SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கபாட பந்தனம் என்றால் என்ன தெரியுமா?

2018-08-27@ 16:56:28

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விநாயகப் பெருமானை தேவியர் இன்றி பிரம்மச்சாரியாகவும், முருகப் பெருமானை வள்ளி தேவசேனாவுடன் திருக்கல்யாணக் கோலத்திலும் வழிபடுகிறோம். ஆனால், வட மாநிலங்களில் விநாயகர், சித்திபுத்தி  தேவியருடனும், முருகப் பெருமான் கார்த்திகேயன் என்ற திருநாமத்தில் பிரம்மச்சாரியாகவும் வழிபடப்படுகிறார்கள். ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பெரும்பாலும் முருகப் பெருமானை ஐந்துதலைநாக ரூபத்தில் வழிபடுவது
மரபாக உள்ளது. கர்நாடக மாநிலத்தில் குக்கே, காட்டி போன்ற பிரபலமான ஆலயக் கருவறைகளில் சுப்பிரமணியர் சர்ப்ப ரூபமாகவே வழிபடப்படுகிறார்.
தமிழ்நாடு போன்றே முருகப் பெருமான் கருவறையில் விக்கிரகத் திருமேனியாக எழுந்தருளியிருக்கின்ற  அரிய தலம், தட்சிண கன்னடா மாவட்டம், தொக்கூர் என்ற அழகிய சிறிய கிராமம் ஆகும். தோகா என்ற சொல் பாலகனைக் குறிக்கும் என்றும்,இங்கு முருகப் பெருமான் பால சுப்பிரமணியராக எழுந்தருளியிருப்பதால் தோகாவூர் என்று இக்கிராமம் அழைக்கப்பட்டு, அதுவே தொக்கூராக மருவியிருப்பதாகக் கூறப்படுகிறது.

தொக்கூர் ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்தின் கருவறை வட்ட வடிவில் அமைந்திருப்பதும், இதில் பால சுப்பிரமணியரின் விக்கிரகமும், சர்ப்ப ரூபமும் ஒருங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதும், இந்த ஆலயத்தை முருகனருளால் மகப்பேறு வாய்க்கப் பெற்ற ஒரு ஜைன மன்னர் கட்டியிருப்பதும் இத்தலத்தின் தனிச் சிறப்புகளாகும். இங்குள்ள  ஸ்ரீசுப்பிரமணியர், பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்றுதல புராணம் தெரிவிக்கிறது. 800 ஆண்டுகளுக்கு முன்பாக ஜைனர்கள் அதிக அளவில் வசித்து வந்த இப்பகுதியில் கணபதி குடி என்ற ஒரு சிறிய விநாயகர் ஆலயம் மட்டுமே இருந்ததாம். இங்குள்ள வெலங்கா என்ற பகுதியை ஆண்டு வந்த ஜைன மன்னருக்கு மகப்பேறு வாய்க்காமல் போகவே, ஜோசியர்களின் அறிவுரைப்படி அவர் ஸ்ரீ சுப்பிரமணியரை மனதாற வேண்டி வழிபட, இறையருளால் அவருக்கு அழகிய ஆண் மகவு பிறந்தது.

மனம் மகிழ்ந்த மன்னர் இந்த விநாயகர் ஆலயத்தை விரிவாக்கம் செய்து, அழகிய வட்ட வடிவமான கருவறை அமைத்து அதில் இரண்டு கரங்களோடு, நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீசுப்பிரமணியரையும், அவர் காலடியில் ஐந்து தலை நாகர் விக்கிரகத்தையும் பிரதிஷ்டை செய்தார். 1965ம் ஆண்டு இந்த ஆலயத்தில் நடைபெற்ற அஷ்டமங்கல பிரச்னம் நடத்திய போது மேற்கண்ட அரிய தகவல்கள் தெரிய வந்ததாம். நெல்வயல்கள், தென்னை, வாழை, கமுகு தோப்புகள் என்று பசுமை கொழிக்கும் இயற்கைச் சூழல் கொண்ட தொக்கூர் கிராமத்தில் நடுநாயகமாக ஸ்ரீசுப்பிரணியர் ஆலயம் அமைந்துள்ளது. கேரளக் கோயில்கள் போன்றே ஓடுகள் வேயப்பட்ட அகலமான முன் மண்டபம், பலிபீடம், கொடிமரம், திண்ணைகளோடு கூடிய உள் மண்டபம், தீர்த்த மண்டபம் என்ற நான்கு கால் மண்டபம், கருவறை மற்றும் விசாலமான திருச்சுற்று ஆகியவற்றோடு அமைந்துள்ள அழகிய ஆலயம் இது.

இக்கோயிலின் மிக அரிதான வட்டவடிவகருவறை, பாணிபீடம் என்றும், வட்ட ஸ்ரீகோயில் என்றும் அழைக்கப்படுகிறது.கருவறையும், அதன் எதிரே  உள்ள தீர்த்த மண்டபமும் (நமஸ்கார மண்டபம்) ஒரே  உயரத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில் மன்னரால் நியமிக்கப்பட்ட வாஸ்து சிற்பியின் திறமையைக் காட்டுவதாக இவை அமைந்துள்ளன. கருவறையில் முருகப் பெருமான் இரண்டு கரங்களோடு, நின்ற திருக்கோலத்தில் அருட்பாலிக்கிறார். பொதுவாக சுப்பிரமணியர் திருமேனியின் முன் வலக்கை அபய ஹஸ்தமாக அமைந்திருப்பது வழக்கம். ஆனால் இங்கு, ஸ்ரீ சுப்பிரமணியர் தன் வலக்கை விரல்களை உட்புறமாக மடக்கி, முஷ்டியாகவும், இடக்கரத்தை இடது தொடை மீது வைத்தும் (கடி ஹஸ்தம்) அருட்பாலிக்கிறார். அறுபடைவீடுகளில் ஒன்றான திருச்செந்தூர்
திருத்தலத்தில் மூலவரான ஜயந்திநாதர் தன் வலக்கையை வைத்திருப்பது போன்றே மிகவும் பழமை வாய்ந்த இந்த தொக்கூர் தலத்திலும் அமைந்திருப்பது குறிப்பிடத் தக்கது.

ஒரே கல்லில் பிரபாவளியுடன் வடிக்கப்பட்ட இந்த ஸ்ரீசுப்பிரமணியரின் காலடியில் ஐந்து தலை நாகமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தனது வலது கரத்தை முஷ்டியாக முருகப் பெருமான் வைத்திருப்பது, அனைத்து உலகங்களையும் அவர் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதைத் தெரிவிப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர். கருவறையின் பின்புறம் ஏராளமான நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நாகர் சந்நதி தனியே உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி மாதம் மகா ஸ்கந்த ஷஷ்டியையொட்டி எட்டு நாட்களுக்கு பிரம்மோற்சவம் இத்தலத்தில் நடைபெறும்.சஷ்டிக்கு முதல் நாள் பஞ்சமி அன்று, நாகர் சந்நதியில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறுகின்றன. மேலும் சர்ப்பதோஷங்கள் விலக ஆஸ்லேஷ பலி, சர்ப்ப சம்ஸ்காரம், சர்ப்பபலி போன்ற வழிபாடுகளையும் பக்தர்கள் மேற்கொள்கின்றனர்.

சஷ்டி நாளன்று நடைபெறும் திருத்தேர் உற்சவத்தில் இம்மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் 50000 பக்தர்களுக்கும் மேலாகக் கலந்து கொள்கின்றனர். அப்போது பக்தர்கள் வெள்ளியினாலான கண்மலர், உடல் உறுப்புகளை காணிக்கை செலுத்துவதோடு, அங்கப் பிரதட்சணமும் செய்கின்றனர். ஆலயத்திற்கு வெளியில் உள்ள புஷ்கரணியில் புனித நீராடி  ஸ்ரீசுப்பிரமணியரை வழிபட்டால் சரும நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை. ரதோற்சவம் முடிந்தபின், உற்சவ மூர்த்தியை கருவறைக்குள் எழுந்தருளச் செய்து, கருவறைக் கதவுகளை அடைத்து விடுகிறார்கள். உற்சவத்தின்போது ஏற்பட்ட களைப்பு நீங்க ஸ்ரீசுப்பிரமணியர் ஏகாந்தமாக ஓய்வு எடுப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர். கதவுகளுக்குக் காப்பிடும் இந்த சடங்கினை “கபாட பந்தனம்”  என்று அழைக்கின்றனர்.

மறுநாள் அதிகாலை கருவறைக் கதவுகள் திறக்கப்படும்போது ஏராளமான பக்தர்கள் கூடி தரிசனம் செய்கின்றனர். கபாட உத்கடனம் என்ற, காலையில் நடைபெறும் இந்தச் சடங்கில் கலந்துகொண்டு முருகப் பெருமானை தரிசித்தால் பக்தர்களின் அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேறும் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.அடுத்து மஹா பூஜை என்ற விரிவான வழிபாடு செய்யப்பட்டபின் பக்தர்கள் துலாபார காணிக்கை செலுத்துகின்றனர். இரவு பல்லக்கு சேவையோடு பிரம்மோற்சவம் இனிதே நிறைவு பெறுகிறது. தட்சிண கன்னட மாவட்டத் தலைநகரான மங்களூருவிலிருந்து 25 கி.மீ. தொலைவில் மங்களூருஹலேயங்காடி சாலையில் தொக்கூர் அமைந்துள்ளது. மங்களூருவிலிருந்து தொக்கூருக்கு பேருந்து வசதிகள் உள்ளன. ஆலயம் காலை 5 முதல் 12 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலயத் தொடர்புக்கு தொலைபேசி எண்:  08242283198         
          
விஜயலட்சுமி சுப்பிரமணியம்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-04-2019

  20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • iyesumakal11

  இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2019

  18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • chinaautoshow

  சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்