SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பம் தருவாள் திரிபுரசுந்தரி

2018-08-28@ 09:43:24

வாலயமாக இருந்தாலும், அங்கு அருளும் அம்பிகையின் பெயரிலேயே அந்த ஆலயம் புகழடைந்திருக்கும். அதாவது, அம்மனின் பெயரைச் சொல்லியே அக்கோயிலை குறிப்பிடுவார்கள். மதுரை மீனாட்சியும், திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியும் உதாரணங்கள். இவ்வாறு இறைவியின் நாமத்தால் குறிப்பிடப்படும் ஆலயங்களுள் சென்னையை அடுத்துள்ள மேலூர் சிவன் கோயிலும் ஒன்று. அனைத்திற்கும் ஆதாரமாகத் திகழ்பவளான பராசக்திதான் பலவித காரணங்களுக்காக பல்வேறு வடிவங்களோடு பல்வேறு தலங்களில் அருள்கிறாள். பராசக்தியிலிருந்து ஆதிசக்தியும், ஆதிசக்தியிலிருந்து இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியா சக்திகளும் தோன்றி உலகைப் படைத்து, இயக்கி இறுதியில் வீடு பேறு அருள்வதாக தேவிபாகவதம் கூறுகிறது. இப்படி முப்பெரும் நிலைகளில் இயங்கி, அகில உலகையும் காத்தருளும் அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகியின் அமர்விடமே முக்கோணங்கள் நிறைந்த ஸ்ரீசக்ரம்தான்.

இச்சா சக்தி, ஞான சக்தி, க்ரியா சக்தி ஆகிய முப்பெரும் சக்திகளுக்குரிய திருத்தலங்களாக மேலூர், திருவொற்றியூர், வடதிருமுல்லைவாயில் ஆகியன திகழ்கின்றன. அவற்றுள் இச்சா சக்தியாக திருவுடையம்மன் அருள் வழங்கும் தலம், மேலூர். சென்னைமீஞ்சூர் சாலையில், சென்னையிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மேலூர். சாலையின் இடப்புறம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை அருள்மிகு திருமணங்கீசர் ஆலயம் என எழுதப்பட்ட அலங்கார வளைவு நம்மை வரவேற்கிறது. இவ்வளைவிலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்துள் நுழைந்ததும் வலதுபுறத்தில் அம்பாள் சந்நதி, தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அன்னை தன் மேலிருகரங்களில் பாசாங்குசத்தைக் கொண்டிருக்கிறாள்.

கீழிரு கரங்களில் அபய  வரத முத்திரைக் காட்டி அருள் காட்சித் தருகின்றாள். தேவியின் கண்களில் ஒளிரும் கருணை நம் மனதை குளிர்விக்கிறது. பெரிய ஆலயங்களில் அருளும் அம்பிகையின் அலங்கார அணிகளோ, ரத்னாபரணங்களின் ஜொலி ஜொலிப்போ இல்லையென்றாலும் தஞ்சமென நாடி வரும் அடியவரை எக்காலமும் காப்பேன் எனச் சொல்லாமல் சொல்கிறது, அன்னையின் ஆனந்தப் புன்னகை பூத்த திருமுகம். உலகத்தில் உள்ள சகல நன்மைகளையும் அருளும் இவளை மங்களநாயகி தாயே என பக்தர்கள் பாசத்தோடு அழைத்து தொழுகிறார்கள். அன்னையின் சந்நதியில் பக்தைகள்  லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் செய்வது வழக்கம்.  இதனால் தங்களின் வாழ்வு வளம் பெறுவதாக சொல்கிறார்கள், பலனடைந்த பக்தர்கள்.

அம்பாளின் திருமுன் சிம்மமும், பலிபீடமும், கொடிமரமும் காணப்படுகின்றன. அம்பாள் சந்நதிக்கும் கொடிமரத்துக்கும் இடையில் அமைந்துள்ள அழகிய மண்டபத்தை மிளகு மாற்றியான் மண்டபம் என குறிப்பிடுகிறார்கள். அதற்குப் பின்னணியில் ஒரு சுவையான சம்பவம் இருக்கிறது. நாயக்க மன்னராட்சிக் காலத்தில் மிளகுக்குச் சுங்கவரி வசூலிக்கும் வழக்கம் இருந்தது. இப்பகுதிக்கு ஒரு வணிகன் மிளகு மூட்டைகளுடன் வந்தான். வரி செலுத்த விரும்பாத அவன் தன் மூட்டைகளில் பயறு இருப்பதாக அதிகாரிகளிடம் பொய் சொன்னான். சந்தைக்குச் சென்று மூட்டைகளைப் பிரித்துப் பார்த்த வணிகன், மிளகு மூட்டைகள் பயறு மூட்டைகளாக மாறி இருந்ததைக் கண்டு பதறித் துடித்தான். பின் மனம் வருந்தி இச்சா சக்தியாக அருள்புரியும் திரிபுர சுந்தரியிடம் மன்னிப்பு கேட்டான். மனம் திருந்திய வணிகனுக்கு அருள்புரிந்திட திருவுளம் கொண்ட தேவி பயறு மூட்டைகளை மீண்டும் மிளகு மூட்டைகளாக மாற்றினாள்.

அன்னையின் மகிமையை அனுபவ பூர்வமாய் உணர்ந்த அந்த வணிகன் சுங்கவரியாக செலுத்த வேண்டிய பணத்தை ஆலயத்திற்கு காணிக்கையாகச் செலுத்தினான். அம்பாள் சந்நதிக்கு முன் மண்டபத்தையும் கட்டிக் கொடுத்தான். அதுதான் மிளகுமாற்றியான் மண்டபம். திருமணங்கீசர், அம்பிகை ஆலயத்திற்கு மேற்கே தனிச்சந்நதியில் கிழக்கு நோக்கி அருள்கிறார். இவரை சுகந்தபுரீஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள். ஆதிகாலத்தில் அடர்ந்த வனப்பகுதியாக இருந்த இந்த இடத்தில் செல்வந்தர் ஒருவரின் பசு தினமும் காட்டில் மேய்ந்து விட்டு வீட்டிற்கு வந்து தன் கன்றுக்கு மட்டும் பால் கொடுத்துவிட்டு மீண்டும் காட்டிற்குச் சென்று விடுமாம். இதைக் கேள்விப்பட்ட அந்தச் செல்வந்தர் தானே அதன் காரணத்தைக் கண்டறிய பசுவைப் பின் தொடர்ந்தார். அங்கே அவருக்கு ஒரு அதிசயம் காத்திருந்தது. பசு செல்லும் திசையிலிருந்து நாகலிங்கப்பூவின் நறுமணம் வீசியது.

ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து, அங்கிருந்த புற்றின் மேல் பசு பால் சொரிவது கண்டு வியந்தார். உடனே புற்றை இடித்துப் பார்த்தார். அதில் சிவலிங்கம் வெளிப்பட்டதைக் கண்ட அவர், ஆனந்தத்தோடு அந்த இடத்திலேயே அரனுக்கு ஒரு ஆலயம் அமைத்து வழிபட்டார். லிங்கம் இருந்த பகுதியைச் சுற்றி நாகலிங்கம் மற்றும் சரக்கொன்றை மரங்கள் இருந்தனவாம். மலர்களின் சுகந்தம் சூழ அமர்ந்திருந்த இப்பெருமானை, மக்கள் சுகந்தபுரீஸ்வரர் என அழைத்தனர். காலப்போக்கில் இறைவன் திருமணங்கீஸ்வரர் ஆனார். இப்போதும் மண்புற்றுதான் சிவலிங்கமாக உள்ளது. அதன்மேல் செப்புக் கவசம் சாத்தி அபிஷேக ஆராதனைகள் செய்து வருகின்றனர். உள் பிராகாரத்தில் சூரியன், பைரவர், வீரபத்திரர், விநாயகர், சுப்ரமண்யர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, காளத்திநாதர், நால்வர், மகாலட்சுமி ஆகியோர் அருள்கிறார்கள். கருவறை கோஷ்ட தேவதைகளாக நின்ற கோலத்தில் கணபதி, தவக்கோல தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, விஷ்ணு, துர்க்கை ஆகியோர் தரிசனம் தருகின்றார்கள்.

சுவாமி சந்நதிக்கு முன்புறம் 24 தூண்கள் கொண்ட கருங்கல் மண்டபம் ஒன்று இருக்கிறது. தூண்களில் அதியற்புதமான சிற்பங்களை காணலாம். மண்டபத்தின் வடகோடியில் உற்சவ மூர்த்திகளை தரிசிக்கலாம். குறிப்பாக நடராஜ மூர்த்தி அழகு, பேரழகு! முதலில் செங்கல் கட்டடமாக இருந்த ஆலயம் சோழர்காலத்தில் கற்றளியாக மாற்றியமைக்கப் பட்டிருக்கிறது. இத்தலத்திற்கு வருகை தந்த பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியத்தேவர் அப்போது கோயிலின் சீர்கேட்டைக் கண்டு மனம் வருந்தி உடனே திருப்பணிகளை மேற்கொண்டிருக்கிறான். பௌர்ணமி தினத்தில் மேலூர் திருவுடையம்மனை முதலில் இச்சா சக்தியாய் வழிபட்டு, அடுத்து ஞான சக்தியான திருவொற்றியூர் திரிபுரசுந்தரியைத் தரிசித்து, அடுத்து கிரியா சக்தியான திருமுல்லைவாயில் லதாமத்யம்பா எனும் கொடியிடை அம்மனைத் தரிசிப்பதன் மூலம் மூவரின் அருளும் கிடைக்கிறது என பக்தர்கள் கூறுகின்றனர்.

இந்த மூன்று தேவியரின் திருவுருவச் சிலைகளையும் ஒரே சிற்பிதான் வடித்தாராம். பார்வதிபரமேஸ்வரர் அச்சிற்பிக்கு வரமருள முன் வந்தபோது, அச்சிற்பியோ, ‘எனக்கொன்றும் வேண்டாம். வெள்ளிக்கிழமை அன்று வரும் பௌர்ணமியில் இம்மூன்று தேவியரையும் தரிசிப்பவர்களுக்கு நல்லன தந்தருள வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டாராம். அதன்படி இத்தலம் வருவோரின் குறைகளை சடுதியில் களைந்தருள்கிறார் இத்தல ஈசன். அன்னை திருவுடையம்மனோ, தன் பக்தர்களுக்கு  மழலை வரம், திருமண வரம் தருவதில் கருணையை மழையாய் பொழிந்தருள்கிறாள்.
 
ந.பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-07-2019

  19-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • japan_animsehan11

  ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி

 • wax_giant_pics

  மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

 • church_cathdral11

  நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

 • apolo_50vinkalam1

  நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்