SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குருவடிவாக வருவாள் உமையம்மை!

2018-09-03@ 17:37:39

சக்தி ரகசியம் : அபிராமி அந்தாதி - 25

வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து என்விழியும் நெஞ்சும்
   களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை; கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுள மோ?
   ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே! (பாடல் - 19)

ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்வது எப்படி என்பதை எல்லோரும் அறிந்திருக்கிறோம். ஆனால் இறைவனை அறிந்து அவனது அருளைப் பெறுவது என்பது இன்றுவரை சரிவர இயலாததாகவே இருக்கிறது. அப்படி இருக்குமாயின் இறைவியின் அருளை பெற்ற அனைவரும் பட்டரே எனக்கூற வேண்டி வரும்! அப்படி சாமான்யமாக ஒரு பொருள் நமக்குக் கிடைக்காதபோது அது அரிதாகத் தோன்றுகிறது. அந்த நிலையில் அப்பொருளை தள்ளி விடுவோம். கொள்வதற்கும் வழியில்லாமல், அருளை தள்ளுவதற்கும் மனமில்லாமல் ஆலயத்திற்குச் சென்று வழிபட்ட போதிலும் பலன் கிடைக்கப் பெற்றதாக ஆகாமல் நாம் தடுமாறுகிறபோதுதான் நம்பிக்கையானவர்கள்,

உறுதிபடைத்தவர்கள், உண்மையானவர்கள், என நாம் கருதுபவர்கள் நமக்கு குருவாகிறார்கள். உண்மையில் அவர்களும் சந்தேகத்துடனேயே பயணிக்கிறார்கள். நம்மை மதித்து கேட்டு விட்டானே என்பதற்காக அவர்கள் தமக்குத் தோன்றிய சாத்திரத்தை தேடி, அது கூறும் வழியை நமக்கு கூறுகிறார்கள், அந்த சாத்திரமானது காய்தலும், உவத்தலும், இன்றி பெரியோர்களால் செய்யப்பட்டு காலம் கடந்து நிலைத்திருப்பதே அதற்கான சான்று. மனிதனின் வாழ்நாளிற்கு பிறகு நிலைத்திருக்கும் அனைத்திற்குமே இறையருள் உரித்தானதாகத் தோன்றுகிறது. காலம் அழியாது காக்கும் அத்தகைய சாத்திரங்களில் ஒன்றுதான் அபிராமி பட்டரின் அந்தாதி.

இது அவருடைய கருத்து மட்டுமல்ல அபிராமி அம்மையின் கருத்துமாகும். அபிராமி பட்டர், அபிராமி அம்மை இருவருக்கும் உள்ள தொடர்பு அந்த தொடர்பின் வழி வெளிவந்த இந்த சாத்திரமானது படைக்கப்படும் நேரத்தில் அபிராமி பட்டருக்கு உள் உணர்வாக தோன்றியதும், வெளியில் நின்று அபிராமி அம்மை உணர்த்தியபோது இருவருக்கும் இடையே இருந்து கடவுளை காணும்பொழுது  (நிகழ்காலத்தில்) இருந்த நிலையை வெளிப்படுத்துகிறது இப்பாடல்.‘‘வெளிநின்ற நின் திருமேனியை’’ - உமையம்மையின் வழிபாடானது மூன்று விதமாகச் சொல்லப்பட்டுள்ளது.

மனிதர்களுக்கு உள்ளே, மனிதர்களுக்கு வெளியே, அனைத்தையும் கடந்து என்று இருப்பதையே அபிராமி பட்டர், ‘வியன்மூவுலகிற்கும் உள்ளே அனைத்தினுக்கும்
புறம்பே உள்ளத்தே விளைந்தே கள்ளே’ (பாடல்-.23), ‘வெளிநின்ற நின் திருமேனி’ என்பதனால் மனிதனுக்குள்ளே உமையம்மை எழுத்துருவமாக (அருவுருவமாக) இருக்கிறாள், மனிதர்களுக்கு வெளியே உருவமாக இருக்கிறாள், (அவயவங்களாய்) அனைத்தையும் கடந்து நிற்கிறபோது அருவமாக இருக்கிறாள் என்கிறது ஆகமம். அபிராமி பட்டர் இங்கே இப்பாடலில் வெளியே என்பதனால் உமையம்மையை வடிவங்களோடு கூடியவளாய் தியானிக்கின்றார்.  

‘‘ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம்
பூத்தாளை மாதுளம் பூநிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை அங்குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே’’ (நூற்பயன்)

- என்று உமையம்மையின் தியானத்தை தெளிவுற தன் கண்களால் காணமுடிந்த திருமேனியையே இங்கு சொல்கின்றார். இப்படி வெளியே தோன்றுகிற உமையம்மையானவள், ஆன்மாவிற்கு ஞானத்தையும், சரீரத்திற்கு போகத்தையும், மனதிற்கு மகிழ்ச்சியையும், தரவல்லவள். இந்தத் திருஉருவங்கள் ரிஷிகளாலும், தேவதைகளாலும் பக்தனின் மனப்பக்குவம் சார்ந்தும், வேண்டுதல் சார்ந்தும் அமைகிறது. அதிகமாக ஆயுதங்கள் தாங்கிய திருக்கரங்கள், செயலைச் செய்வதற்கும், ஆயுதமற்ற குறைவான கைகள், ஞானத்தை அளிக்க வல்லதாயும், நான்கு கரங்களுக்கு மிகாதவளாக, அதிகமான ஆபரணங்கள் பூண்டவளாக இருத்தல் மனதை மகிழ்வுறச் செய்ய வல்லதாகவும் திகழ்கிறது.

மேலும் வெளிநின்ற திருமேனியானது மூன்றாக சாத்திரங்களில் கூறப்படுகின்றது. குரு, லிங்க, சங்கமம் என்று இதை கூறுவர்.  உமையம்மை, குருவடிவாக வருவாள். ‘தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபிண்யை நமஹ’ என்கிறது லலிதா ஸஹஸ்ரநாமம். உமையம்மையை எழுந்தருள செய்யப்பட்ட (ஆவாஹனம்) கல், உலோகம், சுண்ணாம்பு கலவையாலான உருவமே லிங்கம். இவை ஆகமத்தின் வழியே அவற்றில் சொல்லப்பட்டுள்ள ரூபத்தியானம் என்ற அடிப்படையில், உமையம்மையின் உருவங்களில் அமைப்பர். சங்கமம் என்பது தெய்வமுறுதல் என்னும் தன்மையால் உமையம்மையானவள் ஆவேசித்து பேசுகிற வடிவம்.

அதற்கும் திருமேனி என்றே பெயர். ஆவேசிப்பது என்பது, ஆண்கள், காளி, துர்க்கை போன்று வேடமிட்டு வணங்குவதாகும். அப்போது அவர்கள் மீது இறைவி ஆவேசித்துப் பேசுவாள் (வாக்கு). இதற்கும் திருமேனி என்று பெயர். ஆனால் அபிராமி பட்டர் இப்பாடலில் குறிப்பிடும் திருமேனி, மிகச் சிறப்பானது. யாரும் பார்க்க முடியாதது. (அப்படிப் பார்த்தால் இறைவியோடு இரண்டறக் கலந்து விடுவார்கள்) இதற்கும் திருமேனி என்றே பெயர். இந்த திருமேனி, நாம் முதலில் கண்ட குரு, லிங்க, சங்கமத்தில் தோன்றுவதல்ல.

மந்திர சாத்திரங்களின்படி வர்ண (எழுத்து), பத(சொல்), மந்த்ர (வேதம் மற்றும் ஆகமம்,) புவன (வடிவம்), தத்வ (ஆன்ம அறிவு சாதனம்), கலா (உறுப்புகளில்லாத போதும் அதன் பயனை தரவல்லது) இவை ஆறும் ‘அத்வாக்கள்’ எனப்படும். மனிதர் உடல் எப்படி எலும்பு, தோல், மாமிசம், முடி, சுக்லம் இவற்றால் ஆனதோ, இதுபோல் தேவதையின் மெய் வடிவமானது இந்த அத்வாக்களால் ஆனது. இதை ஒருமுறை மட்டுமே தேவதை அருளினால் பார்க்க முடியும். பார்த்தால் அந்த உருவத்தோடு கலந்து விடுவார்கள். இத்தகைய இந்த திருமேனியே ‘வெளி நின்ற நின் திருமேனி’.

‘‘பார்த்து என் விழியும் நெஞ்சும்’’ - ‘பார்த்து’ என்பது கண்ணின் செயல், ‘என்’ என்பது இங்கே ஆன்மாவை குறித்தது. ‘விழியும்’ என்பது பார்க்கும் செயல் புரியும் கண் என்ற உறுப்பு. ‘நெஞ்சும்’ என்பது அந்தக்கரணமாகிற மனதைக் குறித்தது. கண் இருந்தும் முதுமையில் தெரியாமல் போகிறது, இளமையில் நோயுற்றபோது மங்கலாகத் தெரிகிறது. காற்று, மின்சாரம் முதலான பொருளை கண் நன்றாக இருந்தாலும் பார்க்க முடியாது. ஒரு புத்தகத்தை அந்த மொழி தெரியாதவர் பார்க்கும்போது அவர் பார்வை நன்கு பெற்றிருந்தபொழுதும் அவர் அதை அறியாதவர் ஆகிறார்.

பிறவிக் குருடாக இருந்தாலும் பார்க்க முடியாது. இந்த ஐவகையினாலும் செம்மையுற்ற தன்மையுடையது என்பதை நன்கு எடுத்துக்காட்டவே ‘பார்த்து’ என்று கூறுகிறார். ‘என்’ என்ற வார்த்தையால் உடம்பில் உயிர் இல்லாதபோது கண் இருந்தும் பார்க்க முடியாததாகிறது. விழிக்கு நேரே இல்லாத எந்தப் பொருளையும் பார்க்க முடியாது. ‘நெஞ்சும்’ என்ற வார்த்தையால் ஒரு பொருளை நன்கு பார்க்கக்கூடிய திறனை பெற்ற கண்கள் இருந்தாலும், உள்ளத்தின் தொடர்பு அற்றால் பார்க்க முடியாது. சாலையில் வாகனம் ஓட்டும் ஒருவர் ஒரு வாகனத்தை முந்தியோ வலம், இடமாகவோ செல்லுகிறபொழுது அனைத்தும் கண் எதிரே தோன்றினாலும், உள்ளத்தோடு தொடர்பு அற்ற நிலையினால் அந்தக் காட்சிகள் சரிவர பதிவதில்லை.

அதேசமயம், உள்ளத்தோடு தொடர்புடைய ஒருவரைப் பார்க்கும்போது தெளிவாகத் தெரிவார்கள். ஒருவர் பார்ப்பதற்கு, பார்க்கக்கூடிய பொருள் வடிவமுடையதாகவும், விழி என்கின்ற உறுப்பும், பார்த்தல் என்கின்ற அதன் செயல்பாடும், ஒன்றாகத் தோன்றினாலும் வெவ்வேறானவையே. அத்தகைய விழியும், அதன் செயலான பார்வையும் ஒருங்கிணைய வேண்டும். அப்படி அமைந்தாலும் அந்த விழி, பொருட்களைச் சென்று பற்றும் தன்மையால் கவனம் என்ற உள்ளத்தோடு தொடர்புடையதாக இருக்க வேண்டும். அப்படி இருப்பினும் அந்த மனமானது அறிவுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.

இவை அனைத்தும் இருந்தாலும் உயிர் அந்த உடலில் இருக்க வேண்டும். இவை அனைத்தும் இருந்தாலும் ஒளி வேண்டும். இவை எல்லாம் சரிவர உணர்த்தவே ‘பார்த்து என்விழியும் நெஞ்சும்’ என்று தெளிவுற கூறுகின்றார். ‘‘களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை’’- எல்லையில்லாத இடையீடு அற்ற மகிழ்ச்சியைத்தான் அடைந்ததாக கூறுகின்றார். ‘காலன் என்மேல் வரும்போது வெளி நிற்கவே’ (பாடல் -18) என்று கூறியவர் இறக்கும் தருவாயில் இந்தச் செய்தியை சொல்கிறார். அப்படி இறக்கும் தருவாயில் காக்க வந்த உமையம்மையைக் கண்டாலும் மகிழ்ச்சி தோன்றாது, துன்புறுவாரேயன்றி, இன்புற மாட்டார் என்று அவர் பாடலை வைத்தே அறியலாம்.

‘அருளற்ற அந்த கண் கைப்பாசத்தில் அல்லற்பட இருந்தேனை’ (பாடல்- 32), ‘மாகோர காலன் வரும்போது தமியேன் மனங் கலங்கி’ (அம்மைப் பதிகம்), ‘அண்டமா காலன் முன் எதிர்க்க மார்க் கண்டன் வெருண்டு நோக்க’ (அம்மை பதிகம்), என்பதனால் இறக்கும்போது மனிதனுக்குண்டான மனநிலை குறித்து மிகவும் விரிவாகப் பேசுகிறார். என்றாலும், ‘களி நின்ற வெள்ளம் கரைகண்டதில்லை’ என்று குறிப்பிடுவது எப்படி சாத்தியமாகும்? உமையம்மையின் அருள் பார்வையானது வாழ்வில் எல்லா நலன்களையும் தருவதுபோல, யமனுடைய பாசத்திலிருந்தும் விலகிக் கொள்வதற்கு முன்தோன்றுவதன் விளைவால் (சந்நதி விசேஷத்தால்) உமையம்மையின் அருட்சக்தியினாலே இயல்பாக துன்பம் இருந்தபோதும்,

சூரியன் முன் இருள் இல்லாததுபோல, உயிர் பிரிதலான துன்பத்தைப் போல, யாக்கை (உடல்) பெற்றிருப்பினும் அருள் சக்தியால் மரணம் (முக்தி) மகிழ்ச்சி தருவதாய் அமையும். இதையே காசி காண்டமானது ‘மரணம் யத்ர மங்களம் யாந்தி’, மரணம் எங்கு மகிழ்ச்சியானதாகவும், நல்லதாகவும் அமைகிறதோ அதுவே காசி என்பதால் இடத்தின் மகிமையால் (க்ஷேத்திர விசேஷம்) மரணம் துன்பமற்று போகிறதுபோல அபிராமி அம்மையினுடைய (மூர்த்தி விசேஷத்தினால்), முன்தோன்றும் திருமேனி பிரகாசத்தினால், துன்பமற்ற தன்மையானது தோன்றுகிறது.

அதையே ‘அந்தகன்பால் மீளுகைக்கு உன்தன் விழியின் கடையுண்டு’ (பாடல் -39) என்பதனாலும் அறியலாம். ‘களி’ என்கிற வார்த்தையால் உடல் பெறும் மகிழ்ச்சி, உள்ளம் பெறும் மகிழ்ச்சி, அறிவு பெறும் மகிழ்ச்சி, ஆன்மா பெறும் மகிழ்ச்சி, அழகு, இளமை, உடல் பெறும் மகிழ்ச்சி, பெருமை, புகழ், உள்ளம் பெறும் மகிழ்ச்சி, வாழ்நாள் வெற்றி அறிவு பெறும் மகிழ்ச்சி, ஆகு நல்லூழ் நுகர்ச்சி ஆன்மா பெறும் மகிழ்ச்சி , இவை எல்லாவற்றையும் அம்மை பதிகத்தில் தெளிவாக விளக்குகிறார். இதில் உடல் மகிழ்ச்சி, அதனோடு உள்ள மகிழ்ச்சி, அவை இரண்டோடு அறிவு மகிழ்ச்சி இவை மூன்றோடு ஆன்ம மகிழ்ச்சி அமையும். இவை ஒன்றிற்கு ஒன்று அடிப்படையானதும் ஒன்றைவிட ஒன்று மேலானதுமாயமைகிறது.

இதையே அபிராமி பட்டர்,  உடல்நலம் சார்ந்து - ‘பொருள் முடிக்கும் போகமே’ (பாடல்- 36); புலன் சார்ந்து - ‘பாலினும் சொல் இனியாய்’ - பாடல் 60, ‘கண்களிக் கும்படி கண்டு கொண்டேன்’ - பாடல் 70, ‘கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா’ - பாடல் 80, ‘பாலையும், தேனையும், பாகையும் போலும் பனிமொழிய’ பாடல் 86); உள்ளநலம் சார்ந்து - ‘அகமகிழ் ஆனந்தவல்லி’ - (பாடல் 55), ‘உள்ளத்தே விளைந்த கள்ளே! களிக்கும் களியே’ - (பாடல் 23); அறிவு நலம் சார்ந்து - ‘ஆனந்தமாய் என் அறிவாய்’ - பாடல் 11, களியாகி அந்தகரணங்கள் விம்மிம் - பாடல் 82);

ஆன்ம நலம் சார்ந்து - ‘சேமம் திருவடி’ - பாடல் 73, ‘அரும்பித்ததும்பிய ஆனந்தமாகி அறிவிழந்து சுரும்பிற் களித்து’ - பாடல் 94, ‘அழியாத முத்தி ஆனந்தமே’ - பாடல் 10) என்று விவரிக்கிறார். ‘களிநின்ற வெள்ளம்’ என்ற வரியில் உடல், புலன், உள்ளம் அறிவு, ஆன்மா ஆகிய அனைத்திற்கும் ஒருசேர துன்பமற, இன்பம் தரவல்லது. அதோடு மட்டுமல்லாமல் சலிப்பற்றதும், என்றும் நிலையானதுமாகிய இன்பத்தையே ‘களி’ என்று குறிப்பிடுகிறார். உடலை விட்டு உயிர் நீங்கி உமையம்மையின் அருளினால் ஞானம் பெற்று, அவள் திருவடியை அடைதலால் ஏற்படுகின்ற அனுபவ இன்பத்தின் விளக்கமாகவே அது முடிவற்றதாகவும் இனி இழக்கப்படாதாகவும்,

‘உள்ளத்தாலேயே களி நின்ற வெள்ளம் கரைகண்டதில்லை’ என்கிறார்.‘‘கருத்தினுள்ளே தெளிநின்ற ஞானம்’’ - கருத்து என்பது புலன்வழி மனதில் முன் அனுபவித்த பதிவுகளின் தொகுப்புகள் (எண்ணங்கள்) பலவற்றை உற்று நோக்கி அது தொடர்பான அனைத்தையும் ஒரு முடிவிற்கு வருவதற்காக அலசிப்பார்க்கின்ற மனதின் செயலாகும். அப்படிப்பட்ட அந்த கருத்தினுள்ளே, மனம் மூன்று விதமான நிலைகளில் இருக்கும். உதாரணமாக 1) தேர்வு எழுதப் போவதற்கு முன் உள்ள மனநிலை - கருத்துகள் அற்ற நிலை; 2) தேர்வு எழுதிய ஒருவன் தேர்வு முடிவு வெளியாவதற்கு முன் தேர்வு எழுதிய பின் இடையில் இருக்கும் மனநிலை - குழப்பம்; 3)

தேர்வு முடிவு வந்தபின் மனநிலை - தெளிவு. இதுபோலே ‘தெளி நின்ற ஞானம்’ என்று மனம் தெளிவுற்ற நிலையைக் குறிப்பிடுகின்றார் அபிராமி பட்டர். (‘ததியுறு மத்திற் சுழலும் என் ஆவி’ (பாடல் 7), ‘குழப்ப நிலையையும் அறிவொன்றிலேன்’ (பாடல் 81) என்று கருத்தில்லாத நிலையையும், ‘இங்கென்னை இனிப் படையாளை’ (பாடல் - 84) என்று தெளிவான நிலையையும் சுட்டியிருக்கிறார். இந்தப் பாடலைப் பொறுத்தவரை, ‘தெளி நின்ற ஞானம்’ என்பது இறைவியை அறிந்து அவளின் அருளைப் பெற்று ஆன்மாக்கள் பயன் அடைவதான சாதனத்தின் பெயரே ‘ஞானம்’, ‘தெளி’ என்று சக்தேகமற, வியப்பில்லாமல், அனுபவ சாத்தியத்தில் தான் அனுபவிப்பதை, பாடல் வரியில் பதிவு செய்திருக்கிறார்.

இயல்பில் அவ்வாறு அனைவருக்கும் அவர் கூறுவது அனுபவச் சாத்தியமில்லை. அதனால் நாம் சந்தேகப்படும் சூழல் ஏற்படுகின்றது. ‘தேறும் படி சில ஏதுவும் காட்டி’ (பாடல் 63) என்று கூறுவதால் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம், ‘தீ’ சுடும் என்ற ஒரே மாதிரியான அனுபவத்தை தருகிறது. அதில் சந்தேகப்பட வேண்டியதில்லை. அனுபவத்தில் சாத்தியமாவதை அறிகிறோம், அனுபவிக்கிறோம். அதேசமயம் தன் குழந்தைக்குத் தாயாகவும், உடன்பிறந்தவளுக்குச் சகோதரியாகவும், கணவனுக்கு மனைவியாகவும், தகப்பனுக்கு மகளாகவும், ஒரே பெண், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவத்தையளிக்கிறாள்.

அதுபோலவே உமையம்மையிருப்பதனால் நமக்கெல்லாம் அபிராமி பட்டர் கூறியது அனுபவத்தில் சாத்தியமில்லை என்பதனால்,  அது பொய்யாகி விட்டது. அவரைப் பொறுத்தவரை அது மெய். அப்படி இறையருளானது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாய் தோன்றி அருள்புரியும் தன்மையை உடையதாகும். ‘துணையும் தொழும் தெய்வமும் பெற்றதாயும்’ (பாடல் 2) என்று கூறுவதிலிருந்து அறியலாம். ‘கருத்தினுள்ளே’ என்பதனால் விழிப்பு நிலையிலேயே உமையம்மையை நேரில் கண்டு பேசுவதால் ‘கருத்து’ என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். ‘‘திகழ்கின்றது என்ன திருவுளமோ?’’ - ஞானம் என்பது உள்ளுக்குள் மலர்தலாகும். ஒருவருடைய ஞானம் என்பது புற அடையாளங்களால் அறியத்தக்கதல்ல. ஒருவருக்கு வந்த ஞானத்தை பிறர் அறிய முடியாது.

யார் ஞானம் பெறுகிறாரோ அவர் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும். ஞானமானது மூன்று விதமாக அமைகிறது: 1) தன்னைத்தான் உணர்தல், 2) தான் இறை உணர்தல், 3. தான் உணர்ந்ததையும், இறை உணர்த்தியதையும் பிறருக்கு உணர்த்துவது. இவை முறையே ஒன்றினும் ஒன்று உயர்ந்தது. ‘எண்ணில் ஒன்றும் இல்லா வெளியே’ - பாடல் 16, ‘நின்னை உள்ள வண்ணம் பேயேன் அறியும் அறிவுதந்தாய்’ - பாடல் 61, ‘செய்யும், மெய்யும் இயம்பவைத்தாய்’ - பாடல் 57, ‘பண்ணளிக்கும் சொற் பரிமள யாமளை’ - பாடல் 15 என்ற வாக்கியங்களிலிருந்து அபிராமி பட்டர் மூன்று ஞானத்தையும் பெற்றிருந்தார் என்பது தெரியவருகிறது. உள்ளுக்குள் ஏற்பட்ட மாற்றத்தையே‘திகழ்கின்றது’ என்று குறிப்பிடுகிறார்.

‘என்ன திருவுளமோ’ என்பதனால் மனிதர்கள் நினைப்பது எதுவும் நினைத்தபடியே நடக்கும், நடக்காமல் போகும் அல்லது எதிர்பாராதது நடக்கும். இந்த மூன்றும் புறவிளைவுகளாகும். நினைப்பது, அகவிளைவு. ஆனால் நினைவு, மனிதர்களுக்கு கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் அடிப்படையாகக் கொண்டே தோன்றும். புதிதாக ஒன்று தோன்றாது. இதையே பட்டர், ‘தேறும் படிசில ஏதுவும் காட்டிமுன் செய்ததிக்கு’ (பாடல் 63) என்பதனால் காரணகாரிய அடிப்படையில் தோன்றாத புறச்சூழலிலும், அகத்து நினைவு பதிவுகளிலும் இல்லாத ஒரு புதுவிதமான, இதுவரை அறியாத, உணராத ஒரு அனுபவத்தை உள்ளுள்தான் உணர்கிறார்.

அதற்கான காரணத்தை அறிய முடியாமல் தவிக்கின்றார். அப்பொழுதுதான் இறைவியானவள் முன்பிருப்பது தெரிகிறது. கண்களை மூடிக்கொண்டு உள்நோக்கி தியானம் செய்துகொண்டிருக்கிற நேரத்தில் புறச்சூழலை மறந்திருக்கிறார். மந்திரம் உச்சரிப்பதனால் பழைய எண்ணங்களை பயிற்சியினால் தடுத்து நிறுத்தியிருக்கிறார். மனது நினைவற நிற்கிறது. (இந்த நிலைக்கு ஆகமத்தில் பிரதிஷ்டா என்று பெயர்). என்றாலும் உள்ளுள் ஏதோ மாற்றம் திகழ்கிறது. அந்த மாற்றத்தை அறியாது தடுமாறுவதால் பிறகுதான் கண் திறந்து பார்க்கும்போதுதான் தெரிகிறது. அபிராமி அம்மை முன்னே நிற்கிறாள்.

அப்படி தன் முன் நிற்பதால்தான், அவர் தியானத்தில் இருக்கும்போது தோன்றிய மாற்றத்திற்கு  காரணம் உமையம்மைதான் என்பதை உணர்ந்தார். அதனால்தான் ‘திகழ்கின்றது என்ன திருவுளமோ’ என்று குறிப்பிடுகிறார். அபிராமி பட்டர் தியானத்தில் இருக்கும்போது வேறு எந்தப் பொருளாலும் அவர் உள்ளத்தை அசைக்க முடியாது. அப்படி அசைகின்றது என்றால் அதற்கு அபிராமியின் சந்நதிதான் காரணம். ‘திகழ்கின்றது என்ன திருவுளமோ’ என்பதால், தான் எந்தவிதமான பிரார்த்தனையும் மேற்கொள்ளவில்லை. தான் அழைக்கவுமில்லை, உமையம்மையே கருணையினால் தன் முன் நிற்கிறாள்.

எந்த செய்தியைக் கண்டு, இவரிடம் கூற விழைகிறாள், தான் வந்ததன் நோக்கம் என்ன, என்று உமையம்மையிடம் கேட்பதுபோல் ‘திகழ்கின்றது என்ன திருவுளமோ’ என்கிறார். அவ்வாறு உமையம்மை முன்தோன்றும்போது, சூரியன் முன் விளக்கொளி சிறுத்துப் போவது போல் தான் ‘அறிவுயிழந்து’ (பாடல் 94) இருப்பதால் முன் நிற்கும் காரணத்தை அறிய விழைகிறார். இறை பக்தி நெறியில் நிஷ்காம்ய பத்தி என்று குறிப்பிடுவர். ‘‘ஒளி நின்ற கோணங்கள்’’ - மந்திர சாத்திரங்கள் எழுத்துகளையும், சொற்களையும், தேவதைகளையும், மறைமுகமாகவே கூறியிருக்கின்றன. மந்திரத்தை, தேவதையை, யந்திரத்தை, உருவத்தை, மற்றும் சில சுட்டு சொற்களைக் கொண்டும் தேவதையை உணர்த்துவதற்கு பஞ்ச ரகஸ்யம் என்ற கலைச்சொல்லை பயன்படுத்துகின்றனர்.

இந்தவகை கலைச் சொற்களை குருவும், சீடனும், தேவதை மட்டுமே அறியும். வேறு யாருக்கும் அது புரியாத வண்ணம் அமைந்திருப்பதே அதை ரகசியம் என்று கூறுவதற்கு காரணம். அதே முறையை பின்பற்றித்தான் அபிராமி பட்டர் தான் வணங்கும் தேவதையை அனைவருக்கும் அறிவிப்பதற்கு முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார். அபிராமி அந்தாதியில் விரிவாக ஆங்காங்கே ஐந்து ரகசியங்களையும் கூறியுள்ளார்: ‘நாமம் திரிபுரை’ (பாடல் 730, ‘யாமம் வைரவர் ஏத்தும்பொழுது’ (பாடல் 73), ‘ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை’ (நூற்பயன்), ‘ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர்தங்கோன், போதில் பிரம்மன்,

புராரி, முராரி, பொதிய முனி, காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல் சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே’ (பாடல் 97) அந்த வகையில் யந்திரத்தை ‘ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும்’ என்று தான் வணங்கிய தெய்வத்தை அனைவருக்கும் பதிவு செய்திருக்கிறார். ‘ஒளி நின்ற’ என்பது மந்திரத்தைக் குறிக்கும். சாதாரண யந்திரமானது உருவமைக்கப்பட்டாலும் மந்திரம் உச்சரிப்பதால் உபாசகனுக்கு மட்டும் அதில் உறையும், உமையம்மை, ஒளிவடிவில் விளங்கி தோன்றுவாள். அப்படி தனக்கு ஏற்பட்ட உபாசனை அனுபவத்தை பதிவு செய்கிறார் பட்டர். யந்திரம், மந்திரம், தந்திரம், தியானம், லிங்கம் (வழிபாட்டுத் திருமேனி) இவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையது.

இந்த தொடர்புக்கு பரிநாமம் என்று பெயர் - விதை, செடி, மரம், காய், கனி, இவைபோல். ‘ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே’ என்பதனால் மற்ற நான்கும் (யந்திரத்தை தவிர) மறைமுகமாகவே குறிப்பிடப்பட்டுள்ளன. விதை, செடி, மரம், காய், கனி இவற்றில் ஒன்றைக் கொண்டு அந்த தாவரத்தின் உண்மை தன்மையை அறிய முடிவதுபோல, ‘‘ஒளி நின்ற கோணங்கள்’ என்று தேவதையைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் அறிய வழிவகை செய்திருக்கிறார். இதை தத்துவ நெறியில், சாதனம் என்பர். சாதனம் என்பது ஒரு பொருளை, ஒரு செயலைச் செய்வதற்கு உதவுகின்ற
கருவியாகும்.

எழுதும் செயலுக்கு எழுதுகோல் போல் இறையருளை பெற மேற்கண்ட ஐந்தும் சாதனமாகின்றன. லலிதா ஸஹஸ்ர நாமம் இதே கருத்தை, ‘மஹா மந்த்ராயை நம: மஹா தந்த்ராயை நம: மஹா யந்த்ராயை நம: த்யான  தியாத்ரு த்யேய ரூபாயை நம: மனோன்மண்யை நம:’ என்ற ஐந்தையும் குறிப்பிட்டுள்ளது நோக்கத்தக்கது. ‘‘ஒன்பதும் மேவி உறைபவளே’’ - ‘ஒன்பது’ என்ற எண் சொல், சக்தி வழிபாட்டில் ஒரு குறிப்பிட்ட தேவதைகளைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல்லாகும். ‘கோணம்’ என்பது இருக்கும் நிலை சார்ந்து, சக்தி என்றும் சிவம் என்றும் உபயம் என்றும் மந்திர சாத்திரங்கள் கூறுகின்றன. கோணம் என்பது முக்கோணத்தையே குறித்தது.

மேல்நோக்கு முக்கோணம் சக்தி எனவும், கீழ்நோக்கு முக்கோணம் சிவம் எனவும், பொதுவில் குறிப்பிடுகின்ற வழக்கமுண்டு. சைவ ஆகமங்கள் முக்கோணத்தை தீ (அக்னி) கடவுளின் அடையாளமாகக் கூறும் ருத்ரன் என்ற அழித்தல் தொழிலைச் செய்யும் கடவுள் எனவும் குறிப்பிடுகின்றன. ஸ்ரீசக்கரத்தையும், ‘கோணம்’ என்ற வார்த்தை குறிக்கும். ஸ்ரீவித்யா வழிபாட்டில் திதி, நித்யா தேவதைகளின் இருப்பிடமாக முக்கோணங்களே குறிப்பிடப்படுகின்றன. சிற்சில மாறுபாடுகளுடன் சாத்திரங்கள் முக்கோணத்தைப் பற்றிய கருத்தை குறிப்பிட்டாலும் அனைத்து வகையிலும் சக்தி வழிபாட்டு உயர்வே இக்கோணங்கள் உணர்த்தும் தத்துவம்.  இதையே ‘சக்தி தழைக்கும் சிவமும்’ (பாடல் - 29) என்பதிலிருந்து தெளியலாம்.

- முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

(தொடரும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-08-2019

  17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • flower16

  பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

 • tightropewalker

  நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

 • 16-08-2019

  16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • delli_engottai11

  டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி : விழாக்கோலம் பூண்டது டெல்லி நகரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்