SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாயின் சொல்லுக்காக தனிப் பிறவி

2018-08-27@ 16:54:12

ஞானியர் தரிசனம் - 23

திருவிசநல்லூரில் வேங்கடராமன் எனும் பாலகனை சத்குரு என்றே அழைத்து வந்தார்கள். ஏனெனில், பாலகனுக்குரிய எந்தச் சாயலும் அவரின் நடவடிக்கைகளில் தெரியவில்லை. விளையாடும் வயதில் வினை அறுக்கும் தியானத்தில் ஆழ்ந்தார். அட்சரங்களை படிப்பதைவிட அழிவிலா பிரம்மத்தை கூறும் கிரந்தங்களை படித்துக் கொண்டிருந்தார். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை எனும் முதுமொழியானது அவரின் விஷயத்தில் உண்மையாயிற்று. ஏனெனில், தந்தையே குருவாகி அமர்ந்து மந்திரங்களை கற்றுக் கொடுத்தார்.  ஒருசமயம் போஜசாம்பு என்கிற காவியத்தை சொல்லிக் கொடுத்துக் கொண்டே  வந்தார். அயோத்தியா காண்டத்தில் ஸ்ரீராமர் வனவாசத்திற்கு செல்லும் பகுதியை படிக்கும்போது கண்களில் நீர் தளும்பிற்று. அவரின் அகக் கண்களில் அந்தக் காட்சியும் ஓடிற்று. ஸ்ரீ ராமர் மரவுறி தரித்து கையில் கோதண்டம் தாங்கி கானகத்திற்கு செல்லத் தயாரானார்.

அயோத்தி நகரம் இச்செய்தியை கேள்வியுற்று உறைந்தது. தசரதர் துவண்டார். கைகேயின் கட்டளையை கேட்டறிந்த அரண்மனை இருண்டது. அரண்மனையின் வாயிலில் அயோத்தி நகரமே குவிந்தது. ஆனால், அன்றளர்ந்த தாமரையாக ராமரின் முகம் கோடி சூரியனாகப் பிரகாசித்தது. சூர்ய சகோதரரான லட்சுமணர் ஸ்ரீ ராமரின் திருவடியை ஒட்டி நடக்க, சீதாப்பிராட்டியார் இணையாக நகர மூவரும் அரண்மனை வாயிலில் நின்ற கோலம் கண்டு அயோத்தி நகரமே கண்ணீரால் நனைந்தது. ஒவ்வொருவருக்கும் தனித்தனியே சென்று ஈரேழு வருடங்கள்தானே என்று எளிமையாய் பேசினார். ஆனால், அவர்கள் இதயம் இன்னும் கனத்தது. கோசலையின் அருகே ராமப்பிரபு வந்து நின்றார். தாய் தழுதழுத்தாள். என்ன கேட்பது என்று தெரியாது திகைத்தபடி நின்றிருந்தாள். குணக் குன்றான தன் மகனை கண்களில் நீர் திரள பார்த்தாள். மெல்ல பேச ஆரம்பித்தாள்.

‘‘தந்தையின் வாக்கை தட்டலாகாது எனும் தர்மத்தை தழைக்க வைக்க கானம் பரிபாலனத்திற்காக காடு செல்கிறாயா ராமா. ஈரேழு ஆண்டுகள் என்று பேசுகிறாயே, இரு நாழிகைகூட நீ இல்லாத இப்புவியில் நான் என் காலத்தை எப்படி நகர்த்துவேன். காடு...காடு... என்கிறார்களே அங்கு ஏன் செல்ல வேண்டும். அமுதுண்ணும் திருவாயால் கிழங்கும், காயும் கலந்து எப்படி உண்பாய். எங்கேனும் உஞ்சவிருத்தி எடுத்து பாகவதக் கோலம் பூண்டு வாசம் செய்யலாகாதா ராமா. தினமும் உன்னை பார்ப்பேனல்லவா’’ என உருகிப் பேசினாள். ஸ்ரீ ராமர் கோசலையைப் பார்த்துச் சிரித்தார். இவள் கோருவது வரம். தந்தையிட்ட கட்டளையை நிறைவேற்றி தாயின் வரத்தை பூர்த்தி செய்வோம். ஆனால், எப்போது என்று எண்ணியபடியே காட்டை நோக்கி நகர்ந்தார். ராமகாவியம் அடர்த்தியாய் வளர்ந்தது. யுகங்கள் கடந்த சத்தியமாய் எல்லோருக்குள் ராம நாமமாய் ஒலித்தது. சத்திய சந்தனாய் சகலராலும் கொண்டாடப்பட்டார்.

அதுபோலவே, அந்தத் தாயின் வரம் நிறைவேறும் காலம் மிக அருகே திரண்டு வந்தது. அவள் கோரிய வரம் ஸ்ரீ ராமர் மனுஷ்யராய் தன்னை வெளிப்படுத்திய பரம்பொருள். அதுபோல தன் தாயான கோசலை கைபிடித்து கேட்ட உத்தம வரமான உஞ்சவிருத்தி எனும் பாகவத தர்மத்தை நடத்திக் காட்ட பரம பாகவதராய், எளியவருக்கு எளியோராய், ஞானச் செல்வத்தில் வரியோருக்கு வாரிக்கொடுக்கும் வள்ளலாக அன்று தானே ஸ்ரீராமராக இருந்ததும் ஒரு கணம் காலதேச வர்த்தமானங்களை தாண்டி அவருள் புரண்டெழுந்தது. அவருள்ளிருந்து ஆமாம்... ஆமாம்... நீ அப்போது கோசலைக்கு வாக்கு கொடுத்தாய். உஞ்சவிருத்தி பாகவதராக வருவேனென என்று திடநிச்சயமாக அக்குரல் கூறியது. சத்குரு சுவாமிகளின் அகம் மறைந்து தான் யாரென அவருள் பெருஞ் சித்திரம் தோன்றியது. அவருள் கனவாகவும் இல்லாமல் நனவாகவும் இல்லாமல் தானே ராமனெனும் தூய உணர்வு நிலையில் நின்றார்.

அந்த உணர்வு நிலையில் நின்றபோது நடந்த சம்பவங்களனைத்தும் படம்போல் ஓடி நின்றது. இந்த யுகத்தின் மேல் மனத்தில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது. கோடியில் ஒருவருக்குத்தான் இது சாத்தியம். எதற்காகப் பிறந்திருக்கிறோம்? எதன் தொடர்ச்சி நாம்? இப்போது எதன் பொருட்டு உடல்தாங்கி வந்திருக்கிறோம்? இனி தான் எந்த தர்மத்தை ஸ்தாபிப்பதற்காக காரியங்களை இயற்ற வேண்டுமென்று தெளிவாக உணர்ந்திருப்பார்கள். அப்படித்தான் சத்குரு சுவாமிகளும் உணர்ந்தார். மற்றொரு சமயம் சம்பூரண ராமாயணத்தில் ஆரண்ய காண்டத்தை தந்தையார் கற்றுக் கொடுக்கும்போது, ‘‘லட்சுமணா கொண்டு வா என்னுடைய தனுசை.  நான் இப்போதே ராவணனை சம்ஹரித்து விட்டு வருகிறேன்’’ என்று எழுந்தார். காலங்களை மறந்தார். ஆவேசம் வந்தவர்போல் துள்ளினார்.
சத்குரு சுவாமிகளின் தந்தையார் கைகளை கூப்பிக் கொண்டார். ‘‘ராமச்சந்திரமூர்த்தி தாங்களின் உக்கிரத்தை குறைத்துக் கொள்ளுங்கள்’’ என்றார். மெல்ல இந்த யுகத்திற்கு மீண்டார். அமைதியானார். ராமாம்ச அவதாரமான சத்குரு சுவாமிகளை கண்ட தந்தையார் அகமகிழ்ந்தார்.

சத்குரு சுவாமிகளின் தாயார் மெல்ல போதேந்திர சுவாமிகளைப்பற்றியும் ஸ்ரீதர அய்யாவாளை பற்றியும் கூறக்கூற தான் செய்ய வேண்டிய விஷயங்கள் அனைத்தும் அவர்கள் இருவருக்குள்ளும் பொதிந்துள்ளதாக உணர்ந்தார். சகல சாஸ்திரங்களையும் கற்றாலும் அதன் மையமாக இருப்பது ஆத்மாவை அறிதலெனும் தன்னை அறிதலேயாகும். அப்படி தன்னை அறிதலுக்குண்டான மார்க்கமே நாம ஜப யோக யக்ஞமாகும் என்று மிகத் தெளிவாக இருந்தார். கோபால பாகவதரிடமே நாம உபதேசத்தைப் பெற்று தினமும் லட்சத்து எண்ணாயிரம் முறை ஜபித்து வந்தார். ஒருமுறை தன்னுடைய தந்தையார் அருகேயுள்ள மணஞ்சேரி கிராமத்திற்கு சென்று ஒருவருடைய வீட்டில் சிரார்த்தம் செய்துவரப் பணித்தார். சத்குரு சுவாமிகள் கருப்பூர் எனும் கிராமத்திலுள்ள விநாயகர் கோயிலில் அமர்ந்து நாம ஜபத்தை துவக்கி தன்னுள் ஆழ்ந்தார். பேரனுபூதி அங்கு அவருக்கு சித்தித்தது. தன்னை மறந்து கிடந்தவர் மெல்ல மாலையில் கண்விழித்த போது தான் ஒருவருடைய வீட்டிற்குச் சிரார்த்த கர்மா செய்ய வேண்டிய கடமையை மறந்ததை நினைவு கூர்ந்தார்.

வேறு வழியில்லாது திருவிசநல்லூருக்கு திரும்பினார். தந்தையாரிடம் நடந்ததை கூறினார். மகனின் நிலையை நன்கறிந்தவர் உடனே மணஞ்சேரிக்கு புறப்பட்டார். யாருடைய வீட்டிற்கு சிரார்த்தம் செய்ய வேண்டி தன் மகன் செல்ல மறந்தாரோ அவரே எதிர்பட்டார். சத்குரு சுவாமிகளின் தந்தையார் வருத்தம் தெரிவித்தார். ‘‘எதற்கு நீங்கள் வருத்தம் தெரிவிக்கிறீர்கள். உங்கள் மகன் வந்து மிக நேர்த்தியாகவும் அழகாகவும் நடத்திக்கொடுத்தாரே’’ என்றபோது சத்குரு சுவாமிகளின் தந்தையாருக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. ’’ இல்லத்திற்கு வந்து நடந்தைக் கூறினார். சத்குரு சுவாமிகள் ராமா... ராமா... என்று தன்னையே தான் ஆத்ம பூஜைபோல வணங்கி நின்றார். கண்களில் நீர் வழிய நின்றார். இப்படிப்பட்ட மகனை பெற நான் என்ன தவம் செய்தேன் என்று மெய்சிலிர்த்து நின்றார்.  காலங்கள் நகர்ந்தன. என் சத்குருவான ராமனுக்கு மணம் புரிய வேண்டுமென தந்தையார் விரும்பினார். ஜானகி என்கிற திருப்பெயரிலேயே விசேஷமான குணங்கள் கொண்டவளாக விளங்கினாள். உஞ்சவிருத்தி எனும் பெரும் சம்பிரதாயத்தை தொடங்க வேண்டிய நேரமும் கூடி வந்தது.

கிருஷ்ணா
 
(ஞானியர்  தரிசனம் தொடரும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • newyork

  நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

 • singaporebirds

  சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

 • turkey

  துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

 • climate

  ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

 • 25-06-2019

  25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்