SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அம்பிகையின் அருளிருந்தால் அசைக்க முடியாது!

2018-08-28@ 15:28:43

இப்பவும் எனக்கு இரண்டாவது முறையாக விபத்து ஏற்பட்டு ஆப்ரேஷன் செய்து, சிகிச்சை பெற்று, ஊர் விட்டு ஊர் வந்து உறவினர் வீட்டில் குடும்பத்துடன் தங்கியுள்ளேன். எனக்கு ஒரு நிரந்தரமான வேலை அமைவதற்கும், என் குடும்பம் முன்னேறுவதற்கும் நல்லதொரு தீர்வு சொல்லுங்கள். சக்திவேல், தர்மபுரி.

ஐம்பத்தி ஐந்து வயதான நிலையில் வேலை உள்ளூரிலா, வெளியூரிலா, பழைய வேலை கிடைக்குமா, புதிதாக வேலை தேட வேண்டுமா என்று கேட்டிருக்கிறீர்கள்.   புனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசியில் பிறந்திருக்கும் நீங்கள் இந்தவயதிற்கு மேல் அடுத்தவர்களிடம் வேலை தேடுவதைவிட தெரிந்த தொழிலை சொந்தமாகச் செய்யலாம். மிதுன ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களின் விருப்பம் அறிந்து செயல்படக் கூடியவர்கள் என்பதால் சுயதொழில் என்பது கை கொடுக்கும். மிகச்சிறிய அளவிலான முதலீட்டுடன் சொந்தமாக தொழில் தொடங்க முயற்சி செய்யுங்கள். பன்னிரண்டு வயதாகும் உங்கள் மகனின் ஜாதகபலம் மிகவும் சிறப்பாக உள்ளது. உத்திரம் நட்சத்திரம், கன்னி ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகபலத்தின்படி தற்போது செவ்வாய் தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது.

நீங்கள் செய்யப்போகும் சிறுதொழிலை உங்கள் மகன் பெரியதாக மாற்றி தொழிலதிபராக உருவெடுப்பார். நீங்கள் பழைய வேலைக்கோ, அல்லது புதிய இடத்தில் வேறு வேலைக்கோ முயற்சிக்காமல் உங்களுக்குத் தெரிந்த தொழிலை கையில் எடுத்துச் செய்ய முயற்சியுங்கள். நீங்கள்வசிக்கும் ஊரிலிருந்து வடக்கு திசையில் அதாவது பெங்களூரு போன்ற ஊரில் உங்களுக்கான தொழில் கைகொடுக்கும். தினமும் காலையில் அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வணங்கிவிட்டு உங்கள் முயற்சியைத் துவக்குங்கள். உங்கள் மகனின் 19வது வயது முதல் குடும்பம் வளர்ச்சிப் பாதையில் செல்லக் காண்பீர்கள்.

என் மகனுக்கு காலில் ஏதோ ஒரு நரம்பு பழுதாகி விட்டதால் வலியால் மிகவும் அவதிப்படுகிறான். வலியால் உண்டாகும் மன உளைச்சலால் அதிக கோபம் வருகிறது. வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவரால் தற்போது வேலைக்கும் செல்ல இயலவில்லை. கால்வலி பூரணமாக குணமடையவும், அவர் மீண்டும் வேலைக்குச் செல்லவும் தகுந்த பரிகாரம் கூறுங்கள். சித்ரா, சென்னை.

சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள்மகனின் ஜாதகத்தின்படி தற்போது சனிதசையில் கேது புக்தி நடந்து வருகிறது. தற்போது 12.09.2018 முதல் நல்ல நேரம் என்பது துவங்க உள்ளதால் உங்கள் மகனை மீண்டும் வேலைக்கு முயற்சி செய்யச் சொல்லுங்கள். வெளிநாட்டு உத்யோகம்தான் பார்க்க வேண்டும் என்பதில்லை, வெளியூருக்குச் சென்றும் வேலை பார்க்கலாம்.மும்பை முதலான பெருநகரங்களில் அவரால் தனக்கான உத்யோகத்தை தேடிக் கொள்ள இயலும். நல்ல நேரம் துவங்க உள்ளதால் தற்போதிருக்கும் கால்வலி கொஞ்சம், கொஞ்சமாக சரியாகிவிடும்.

சிம்மலக்னத்தில் பிறந்திருக்கும் அவரிடம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தைரியமாக எழுந்து நடக்கச் சொல்லுங்கள். வலியைப் பொறுத்துக்கொண்டு வேலை பார்க்கச் சொல்லி அறிவுறுத்துங்கள். வலியைத் துச்சமாக எண்ணிச் செயல்பட்டால் மலையையும் சாய்க்க அவரால் முடியும். அவருடைய கால்வலி தீர்ந்ததும் திருப்பதி ஏழுமலையானை பாதயாத்திரையாக வந்து தரிசிப்பதாக பிரார்த்தனை செய்யச் சொல்லுங்கள். துளசித் தைலம் வாங்கி இரவில் படுப்பதற்கு முன்பு வலி இருக்கும் இடத்தில் தடவிக் கொள்வது நல்லது. கீழேயுள்ள ஸ்லோகத்தைச் சொல்லி பெருமாளை வணங்கிவர அவரது அல்லல் தீரும்.

“அபிராம குணாகரதாசரதேஜகதேக தநுர்தரதீரமதே
 ரகுநாயகராமரமேசவிபோ வரதோ பலதேவதயாஜலதே.”


2014ல் திருமணமாகி ஒரு பெண் குழந்தையும், ஆண் குழந்தையும் பிறந்தது. ஆண்குழந்தை பிறந்து ஒன்றேகால் வயதில் திடீரென இறந்து விட்டான். காரணம் தெரியவில்லை. திருமணமான நாள் முதலாக என் கணவரும், அவரது பெற்றோரும் என் தாய் வீட்டிற்கு செல்லக் கூடாது, போனில் பேசக்கூடாது என்று பிரச்னை செய்கின்றனர். நகைபிரச்னையும் ஒரு காரணம். கணவரின் குணம் மாறுமா? செய்ய வேண்டிய பரிகாரம் என்ன? சென்னை வாசகி.

சித்திரை நட்சத்திரம், துலாம் ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது குருதசையில் சூரிய புக்தி நடந்து வருகிறது. உங்கள் கணவருக்கும் உங்களுக்கும் ஆறுமாத காலமே வயது வித்தியாசம் என்பது உள்ளது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அவருடைய பிறந்த தேதியின்படி அவர் சிம்ம ராசியில் பிறந்தவர் அல்ல. பெயரின் முதல் எழுத்தினை வைத்து சிம்மராசி என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். உண்மையில் உங்களுடைய ஜாதகம் மிகவும் வலிமை வாய்ந்தது. விவாகரத்து தந்து விடுவேன் என்று அவர் சொல்வது வெறும் வாய்வார்த்தையே. உங்களை விட்டால் அவருக்கு வேறு வழி கிடையாது.

தைரியமாக எதிர்த்து நில்லுங்கள். தாலி கட்டிய மனைவியை பிறந்த வீட்டிலிருந்து மேலும் மேலும் நகைவாங்கி வா என்று சொல்வது கணவனுக்கு அழகல்ல. உங்கள் வாழ்விற்கான வளர்ச்சியும், மனநிம்மதியும் உங்கள் கையில்தான் உள்ளது. குட்ட குட்ட குனிந்து கொண்டிருந்தால் போவோர் வருவோர் எல்லோரும் ஏறி மிதித்துக் கொண்டுதான் இருப்பார்கள். தைரியமாக எதிர்த்து நில்லுங்கள். உங்கள் ஜாதக பலத்தின்படி தற்போது நல்ல நேரமே நடந்து கொண்டிருக்கிறது. ஞாயிறு தோறும் ராகு கால வேளையில் அருகிலுள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றிவழிபட்டு வருவதை வழக்கத்தில் கொள்ளுங்கள். அம்பிகையின் அருள் பெற்ற உங்களை யாராலும் அசைக்க முடியாது.

என் வீட்டில் முதல் மாடி போர்ஷன் கடந்த ஒரு வருட காலமாக காலியாகவே உள்ளது. எப்போதும் ஒருவர் காலி செய்தால் மற்றொருவர் வாடகைக்கு வந்து விடுவார்கள். தற்போது வீடு பார்க்க வருபவர்கள் நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார்கள், ஆனால் மறுபடியும் வருவதில்லை. இந்நிலை மாற ஒருவழி சொல்லுங்கள். அருண் பிரஷாந்த், பெங்களூரு.

மூலம் நட்சத்திரம், தனுசு ராசி, மகரலக்னத்தில் பிறந்திருக்கும் உங்களுடையஜாதகக் கணக்கின்படி தற்போது சந்திரதசையில் சனி புக்தி என்பது நடந்து கொண்டிருக்கிறது. ஜென்மச் சனியும் உடன் இணைந்திருப்பதால் தற்போது நேரம் சற்று சுமாராகத்தான் உள்ளது. கடந்த ஓராண்டு காலமாக வாடகைக்கு யாரும் வராமல் இருப்பதுகூட நல்லதுதான், கடவுள் நமக்கு நன்மையைத்தான் செய்திருக்கிறார் என்று எண்ணிக் கொள்ளுங்கள். உங்கள் ஜாதக பலத்தின்படி 20.01.2019க்குமேல் வாடகைக்கு வருபவர்களால் நீங்கள் நன்மை அடைவீர்கள்.

வீட்டில் எந்தவிதமான குறையும் இல்லை. வருகின்ற செவ்வாய் கிழமைநாளில் அருகிலுள்ள தேவாலயத்திற்குச் சென்று பிரார்த்தனையில் ஈடுபடுங்கள். கல்விக்கட்டணம் செலுத்த வழியில்லாமல் இறைவனிடம் பிரார்த்தனையைச் சொல்ல வந்திருக்கும் ஏழைமாணவனை சந்திப்பீர்கள். நீங்கள் ஒரு மாதவாடகையாக நிர்ணயித்திருக்கும் தொகையை பாதிரியாரின் துணையுடன் அந்தப் பிள்ளைக்கு நன்கொடையாகத் தாருங்கள். உங்கள் மனக்குறை தீர்ந்துவிடும்.

சமையல் வேலை செய்து வரும் எனக்கு 53 வயதாகிறது.இதுவரை தொழிலில் முன்னேற்றம் கிடைக்கவில்லை. எனக்குக் கீழே வேலை செய்தவர்கள் நல்ல ஒப்பந்தங்கள் கிடைத்து நல்லபடியாக தொழில் செய்கிறார்கள். ஏழரைச்சனி முடிந்தும் எனக்கு முன்னேற்றம் இல்லை. நல்ல பரிகாரம் சொல்லுங்கள். கெஜேந்திரன், பாண்டி.

விசாகம் நட்சத்திரம், துலாம்ராசி, கும்பலக்னத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு தற்போது சுக்ரதசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது.உங்கள் ஜாதகத்தில் தசாநாதன் சுக்கிரன் 11ல் அமர்ந்திருப்பது சாதகமான அம்சமே. கடும் உழைப்பாளியான நீங்கள் முன்னேறுவது உங்கள் கைகளில்தான் உள்ளது. சமையல் தொழிலில் உங்களுக்கென்று தனித்துவம் வாய்ந்த கைப்பக்குவம் என்பது உண்டு. உங்களைத் தேடியும் ஒப்பந்தங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அனுசரித்துச் செல்லும் குணத்தினை வளர்த்துக் கொள்ளுங்கள். நான்காம் வீட்டில் நீசபலம் பெற்றிருக்கும் ராகு உங்கள்நற்குணத்தை சோதித்துப் பார்ப்பார். மது, மாது, சூது ஆகிய மூன்றும் உங்களைச் சீண்டிப் பார்க்கும். எந்தக் காலத்திலும் இவற்றை சட்டை செய்யவே கூடாது.

உங்களிடம் இருக்கும் பணியாளர்கள் செய்யும் தவறுகூட உங்கள் நற்பெயருக்கு களங்கத்தை உண்டாக்கிவிடும். தற்போது நடந்து வரும் தசாபுக்தி காலம் என்பது உங்கள் உழைப்பிற்கு சாதகமாகவே அமைந்துள்ளது. 68 வயதுவரை உங்களுடைய சம்பாத்யம் என்பது சிறப்பாக இருந்து வரும். 2033ம் ஆண்டிற்குப் பிறகுதான் நீங்கள் ஓய்வைப்பற்றி சிந்திக்க இயலும். அதுவரை தனலாபம் என்பதும் தொடர்ந்து கொண்டே இருக்கும். உங்கள் உழைப்பை காசாக்கும் வித்தையை சரிவரப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமைதோறும் மணக்குள விநாயகர் ஆலயத்தில் காலை ஆறு மணிக்கு மேல் ஏழுமணிக்குள்ளாக சுக்கிர ஹோரையில் வெண்பொங்கல்லை நிவேதனம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்து வாருங்கள். சொத்து சுகம் சேரும்.

கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் என் மகள் 11ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து ஒரு பையனிடம் பேசிப்பழகி வருகிறாள். எத்தனை முறை அறிவுரை கூறியும் கேட்பதில்லை. அந்தப் பையனைப்பற்றி நாங்கள் கேள்விப்பட்டது எதுவுமே சரியில்லை. எங்கள் பெண்ணை அந்தக் கயவனிடமிருந்து மீட்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்?கோவை வாசகி.

ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது ராகுதசையில் புதன் புக்தி துவங்கி உள்ளது.அவருடைய ஜாதகத்தை ஆராயும்போது உங்களுடைய பயம் நியாயமானதாகவே தோன்றுகிறது. காதல் திருமணம் என்பது அவருக்கு நல்வாழ்வினை உண்டாக்கித் தராது. மேலும் 25 வயது வரை அவரைப் பாதுகாக்க வேண்டிய கடமையும் பெற்றோராகிய உங்களுக்கு இருக்கிறது. தற்போது இளங்கலை படிப்பு முடிந்ததும் மேற்படிப்பிற்கு வெளியூருக்கு அனுப்புங்கள்.

இந்த பையனுக்கு பயந்து அவசரப்பட்டு உங்கள் மகளுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்காதீர்கள். மேற்படிப்பு முடித்து உங்கள்மகள் வேலைக்குச் செல்வது என்பது அவரது எதிர்காலத்திற்கு நல்லது. 25வது வயதில் அவருக்கு திருமணம் செய்து வைத்தால் போதும். பிரதி ஞாயிறுதோறும் ராகு கால வேளையில் பூஜைஅறையில் சரபேஸ்வரர் படத்தை வைத்து கீழ்க்கண்டஸ்லோகத்தை 18 முறை சொல்லி வணங்கி வாருங்கள்.உங்கள் மகளின் நடவடிக்கையில் மாற்றத்தைக் காண்பீர்கள்.

“ஜ்வலந குடில கேசம் ஸூர்ய சந்தராக்நி நேத்ரம்
நிசிதகரநகாக்ரம் தூத ஹேமாத்ரி தேஹம்
சரபமத முனீந்த்ரை: ஸேவ்யமாநம் ஸிதாங்கம்
ப்ரணதபயவிநாசம் பாவயேத் பக்ஷிராஜம்.”


28 வயதாகும் என் மகளுக்கு தோல் நோய் (சொரியாஸிஸ்) வந்துள்ளதால் அவள் திருமணம் செய்து கொள்ள பயப்படுகிறாள். அவளது நோய் குணமாகவும், திருமணம் தடை இன்றி நடக்கவும் நல்லதொரு பரிகாரம் கூறுங்கள். சாந்தி, திருவள்ளூர்.

உங்களைப் போன்றே இன்னும்  சிலவாசகர்கள் இதே பிரச்சினையால் தங்கள் பிள்ளைகளும் திருமணத் தடை கண்டு வருவதாக கடிதம் எழுதிஉள்ளார்கள். சொரியாஸிஸ் முதலான தோல் நோய் பிரச்னைக்கு ராகு அல்லது கேதுதான் முக்கியகாரணகர்த்தாக்களாக இருப்பார்கள். உங்கள் மகளின் ஜாதகத்திலும் ஜென்ம லக்னத்தில் கேது இணைந்திருக்கிறார். புனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசி (கடக ராசி என்று எழுதியுள்ளீர்கள்), கடக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள்மகளின் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. இவரது ஜாதகத்தில் கணவரைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதும், ஏழாம் வீட்டிற்கு அதிபதிசனி ஆறில் அமர்ந்திருப்பதும் திருமணத்தைப் பற்றிய அச்சத்தை உண்டாக்கி இருக்கிறது.

தற்போது நடந்து வரும் நேரம் நன்றாகஉள்ளதால் இந்த நேரத்தில் உண்மையைச் சொல்லி திருமணம் செய்து கொள்ளலாம். இந்தப் பிரச்னையை புரிந்து கொள்ளும் நபர் ஒருவர் கணவராகஅமைவார். ஆறு, ஏரி, குளம் போன்ற நீர்நிலைக்கு அருகில் அரசமரமும், வேப்பமரமும் சேர்ந்திருக்கும் இடத்தில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்திருப்பார்கள்.அதற்கு அருகில் நிறைய நாகர் சிலைகளும் இருக்கும். இரண்டு நாகங்களுக்கு நடுவில் சிவலிங்கம் உள்ளது போன்ற சிலையை புதிதாக வாங்கி அதுபோன்ற ஒரு இடத்தில் பிரதிஷ்டை செய்து உங்கள்மகளின் கையால் பால் அபிஷேகம் செய்து வணங்கச் சொல்லுங்கள். தொடர்ச்சியாக ஏழு அமாவாசை நாட்களில் பால் அபிஷேகம் செய்து வணங்கிவர நோயின் தீவிரம் குறைவதோடு திருமணமும் கைகூடும். (சொரியாஸில் நோய் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தைச் செய்யலாம்.)

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • japan_animsehan11

  ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி

 • wax_giant_pics

  மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

 • church_cathdral11

  நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

 • apolo_50vinkalam1

  நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

 • 18-07-2019

  18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்