SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள்

2018-08-24@ 15:15:33

71. ஹிரண்யகர்பாய நமஹ (Hiranyagarbhaaya namaha)

பாண்டவர்களின் வனவாசக் காலத்தில் அர்ஜுனன் சிவபெருமானிடமிருந்து பாசுபத அஸ்திரம் பெறுவதற்காகத் தவம் புரியச் சென்று விட்டான். மற்ற பாண்டவர்களும் திரௌபதியும் இமயமலையை நோக்கி யாத்திரை மேற்கொண்டார்கள். பத்ரிநாத்தைக் கடந்து அவர்கள் வடக்கே செல்ல முற்பட்டபோது, “இது குபேரனின் தோட்டம் இருக்கும் இடம். இதைக் கடந்து யாரும் உள்ள செல்லக் கூடாது!” என்றோர் அசரீரி ஒலித்தது. அதனால் இமயமலை அடிவாரத்தில் அர்ஷ்டிஷேணர் என்ற ரிஷியின் ஆசிரமத்தில் பாண்டவர்களும், திரௌபதியும் தங்கி, அர்ஜுனனின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள்.

ஒருநாள் கருடன் குபேரனின் தோட்டத்திலிருந்த பொய்கையில் வாழும் ஒரு பாம்பை வேட்டையாட வந்தார். அவரது சிறகுகளின் அசைவினால் வீசிய பெருங்காற்றில் குபேரனின் தோட்டத்திலுள்ள மரங்கள் வேரோடு சாய்ந்தன. அம்மரங்களின் இலைகள், மலர்கள் எல்லாம் நாலா திசையிலும் பறந்து சிதறி விழுந்தன. அர்ஷ்டிஷேணரின் ஆசிரம வாசலிலும் பலவித வண்ணப் பூக்கள் வந்து விழுந்தன. அவற்றின் அழகாலும் நறுமணத்தாலும் ஈர்க்கப்பட்ட திரௌபதி பீமனிடம், “இது போன்ற பூக்கள் எனக்கு வேண்டும்!” என்று கேட்டாள்.

“இதோ கொண்டு வருகிறேன்!” என்று சொன்ன பீமன், குபேரனின் தோட்டத்தினுள்ளே நுழையப் புகுந்தான். “இது குபேரனின் தோட்டம், உள்ளே யாரும் நுழையக் கூடாது!” என அசரீரி ஒலித்தது. ஆனால் அதைப் பொருட்படுத்தாது பீமன் தோட்டத்தினுள் நுழைந்து பூக்களைப் பறித்தான். அதைக் கண்டு வெகுண்ட குபேரனின் படைவீரர்கள் பீமனைத் தாக்கினார்கள். ஆனால் அவர்கள் அனைவரையும் வீழ்த்தினான் பீமன். சண்டையின்போது பீமன் சிங்கம் போல முழங்கினான். அந்த முழக்கம் அர்ஷ்டிஷேணரின் ஆசிரமம்வரை ஒலித்தது.

பீமனின் கர்ஜனையைக் கேட்ட தர்மராஜன், விஷயம் என்ன என்று அறியும் பொருட்டு மற்ற பாண்டவர்களையும் அழைத்துக் கொண்டு குபேரனின் தோட்டத்துக்குள் சென்றார். குபேரனின் நெருங்கிய நண்பனான மணிமான், பீமனுடன் போர் புரிந்து மாண்டு போனான். குபேரனே நேரடியாகப் போர்க்களத்துக்கு வந்த போது, தர்மராஜனும் அங்கே வந்து விட்டார். வெறும் பூக்களுக்காக ஏற்பட்ட அப்போரை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டார். மணிமானும் மற்ற வீரர்களும் பீமனால் கொல்லப்பட்டத்தை எண்ணி தர்மராஜன் மிகவும் வருந்தினார்.

அவரைத் தேற்றிய குபேரன், “மணிமானைக் கொன்றவன் பீமன் அல்லன், மணிமானின் கர்வமே ஆகும். முன்னொரு சமயம் நானும் மணிமானும் புஷ்பக விமானத்தில் வானில் பறந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது கீழே ஒரு மலையுச்சியில் அகஸ்தியர் தவம் புரிந்து கொண்டிருந்தார். அவரது சிறிய உருவத்தையும் உடல் நாற்றத்தையும் கண்டு ஏளனம் செய்த மணிமான், அவர் மேல் எச்சில் உமிழவும் செய்தான். அப்போதே அகஸ்தியர் மணிமான் பீமனால் கொல்லப்படுவான் என்று சாபம் கொடுத்தார். அதுமட்டுமின்றி அவனது செயலைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்த நானும் என் சேனையில் பாதியை இழப்பேன் என்றும் சபித்தார்.

இப்போது அந்த சாபம் பலித்துள்ளதே தவிர பீமன் மேல் எந்தத் தவறுமில்லை!” என்று கூறினான். தர்மராஜனை அன்றிரவு தன்னுடன் தன் இருப்பிடத்திலேயே தங்கச் சொன்னான் குபேரன். அடுத்தநாள் காலை திரௌபதி கேட்ட பூக்களுடன் பாண்டவர்கள் அர்ஷ்டிஷேணரின் ஆசிரமத்துக்குத் திரும்பினார்கள். அப்போது அவர்களின் குலகுருவான தௌம்ய ரிஷியும் அங்கே வந்திருந்தார். தௌம்யரை வணங்கிய தர்மராஜன், பூக்களுக்காக நடந்த போரைக் குறித்தும், மணிமானின் மரணம் குறித்தும் அவரிடம் கூறி வேதனைப் பட்டார். அப்போது தௌம்யர், “வருந்தாதே! இவை அனைத்தும் யாருடைய லீலை தெரியுமா?” என்று கேட்டார்.

“யாருடைய லீலை?” என்று தர்மராஜன் வினவ, அவரை அந்த ஆசிரமத்தின் பின்புறத்துக்கு அழைத்துச் சென்ற தௌம்யர், ஆகாயத்தை நோக்கிக் கைகாட்டினார். இந்திரன், வருணன், பிரம்மா உள்ளிட்டோரின் இருப்பிடங்களை அவர் தர்மராஜனுக்குக் காட்டினார். அதன்பின் பிரம்மாவின் சத்திய லோகத்துக்கும் மேலே பொன்நிறமான ஓர் உலகைக் காட்டினார். “அதென்ன பொன்நிறமான உலகம்?” என்று கேட்டார் தர்மராஜன்.“அதுதான் திருமாலின் இருப்பிடமான வைகுந்த லோகம். அது பொன்நிறமாக இருப்பதால் ‘ஹிரண்ய’ என்று அழைக்கப்படுகிறது.

கருவினுள் குழந்தை இருப்பதுபோல, அந்த வைகுந்தமாகிய ஹிரண்யத்துக்குள் திருமால் உறைவதால் அவர் ‘ஹிரண்யகர்ப:’ என்றழைக்கப்படுகிறார். அந்த ஹிரண்யகர்பனின் லீலை தான் இத்தனையும். ஒரு ரிஷியை அவமதிப்பது பெரும் பாபம் என்ற நீதியை உலகுக்கு உணர்த்த மணிமானையும், பீமனையும் கருவிகளாக அவர் பயன்படுத்திக் கொண்டுள்ளார். எனவே இது குறித்து நீ வருந்தாதே!” என்றார். தௌம்யர் கூறியது போல ஹிரண்யமாகிய வைகுந்தத்தில் உறைவதால் ‘ஹிரண்யகர்ப:’என்று திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 71-வது திருநாமம். “ஹிரண்யகர்பாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு ஸ்வர்ண தானம் செய்த பலன் கிடைக்கும்.

72. பூகர்பாய நமஹ (Bhoograbhaaya namaha)

மதுரையை ஆண்ட ராஜசேகரப் பாண்டியன், தீவிர சிவபக்தன். அவன் பரதநாட்டியக் கலையைத் தவிர மீதமுள்ள 63 கலைகளிலும் தேர்ச்சி பெற்று விளங்கினான். இறுதியில் பரதக்கலையையும் கற்க முற்பட்டபோது, அவனுக்குக் காலில் கடும் வலி உண்டானது. “ஒருநாள் பரதம் ஆடும் நமக்கே இவ்வளவு வலி உண்டாகிறதே. நடராஜர் எப்போதும் இடக்காலை மேலே தூக்கியபடியும், வலக்காலைக் கீழே ஊன்றியபடியும் நாட்டியம் ஆடிக்கொண்டே இருக்கிறாரே, அவருக்கு எவ்வளவு வலிக்கும்!” என்று எண்ணினான். உடனே சிவனிடம் சென்று,

“நின்றதாள் எடுத்து வீசி எடுத்த தாள் நிலம்மீது ஊன்றி
இன்றுநான் காண மாறி ஆடி என் வருத்தமெல்லாம்
பொன்று மாசெய்தி அன்றேல் பொன்றுவல் என்னா அன்பின்
குன்றனான் சுரிகை வாள்மேல் குப்புற வீழ்வேன் என்னா”

என வேண்டினான். அவனுடைய பக்தியை மெச்சிய சிவனும், இடக்காலைக் கீழே ஊன்றி, வலக்காலை மேலே தூக்கி மாற்றி ஆடிக் காட்டினார் என்ற வரலாறு போலவே வைணவத்திலும் ஒரு வரலாறு உண்டு. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ளது “திரு இட எந்தை (திருவிடவெந்தை)” என்னும் திவ்ய தேசம். அங்கே தனது இடது தோளில் பூமிதேவியை ஏந்தியபடி வராகப் பெருமாள் தரிசனம் தருகிறார். இங்குள்ள உற்ஸவருக்கு நித்யகல்யாணப் பெருமாள் என்று திருநாமம்.

மாமல்லபுரத்தில் அரண்மனை அமைத்து ஆண்டு வந்த அரிகேசரி என்ற பல்லவ மன்னர் திருவிடவெந்தை வராகரிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார். ஒவ்வொரு முறையும் மாமல்லபுரத்தில் இருந்து வராகரைத் தரிசிக்க திருவிடவெந்தைக்கு மன்னர் வருகையில், தம் குதிரையை இரண்டு முறையாவது மாற்றுவார். ஏனெனில் ஒரே குதிரையால் அவ்வளவு தூரம் மன்னரைச் சுமந்து செல்ல முடியவில்லை என்பதுதான்! ஒருமுறை வராகனிடம் மன்னர், “எம்பெருமானே என் குதிரையால் சில மணிநேரங்கள் கூட என்னைச் சுமக்க முடியவில்லை.

ஆனால் நீ உன் மனைவியான பூமிதேவியை உன் இடது தோளில் சுமந்து கொண்டே இருக்கிறாயே, உனக்கு வலிக்காதா? இடது தோளிலிருந்து மாற்றி வலது தோளில் அவளை நீ சுமக்கலாமே!” என்று கேட்டார். அதற்கு விடையளித்த வராகர், “பெண்கள் தங்கள் குழந்தைகளைப் பத்து மாதம் கருவில் சுமக்கிறார்களே! அவர்களுக்கு அப்போது எவ்வளவு வலி உண்டாகும். அவர்களால் குழந்தையை வேறு இடத்துக்கு மாற்றி வைத்துக் கொள்ளவும் முடியாதே. எனினும் தாயுள்ளத்தால் வலியைப் பொறுத்துக்கொண்டு குழந்தையைச் சுமக்கிறார்கள் அல்லவா?

அதுபோலவே உலகுக்கெல்லாம் தாயான பூமிதேவி எப்போதும் அனைத்து உலகங்களையும் உயிர்களையும் பாரமாகக் கருதாமல் தன்மேல் சுமந்து கொண்டே இருக்கிறாள். அந்தப் பெண்மையின் ஏற்றத்தை உலகுக்கு உணர்த்தவே அனைத்துலகுக்கும் அன்னையான பூமிதேவியை நான் எப்போதும் சுமந்து கொண்டே இருக்கிறேன்! இதில் எனக்கு எந்த வலியும் வேதனையும் இல்லை!” என்றார். “எம்பெருமானே! வலியும் வேதனையும் உனக்கு ஏற்படாமல் இருக்கலாம். ஆனால் இந்நிலையில் உன்னைக் காணும் உன் பக்தனான அடியேனுக்கு ஏற்படுகின்றதே.

நீ இந்தக் கோலத்திலேயே தொடர்ந்து இருந்தால் இனி திருவிடவெந்தைக்கு வந்து உன்னைக் காண என் மனம் இடம் கொடுக்காது!” என்றார் மன்னர். “அப்படியாயின் நீ என்னைத் தேடி இவ்வூருக்கு வர வேண்டாம். உன் பக்திக்கு உகந்து உனது ஊரான மாமல்லபுரத்திலேயே பூமிதேவியை என் வலது தோளில் சுமந்தபடி உனக்குக் காட்சி தருகிறேன்!” என்றார் வராகர். மாமல்லபுரத்திலேயே வலதுதோளில் பூமிதேவியை ஏந்தியபடி அரிகேசரிக்குக் காட்சியளித்தார். எம்பெருமான் தன் இடது தோளில் பூமியைச் சுமந்த க்ஷேத்ரம் திருவிடவெந்தை என்றழைக்கப்பட்டது போல,

அரிகேசரி மன்னருக்காக வலது தோளில் பூமியைச் சுமந்தபடி காட்சி தந்த க்ஷேத்ரம் திருவலவெந்தை என்று பெயர் பெற்றது. மாமல்லபுரத்திலுள்ள அந்தத் திருக்கோவிலில் திருவிடவெந்தை பெருமாளின் கண்ணாடிப் பிரதிபிம்பம் போல வலது தோளில் பூமிதேவியுடன் திருமால் காட்சி தருகிறார். அனைத்து உர்களுக்கும் தாயாக இருந்து அவர்களைச் சுமப்பவள் பூமிதேவி. அந்த பூமிதேவியை எப்போதும் தன் தோள்களில் சுமந்திருப்பதால் திருமால் ‘பூகர்ப:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 72-வது திருநாமம். “பூகர்பாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் உள்ளத்திலுள்ள பாரங்களை எல்லாம் எம்பெருமான் போக்கியருளுவான்.

73. மாதவாய நமஹ (Maadhavaaya namaha)

மகத தேசத்து அரசனான ஜராசந்தன் விதர்ப்ப தேசத்தின் இளவரசியான ருக்மிணியைத் தன் மகன் சகதேவனுக்கு மணமுடித்து வைக்க விரும்பினான். ஆனால் கிருஷ்ண பக்தனான சகதேவன் அதற்கு இசையவில்லை. “ஜகன்மாதாவான லட்சுமியின் அம்சம்போல ருக்மிணி விளங்குகிறாள். எனவே திருமாலின் அவதாரமான கண்ணன் தான் அவளுக்கு ஏற்ற கணவனாவான்!” என்று சகதேவன் தன் தந்தையிடம் கூறினான். தன் நண்பனான டிம்பனிடம் ஜராசந்தன், “என் மகன் சகதேவன், கண்ணனை நாராயணனின் அவதாரம் என்கிறானே, அது உண்மையா?” என்று கேட்டான்.

டிம்பன், “கண்ணன் மதுராவில் சிறைச்சாலையில் பிறக்கும் போதே நான்கு கரங்களுடனும், சங்கு-சக்கரத்துடனும் தோன்றியதால் அவனைத் திருமாலின் அவதாரம் என்று எல்லாரும் பேசிக் கொள்கிறார்கள்!” என்று கூறினான். ஹம்சன் என்ற நண்பன், “அப்படியென்றால் சேதி தேசத்து இளவரசன் சிசுபாலன் பிறக்கும்போது நான்கு கரங்களோடும் மூன்று கண்களோடும் பிறந்தானே! கண்ணன் வந்து அவனைத் தூக்கிய பின்னர்தான் அவனது மூன்றாவது கண்ணும், இரண்டு கைகளும் மறைந்தன. சிசுபாலன் திருமால், சிவன் இருவரின் அம்சம் என்றே கொள்ளலாமே!” என்றான்.

சிசுபாலன் கண்ணனை வெறுத்து ஏசிக்கொண்டே இருப்பவன் என்பதை அறிந்த ஜராசந்தனுக்கு அவன் மேல் எல்லையில்லாத அன்பு உண்டானது. தனது மகனாகவே சிசுபாலனைக் கருதத் தொடங்கினான். ருக்மிணிக்கும் சிசுபாலனுக்கும் திருமணம் செய்து வைக்க விழைந்தான் ஜராசந்தன். ருக்மிணியின் அண்ணனான ருக்மியும் அதை ஆதரித்தான். ஆனால் ருக்மிணி, அவளது தந்தை பீஷ்மகன், அவளது மற்ற உறவினர்கள் உள்ளிட்டோர் கண்ணனுக்கு ருக்மிணியை மணமுடித்துத் தர விழைந்தார்கள். ஜராசந்தன் பீஷ்மகனைப் பூதனையின் சகோதரியான ஜராவிடம் அழைத்துச் சென்றான்.

அவளிடம் ருக்மிணியின் ஜாதகத்தைக் கொடுத்து, “இவளுக்கு ஏற்ற மணமகன் யார்?” என்று வினவினான். அவள், “இவளுக்கு வரப்போகும் மணமகன் நான்கு கைகளுடன் பிறந்தவன். அவனுடைய பெயர் பாலன் என்று முடியும். அவனுக்கு மா, த என்ற எழுத்துகளைக் கொண்ட மற்றொரு பெயரும் உண்டு!” என்றாள். சிசுபாலன் நான்கு கைகளுடன் பிறந்தான். பாலன் என்று அவன் பெயர் முடிகிறது. மா, த எனும் எழுத்துகளைத் தன்னகத்தே உடைய ‘மாகதன்’ என்ற பெயரும் அவனுக்கு உண்டு. அதனால் சிசுபாலனே ருக்மிணிக்கு மணவாளனாகப் போவதாக ஜரா கூறுகிறாள் என எண்ணி மகிழ்ந்தான் ஜராசந்தன்.

அவன் பேச்சை ஏற்று பீஷ்மகனும் சிசுபாலனுக்கும் ருக்மிணிக்கும் திருமணம் செய்து வைக்க இசைந்தான். திருமண ஏற்பாடுகள் வெகு விமரிசையாக நடந்து கொண்டிருந்தன. ஆனாலும் சிசுபாலனுக்குள் ஒரு பயம் இருந்துகொண்டே இருந்தது. கண்ணன் எந்நேரத்திலும் வந்து ருக்மிணியை அபகரித்துச் செல்ல வாய்ப்புண்டு என நடுங்கிக் கொண்டே இருந்தான். அவன் அஞ்சியபடியே, திருமணத்துக்கு முந்தையநாள் விதர்ப்ப தேசத்துக்கு வந்த கண்ணன், தன் குலதெய்வத்தை வணங்கிவிட்டு அரண்மனைக்குத் திரும்பிக் கொண்டிருந்த ருக்மிணியை அபகரித்தான். ஜராசந்தன், சிசுபாலன், ருக்மியின் சேனைகள் தேரில் செல்லும் கண்ணனையும் ருக்மிணியையும் பார்த்து வாய் பிளந்தார்களே ஒழிய அவர்களால் யுத்தம் செய்ய முடியவில்லை.

“கண்ணாலம் கோடித்துக் கன்னி                    
தன்னைக் கைப்பிடிப்பான்
திண்ணார்ந்து இருந்த சிசுபாலன்
தேசழிந்து
அண்ணாந்து இருக்கவே ஆங்கவளைக்
கைப்பிடித்த பெண்ணாளன்...”

- என்று நாச்சியார் திருமொழியில் இச்சரிதத்தை ஆண்டாள் அழகாகப் பாடுகிறாள். தானே ருக்மிணியின் கைப்பிடிக்கப் போவதாக சிசுபாலன் கனாக் கண்டு கொண்டிருக்க, “திருமணம் உனக்கு என்று நீ நினைக்கலாம், ஆனால் ‘திருமகள்’ எப்போதுமே எனக்கு மட்டும்தான்!” என்று கூறி ருக்மிணியைக் கண்ணன் கவர்ந்து சென்றதாக ஆண்டாள் அனுபவித்துச் சொல்கிறாள். இப்படி ருக்மிணியைக் கவர்வதற்கான பயிற்சியாகத் தான் இளம் வயதில் கண்ணன் வெண்ணெய் திருடினான் போலும்!

விதர்ப்ப தேசத்து எல்லையைத் தாண்டும்போது, கண்ணன் ஜராசந்தனிடம் ஒரு ஓலையைக் கொடுத்து விட்டுச் சென்றான். அதைப் பிரித்துப் பார்த்தான் ஜராசந்தன். “ஜரா சொன்னது சரிதான். நான் பிறக்கும் போதே நான்கு கைகள் கொண்ட அற்புதக் குழந்தையாகப் பிறந்தேன். எனக்குக் கோபாலன் என்ற பெயர் உண்டு - அது பாலன் என்று முடியும் பெயர். மா, த ஆகிய எழுத்துக்களை உடைய ‘மாதவன்’ என்ற பெயரும் எனக்குண்டு. மாதவனான நான் மட்டுமே அவளை மணக்க முடியும்!” என்று அதில் எழுதப்பட்டிருந்ததைக் கண்டான் ஜராசந்தன்.

லோகமாதாவான மகாலட்சுமிக்கு ‘மா’ என்று திருநாமம். அந்த மகாலட்சுமிக்குக் கேள்வனானபடியால் திருமால் “மாதவ:” என்றழைக்கப்படுகிறார். அதனால் தான் கண்ணன், “நான் மாதவன் ஆனபடியால் நான் மட்டுமே அவளை மணக்க முடியும்!” என்று அந்த ஓலையில் எழுதியிருந்தான். “மாதவ:” என்பது விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 73-வது திருநாமமாக அமைந்துள்ளது.“மாதவாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அடியார்களுக்குச் சிறந்த மணவாழ்க்கை அமையும் படி மாதவன் அருள்புரிவான்.

74. மதுசூதனாய நமஹ (Madhusoodanaaya namaha)

திருமால் தனது உந்தித் தாமரையில் பிரம்ம தேவரைப் படைத்து அவரைப் படைப்புக் கடவுளாக நியமித்து வேதங்களையும் உபதேசித்தார். வேதம் கற்றதாலும், படைப்புக் கடவுள் என்ற பதவி பெற்றதாலும் பிரம்மாவுக்கு ஆணவம் உண்டானது. அந்த ஆணவத்தைப் போக்க விழைந்த திருமால் ஒரு லீலை புரிந்தார். திருமாலின் காதுக் குரும்பையிலிருந்து (ear wax) இரண்டு அசுரர்கள் தோன்றினார்கள். இருவரும் திருமாலின் நாபிக் கமலத்தில் இருந்த பிரம்மாவிடம் வந்தார்கள். முதல் அசுரனைத் தொட்டுப் பார்த்த பிரம்மா, அவன் மிருதுவாக இருப்பதைக் கண்டு, ‘மது’ என்று அவனை அழைத்தார்.

அடுத்த அசுரன் மிகவும் கடினமானவனாகவும், கரடுமுரடாகவும் இருப்பதைக் கண்டு, ‘கைடபன்’ என்று அவனை அழைத்தார். இருவரோடும் பிரம்மா விளையாடத் தொடங்கினார். அப்போது இருவரும் பிரம்மாவிடமிருந்த வேதங்களைத் திருடிச் சென்றார்கள். வேதம் பறிபோனதை உணர்ந்த பிரம்மா, அவற்றை மீட்டுத் தரும்படி திருமாலிடம் வேண்டினார்.“என்னைப் படைத்தவனான நீ இருப்பதை மறந்து விட்டு, நான் வேதங்களைக் கற்றவன், நானே படைப்புக் கடவுள் என்ற கர்வத்துடன் இருந்து விட்டேன். இப்போது இவர்களின் மூலம் நீ எனக்கு நல்ல பாடம் புகட்டி விட்டாய்.

நீ தான் இவர்களிடமிருந்து வேதத்தை மீட்டுத் தந்தருள வேண்டும்! உன்னைத் தவிர வேறு புகலிடம் ஏதும் அடியேனுக்கு இல்லை!” என்று பிரார்த்தித்தார் பிரம்மா. பிரம்மாவின் சரணாகதிக்குத் திருவுள்ளம் உகந்த திருமால், குதிரை முகத்துடனும் மனித உடலோடும் ஹயக்ரீவராக அவதாரம் செய்தார். பாதாள லோகத்தில் ஒளிந்திருந்த மது, கைடபரைப் பிடித்து, அவர்களைத் தன் தொடையில் வைத்து நசுக்கி வதம் செய்து, வேதங்களைப் பிரம்மாவுக்கு மீட்டுக் கொடுத்தார். அதுமட்டுமின்றி, பிரம்மாவின் பக்திக்கு உகந்து, தான் இதுவரை எடுத்த அவதாரங்களையும் இனி எடுக்கவுள்ள அவதாரங்களையும் அவருக்குக் காட்டி அருளினார்.

இறுதியாக, மகாலட்சுமியை மடியில் அமர்த்தியபடி லக்ஷ்மீஹயக்ரீவராகக் காட்சி தந்தார். இவ்வாறு மது, கைடபரை ஹயக்ரீவர் வதைத்ததை நினைவூட்டும் விதமாகத் தினமும் ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதத்தில் “மாதஸ் ஸமஸ்த ஜகதாம் மதுகைடபாரே: வக்ஷோ விஹாரிணீ” என்று சொல்கிறோம். வேதங்களைப் பிரம்மாவுக்கு மீட்டுத்தந்து வேத ஞானத்தை அளித்ததால், கல்வி ஞானத்தை அருளும் தெய்வமாக ஹயக்ரீவர் போற்றப்படுகிறார். வேதங்கள் பிரம்மாவின் நினைவில் அல்லவோ இருந்தன! ஓலைச் சுவடியின் வடிவில் இல்லையே. அப்படியிருக்க, வேதங்களை மது-கைடபர் பிரம்மாவிடமிருந்து எப்படித் சென்றிருக்க முடியும்?

மிருதுவாக இருந்ததால் மதுவைப் பிரம்மா தொட்டவுடன், அவருடைய புலன்கள் யாவும் அவன்பால் ஈர்க்கப்பட்டு விட்டன. பிரம்மாவின் சிந்தை முழுமையாக மதுவிடம் சென்றமையால், அவரது சிந்தையிலிருந்த வேதம் பறிபோனது. திருமால், மதுவை வதம் செய்து பிரம்மாவின் சிந்தையில் மீண்டும் வேத ஞானம் உதிக்கும்படி அருள் புரிந்தார். வேதத்தை மது- கைடபர் திருடிச் சென்றதாக இதுவே உருவகப்படுத்தப்பட்டுள்ளது. பிரம்மாவின் சிந்தை மதுவை நோக்கிச் சென்றதால் வேத ஞானத்தை மறந்ததைப் போல நம்முடைய புலன்களும் சிந்தையும் உலக விஷயங்களில் ஈடுபட்டு,

அதன் விளைவாக இறைவனை மறந்து விடுகின்றன. இறைவனே வந்து மது, கைடபரை வதம் செய்ததுபோல, அவனே நம் புலன்களையும் அடக்கி தன் பால் அவை செல்லும்படி அருள்புரிகிறான். புலன்களுக்கு மது என்று பெயர். அடியார்களின் புலன்களான மதுவை மற்ற விஷயங்களில் ஈடுபடவிடாது, தன்பால் ஈர்த்துக் கொள்வதால், திருமால் “மதுஸூதன:” என்று அழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 74-வது திருநாமம். “மதுஸூதநாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் புலன்களைத் திருமால் தன் பால் ஈர்த்துக்கொண்டு, அவர்களுக்கு நிம்மதியை அருள்வார்.

75. ஈச்வராய நமஹ (Eeshwaraaya namaha)

கும்பகோணம் ஸ்ரீசார்ங்கபாணி ஸ்வாமி கோவிலுக்கு நாதமுனிகள் எழுந்தருளினார். அப்போது பெருமாள் சந்நதியில் ஒரு பக்தர், ஆராவமுதே என்று தொடங்கித் தேனினும் இனிய பத்து பாடல்களைப் பாடுவதைக் கேட்டுப் பரவசம் அடைந்தார் நாதமுனிகள். அதில் இறுதியான பாடல்,

“உழலை என்பின் பேய்ச்சி முலையூடு அவளை உயிருண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே”

- என்று அமைந்திருந்தது. அவர் அருகில் சென்ற நாதமுனிகள், “ஆயிரம் பாடல்களுள் இவை பத்து என்று பாடினீர்களே. மீதமுள்ள 990 பாசுரங்களையும் நீங்கள் ஓத முடியுமா? அவற்றைக் கேட்க மிகவும் ஆவலாக உள்ளேன்!” என்றார். “எனக்கு இந்தப் பத்துப் பாடல்கள் மட்டுமே தெரியும். அவை எங்கள் ஊர்ப் பெருமாளைக் குறித்து இயற்றப்பட்டவை. மீதமுள்ள பாடல்கள் வேண்டுமென்றால், நீங்கள் இவற்றை இயற்றிய நம்மாழ்வாரின் ஊரான ஆழ்வார் திருநகரியில் விசாரித்துப் பாருங்கள்!” என்றார். தன் ஊரான காட்டுமன்னார் கோவிலுக்குத் திரும்ப வந்த நாதமுனிகள்,

தம் தந்தை ஈச்வர முனிகளிடம் நடந்தவற்றைச் சொன்னார். ஈச்வர முனிகள், “நம்மாழ்வார் மட்டுமல்ல, மொத்தம் பன்னிரண்டு ஆழ்வார்கள் உள்ளார்கள். அவர்கள் எழுதிய பாடல்கள் அனைத்துமே மிகவும் இனியவை, பக்தியையும் ஞானத்தையும் வளர்ப்பவை. அதனால் நீ அனைத்து ஆழ்வார்களின் பாசுரங்களையுமே மீட்டெடுக்க வேண்டும்!” என்றார். “ஆனால் ஆழ்வார்களுள் ஒவ்வொரு வரும் வாழ்ந்த காலம் வேறு, ஊர்கள் வேறு. அனைத்தையும் மீட்டெடுத்துத் தொகுப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்லவே!” என்றார் நாதமுனிகள்.

ஈச்வர முனிகள், “திருமாலுக்கு ஈச்வரன் என்று பெயர். ஈச்வரன் என்றால் இவ்வுலகில் வாழும் உயிர்கள் மட்டுமின்றி, வைகுந்த லோகத்திலுள்ள முக்தி அடைந்த முக்தாத்மாக்கள் மீதும் முழுமையான ஆளுமை செலுத்தவல்லவன் என்று பொருள். அனைத்து இடங்களிலும், அனைவரிடமும் ஆளுமை செலுத்த வல்ல ஈச்வரனான ஆராவமுதன் உன் மூலமாக ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் உலகுக்குக் கிடைக்க வேண்டுமென முடிவெடுத்து விட்டான். முயற்சிகளை அவன் செய்வான். நீ அவன் கையில் ஒருகருவி தான். அவன் மேல் நம்பிக்கை வைத்து நீ நம்மாழ்வாரின் ஊருக்குச் செல்!” என்றார்.

ஆழ்வார் திருநகரியை அடைந்த நாதமுனிகள், நம்மாழ்வாரின் பாசுரங்கள் பற்றி அங்குள்ளோருக்குத் தெரியுமா என விசாரித்துப் பார்த்தார். யாருக்கும் எதுவும் தெரியவில்லை. நம்மாழ்வாரின் சீடரான மதுரகவி ஆழ்வாரின் ஊரான திருக்கோளூரை அடைந்த நாதமுனிகள், மதுரகவிகளின் குலத்தில் பிறந்த பராங்குச தாசர் என்பவரை அணுகினார். அவர், “நம்மாழ்வாரைக் குறித்து எங்கள் மூதாதையரான மதுரகவிகள் இயற்றிய ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ எனத் தொடங்கும் பதினொரு பாசுரங்களை மட்டுமே நான் அறிவேன். அவற்றைப் பன்னிரண்டாயிரம் முறை சொன்னால் நம்மாழ்வாரின் தரிசனம் கிடைக்கும்!” என்றார்.

தாமிரபரணி நதிக்கரைக்குச் சென்று ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ பாசுரங்களைப் பன்னீராயிரம் முறை ஜபித்தார் நாதமுனிகள். வைகுந்தத்திலுள்ள திருமால், தனது படைத்தளபதியான விஷ்வக்சேனரை அழைத்து, “நீர்தான் முன்னம் பூமியில் நம்மாழ்வாராக அவதரித்து வேதங்களை எளிய தமிழில் வழங்கினீர். இப்போது நீரே நாதமுனிகளிடம் சென்று பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரம் பாசுரங்களையும் வழங்கிவிடுங்கள்!” என்று ஆணையிட்டார். அதன்படி நம்மாழ்வாராக நாதமுனிகளின் முன்னே விஷ்வக்சேனர் தோன்றினார். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை அவருக்கு அளித்தார்.

நாதமுனிகள் கும்பகோணத்துக்கு வந்து, தன் பயணத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொடுத்த ஸ்ரீசார்ங்கபாணி பெருமாளைத் தரிசித்துப் பரவசம் அடைந்தார். இப்படித்தான் தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்யப் பிரபந்தம் நாதமுனிகளால் மீட்கப்பட்டது. ஈச்வர முனிகள் சொன்னது போல, லீலாவிபூதியான இவ்வுலகம், நித்திய விபூதியான அவ்வுலகம் அனைத்திலும் வாழும் உயிர்களின் மேல் ஆளுமை செலுத்த வல்லவனாகத் திருமால் விளங்குவதால் ‘ஈச்வர:’ என்றழைக்கப்படுகிறார். அந்த ஆளுமையோடு விஷ்வக்சேனரை அவர் நாதமுனிகளிடம் அனுப்பியதால் தான் நாலாயிரமும் நமக்குக் கிட்டியது. இந்த ஆளுமைத் திறனைக் கூறும் ‘ஈச்வர:’ என்ற திருநாமம் ஸஹஸ்ரநாமத்தின் 75வது திருநாமமாக அமைந்துள்ளது. “ஈச்வராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல ஆளுமைத் திறனைத் திருமால் அருளுவார்.

- திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-07-2019

  17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • DongriBuildingCollapse

  மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

 • KyrgyzstanSlapping

  ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

 • ChangchunZoologicalPark

  உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • 16-07-2019

  16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்