SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீயசக்திகளை நெருங்காது காக்கும் பாலியம்மன்

2018-08-31@ 10:18:46

ஒருமுறை ஜமதக்னி முனிவரின் பத்தினியான ரேணுகாதேவி, மாரியம்மன் எனும் பெயருடன் லோக சஞ்சாரம் செய்தபோது, வில்வ மரங்கள் நிறைந்திருந்த இந்த இடத்தின் இனிய சூழலால் குழந்தையைப் போல குதூகலமடைந்து சிறு பெண்ணாக மாறி ஓடியாடினாள். அப்பகுதியைச் சேர்ந்த வில்லியர்கள் எனும் வேடுவர்கள், “நீ யாரம்மா? உன் பெயர் என்ன?” என கேட்டனர். “என்னை அருகிலிருக்கும் தீர்த்தத்தினால் நீராட்டி, என்ன பெயரிட்டாலும் ஏற்றுக் கொள்வேன்” என்றாள் தேவி. அதன்படியே, தேவி சிறுமியாகக் காட்சியளித்ததால் பாலா என பெயரிட்டனர். தொடர்ந்து அன்னையின் உத்தரவுப்படி கேட்டை நட்சத்திரத்தன்று அன்னையின் திருவுருவை மண்ணினால் செய்து வழிபட ஆரம்பித்தனர். பாலா எனும் பெயர் மறுவி பாலியம்மன் என ஆயிற்று. ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் வேம்பும் அரசும் இணைந்த பிரமாண்டமான தல விருட்சத்தின் கீழ் நாகர்களும், லட்சுமி கணபதியும் தரிசனமளிக்கிறார்கள்.

அரச மரத்தில் பாலியம்மனின் சுயம்பு உருவம் தோன்றியுள்ளது, அற்புதம். விநாயகரை தரிசித்து மண்டபத்தினுள் நுழைந்தால், அம்பிகையின் கருவறை. எதிரே சூலம், பலிபீடம், சிம்ம வாகனம். கருவறையின் வலதுபுறம் சுதையினாலான அம்மனின் விக்ரகம் அருள்கிறது. கருவறையில் எலுமிச்சை, வேப்பிலை, அரளிப்பூ மாலைகளோடு, நெய்தீபமும், சாம்பிராணியும் மணக்க, அன்னை அருளாட்சி புரிகிறாள். அம்மனின் திருவுருவின் இருபுறங்களிலும் பாலியம்மன் மற்றும் இளங்காளியம்மனின் உற்சவ விக்ரகங்கள் உள்ளன. கோஷ்டங்களில் மகாலட்சுமி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, சரஸ்வதி, விஷ்ணு துர்க்கை ஆகியோர் அருள்கின்றனர். விஷ்ணு துர்க்கைக்கு ராகுகால பூஜை விசேஷமாக நடக்கிறது. தனி சந்நதியில், ஐயப்பன். அவர் கருவறையின் இரு புறங்களிலும் பாலகணபதி, பாலமுருகன். எதிரே நவகிரக நாயகர்கள்.

ஆடி மாதம் நான்காம் அல்லது ஐந்தாம் வெள்ளிக்கிழமை, ஆலயத்தில் திருவிழா களைகட்டுகிறது. விழாவுக்கு முந்தைய வெள்ளியன்று காப்புக் கட்டி தவக் கோலத்தில் அருள்கிறாள் பாலியம்மன். அடுத்த வெள்ளியன்று விழா தொடங்குகிறது. பிரமாண்டமான அக்னி குண்டத்தில் தீமிதிப்பது குறிப்பிடத் தகுந்த அம்சம். தீமிதி விழா முடிந்ததும் கட்டாயம் மழை பொழிவது இத்தலத்தில் நடந்து வரும் அதிசயம். அந்த தீமிதி விழாவில் எஞ்சிய கரித்துண்டுகளை வீட்டு வாசலில் கட்டி வைத்தால் தீயசக்திகள் நெருங்காது என்றும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது! ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அன்னையை பிரார்த்தனை செய்து அரசமரத்தில் தொட்டில் கட்டிச் சென்றால் பிள்ளை பாக்கியம் தட்டாமல் கிட்டுகிறது. மாங்கல்ய வரமும், மாங்கல்ய பலமும் பாலியம்மனை வழிபட கிட்டுகிறது என பக்தர்கள் நம்புகின்றனர். சென்னை வில்லிவாக்கத்தில் அருள்பொழிகிறாள் இந்த அன்னை.
 
ந.பரணிகுமார்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-11-2018

    21-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • bathnatural

    சர்வதேச இயற்கை மருத்துவத் தினத்தை முன்னிட்டு மணல் குளியல் விழிப்புணர்வு

  • puegovolconoerupt

    கவுதமாலாவில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியது : 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம்

  • delhiproblem

    டெல்லியில் நிலவும் பனிப்புகை மூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

  • colombiacarfestival

    கொலம்பியாவில் 29வது கார் திருவிழா : தானியங்கி வாகங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்