SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உணவைப் போலவே இறைவனையும் ஒதுக்க முடியாது!

2018-08-30@ 15:40:34

திருமூலர் திருமந்திர ரகசியம்

கண்ணதாசன், திரைப்படப் பாடல்களைக் காவியங்களாக, இலக்கியங்களாக மாற்றிய மகா மேதாவி. வசனநடையிலும் தலை சிறந்தவர். அவர் சொன்ன வாக்கு:

ஒன்றில் இருந்து ஒன்று
ஒன்றைத் தின்று ஒன்று
ஒன்றோடு ஒன்று
ஒன்றுக்குள் ஒன்று

- இதைப் பார்க்கும்போது, ‘பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் பைத்தியக்கார டாக்டருக்குப் பைத்தியம் பிடித்தால்..’ என்று ஒரு வசனம் கேள்விப்பட்டிருக்கிறோமே, அதுதான் நினைவிற்கு வரும். ஒன்று, ஒன்று எனப் பலமுறை, கண்ணதாசன் சொன்னாலும், ஒதுக்கித் தள்ளமுடியாத வாக்கு அது.  ஒன்றில் இருந்து ஒன்று - நாம் அனைவருமே, ஒரே பூமி எனப்படும் இந்த மண்ணிலிருந்து தான் உருவானோம். ஆகாயத்திலிருந்து மழைத்துளிகள் மூலமாகப் பூமிக்கு வரும் நாம், பூமியில் தோன்றிய செடி, கொடிகளில் தங்குவோம்.

அதன் பிறகு தந்தையிடம் சென்று தங்குவோம்; பிறகு தாயாரிடம் சேர்ந்து, பத்து மாதங்கள் ஆனதும் பூமியில் வந்து பிறப்போம். கறுப்பு-சிகப்பு, குட்டை-நெட்டை, ஆண்-பெண் என நமக்குள், பலவிதமான பேதங்கள் இருந்தாலும், நாம் ஒவ்வொரு வரும் இந்த பூமி எனும் ஒன்றே ஒன்றில் இருந்துதான் வந்தோம். பூமியில் பிறந்த நாம், ஏதாவது ஒன்றைத் தின்று தான் உயிர் வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது. கண்ணதாசன் சொன்ன இரண்டாவது வாக்கான, ‘ஒன்றைத் தின்று ஒன்று’ எனும் வாக்கு இதைத்தான் குறிக்கிறது.

இது போதுமா, கல்யாணம் வேண்டியிருக்கிறதே! ‘ஒன்றோடு ஒன்று’ எனும் அடுத்த வாக்கு இதைத்தான் குறிப்பிடுகிறது. இதைச் சாதாரணமாக, ‘ஹும்! எல்லாம் ஒரு கல்யாணத்தைச் செய்து வைத்தால், சரியாகப் போய் விடும்’ என்று சொல்வார்கள். அடுத்தது, ‘ஒன்றுக்குள் ஒன்று’ எனும் வாக்கு. வாழ்நாள் முடிகிறது. பூமிக்குள் புதையுண்டோ, எரிந்து சாம்பலாகி மண்ணோடு மண்ணாகவோ போய்விடுகிறோம். ஒரே பூமியில், மேலாகவோ அல்லது உள்ளாகவோ இடம் பெற்று விடுகிறோம்.

அவ்வளவுதான்! மனித வாழ்வின் பிறப்பு முதல் இறப்பு வரை, ஒரு சில சொற்களிலேயே சொல்லியிருக்கும் கண்ணதாசன் ஒரு மகாகவி என்பதில் ஏன் சந்தேகம்? பூமியிலிருந்து வந்த நாம், பூமிக்குள்ளேயே முடிந்து விடுகிறோம். இந்தப் பூமியை வைத்துத் திருமூலர், என்ன பாடம் நடத்துகிறார் எனப் பார்க்கலாம். அவர் இரண்டு விதமான பாத்திரங்களைப் பற்றிச் சொல்கிறார். மண் ஒன்று கண்டீர் இருவகைப் பாத்திரம் திண்ணென்று இருந்தது, தீவினை சேர்ந்தது விண்ணின்று நீர்விழின் மீண்டும் மண் ஆனாற் போல் எண்ணின்றி மாந்தர் இருக்கின்றவாறே (திருமந்திரம் - 143)

கருத்து: மண் ஒன்றுதான். அந்த மண்ணைப் பிசைந்து, இரண்டு பானைகள் உருவாக்கப்பட்டன. ஒன்று, சூளையில் வைத்து சுடப்பட்டு, நன்றாகக் கெட்டியாக, உறுதியாக இருக்கிறது. மற்றொரு பானையோ, சூளையில் வைத்துச் சுடப்படாமல் அப்படியே பச்சையாக இருக்கிறது. மழை பெய்தது. இரு பானைகளும் மழையில் நனைந்தன. சுடப்பட்ட பானை, எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தது. சுடப்படாத பானையோ மழை நீர் பட்டவுடன், சற்று நேரத்தில் அப்படியே கரைந்து,
மண்ணோடு மண்ணாகப் போய் விட்டது.

சுடப்பட்ட பானை, சுடப்படாத பச்சைப் பானை, மழை நீர் எனும் இம்மூன்றும் அற்புதமான உருவகங்கள். முதலில் பானையைப் பார்த்து விட்டு, அது சுடப்பட்டதா, சுடப்படாததா என்பதைப் பிறகு பார்க்கலாம். பானை என்பது நம் உடலைக் குறிக்கும். ஒப்புக் கொள்கிறோமோ, இல்லையோ, உலகிலேயே மிகவும் முக்கியமானது நம் உடம்புதான். உடம்பை அடிப்படையாக வைத்துத் தானே, அனைத்தும் நடக்கின்றன! அப்படிப்பட்ட உடம்பைப் பானையாக உருவகப்படுத்தியிருப்பது அழகு!

நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி; அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு உடைத்தாண்டி

-  என சித்தர் பாடலும் அறிவுறுத்துகிறது. மனித உடம்பு, ஏதோ போகிற போக்கில் தானாக வந்து அமைந்து விட்டது என எண்ணக்கூடாது.‘அரிது அரிது! மானிடராய்ப் பிறத்தல் அரிது!’ எனும் ஒளவையின் வாக்குப்படி, அரிதானது இந்த மானிடப் பிறவி. இதுவும் சும்மா வரவில்லை, நாலாறு மாதமாய் குயவனை வேண்டி, அதாவது பத்து மாத (4+6) காலம் இறைவனை வேண்டிப் பெற்ற பிறவி இது. அப்படிப் பெற்ற பிறவியை, வீணான செயல்களில் ஈடுபட்டு உடைத்து அழித்து விடுகிறோமாம். சித்தர் பாடலின் எச்சரிக்கை இது. பானையைப் போட்டு உடைப்பது போல, இம்மானிடப் பிறவியை வீணாக்கி விடுகிறோமாம்! திருமூலர் இதற்கு வழி சொல்கிறார்.

சுடப்பட்ட பானை, மழை நீரில் நனைந்தாலும் கரையாது. அது போல, பக்குவப்பட்ட ஆன்மா, துயரங்களில் துவண்டு போகாது உறுதியாக இருக்கும். பக்குவப்படாத ஆன்மாவோ, பச்சைப் பானை மழைநீரில் கரைந்து வீணாவதைப் போல, இன்ப, துன்பங்களில் சிக்கி வீணாகப் போய்விடும் என்று எச்சரிக்கிறார். அது மட்டுமல்ல, தெய்வ சிந்தனையே இல்லாமல், நல்லனவற்றில் செயல்படாமல் இருக்கிறார்களே இவர்கள் என வருந்தவும் செய்கிறார். இவ்வாறு வருத்தப்படுபவர், நாம் செயல்படாமல் இருப்பதைச் சொன்ன திருமூலர், நாம் செயல்படவேண்டியதைப் பற்றியும் சொல்கிறார். எதில் செயல்படுகிறோம் என்பதை விவரிக்கிறார்.

கற்குழி தூரக் கனகமும் தேடுவர்
அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது
அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்த பின்
அக்குழி தூரும் அழுக்கற்றவாறே
(திருமந்திரம் - 211)

கருத்து: வயிறானது வலிமையான குழி. பசியை அடக்க, அந்தக் குழிக்குள் போட்டு அடைக்கிறோம். அந்தக் குழியை நிரப்பி முடித்து விடுவோம் என்பது, யாராலும் முடியாத செயல். அந்தக் குழியைத் தூர்ந்து போகச் செய்யும் இறைவனை நினைந்து துதியுங்கள். பிறவிக்குக் காரணமான வினைகள் நீங்கும், அக்குழி அடைபடும். வயிற்றைச் சொல்லி வாட்டும் காரணத்தை விவரிக்கிறார் இப்பாடலில். வயிற்றை, ‘கற்குழி’ எனத் திருமூலர் கூறியிருப்பது, அபூர்வமான சொற்பிரயோகம்.

இங்கே ‘கற்குழி’ என்பது வலிமையைக் குறிக்கும். எவ்வளவு போட்டாலும் அவற்றையெல்லாம் அப்படியே ஜீரணித்து விடுகிறது வயிறு. அப்படியென்றால் அந்த வயிறு எவ்வளவு வலிமை வாய்ந்ததாக இருக்க வேண்டும்! நேரந்தோறும் நாள்தோறும் போட்டுக் கொண்டேயிருந்தாலும், அது ஒன்றும் நிரம்புவதாக இல்லை. இதை நகைச்சுவையாகக் கூறுகிறார் ஒளவை: ‘‘ஊஹும்! உன் கூட வாழ்வது மிக மிகக் கடினம்’’ என்று ஏசவேறு செய்கிறார்.

ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏலென்றால் ஏலாய் ஒரு நாளும்
என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது. (நல்வழி)

‘‘ஒரு நாளைக்கு உணவில்லாமல் இரு என்றால், கேட்க மாட்டேன் என்கிறாய். சரி! கிடைக்கிற இடத்திலாவது இரண்டு மூன்று நாட்களுக்குச் சேர்ந்தாற்போல் அழுத்தமாக உணவைப் பிடித்து வைத்துக் கொள் என்றால், அதுவும் முடியாது என்கிறாய். என் கஷ்டத்தைப் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாயே! துன்பம் மிகுந்த என் வயிறே, ஊஹும், உன்னோடு வாழ்வது மிக மிகக் கடினம்!’’ அப்படிப்பட்ட வயிற்றை இட்டு நிரப்ப யாராலும் ஆகாது. அத்துயரில் இருந்து விடுபடுவதை அறிந்து கொண்டால், வயிற்றால் வரக்கூடிய துயர் இருக்காது.

இது எப்படி? ‘தெய்வத்தை உணருங்கள், தெய்வத்தை அறியுங்கள், நல்வழியில் செயல்படுங்கள். இருள் சேர் இரு வினைகளான நல்வினை, தீவினை என்பவை இல்லாமல் போய்விடும். பிறவி என்பதே இருக்காது. (பிறவி என்பதே இல்லாதபோது, வயிற்றால் வரக்கூடிய தொல்லை ஏது?)’ என வயிற்றை வைத்துப் பாடம் நடத்துகிறார் திருமூலர். ‘‘எப்படி உணவை ஒதுக்கி விட்டு வாழ முடியாதோ, அதேபோல, இறைவனை ஒதுக்கி விட்டும் வாழ முடியாது.

தெய்வத்தை உணருங்கள்! நல்லவற்றைச் செய்யுங்கள்!’’ எனக் குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பது போல் சொல்லிக் கொடுக்கிறார். இதைத்தான் நம் காலத்திய இருமூர்த்திகளான ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளும், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளும் கையெழுத்து (Autograph) இட்டுக் கொடுக்கும்போது, ‘இரை தேடுவதுடன் இறையையும் தேடு!’ என எழுதி, கையெழுத்து இட்டுக் கொடுத்தார்கள். இரை தேடுவதை நம்மால் நிறுத்த முடியாது. அதே முயற்சியுடன் இறையையும் தேடுவோம்! இன்னல்கள் நீங்கட்டும்!

- பி.என்.பரசுராமன்

(மந்திரம் ஒலிக்கும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்