணங்களோ’ என்று  எண்ணியபடி விட்டு விட்டேன். மறுநாள் காலை பத்தரை மணிக்கு விமானம். காலை இட்லி கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டு விட்டேன்.‘அதிகமாகச் சாப்பிட்டு  விட்டோம்’ என்று எனக்கு நானே எண்ணிக்கொண்டு, ‘இன்சுலின்’ மருந்தை வழக்கத்துக்கு விரோதமாக அதிகம் போட்டுக்கொண்டு விட்டேன்.

சற்று மயக்கமாக இருந்தது. விமான தளத்துக்குப் போகும்போது பையைத் தடவிப் பார்த்தேன். குருவாயூரப்பன் படத்தைக் காணவில்லை. பழைய சட்டையில்  தேடிப் பார்க்கச் சொன்னேன். அதிலும் இல்லை. விமான நிலையத்துக்கு வந்தபோது ஆட்களையே அடையாளம் தெரியாத நிலை ஏற்பட்டு விட்டது. என்  குழந்தைகள், பேரன், பேத்திகளெல்லாம் விமான நிலையத்துக்கு வந்திருந்தார்கள். யாரோடு பேசுகிறோம் என்ன பேசுகிறோம் என்பதே எனக்குப் புரியவில்லை.  என்னோடு கனரா பாங்க் நண்பர்களும் விமானத்தில் வந்தார்கள். விமானத்தில் இனிப்பு வாங்கிச் சாப்பிட்டேன்; குடித்துப் பார்த்தேன்; மயக்கம்... மயக்கம்தான்.

இது நடந்தது 1975 செப்டம்பர்28ம் தேதி. மலேசியாவில், கோலாலம்பூரில் இறங்கி அங்கிருந்து 250 மைல் தூரத்திலுள்ள சித்தியவான் என்ற ஊருக்குப்  போய்விட்டேன். அந்தச் சித்தியவான் நகரில் எனக்கு ஒரு அற்புதமான நண்பர் உண்டு. அவர் சிவகங்கைப் பகுதியைச் சேர்ந்தவர். கிருஷ்ணன் என்று பெயர்.  கோலாலம்பூர் கூட்டங்களுக்குத் தப்பி, ஓய்வுக்காக நான் அங்கே சென்றேன். அங்கிருந்து மூன்றாவது மைலில் ஒரு கடற்கரை உண்டு. அதன் கரையில் ஒரு  சிற்றூர் உண்டு. அதன் பெயர் ‘லுமுட்.’ அங்கே ஒரு தென்னந்தோப்பில் அழகான ஒரு காட்டேஜில் நான் தங்கி இருந்தேன்.

சரியாக மூன்றாவது நாள் அங்கிருந்து நான் சித்தியவான் நகருக்கு வந்தபோது, தமிழர்களெல்லாம் சென்னை வானொலியைச் சிரமப்பட்டுத் திருப்பிக்  கொண்டிருந்தார்கள். நான் கிருஷ்ணன் வீட்டுப் படியேறிப் போகும் சமயம், அங்கிருந்த கிருஷ்ணனின் குமாரர், ‘‘ஐயா, காமராஜ் இறந்து விட்டார்’’ என்றார்.  மறுநாள் மதியம், சென்னையிலிருந்து எனக்கு டிரங்க்கால் வந்தது, அதே அக்டோபர் இரண்டாம் தேதியில் என் உடன்பிறந்த சகோதரியும் இறந்து விட்டதாக! நான்  சென்னை வரமுடியவில்லை. மலேசியப் பயணத்தை ஒரு நாள்கூட ரசிக்க முடியவில்லை. ஒரே ரத்தக்கொதிப்பு; சர்க்கரைக் குறைவு;

மயக்கம், மயக்கம்! இந்த நிலையிலும், ‘நான் இந்தோனேஷியாவுக்கு வந்தேயாக வேண்டும்’ என்று வற்புறுத்தினார்கள். பினாங்கில் புறப்படும் விமானம் இருபது  நிமிஷத்தில் சுமத்திரா தீவுக்குப் போய் விடுகிறது. நான் அங்கிருந்து கோலாலம்பூர் திரும்பியதும், சென்னையில் இருந்து டிரங்க்கால் வந்தது. என் சகோதரரை  ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாக. உடனே நான் தங்கியிருந்த பசிபிக் ஹோட்டல் டிராவல் ஏஜெண்டிடம் டிக்கெட்டைக் கொடுத்து ஏர் இந்தியாவில் உறுதி செய்யச்  சொன்னேன். அவர் உறுதி செய்துவிட்டார். ஆனால், என்னிடம் டிக்கெட்டைக் கொடுக்கவில்லை.

மறுநாள் ஞாயிற்றுக் கிழமை காலை எட்டரை மணிக்கு விமானம். டிராவல் ஏஜெண்ட் வரவில்லை. என்னை அழைத்துப் போயிருந்த துணை பப்ளிக்  பிராஸிக்யூட்டர் நண்பர் சம்பந்தமூர்த்தி, விமான நிலையத்திலேயே டாலர் கட்டி எனக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்தார். எத்தனை துயரங்கள்!  எத்தனை  சோதனைகள்!‘இவற்றுக்கெல்லாம் நாம் ஏன் காரணமாக இருக்க வேண்டும்?’ என்றுதானே, குருவாயூரப்பன் காணாமல் போனான்! விதி தவறாக இருக்குமானால்,  தெய்வம் கண்ணை மூடிக்கொள்ளும். அதற்காக அழுது பயனில்லை.

தெய்வத்தை அணுகும் முறையில் இருந்தே பல விஷயங்களை நாம் முன்கூட்டித் தெரிந்துகொள்ளலாம். தெய்வ நம்பிக்கை உள்ளவனுக்கு சகுனத்தடை  ஏற்பட்டால், அதைத் தெய்வத்தின் கட்டளை என்றும், நமது கர்மா என்றும் கொள்ள வேண்டும். தடைதான் ஏற்படுமே தவிர, பெரும் கொடுமைகள்  நிகழமாட்டா.  மலேசியாவிலிருந்து திரும்பிய பிறகும் என் உடல்நிலை சரியாக இல்லை. உடம்பு இளைத்துக்கொண்டே வந்தது. முப்பது பவுண்டு இளைத்து விட்டேன். இப்போது  பார்க்கும் டாக்டர்கள் எல்லாம், இதுதான் சரியான எடை என்கிறார்கள்.

இதுவும் நான் விரும்பி நடந்ததல்ல. பகவான் சில காலங்களில் சில காரியம் நடக்கும் என்று நிர்ணயிக்கிறான்; நம்முடைய பிரக்ஞை இல்லாமலே அவை நடந்து  விடுகின்றன. தெய்வத்தை அணுகினால் பலன் கிடைக்கும் என்பதற்காகக் கண்ட கோயிலுக்கெல்லாம் ஓடிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. ஒரு தெய்வத்தை  உளமாரப் பற்ற வேண்டும். பெரும்பாலும் சக்தி வணக்கம் உதவி செய்யக் கூடியது. புவனேஸ்வரி, ராஜராஜேஸ்வரி, அகிலாண்டேஸ்வரி, கற்பகாம்பாள், மீனாட்சி,  காமாட்சி, விசாலாட்சி எல்லாமே சக்தியின் பிம்பங்களாக இருப்பதால், சக்தி உபாசனை பலன் தரும்.

ஆண் தெய்வங்களில் அவரவர் விருப்பப்படி சிவ தத்துவத்தையோ, விஷ்ணு தத்துவத்தையோ ஏற்றுக்கொள்ளலாம். இரவில் படுக்கப் போகும்போது தூங்குவதற்கு  முன் கடைசியாகச் சொல்லும் வார்த்தை, தெய்வத்தின் பெயராக இருக்க வேண்டும். அதன்பிறகும் யாருடனாவது பேச வேண்டி வந்தால் மீண்டும் தெய்வத்தின்  பெயரைச் சொல்லிவிட்டுத் தூங்க வேண்டும். சின்னப்பா தேவர் யாரைக் கண்டாலும், ‘வணக்கம் முருகா’ என்பார். எம்.ஜி.ஆர். யாரைக் கண்டாலும், ‘வணக்கம்  ஆண்டவனே’ என்பார். ஐயப்ப பக்தர்கள், ‘சாமி சரணம்’ என்பார்கள்.

தெய்வத்தை நாம் நடு வீட்டில் நிற்க வைத்தால், அது உள் வீட்டிலேயே வந்து உட்கார்ந்து கொள்ளும். நன்றி கெட்டவன் மனிதன்; நன்றியுள்ளது தெய்வம்.  நாத்திக வாதம் என்ற மாயமான்!  நாத்திக வாதம் ஒரு மாயமான். கற்பனை மிக்க சொற்பொழிவுகளிலேயே அது உயிர் வாழ்ந்துகொண்டிருந்தது. இப்போது யாரும்  சொல்லாமல் தானாகவே செத்துவிட்டது. நான் நாத்திகனாக இருந்த காலங்களை நினைத்துப் பார்க்கிறேன். எவ்வளவு போலித்தனமான புரட்டு வேலைகளுக்கு  நம்மை ஒப்புக் கொடுத்திருந்தோம் என்பதை எண்ணிப் பார்க்கும்போதே, எனக்கே வெட்கமாகத்தான் இருக்கிறது.

கடவுள் இல்லை என்று மறுப்பவன் கால காலங்களுக்கு உயிரோடிருப்பானானால், ‘இல்லை’ என்ற எண்ணத்தையே நான் இன்றும் கொண்டிருப்பேன். அவரவரும்  பெற வேண்டிய தண்டனையைப் பெற்றுப் போய்ச் சேர்ந்து விட்டார்கள். அவர்களுடைய வாதங்கள் எல்லாம் செல்லுபடியாகாமல், விலையாகாமல் கிடக்கின்றன.  நாத்திகன் எழுதிய போற்றத்தக்க புத்தகம் என்று எதுவும் இல்லை. நாத்திக வாதத்தில் ஆழமோ, அழுத்தமோ, நியாயமோ இல்லாததால், அவர்களது எழுத்துகள்  காலத்தால் செத்துவிட்டன.  தேவாரமும், திருவாசகமும் நிற்பதைப் போல, நூற்றக்கணக்கான ஆண்டுகள் அவை நிற்க வேண்டாம்;

ஆனால், அவர்கள் தலைமுறையிலேயே அவை அழிந்து போனதுதான் ஆச்சரியம். இதில் ஆச்சரியம் என்ன ஆச்சரியம், அதுதான் நடக்கக் கூடியது. மேலை  நாட்டில் கிறிஸ்துவத்திற்கு எதிராக நாத்திகர்கள் தோன்றினார்கள். அவர்களை எதிர்த்துக் கிறிஸ்துவம் போர் புரிந்தது. இஸ்லாத்தை எதிர்த்து நாத்திகம்  தோன்றவே முடியாதபடி அது பயங்கர ஆயுதத்தோடு நிற்கிறது. இந்து மதத்தில் நாத்திகம் தோன்றுவது சுலபம். காரணம் அது சாத்விக மதம். இது யாரையும்  எதிர்த்துப் போர் புரியாது. காலத்தால் தன் கடமைகளைச் செய்துகொண்டே போகும். அதன் விளைவுகளுக்கு இறைவனையே பொறுப்பாக்கும்.

அப்படி இந்துமதம் போர் புரியாமலேயே நாத்திகம் மடிந்து விட்டது. காரணத்தை ஆராய்வது கடினமல்ல. அதன் வாதங்கள் போலித்தனமானவை, அவ்வளவுதான்.  பல்லாயிரம் ஆண்டு காலமாக வளர்ந்து நிற்கும் ஒரு இமயமலையைச் சில செம்மறி ஆட்டுக் குட்டிகள் சாய்த்துவிட முயன்றன. அவற்றின் கொம்பொடிந்ததுதான்  மிச்சமே தவிர,  மலை, மலையாகவே நிற்கிறது. பழைய திராவிடர் கழகச் செயலாளர்கள் எல்லாம் திருப்பதியில் அங்கப் பிரதட்சணம் வருவதை நான்  பார்க்கிறேன். இங்கர்சால் போன்ற மேலை நாட்டு அறிஞர்கள் மத குருமார்களின் தவறுகளுக்கு எதிராகப் போர் புரிந்தார்களே தவிர, இறைவனே இல்லை என்ற  வாதத்தில் அவர்கள் உறுதியாக இல்லை.

அவர்களுக்குள்ளாகவே சபலமும், சலனமும் இருந்தன. ஒரு துளி நீரில் இவ்வளவு பெரிய உடம்பு முளைத்தெழுவதும், ஒரு காற்றில் அது உலாவிக்  கொண்டிருப்பதும், ஒரு பொறி நெருப்பில் அது அழிந்து விடுவதும் ஏதோ ஒரு சக்தியின் இயக்கம் என்பதை அவர்களும் மறுக்க இயலவில்லை. இறைவனது  இயக்கம் இல்லை என்றால் காலங்களும் பருவங்களும் ஏது? சந்திர கதி, சூரிய கதி ஏது? நாத்திகன் இதை நம்பாமல் இல்லை. இதை எதிர்ப்பதன் மூலம்  புரட்சிக்காரன் என்று பெயர் வாங்க விரும்பினான். நம்புகிற மக்களிடம் பணம் வாங்க விரும்பினான்.

என்னுடைய நண்பர் ஒருவர், அந்தக் கட்சிகளில் மிகப்பெரிய தலைவர். ஒரு கோயிலுக்கு இரண்டு லட்ச ரூபாய்களுக்கு மேல் கொடுத்திருக்கிறார். நான் அவரைக்  கேட்டபோது, ஏதோ ஒரு பொருளை மட்டுமே தான் கொடுத்ததாகக் கூறினார். கும்பகோணத்தில் இருந்து அடிக்கடி ஜாதகம் எழுதி வாங்கி வருகிறார். ஆனாலும்  மேடைகளில் அவர் இங்கர்சால் ஆகிறார். கடவுளை அதிகமாகக் கேலி செய்த இன்னொரு நண்பர். அவர் ஒரு நடிகர். சமீபத்தில் திருப்பதிக்குப் போய் வந்து,  ‘ஏதோ ஒரு சக்தி இருக்கு, இருக்கு!’ என்கிறார்.

மேடைகளில் நடைபெறும் வார்த்தை விளையாட்டுகளில் மயங்கி நாத்திகர்களானவர்கள் பலர். அவர்களில் நானும் ஒருவன். ‘கருப்புச் சட்டைக்காரன்’ என்று  சொல்லிக் கொள்வதில் பெருமைப்பட்டவன். எல்லாம் ஒரு சில ஆண்டுகளே! நாத்திகனாக இருக்கும்வரையில் எதைப்பற்றியும் அதிகமாகப் பாட  முடியவில்லையே? நாத்திகத்தில் என்ன இருக்கிறது பாடுவதற்கு? ஆத்திக உள்ளம் வந்த பிற்பாடுதான் ஆயிரக்கணக்கான பாடல்கள் பிறந்தன. கடல் போன்று  பரந்து விரிந்து நிற்பது, கடவுள் தன்மை. நீந்தத் தெரிந்தவன் அந்தக் கடலில் இறங்கி விட்டால், ஒரே உற்சாகம்தான்.

நான் இன்னும் பார்க்கிறேன். கவிஞர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் சிலர், மேடைகளில் பாடும்போது, ‘‘நான் பெரியார் பாசறையில் புடம் போட்டு  எடுக்கப்பட்டவன்’’ என்கிறார்கள். அவர்கள் கவிதைகள் நிற்கவும் இல்லை; அவை கவிதைகளாகவும் இல்லை. பாசறையில் எப்படிப் புடம் போடுவதோ எனக்கும்  புரியவில்லை.எல்லாம் போலித்தனம்! அபத்தம்! ‘கண்ணதாசன் எழுதுகிற அளவு நம்மால் எழுத முடியவில்லையே’ என்று ஆதங்கப்படுகிறார்கள். நான் எழுதுகிற  அளவுக்கு அவர்கள் எழுத வேண்டுமானால், முதலில் தாங்கள் இந்துக்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

வேத, உபநிஷத, இதிகாச புராணங்களைப் படிக்க வேண்டும். வெறும் வார்த்தை விளையாட்டுகள் பலிக்க மாட்டா. மீண்டும் சொல்கிறேன், நம்முடைய  பல்லாண்டுகால மூதாதையர்கள் ஒன்றும் முட்டாள்களல்லர். திருமணத்துக்கென்று அவர்கள் சில சடங்குகள் வைத்திருக்கிறார்கள். அவை ஒன்றும் பார்ப்பனச்  சடங்குகளல்ல. அவை பார்ப்பனச் சடங்குகள் என்றால், சிலப்பதிகாரமும் பார்ப்பனக் காவியமாக வேண்டும். அந்தச் சடங்குகளில் இருந்து மாறுபட்டுச்  சுயமரியாதைத் திருமணம் என்ற பெயரில் நாத்திகர்கள் ஒரு கோமாளிக் கூத்தை ஏற்படுத்தினார்கள்.

ஆடு, மாடுகள் குட்டிச் சுவர்களுக்கிடையே கூடிக்கொள்கிற மாதிரி, அது ஒரு திருமண முறை. தலைவர் முன்னிலையில் மாலை மாற்றுவதாம்! தாலியும்  கிடையாதாம்! மாலையைக் கழற்றிய உடனே மணப்பந்தமும் அகன்று விடுமே? நாத்திகன், சடங்குகளை மட்டுமல்ல, மாதரார் கற்பையும் மதித்ததில்லை. ‘கற்பு  என்ன, கற்பு! ஒருத்திக்கு ஒருவன் என்பதே முட்டாள்தனம்!’’ என்று பேசியவர் பெரியார். ஆகவே, நாகரிக உலகத்தில் ஒரு காட்டு மிராண்டி தர்மத்தை  உருவாக்க வந்தவர்களே, நாத்திகர்கள். சில சுயமரியாதைத் திருமணங்களுக்கு நான் தலைமை வகித்திருக்கிறேன்.

தாலி அறுப்பதைப் பற்றியும், விதவையாவதைப் பற்றியும் சீர்திருத்தவாதிகள் பேசுவார்கள். சாதாரண மனித நாகரிகத்துக்கு ஒத்து வராத மடத்தனம் இது என்பது,  அவர்களுக்கு மறந்தே போய்விட்டது. எங்களூரில், ‘நாத்திகனை நம்பி வீட்டுக்குள் விடாதே’ என்பார்கள். ‘அவன் பண்பாடு தெரியாதவன். பவித்திரமில்லாதவன்.  யாருடைய பெண்டாட்டியையும் கை வைத்து விடுவான்’ என்பார்கள். தெய்வத்திற்குப் பயப்படாதவன் வேறு எந்த நியாயத்துக்குப் பயப்படுவான்? பழைய  காலங்களில் எது எது எங்கெங்கு இருக்க வேண்டுமோ, அது அது அங்கங்கே இருந்தது. இப்போதோ, கழுதை கட்டிலில் படுத்திருக்கிறது! யானை தொட்டிலில்  தூங்க ஆசைப்படுகிறது;

பூனை புல்லாங்குழல் வாசிக்க விரும்புகிறது; புள்ளிமான் உப்புக்கண்டமாகிறது. நாகரிகத்திலேயே தர்மம் தடம் புரளுமானால், நாத்திகத்தின் விளைவு என்ன?  எனக்குத் தெரிந்தவரை, நாத்திகம் பேசிய உண்மையானவர்களில் பலர் சொத்தை இழந்தவர்கள். சில உத்தமத் தொண்டர்கள், பெண்டாட்டியை இழந்தவர்கள்.  அக்கிரமக்காரர்கள் மட்டுமேதான் அனுபவித்தார்கள். பூஜை அறைக்கும், குளிக்கும் அறைக்கும் பேதம் தெரிந்தவன், ஆத்திகன். மலஜலம் கழிக்கும் இடத்திலேயே  சாப்பிட்டுப் பழகியவன் நாத்திகன். தாய்க்கும், தாரத்திற்கும் பேதம் தெரிந்தவன், ஆத்திகன்.

எதுவும் தாரம்தான் என்று கருதுகிறவன், நாத்திகன். தர்மம் தர்மம் என்று பயப்படுகிறவன், ஆத்திகன். அனுபவிப்பதே தர்மம் என்று நினைப்பவன், நாத்திகன்.  ஆத்திகன் மனிதனாக வாழ்ந்து தெய்வமாகச் சாகிறான். நாத்திகன், மனிதன்போலக் காட்சியளித்து, மிருகமாகச் சாகிறான். உண்மையிலேயே ஒருவன் நாத்திகம்  பேசினால் அவன் உணர்ச்சியற்ற ஜடம், ஆராயும் அறிவற்ற மூடம். பகுத்தறிவு ஒழுங்காக வேலை செய்யுமானால், அது கடைசியாக இறைவனைக் கண்டு  பிடிக்குமே தவிரச் சூனியத்தைச் சரணடையாது.

நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்,

சென்னை - 600 017.

- கவிஞர் கண்ணதாசன்

(தொடரும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-07-2019

  19-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • japan_animsehan11

  ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 33 பேர் பலி

 • wax_giant_pics

  மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

 • church_cathdral11

  நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

 • apolo_50vinkalam1

  நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்