SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அம்பிகையின் அருள் பெற்ற தொழிலாளி

2018-08-28@ 09:44:57

அருள். இதற்கு ஈடு இணை ஏது? அம்பிகையின் அருளால் பதினான்கு உலகங்களையும் படைத்தும், காத்தும், அழிப்பவர்கள் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள். இந்த மூவரும் போற்றி வணங்குவது மணம் கமழும் கடம்ப மாலையை அணிந்த கூந்தலையுடைய எழிலான தெய்வமாகிய அபிராமி அன்னையேயாகும். இவளை வணங்கி வழிபட்டாலே மும்மூர்த்திகளையும் பூஜித்ததைப் போன்றது. கருணையுள்ளம் படைத்த சிவசக்தியே சதாசிவமாக நின்று ஐந்தொழில்களைச் செய்கின்றாள். மங்கலப் பொருளாக விளங்குகின்றாள். அவளே பிரணவ ஸ்வரூபிணி; வேதத்தின் முழுப் பொருள். உயிர்களை நடத்திச் செல்பவள். ஞானத்திற்கு இருப்பிடமாக விளங்குபவள். இவளுடைய திருவருளே உலகெங்கும் பரவி உயிருக்குயிராக நின்று, உயிருக்கு அறிவையும், ஆற்றலையும் அளித்து படிப்படியாக பக்குவமடையச் செய்து வீடு பேறினையும் வழங்கும். அருளுக்கு இருப்பிடமான சக்தி மனத்திற்கும், வாக்கிற்கும், பொறிகளுக்கும், புலன்களுக்கும் அப்பாற்பட்டவைதான்.

தன்னை விரும்பி, வேண்டி நிற்பவர் மனதில் நிரம்பி தனது அருள்மழையைப் பொழிவதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றாள். அன்பர்களின் உள்ளங்களில் பல வடிவங்களுடன் காட்சி தருகின்றாள். அவளை உபாசிப்பவன் விரும்பிய பலனை அடைவது திண்ணம். அந்தமும், ஆதியுமற்ற அம்பிகை அருள் புரிந்த ஒரு தொழிலாளியின் வாழ்க்கையில் நடந்த சம்பவம். அபிராமி அந்தாதியின் ஒரு பாடல் புரிந்த அதிசயம் இதோ... திருநெல்வேலி என்றாலே காந்திமதி அம்மைதான்  நம் நினைவில் நிழலாடும். அன்னையின் அருட்சக்தி பெருகிச் சிறந்திடும் திருத்தலங்கள் பலவற்றுள் நெல்லை காந்திமதி அம்மனின்  திருக்கோயிலும் ஒன்று. பொருனை நதிக்கரையில் நெல்லையம்பதி அமைந்துள்ளது. நெல்லையின் சிறப்பே காந்திமதி அம்மனின் திருக்கோயில்தான். நெல்லையப்பர் திருக்கோயிலும், அம்மனின் திருக்கோயிலும் ஒரு மண்டபத்தின் வாயிலாக இணைக்கப்பட்டுள்ளது.

பஞ்ச சபைகளில் இது தாமிர சபையாகும். திருஞானசம்பந்தர் தென்றல் வந்துலாவிய திருநெல்வேலி எனவும், தேனில் வண்டமர் பொழில் திருநெல்வேலி எனவும், செறிபொழில் தழுவிய திருநெல்வேலி எனவும் போற்றி திருநெல்வேலி பதிகம் பாடியுள்ளார். இத்தகைய சிறப்புமிக்க நெல்வேலியில்... திருநெல்வேலியை அரசர்கள் ஆண்டு வந்த காலம். அரசரிடம் தலைமை அமைச்சராக இருந்தவர் வல்லவர்; ஆனால், நல்லவர் இல்லை. அக்கிரமங்களும், அட்டூழியங்களும் அவருக்கு உடன்பிறந்தவை. தற்காலத்தில் உள்ளதுபோலவே இது ஒரு தொடர்கதை போலும். நெல்லையப்பர் கோயிலில் விளக்கேற்றும் தொழிலை ஒருவர் செய்து வந்தார். சிவன் கோயிலில் விளக்கேற்றும் பெரும் பாக்கியம் அந்த அன்பருக்கு. தினமும் விளக்குகளை ஏற்றுவதும், இரவு கோயில் நடை சார்த்தும்பொழுது ஒரு சில விளக்குகளைத் தவிர மற்றவைகளை அணைப்பதுமான தொழிலில் ஈடுபட்டிருந்தார்.

வேலை நேரம் போக மற்ற நேரமெல்லாம் அவர் அம்பிகையின் சந்நதியிலேயே அமர்ந்திருப்பார். அம்பாளின் அனுக்கிரகம் அவருக்கு கிடைக்கப் பிராப்தம் செய்தார் போலும். ஒருநாள் அம்பாள் உபாசகர் ஒருவர் அத்திருக்கோயிலுக்கு வந்தார். மிகவும் அனுபவசாலி. ஸ்வாமியையும், அம்பாளையும் தரிசித்த அவரது பார்வை அந்த ஏழைத் தொழிலாளியின் மேல் பதிந்தது. அத்தொழிலாளியை அழைத்தார். அப்பா! நான் ஒரு பாடலை உனக்குச் சொல்லித் தருகின்றேன். அதை நீ தினந்தோறும் சொல். நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல் என்று பாடலை உபதேசித்தார். அம்பாள் உபாசகர் மூலம் அத்தொழிலாளி பலன் பெற அம்பிகை நினைத்திருந்தாள் என்றே கூறலாம். அவர் உபதேசித்த பாடல் அபிராமி அந்தாதியிலிருந்து... அம்பிகையின் திருவடிகளை வணங்குக, வணங்கிடுக, வணங்கியவர் என்ன பயன்பெறுவர். அதற்கு என்ன சான்று என்பதனை விளக்கும் 52வது பாடலே அது.

வையம் துரகம் மதகரி
மா மகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை
ஆரம் பிறைமுடித்த
ஐயன் திருமனையாள் அடித்
தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவம் உடையார்க்கு
உளவாகிய சின்னங்களே.


அம்பிகையின் அடியார்களுக்கு உண்டான ஐஸ்வர்ய அடையாளங்களைச் சொல்லி அவர்கள் ராஜ வாழ்க்கை வாழ்வார்கள் என்பதே இப்பாடலின் கருத்து. பிறைச் சந்திரனைத் தலையில் சூடிய பரமசிவனின் துணைவியாகிய அபிராமி என்ற திருமனையானது திருவடித் தாமரைகளுக்கு முற்பிறவியில் அன்பு செய்து தவம் புரிந்தார்க்கு இப்பிறவியில் கிடைத்த தவப்பயனான சின்னங்கள் இவை. 1) வையம்  நிலம்; 2) துரகம்  குதிரை; 3) மதகரி  யானை; 4) மாமகுடம்  அரசுப்பேறு; 5) சிவிகை  பல்லக்கு போன்ற நல்ல வாகன வசதி, எடுபிடி ஆட்கள், 6) பெய்யும் கனகம்  பொழியும் பொன், 7) பெருவிலை ஆரம்  விலையுயர்ந்த ஆபரணங்கள்  இந்தச் சின்னங்களை மனத்தில் இருத்தியபடி தவம் செய்தவர்கள் என்பது கருத்து. ஒப்பற்ற இந்த ஏழு பொருட்களை இப்பிறவியில் சேர்ந்தாற்போல் எவர் வைத்துக் கொண்டிருக்கிறாரோ, அவரே முன்பு அம்பிகையின் திருவடிகளைப் பணிந்தவர். இப்பிறவியில் இப்போது பெறாதோர் அடுத்த பிறவியிலாவது பெற்றிட அம்பிகையின் திருவடிகளை நினைத்து தவம் மேற்கொள்வீர்.

இத்தகு சிறப்புமிக்க பாடலின் உபதேசம்தான் அந்த ஏழை விளக்கேற்றும் தொழிலாளிக்கு உபதேசமாயிற்று. அதனால் நிகழ்ந்த அற்புதம்! அன்று முதல் மனத்தில் நிறுத்திய அப்பாடலை அவரது வாய் சதா சர்வகாலமும் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. எப்பொழுதும் உபதேச மந்திரங்கள் சொல்லும்பொழுது உதடுகள் அசையலாமே தவிர அது என்ன மந்திரம் என்பது பிறர் காதுகளில் விழக்கூடாது. சாஸ்திரங்கள் சொல்லும் இந்த வழிமுறையை அந்த  தொழிலாளியும் கடைப்பிடித்தார். விவரம் தெரியாமல் செய்தார் என்றால், அம்பாளது கடைக்கண் பார்வை அவர்மேல் பதிந்து விட்டது என்றே கருதலாம். விளக்கேற்றும் தொழிலாளிக்குப் பொருள் கிடைக்க அம்பாள் செய்த செயல், அபிராமி அந்தாதியின் பெருமையை விளக்கும், சிலிர்ப்பு மிக்க அனுபவம். தலைமை அமைச்சரின் அக்கிரமங்கள் அனைத்தும் அரசவையில் அரசருக்கு முன் நிரூபணம் ஆயிற்று. கவலை கொண்ட அரசர் மிகவும் மனவருத்தத்துடன் நெல்லையப்பரை தரிசிக்கச் சென்றார். உடன் அந்த அக்கிரமக்கார அமைச்சரும் சென்றிருந்தார்.

அரசரைக் கண்டதும் கோயிலில் இருந்த சிறு சிறு சலசலப்பு சத்தங்கள்கூட நின்று மிகவும் அமைதியாக இருந்தது. அரசர் அம்பாளை தரிசிக்கச் சென்றபோது, கற்பூர ஜோதியின் காற்றில் அசையும் சத்தம் தான் கேட்டது அத்துணை நிசப்தம். ஆனால், எதோ ஒரு மந்திரி ஒலி வருவது போன்ற ஓசை கேட்டு அத்திசை நோக்கி நடந்தார் மன்னர். அவருடன் வந்த அனைவரும் சென்று அந்தச் சத்தம் கேட்ட இடத்தில் நின்று பார்த்தால், அந்த விளக்கேற்றும் தொழிலாளி உபதேசமான அபிராமி அந்தாதியை முணுமுணுத்துக் கொண்டிருந்தார். காவலாளிகள் அவரை இழுத்து வந்து மன்னர் முன்னே நிறுத்தினர். என்ன தோன்றியதோ மன்னருக்கு. அந்த விளக்கேற்றும் தொழிலாளியிடம் நீ என்ன மந்திரம் உச்சரிக்கின்றாய்? என்று வினவினார். அவரும் கோயிலில் தனக்கு முன்னொரு நாள் ஏற்பட்ட சுகந்த அனுபவத்தை விளக்கினார். அதுமுதல் அப்பாடலைச் சொல்லி வருவதாகவும் கூறினார்.

அப்படியா! மிகவும் சந்தோஷம் என்று ஆச்சர்யப்பட்ட மன்னர் அக்கிரமக்கார அமைச்சரின் அதிகார முத்திரையைப் பறித்து அதை அந்த விளக்கேற்றும் தொழிலாளியிடம் கொடுத்து, இனி நீதான் என் அரசவை தலைமை அமைச்சர்! என்று அறிவித்தார். என்னே... அம்பிகையின் திருவிளையாடல், தொழிலாளி ஏதேனும் நினைத்திருப்பாரா இவ்வாறெல்லாம் நடக்குமென்று! சற்று நேரத்தில் ஒரு தந்தப் பல்லக்கு கோயில் வாசலில் வந்தது. தலைமை அமைச்சரான விளக்கேற்றும் தொழிலாளியை அதில் அமர வைத்துக்கொண்டு அரண்மனை நோக்கிச் சென்றது. அந்தாதியில் இப்பாடலில் சொல்லப்பட்ட அனைத்து ஐஸ்வர்யங்களும் அவரை வந்தடைந்தன. அந்தாதியின் ஒரு பாடலுக்கே இத்துணை மகிமை என்றால்! அனைத்துப் பாடல்களையும் பாராயணம் செய்பவர்களுக்கு அம்பிகை புரியும் கருணை சொல்லிலோ, எழுத்திலோ அடங்கிடுமோ! ஆனந்தம் அடைய விரும்புவோர் அம்மையின் அருளைப் பெற வேண்டும்.

இன்ப துன்ப அனுபவங்கள் நிறைந்தது உலக வாழ்க்கை. இந்த வாழ்க்கை ஆனந்தமயமாக வேண்டுமானால் இறைவியின் திருவருளைத் துணை கொள்ள வேண்டும். கசப்பான மருந்துகளுக்கு இனிப்பான தேனை அநுபானமாகக் கொண்டு உண்பதுபோல, முற்பிறவியிற் செய்த வினைகளின் பயனாக இப்போது நுகரும் துன்பங்கள் இறைவியின் அருளைத் துணையாகக் கொண்டால் வருத்தத்தை உண்டாக்காமல் உரம் இழந்து நிற்கும். ஆனந்தமாக நிற்கும் தேவி மனிதர்களுடைய மனத்தில் அறிவாக நின்று தெளியச் செய்கின்றாள். ஆன்மாக்களை உய்யச் செய்கிறாள். ஞானமே உருவாகிய அன்னை பிற பொருளை அறிவதற்குக் கருவியாகிய அறிவாக நிற்கின்றாள். தன்னை அறிவதற்குரிய வாலறிவாக நிற்பவளும் அவளே. அருள்மிகு அன்னை அபிராமியின் அருளடிகளே அடைக்கலம்!
 
ரஞ்சனா பாலசுப்ரமணியம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-07-2019

  22-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-07-2019

  21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்