SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேருமலையே, கற்பக விருட்சமே, சூரியனே!

2018-08-28@ 15:13:54

அருணகிரி உலா - 58

சீகாழி பிரம்மதீர்த்தக் கரையில் நிற்கும் நாம், முன்னால் போடப்பட்டிருக்கும் வளைவைக் காண்கிறோம். அதன் இருபுறங்களிலும் பிரம்மன் வழிபடுவது, தந்தை சிவபாத இருதயருக்கு சம்பந்தர் தோணியப்பரைச் சுட்டிக் காட்டுவது, அம்பிகை பொற்கிண்ணத்தில் ஞானப்பால் அளிப்பது ஆகிய அருங்காட்சிகள் சுதையால் அமைக்கப்பட்டுள்ளன. நேர் எதிரே தொலைவில் தனிச்சந்நதி ஒன்று விளங்குவதைக் கண்டு அருகில் சென்றபோதுதான் அது ஞானசம்பந்தர் மூலச் சந்நதி என்று தெரிகிறது. இங்கு ஞானசம்பந்தருக்கு நித்திய வழிபாடு நடத்தப்படுகிறது. தை அமாவாசை, வைகாசி மூலம், ஐப்பசி சதயம் ஆகிய தினங்களில் சிறப்பு வழிபாடு நடத்துகிறார்கள்.

‘‘தோடுடைய செவியன் விடையேறி ஓர்தூ வெண்மதி சூடிக்
காடுடைய சுடலைப்பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனை நாட்பணிந்தேத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே’’

- என்பது சம்பந்தப்பெருமானது முதல் பால். (‘காழியில் சிவன் மெச்சக் காதுக்கோதிய பெருமாளே’ - திருப்புகழ்) இருள் நிறைந்த கிரவுஞ்சகிரி பொடியாகவும், சூரன் அழியவும், தேவர்கள் தம்மைக் காக்குமாறு தொழவும் வேலைச் செலுத்தியவனே என்றும், சவாரிக்கு உதவும் குதிரை போன்ற மயில் வாகனத்தைச் செலுத்துபவனே, அகத்தியரால் உண்ணப்பட்ட ஆழ்கடல், ஏழு மலைகள் கலக்கமுறச் செய்த மயில் வாழ்வே, ஒளி பொருந்திய நிறத்தை உடைய மயில் வாழ்வே என்றும் போற்றுகின்ற திருப்புகழ்ப் பாடலின் இறுதியில் சம்பந்தப்பெருமானைத் துதிக்கிறார். அப்பாடலை சம்பந்தப்பெருமானின் தனிக்கோயிலில் அர்ப்பணிக்கிறோம்.

‘‘மையாரக் கிரியே பொடியாய் விட
பொய் சூரப்பதியே கெட வானவர்
வையாய் பொற்சரணா எனவே தொழ விடும் வேலா
வையாளிப்பரி வாகனமா கொளு
துவ்வு ஆழிக் கடல் ஏழ்மலை தூளி செய்
மைபோலக் கதிரேய் நிறமாகிய மயில் வாழ்வே
தெய்வானைக்கரசே குறமான் மகிழ்
செய்யா முத்தமிழாகரனே புகழ்
தெய்வீகப் பரமா குருவே என விருதூதத்
திய்யார் அக்கழுவேறிட நீறிடு
கையா! அற்புதனே! பிரமாபுர
செய்காழிப்பதி வாழ் முருகா சுரர் பெருமாளே’’

(திய்யார் - தீயராம் சமணர்கள்) உலகாயத விஷயங்களில் ஈடுபட்டு, உடலை ஓம்புவதையே பிரதானத் தொழிலாக் கொண்டு விளங்குபவர் கூட்டத்திற் பாவி நான் கரைசேர்வது என்றோ? அதற்கான உபாயமாக அற்புதமான ஒப்பற்ற பொருளைத் தனக்கு உபதேசிக்குமாறு பாடலின் முற்பகுதியில் ‘நானொரு பாதகன் மெய்யா எப்படி ஒரு கரை சேர்வது செய்யாய்! அற்புதமே பெற ஒரு பொருள் அருள்வாய்’ வேண்டிக்கொள்கிறார்.‘கொங்குலாவிய’ எனத் துவங்கும் பாடலில் தனக்கு முருகனது நயன தீட்சை கிட்டியது பற்றியும் பாடுகிறார்.

‘‘சண்பை மாநகருறையும் ஓர் அறுமுக’’ என்று விளித்து, ‘ஒளி திகழ் இசை கூரும் தண்டை நூபுர மணுகிய இருகழல் கண்டு நாளவமிகையற விழியருள் தந்த பேரருள் கனவிலு நனவிலு மறவேனே’ எனப் பாடுகிறார். அஷ்ட பைரவர்கள் சந்நதி அடைக்கப்பட்டு இருந்ததால் பார்க்க முடியவில்லை. வடக்குக் கோபுர வாசலருகில் அம்பிகை திருநிலைநாயகியின் தனிக்கோயில் திகழ்கிறது. நுழைவாயிலருகே மண்டப குமாரர் விளங்குகிறார். தேவர் முறையீடு முதல் முருகவேள் தேவசேனாதிபதியாகப் போருக்கு எழுந்தருளும் வரையில் கந்தபுராணச் சுருக்கமாய் அருணகிரியார் பாடிய இத்தலத் திருப்புகழை முருகனுக்கு அர்ப்பணிக்கிறோம்.

பூமாதுரமே அணி மான், மறை
வாய் நாலுடையோன் மலி வானவர்
கோமான் முநிவோர் முதல் யாரும் இயல்பு வேதம்
பூராயமதாய் மொழி நூல்களும்
ஆராய்வதிலாது அடலாசுரர்
போரால் மறைவாயுறு பீதியின் வந்துகூடி
நீ மாறருளாய் என ஈசனை
பாமாலைகளால் தொழுவதே திரு
நீறார் தரு மேனிய! தேனியல் கொன்றையோடு
நீரேர் தரு ஜானவி மாமதி
காகோதர மாதுளை கூவிளை
நேரோடம் விளா முதலார் சடை எம்பிரானே!
போமாறினி வேறெது வோதெனவே
ஆர் அருளால் அவர் ஈதரு
போர்வேலவ! நீல கலாவி இவர்ந்து நீடு
பூலோகமொடே அறு லோகமும்
நேர் ஓர் நொடியே வருவோய்! சுர
சேனபதி ஆயவனே! உனை அன்பினோடும்
காமா! அறு சோம சமானன!
தாமா! மணமார் தரு நீப!
சுதாமா எனவே துதியாதுழல் வஞ்சனேனைக்
காவாய்! அடி நாள் அசுரேசரையே
சாடிய கூர் வடி வேலவ!
காரார் தரு காழியின் மேவிய தம்பிரானே!’’

செந்தாமரைப் பூவில் இருக்கும் லட்சுமியை மார்பில் கொண்ட திருமாலும், வேதம் ஓதும் நான்கு வாய்கள் கொண்ட பிரமனும், திரண்ட வானவருக்கு அதிபதியாக இருக்கும் தேவேந்திரனும், முனிவர்களும், வேதப்பொருளை ஆதியோடந்தமாய் விளக்கும் வேத நூல்களில் நம்பிக்கையற்ற வலிமையான அரக்கர்கள் நடத்திய போரைக் கண்டு பயந்து கயிலையின்கண் ஒன்று கூடினர். சிவபெருமானைப் பல பாடல்களால் துதித்து, ‘‘திருநீறணிந்த திருமேனியனே! தேன் துளிர்க்கும் கொன்றைப் பூக்களுடன் அழகாக நீர் ததும்பும் கங்கை, சந்திரன், மாதுளம்பூ, வில்வம், நாவல் இலை, விளா இலை முதலியவற்றைச் சடையில் புனைந்திருக்கும் எம் இறைவா! எம் பகைவர்களை அழிக்கக்கூடிய ஒரு பகைவனை நீ தந்தருள வேண்டும்; உம்மிடம் முறையிடுவதை விட நாங்கள் பிழைக்கும் வழி வேறென்ன இருக்கிறது’’ என்று முறையிட்டனர். முருகனைப் பார்த்து ‘‘இத்தகைய சிவபெருமான் அளித்துதவிய போர் வேலவனே! (போரில் வல்லவனே) நீல மயிலில் ஏறி பரந்த இப்பூவுலகையும் மற்ற ஆறு உலகங்களையும் நேராக ஒரு நொடிப் பொழுதில் சுற்றி வந்தவனே! தேவர்களுக்குச் சேனாபதி ஆனவனே! பக்தியுடன் உன்னை ‘‘மன்மதனைப் போல அழகு வாய்ந்தவனே!

ஆறு சந்திரனுக்கு நிகரான ஆறு முகங்களை உடையவனே! நறுமணம் கமழும் கடப்ப மாலைகள் அணிந்தவனே! சிறந்த ஒளி உடையவனே!’’ என்றெல்லாம் துதியாமல் திரியும் கபடனாகிய என்னைக் காத்தருள்வாயாக! முன்பு அசுரத் தலைவர்களை அழித்த கூரிய வேலாயுதனே! மேகங்கள் சூழ்ந்துள்ள சீகாழியில் விளங்கும் தம்பிரானே! (வஞ்சனேன் எனைக் காவாய்!)’’மண்டபக் குமரனை வணங்கிக் கந்தபுராணக் குறிப்படங்கிய இத்திருப்புகழைச் சமர்ப்பித்த பின் உள்ளே சென்று தேவியைத் தரிசிக்கிறோம். வாசலில் பலிபீடம், கொடிமரம், நந்தி, இருபுறமுமுள்ள துவார சக்திகள், விநாயகர் ஆகியோரை வணங்குகிறோம்.

பிரதோஷ தினமாதலால் தேவி,  வெள்ளிப் பாவாடையில் ஜொலித்துக் கொண்டிருந்தாள். ஐந்தடி உயரத்தில் நின்ற கோலத்தில் திருநிலைநாயகி என்ற பெயரில் குடிகொண்டுள்ளாள். ஞானசம்பந்தப் பிள்ளைக்கு ஞானப்பால் ஊட்டிய கருணைத்தாய். ‘‘கருத்தன எந்தை தன் கண்ணன வண்ணக் கனக வெற்பில் பெருத்தன, பால், அழும்பிள்ளைக்கு நல்கின’’ என்று பாடிளார் அபிராமிபட்டர். சித்திரைப் பெருவிழாவில் திருவாதிரை நாளன்று திருமுலைப்பால் விழா என்ற பெயரில், ஐதீகப் பெருவிழாவாக ஆலயத்தில் நடத்தப்படுகிறது. இத்தேவிதான் கருவறை விமானத்தின் மேல் நடுத்தளத்தில் குருவடிவில் எழுந்தருளியிருக்கும் சிவனுடன் காட்சி அளிக்கிறாள். திருநிலைநாயகியைப் பலவாறு போற்றிப் பாடியுள்ளார் அருணகிரியார்.

‘‘சிலைநுதல் கயல்விழி செஞ்சொல் வானவ
திரிபுரை, பயிரவி, திங்கள் சூடிய
திகழ் சடை நெடியவள், செம்பொன் மேனியள், சிங்கமேறி
திரள்படை அலகைகள் பொங்கு கோடுகள்
திமிலை யொடறை பறை நின்று மோதிட
சிவனுடன் நடம் வரு மங்கை மாதுமை தந்தவேளே’’

(‘அலைகடல்’ - திருப்புகழ்) (‘அம்சொல் மங்கை’, ‘பேழைவார் ஜடைப் பெருந்திருமகள்’ - சம்பந்தர் குறிப்பு ‘சிங்கமேறி’ - வன்மான் உகைத்த கொடி என்கிறது தக்கயாகப் பரணி. வன்மான் = சிங்கம்)‘‘கதிர் சுற்றிட்டாசைப் பால் கிரியுறை பச்சைப் பாசக் கோகில கவுரிப் பொற்சேர்வைச் சேகர முருகோனே’’ பொருள்: சூரியன் வலம்வரும் பொன்மலை மேருவின் பக்கத்திலுள்ள (ஆசை - கிரி - பால்) இமயமலையில் அல்லது கயிலையில் வீற்றிருக்கின்ற பச்சை நிறமுள்ள கெளரி, அன்பு நிறைந்த கெளரி, குயில் போன்ற கெளரி ஆகிய பார்வதியின் அழகிய சந்தனக் கலவை மேற்படும்படிக் கொள்ளும் முருகவேளே! தேவியைப் போற்றிக் கருவறையை வலம் வரும்போது, கோட்டத்தில் சாமளாதேவி, இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியா சக்தியைத் தரிசிக்கிறோம். தனிச் சந்நதியில் சுப்ரமண்யரைக் கண்டு மற்றுமொரு சீகாழிப் பாடலைச் சமர்ப்பிக்கிறோம்.

‘‘செக்கர் வானப் பிறைக்கு இக்கு மாரற்கு அல
தெற்கில் ஊதைக் கனல் தணியாத
சித்ர வீணைக்கு அலர் பெற்ற தாயர்க்கு அவச்
சித்தம் வாடிக் கனக் கவி பாடிக்
கைக் கபோலக் கிரிப்பொற் கொள் ராசிக்
கொடைக் கற்பதாரு செகத்ரயபாநு
கற்றபேர் வைப்பெனச் செத்தை யோகத்தினர்
கைக்குள் நான் வெட்கி நிற்பது பாராய்’’

செவ்வான நிலவுக்கும், கரும்பு வில்லைத் தாங்கிய மன்மதனுக்கும், இவை மட்டுமல்ல, தென்றலுக்கும், வீணை இசைக்கும் ஏசல் பேசும் தாய்க்கும், வீணாக மனம் வாடி, வேசியருக்குப் பணம் கொடுப்பதற்காக பெரிய கவிகளை கனவான் மேல் பாடி, அவர்களை ‘‘ஐராவதம் போன்றவரே! மேருமலை போன்றவரே! கற்பக விருட்சமே! சூரியனே! புலவர்கட்கு சேமநிதி ஆனவரே!’’ என்றெல்லாம் கூறி, குப்பை போல் செல்வம் வைத்திருப்பவர்கள் கைக்குள் அகப்பட்டு நான் நாணி நிற்பதை கண்பார்த்து என் வறுமை நீங்க அருளாய் என்று பாடலின் இப்பகுதியில் வேண்டுகிறார்.

‘‘சக்ரபாணிக்கும் அப் பத்மயோனிக்கு
நித்தப்ரதாபர்க்கும் எட்ட அரிதாய
தத்வ வேதத்தின் உற்பத்தி போதித்த அத்
தத்வரூப, கிரிப் புரை சாடிக்
கொக்கிலே புக்கொளித்திட்ட சூர் பொட்டெழக்
குத்து ராவுத்த, பொற் குமரோனே
கொற்றவா! உற்பலச் செச்சை மாலைப்புயக்
கொச்சை வாழ் முத்தமிழ்ப் பெருமாளே’’

சக்ரபாணியான திருமாலுக்கும், அவர் உந்தியில் உதித்த பிரம்மனுக்கும், என்றும் அழியாத கீர்த்தி அடைந்த சிவனுக்கும் அடைதற்கு அரிதான மெய்யான வேதங்களின் தோற்றத்தையும் பொருளையும் உபதேசித்த அந்த ஞான சொரூபியே! கிரவுஞ்ச மலையின் பெருமையைக் குறைத்து மாமர வடிவில் ஒளிந்திருந்த சூரபத்மன் தொளைபட குத்திய வீரனே! அழகிய குமரனே! அரசே! நீலோற்பல வெட்சி மாலைகள் அணிந்த தோளோனே! சீகாழியில் வாழுகின்ற முத்தமிழ்ப் பெருமாளே! துர்க்கை, சண்டிகேஸ்வரரை வணங்கி அம்பிகையை மீண்டும் வணங்கி வெளியே வருகிறோம். கொடி மரத்தடியில் பலர் நிற்பதைக் கண்டு காரணம் கேட்டபோது, அன்று பிரதோஷ தினம் ஆகையால் மீண்டும் ஒரு தீபாராதனை நடக்கவிருப்பதைப் பற்றிக் கூறினர். அம்பிகையின் கருணையை வியந்து தீப ஒளியில் அவளது அழகைக் கண்டு விழுந்து வணங்கினோம். மறக்க முடியாத அனுபவமாக இருந்த பிரம்மபுரீஸ்வரர் ஆலயக் காட்சியை அசை போட்ட வண்ணம் குளக்கரையில் மீண்டும் அம்மையப்பரையும், சம்பந்தரையும் வணங்கி வெளியே வருகிறோம்.

- சித்ரா மூர்த்தி

(உலா தொடரும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-08-2019

  20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • wphotoday

  உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

 • carshowchennai

  சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

 • hongkongrally

  ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

 • 19-08-2019

  19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்