SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெற்றிமேல் வெற்றியருளும் அழிவிடைதாங்கி பைரவர்

2018-08-30@ 09:40:24

சிவாலயங்களின் காவலர் பைரவ மூர்த்திதான். நாயை வாகனமாகக் கொண்டவர். சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில், இந்த வடிவமும் ஒன்று. ‘பீரு’ என்ற வேர்ச்சொல்லில் இருந்து உருவானது ‘பைரவர்’ என்ற திருநாமம். பீரு என்றால் பயம். பயம் தரக்கூடியவர்; எதிரிகளை அஞ்ச வைப்பவர் இந்த பைரவர். காசியில் கால பைரவர், காரைக்குடி அருகில் உள்ள இலுப்பைக்குடியில் ஸ்வர்ணா கர்ஷண பைரவர், சீர்காழியில் சட்டைநாதர், ஸ்ரீவாஞ்சியத்தில் யோக பைரவர் என்று, பல பெயர்களைக் கொண்டு விளங்குகிறார் இவர். இவருக்கு தனிச்சிறப்பு வாய்ந்த தலம் பைரவபுரம்! இதை ‘அழிவிடைதாங்கி பைரவபுரம்’ என்றும் சொல்வர். இத்தலத்தில் பைரவரின் எட்டு திருக்கோலங்களையும் சுதை வடிவில் தரிசிக்கிறோம்.

அன்ன வாகனத்துடன் கூடிய பிராம்மி சக்தியுடன் அசிதாங்க பைரவர்; ரிஷப வாகன மகேஸ்வரியுடன் ருரு பைரவர்; மயில் வாகன கௌமாரியுடன் சண்ட பைரவர்; கருட வாகன வைஷ்ணவியுடன் குரோதன பைரவர்; குதிரை வாகன வாராஹியுடன் உன்மத்த பைரவர்; யானை வாகன இந்திராணியுடன் கபால பைரவர்; சிம்ம வாகன சாமுண்டியுடன் பீஷண பைரவர்; நாய் வாகன சண்டிகையுடன் சம்ஹார பைரவர் என அஷ்ட பைரவ அணியை இங்கு காண்கிறோம்.
ஸ்ரீ சொர்ணகால பைரவர், கொடிமரம், பலிபீடம், நந்தி என்று, ஆலயத்துக்குரிய முழு அமைப்புடன் அமைந்திருக்கிறது திருக்கோயில். ஆணவம் கொண்ட பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்து, நான் முகனாக ஆக்கினார் பைரவர். அந்த பிரம்மா வழிபட்ட தலம் இந்த ‘பைரவ புரம்’ என்கிறார்கள்.

நான்கு திருக்கரங்களில் சூலம், உடுக்கை, கத்தி, கபாலம் ஆகியவற்றை தரித்தவராக மூன்று கண்ணினராக தரிசனம் அளிக்கிறார் சொர்ணகால பைரவர்!
அந்தகாசுரன் என்ற அசுரனிடம் இருந்து தேவர்களை காக்கும் பொருட்டு எம்பெருமான், தனது நெற்றிக் கண்ணில் இருந்து கால பைரவரை தோற்றுவித்தார். அந்தகாசுரன் என்ற அசுரன், ஈசனை நினைத்து கடும் தவம் இருந்தான். அந்த தவத்தின் பயனாக, சிவபெருமானிடம் இருந்து மூவுலகங்களையும் ஆட்சி செய்யும் வரம் பெற்றான். வரம் பெற்றதும் தேவர்களை துன்புறுத்தத் தொடங்கினான். இதனால் அவதியுற்ற தேவர்கள் ஈசனிடம் சரணடைந்தனர்.தேவர்களின் மீது கருணை கூர்ந்த ஈசன், தனது நெற்றிக் கண்ணில் இருந்து காலபைரவரை தோற்றுவித்தார். அவரிடமிருந்து அஷ்டபைரவர்களும், 64 பைரவர்களும் தோன்றி அந்தகாசுரனை அழித்தனர். அந்தகன் உயிர் பிரியும்போது பசியால் துடித்தான்.

உடனே பைரவர் அங்கு விளைந்திருந்த பூசணிக்காயை பறித்து அவனுக்கு உணவாக கொடுத்தார். அப்போது அவன், பைரவரிடம், ‘எந்த பூஜை, நற்செயல்கள் நடந்தாலும் எனக்கும் மரியாதை செய்யப்படவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டான். அதன்படியே இன்றும் விழாக்களின் போது அந்தகாசுரனை திருப்தி செய்ய பூசணிக்காய் உடைக்கப்படுகிறது. இதேபோல அந்தகாசுரனை அழித்தபோது பெருகிய ரத்தத்தை பருக பைரவர் ஒரு பூதத்தை தோற்றுவித்தார். அதனை பருகிய பூதம், ‘தனக்கும் உலகில் மரியாதை வேண்டும்’ என கேட்க பைரவரும் அவ்வாறே அருளினார். அப்பூதமே ‘வாஸ்துபுருஷன்’ ஆவார். பழங்காலத்தில் தொண்டை மண்டலம் என்ற காடுகளை திருத்தி நாடாக்கி அதனை பெளத்த மன்னர்கள் ஆண்டு வந்தனர். கி.பி.3 ஆம் நூற்றாண்டில் இங்கு கல்விக்கூடம் சிறப்பாக இயங்கி வந்தது. வட இந்திய மாணவர்கள் இங்கு கல்வி பயின்றனர். ஹிமசீதன மன்னர் அசுலங்கர் என்ற சமண அறிஞர் பொளத்தர்களை வாதிட்டு வென்று அவர்களை நாடு கடத்தினார். பின்னர் இங்கு சமணக் கல்வி கூடத்தை அமைத்தார்.

அப்போது இந்த ஊர் அறவழித்தாங்கி என அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் இந்த பகுதியை பல்லவர்களும் சோழர்களும் ஆட்சி செய்த போது ஈசனைப் போற்றும் சைவ நெறியானது வளம் பெற்றது. சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் {கி.பி.14ஆம் நூற்றாண்டில்} வீர சம்புவராயன் என்ற மன்னர் இங்கு கோட்டையைக் கட்டி ஆட்சி செய்து வந்தான். அப்போது வடக்கே இருந்து யாதவராயன் என்ற மன்னன் படையெடுத்து வந்தான் இருவருக்கும் இடையே பெரும்போர் மூண்டது. முதல் நாள் நடந்த போரில் சம்புவராயன் படைகள் நாசமடைவதைக் கண்டு வருந்தினர். அன்று இரவு கால பைரவர் அவரது கனவில் தோன்றி நீ வருத்தப்பட வேண்டாம் நாளைய போரில் நீ வெற்றி பெற நான் உறுதுணையாயிருப்பேன் என்றார். அடுத்த நாள் போரில் சம்புவராயன் பெரும் வெற்றி பெற்றான் அழிந்துபோன தனது படையையும், பட்டணத்தையும் இறைவன் காப்பாற்றியதால் இவ்வூரை அழிபடைதாங்கி என பெயரிட்டார்.

இந்த வெற்றியை அருளிய ஸ்ரீ சொர்ணகாலபைரவருக்கு பெரியதொரு கோயிலையும் எழுப்பினார். இக்கோயிலின் மகிமையானது திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் ஆலய தலபுராணத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்ரீபைரவப் பெருமான் அனைவரது வாழ்க்கைக்கும் துணை நிற்கிறார். சுமார் 500 வருடங்கள் பழைமையான திருக்கோயில். இத்திருக்கோயில் பைரவர் தெற்கு நோக்கி காட்சி தந்து, ஸ்வான வாகனத்தோடு கிழக்கு நோக்கி தனிக் கோயிலாக அருட்பாலிக்கிறார், பொதுவாக பைரவரின் வாகனம் மேற்கு நோக்கி இருக்கும். காசியிலிருக்கும் ஸ்ரீ கால பைரவருக்கு நிகரான தலம் இது. ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமையுடையது.வாஸ்து பகவானுக்கு பைரவர் குரு என்பதால் நிலம் சம்மந்தப்பட்ட பிரச்னைகள் விலகும். சனி பகவானுக்கு குரு என்பதால் சனி பகவான் தொல்லையிலிருந்து விடுபடலாம். காஞ்சிபுரத்தில் இருந்து வெம்பாக்கம் வழியாக அழிவிடைதாங்கி வந்தடையலாம், வெம்பாக்கத்திலிருந்து ஷேர் ஆட்டோ மூலமாகவும் வரலாம்.
 
ந.பரணிகுமார்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-04-2019

  26-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • srilanka_chri11

  கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்

 • india_medals11

  ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்!!

 • pudin_russiaa1

  வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை

 • shadow_111

  பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்