SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாரெங்கும் ஒளிபரப்பும் பராசக்தி!

2018-08-24@ 15:17:45

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன் - 7

நம்பினோர் கெடுவதில்லை!
நான்கு மறைத் தீர்ப்பு!
அம்பிகையைச் சரண் புகுந்தால்
 அதிக வரம் பெறலாம்!

- என்று பாடுகிறார் மகாகவி பாரதியார்! அம்பிகையைச் சரண் புகுந்து, அதிசயமாக முழு நிலவை அமாவாசை அன்றே காணப்பெற்ற பெருமைக்கு உரியவர்  அபிராமிபட்டர். ஆசை, கவலை, அச்சம் சூழ்ந்த நம் இதயவொளியைப் பிரகாசிக்க வைப்பவள் தானே அவள்! அப்படிப்பட்ட அருள்வடிவமான அன்னையை  திருக்கடவூர் தலத்தில் எழுந்தருளும் தேவியை, அபிராமியை மனம், மொழி, மெய்யால் வழிபட்ட மகான் அபிராமி பட்டர். இரவு பகல் என எப்போதும் சக்தியின்  சந்நதியிலேயே சரணாகதி அடைந்த அவரை ஊர் மக்கள் போற்றிக் கொண்டாடினர்.

அபிராமி பட்டர் அடைந்த பெருமையைக் கண்டு மனம் பொறுக்காத சிலர் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர், மது, மாமிச நுகர்ச்சி மிக்கவர் என பழி சுமத்தினர்.  இச்சூழ்நிலையில் தை அமாவாசை அன்று சமுத்திர ஸ்நானம் செய்ய சரபோஜி மன்னர் காவிரிப்பூம்பட்டினம் வந்தார். அலை கடலில் நீராடி விட்டு அருகே  இருக்கும் திருக்கடவூர் தேவியைத் தரிசித்தார். அப்போது ஊரார் சிலர் சொல்லும் வண்ணம் அர்ச்சகர் அபிராமி பட்டர் ஒழுக்கநெறி குன்றியவரா என்று அறிய  அவரிடம் மன்னர்  என்ன ‘திதி இன்று?’ என்று கேட்டார்.

தேவியின் திருமுக மண்டலத்தையே சிந்தையில் எப்போதும் எண்ணும் பட்டர், இன்று ‘பெளர்ணமி திதி’ என்று பதில் தரவும், சரபோஜி மன்னர், தான்  சந்தேகப்பட்டது சரிதான் என்று எண்ணினார். ஆனால் தன் உண்மையான பக்தனை கைவிடுவாளா பராசக்தி? நிலை உணர்ந்து அபிராமி பட்டர் மனம் உருகி  அந்தாதி பாடினார். தேவியின் திருவருளால் உடன் ஆகாயத்தில் வெண்ணிலவு முழு வட்டமாய் பிரகாசித்தது. பட்டொளி வீசி அமாவாசை இரவை, பகல் போல்  ஆக்கிய சந்திரனால் மன்னரின் சந்தேக இருளும், பழி தூற்றிய ஊர் மக்கள் சிலரின் பொறாமை இருளும் அடியோடு அகன்றன.

சக்தி, சக்தி, சக்தி என்றே சொல்லு! - அவள் சந்நிதியிலே தொழுது நில்லு!

- என்ற அருளாளர்களின் வாக்கிற்கேற்ப திருக்கடவூர் அம்பாளின் கருவறைக்கு முன்பு நின்றபடியே ‘உடல் குழைய, என்பெலாம் நெக்கு உருக, விழிநீர்கள்  ஊற்றென வெதும்பி ஊற்ற’, ‘நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து’ அபிராமி பட்டர் அருவித் தொடராக  அந்தாதி பாடினார். சிற்றிலக்கிய வகையில் சிறந்த ஒன்றாகக் கருதப்படும் அபிராமி அந்தாதியைக் கட்டளைக் கலித்துறை எனும் அற்புதமான அரிய பாடல்  வகையில் ஆற்றோட்டமாகப் பாடினார் அர்ச்சகர் அபிராமி பட்டர்.

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வு உடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயம் என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே!
துணையும் தொழும் தெய்வமும் பெற்றதாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்,
பனிமலர்ப் பூங்கணையும் கருப்புச் சிலையும் மென் பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுரசுந்தரி ஆவது அறிந்தனமே!

ஒவ்வொரு பாடலின் இறுதிப் பதமே அடுத்தடுத்த பாடலின் ஆரம்ப சொல்லாக அமைந்து ‘உதிக்கின்ற’ என்ற தொடக்கமே நூறாவது பாடலின் நிறைவாக  அமைய, அந்தம், ஆதி இல்லாத அபிராமியை அந்தாதியால் துதித்தார் அபிராமிபட்டர். அவிச்சின்ன தைல தாரையாக, பக்தி மழையாகப் பொழியப்பட்ட அபிராமி  அந்தாதியில் அடங்கியிருக்கும் அமுதத் துளிகளை அருந்தி மகிழ நமக்கு ஆயுள் போதாது. ‘உதிக்கின்ற செங்கதிர்’ என்று ஆரம்பிக்கும் ஒரு சொற்றொடரே  நம்முள் உருவாக்கும் எண்ண அலைகள் ஒன்றா, இரண்டா! ஆறு கோணங்களில் அச்சொற்றொடரின் அர்த்தத்தைப் பார்க்கலாம்!

1. ‘என் கஷ்டம் தீரவே தீராதா? எங்கள் குடும்பத்திற்கும், எனக்கும் எப்போது விடிவு காலம் பிறக்கும்?’ என்று ஏங்கித் தவிக்கும் அன்பர்கள் அபிராமி  அந்தாதியைப் பக்தியுடன் பாராயணம் செய்தால் அவர்கள் வாழ்வில் இருள் நீங்கி விடிவு காலம் பிறக்கும் என்று கட்டியம் கூறுகிறது அந்தாதியின் ஆரம்பச்  சொற்றொடரான ‘உதிக்கின்ற செங்கதிர்’!

2. நாம் வாழும் இந்த பூமி சூரியனிலிருந்து வெடித்துச் சிதறிய ஒரு சிறு பகுதிதான். அப்பகுதியின் சூடு பல்லாண்டுகளுக்குப் பிறகு தணிந்து ஆற ஆற பின்பு தான்  மக்கள் வாழும் நிலப்பரப்பாக அதுவே மாறியது என்கிறது விஞ்ஞானம். எனவே அறிவியல் நோக்கில் இந்த அண்டத்திற்கு அன்னை சூரியன்தான். அவ்வாறே  உலக உயிர்களுக்கெல்லாம் தோற்றுவாயாக, தொடர்ந்த தாயாக விளங்கும் அம்பிகையைக் குறிப்பிடும் உவமைச் சொற்றொடர்தான் ‘உதிக்கின்ற செங்கதிர்’.

3. சூரியன் தொட முடியாத தூரத்தில் உயரத்தில் இருந்தாலும் தான் கிரணங்களால் கீழே உள்ள பூமிக்குப் புத்துணர்ச்சியை ஊட்டுகிறது. உயிர் அணுக்கள்  ஒவ்வொன்றிலும் புகுந்து சக்தி அளிக்கின்றது! அவ்வாறே அம்பிகை மூவர்க்கும், தேவர்க்கும் முதல்வியாய், மணித் வீபவாஸினியாய் மகோன்னத நிலையில்  இருந்தாலும், இரக்கம் மிகுந்து இறங்கி, அடியவர்கள் பலருக்கும் அருள் புரிகிறாள். ஆகவே அவள் உதிக்கின்ற செங்கதிர்!

4. இளங்காலையில், அருணோதய நேரத்தில் நம் இரண்டு கண்களால் உதயசூரியனைப் பார்க்க முடியும். அதன் கதிர்கள் விடியற்காலையில் நம் விழிகளை  உறுத்தாது. அம்பிகையும் அது போன்று தன் பக்தர்களை சோதிக்க மாட்டாள். அளவற்ற கருணையால் இரங்கி வந்து பக்தர்களைக் காப்பாள். அடியார்களைச்  சோதனை செய்து பிறகே இறைவன் ஆட்கொள்வான் என்பதை அறுபத்துமூன்று நாயன்மார்கள் கதைகள் மூலம் நாம் அறிவோம்.

அனைவர் வரலாற்றிலும் பாருங்கள்! சோதிக்கும்போது சிவபெருமான் மட்டுமே மாறுவேடத்தில் வருவார். அம்பிகை அப்போது சிவனுடன் சேர்ந்து வந்தாலும்  பக்தரை சோதிக்க உடன்பட மாட்டாள்! ஆனால் அந்த அடியவர்க்குத் தரிசனம் தரும்போது சிவனுடன் சக்தி இணைவாள்! ஆகவே பக்தர்களை சோதிக்க  உடன்படாது அருள்தர மட்டுமே காட்சி நல்கும் அம்பாள் கண்களை உறுத்தாத ‘உதிக்கின்ற செங்கதிர்’ என்பது உண்மை ஆகின்றதல்லவா!

5. மீண்டும் மீண்டும் பார்த்தாலும் அப்போதைக்கப்போது புதுவித அழகாய் தரிசனம் காட்டுவாள் தேவி. இளங்காலை நேரத்தில் வைகறைச் சூரியனின் வனப்பும்  அப்படிப்பட்டதே! தீராத அழகோடு திரும்பத் திரும்பப் பார்க்க வைக்கும் தேஜஸோடு கீழைவானில் சூரியன் சுடர் விடுவதால் அழகுக்கு ஒருவரும்  ஒவ்வாதவல்லிக்கு ‘உதிக்கின்ற செங்கதிர்’ என்று அரிய பட்டத்தை அளிக்கின்றார் அபிராமி பட்டர்.

6. ‘காண்பார் யார்? கண்நுதலால் காட்டாக் காலே’ என்கிறது திருமுறை. ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்று பாடுகிறார் மாணிக்கவாசகர்.  தெய்வத்தின் காட்சியை அந்த தெய்வத்தின் அனுக்கிரகம் இருந்தால்தான் நாம் பெற முடியும். வானத்தில் வலம் வரும் சூரியனை நாம் விளக்கெடுத்துச் சென்று  வெளிச்சம் ஏற்படுத்தியா விழிகளால் காண்கிறோம்? அப்படி அல்லவே! சூரியன் ஒளியிலேயே சூரியனைப் பார்க்கின்றோம்! இத்தன்மை போலவே அன்னையின்  பேரருள் பெற்றே அந்த அம்பிகையை வழிபடுகின்றோம்! எனவே தான் அவளை ‘உதிக்கின்ற செங்கதிர்’ என்கின்றார் அபிராமிபட்டர்.

ஆழமாகவும், அகலமாகவும், நுட்பமாகவும் ஆய்வு ரீதியில் இலக்கிய அனுபவங்களோடு இணைந்து பார்த்தால் அபிராமி அந்தாதியின் ஒவ்வொரு பதமும் ஒரு நூறு  அர்த்தங்களை நமக்குப் புரிய வைக்கின்றது. அம்பிகையின் தோற்றமே அத்தகையதுதான்! ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக பல தோற்றங்களில்  பளிச்சிடுகிறார் அபிராமி அன்னை என்கிறார் பட்டர். இமாசலவேந்தனால் வளர்க்கப் பெற்று கைலாய வேந்தனாகத் திகழும் சிவபெருமானுக்கு இன்னுயிர்  துணைவியாய் அமையப் பெற்ற பார்வதி கதம்பவனத்தில் குயிலாகவும், இமயமலைச் சாரலில் ஓங்கார வடிவில் தோகை விரித்து ஒயிலாக ஆடும் மயிலாகவும்,  அற்புதமாக இதழ் விரிக்கும் செந்தாமரை மலரில் சிறந்த அன்னப் பறவையாகவும், ஆகாயப் பரப்பில் உதிக்கின்ற செங்கதிராகவும் பன்முகமாகக் காட்சி தருகிறாள்  என்று பாடுகிறார்.

குயிலாய் இருக்கும் கடம்பாடவி இடை; கோல இயல்
மயிலாய் இருக்கும் இமயாசலத்து இடை; வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில்; கமலத்தின் மீது அன்னமாம்;
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த
கனங்குழையே!

வைகறைப் பரிதிபோல வனப்புடன் விளங்கும் அம்பிகையை அனுதினமும் ஆராதித்தால் ஒவ்வொரு நாளும் நம் வாழ்வில் ஒளிமயமாகத் திகழும். எண்ணிய  எண்ணங்கள் அனைத்தும் ஈடேறப் பெற்று வளமுடன் நம்வாழ்வு திகழ பராசக்தியைப் பிரார்த்திப்போம்.

அபிராமிப் பீடு
அன்றாடம் பாடு
அருள் மணக்கும் காடு
ஆகும் உன் வீடு

- என்று பாடுகிறார் அண்மைக்காலத்தில் வாழ்ந்த காவியக் கவிஞர் வாலி.

- திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

(இனிக்கும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-07-2019

  22-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-07-2019

  21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்