SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனம்போல் மாங்கல்யம் அருளும் மெலட்டூர் விநாயகர்!

2018-08-29@ 09:38:35

தஞ்சாவூர், திருக்கருகாவூர் வழியில் 18வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது தலம் மெலட்டூர் என்கிற உன்னதபுரம். பாகவத மேளாக்களுக்குப் பெயர் பெற்ற ஊராக விளங்குவதால், மேளத்தூர் எனும் பெயர் பெற்றது. அப் பெயர் நாளடைவில் திரிந்து மெலட்டூர் என்றானது. இந்தத் தலத்தில் அமைந்திருக்கும் ஸித்திபுத்தி சமேத தட்சிணாமூர்த்தி கோயிலானது, கர்க்க மஹரிஷியின் ஞான புராணத்தில் இடம் பெற்றிருக்கும் 108 கணபதி தலங்களில் 81வதாகும். குரு பரிகாரத் தலமான தென்குடி திட்டைக்கு அருகில் அமைந்திருக்கும் இந்தத் தலத்தின் மூர்த்திக்கு தட்சிணாமூர்த்தி விநாயகர் என்ற பெயர் வந்ததன் காரணம் சுவையானது. 1899ம் ஆண்டு உத்தரவாஹினியாக பாயும் காவிரியில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் மிதந்தபடி வந்தவர்தான் இந்தக் கோயிலில் அருள்புரியும் கணபதி. அதனால், இவருக்கு ‘மிதந்தீஸ்வரர்’ என்றும் ஒரு திருப்பெயர் உண்டு!

தெற்குதிசை பார்த்தபடி கரை ஒதுங்கிய கணபதி விக்கிரகத்தை கண்டெடுத்த அன்பர் ஒருவர், அவருக்குக் கோயில் கட்டி பிரதிஷ்டை செய்தார். விநாயகரின் இந்தத் திருமேனி சுயம்புவாகத் தோன்றியதாகக் கூறுகின்றனர். இவர் கழுத்தைச் சுற்றி ருத்ராட்ச மாலை ஒன்று அணி செய்கிறது. தெற்கு நோக்கி அமைந்துள்ள கோபுர வாயிலைப் பார்த்தபடி தட்சிணாமூர்த்தியாக வீற்றிருக்கிறார் இந்த ஸித்திபுத்தி சமேத விநாயகர். தெற்கு பார்த்து அருள்வதால் இவருக்கு தட்சிணாமூர்த்தி விநாயகர் என்ற திருப்பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விநாயகரின் தனிக் கோயிலாகவே இருந்தாலும் சிவாலயம் போலவே நிர்மாணிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிவாலயத்தில் நடராஜப் பெருமான் இடம் பெற்றிருப்பார்; இந்தக் கோயிலில் நர்த்தன கணபதி அருள் புரிகின்றார்! அஸ்திர தேவரைப் போலவே சூலாயுதம் தாங்கிய சூலத்துறை கணபதியும் தரிசனம் அருள்கிறார். இவர்களுடன் ஸித்திபுத்தி சமேதராக, செப்புத் திருமேனியில் சிரித்தவண்ணம் காட்சியளிக்கிறார், ஸ்ரீதட்சிணாமூர்த்தி விநாயகர்.

மூலவர் சக்தி சமேதராய் இருந்தபோதிலும், ஸித்தி புத்தி தேவியர்கள் சிலா ரூபமாக அல்லாமல் மூலவரின் பீடத்திலேயே மந்திர ஸ்வரூபத்தில் பிரதிஷ்டிக்கப்பட்டுள்ளனர் என்பது தனிச்சிறப்பு. சிவசொரூபமாகவே விநாயகர் வீற்றிருப்பதால், வேறெந்த ஆலயத்திலும் காண முடியாத வண்ணம், விநாயகப் பெருமானின் சந்நதிக்கு, இடப்புறத்தில் யோக நிஷ்டையில் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார் ஸ்ரீகும்ப சண்டிகேஸ்வரர். திருமணம் தடைபட்டு வருத்தமுற்றிருக்கும் பக்தர்கள் இந்தத் தலத்துக்கு வந்து தட்சிணாமூர்த்தி விநாயகரிடம் வேண்டிக் கொண்டால், உடனே திருமணம் நடைபெறுவதாக நம்பிக்கையுடன் கூறுகின்றனர். அதேபோல் தம்பதியரிடையே கருத்து வேற்றுமை, குழந்தை பாக்கியம் இல்லாமை போன்ற பல பிரச்னைகளையும் போக்கி மகிழ்ச்சியைத் தரும் வரப்பிரசாதி, இந்த தட்சிணாமூர்த்தி விநாயகர்.

வெள்ளெருக்கம் பூவை ஓரிரவு முழுவதும் பாலில் போட்டு ஊறவைத்து, மறுநாள் அந்தப் பூவை விநாயகப் பெருமானுக்குச் சாத்தி வழி படுவது, திருமண பாக்கியத்தைத் துரிதப்படுத்தும் என்கின்றனர் சான்றோர். அதே போல் ‘அமராரவம்’ எனப்படும் நாயுருவிச் செடியின் மலரும், சுமுக மலரும் இந்த கணேசப் பெருமானுக்கு மிகவும் உகந்தவை என்கிறார்கள். திருமண வரம் வேண்டி வருவோர்க்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டு, மஞ்சள் பிரசாதமாக வழங்கப்படுகிறது. மேலும், பூஜிக்கப்பட்ட மஞ்சள் கயிற்றை, திருமண வரம் வேண்டும் பக்தர்களின் கையில் ஒரு கங்கணம் போல் கட்டுகின்றனர். அவ்வாறு கட்டப்பட்ட நாளிலிருந்து, ஒரு மண்டலத்துக்குள் திருமணம் கைகூடி வருகிறதாம்! ஒவ்வொரு ஆண்டும், ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தியையொட்டி, பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. . இந்த வருடம் 3:9:2018 முதல் 13:9:2018 வரை நடைபெறவுள்ளது.

குறிப்பாக ஐந்தாம் திருநாள், ஏழாம் திருநாள் மற்றும் ஒன்பதாம் திருநாள் ஆகியவை வெகு சிறப்பாக கொண்டாடப் படுவதாக கூறுகின்றனர்.ஐந்தாம் திருநாளன்று ‘ஆத்ம பூஜை’ கோலத்தில், தன்னைத்தானே விநாயகப் பெருமான் பூஜித்துக் கொள்ளும் திருக்காட்சி அரங்கேறுகிறது. ஏழாம் நாளான 10:9:2018, திங்கட் கிழமையன்று காலை 9 மணிக்கு மேல்  10:30க்குள்    விநாயகருக்கு ஸித்தி புத்தியோடு திருக்கல்யாண வைபவம் நடைபெறும். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து இதற்கு பக்தர்கள் வந்தவண்ணம் இருப்பார்கள். ஒன்பதாம் நாள் கணேசப் பெருமானின் திருத்தேர் பவனி அரங்கேறுகிறது. சுவாமியின் வீதியுலா ஏழு சுற்றுகளைக் கொண்டதாய் அமைந்திருக்கிறது. அவை முறையே, மங்கல இசை முழங்க இரு சுற்றுகள், வேத பாராயணத்தோடு இரு சுற்றுகள், சங்கீத முழக்கத்தோடு ஒரு சுற்று, மௌன நிலையில் ஒரு சுற்று, இவை அத்தனையும் சேர்ந்த ஸமஷ்டி கோஷத்தோடு ஏழாம் சுற்று என நிறைவுறுகிறது.

பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளில் ‘விருத்த காவேரி’யில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி விநாயகருக்குத் தீர்த்தவாரி வைபவமும் நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் திறந்திருக்கும். கோயில் பற்றி மேலும் தகவல் தெரிந்துகொள்ள 9994367113, 9844096444 ஆகிய தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொள்ளலாம். தஞ்சாவூரிலிருந்து திருக்கருகாவூர் செல்லும் வழியில், 18 கிலோமீட்டர் தொலைவில் திட்டையை அடுத்து அமைந்துள்ளது மெலட்டூர். தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதிகள் உண்டு.
 
எஸ்.குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Chandrayaan2Isro22

  இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

 • DornierAircraftNavy

  இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

 • SicilyMountEtna22

  சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

 • IcelandPilotWhale

  ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

 • RainInChennai227

  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்