SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கமலாத்மிகா

2018-08-24@ 10:09:54

மிகவும் தூய்மையான, ஸ்படிகம் போன்ற பளபளப்பான நீல நிறத் திருமேனியுடன், தாமரைக் கண்களுடன், கௌஸ்துபம் ஒளிரும் திருமார்பில் வனமாலி எனும் மாலையணிந்து, பட்டுப் பீதாம்பரம் தரித்து, அலங்கார பூஷிதனாய் வைகுண்டத்தில் வாசம் செய்பவர் திருமால். சத்வ குணத்தோடு சங்கு, சக்கரம், கதை, வாள், வில் எனும் ஐந்து ஆயுதங்களைக் கையில் ஏந்தி பக்தர்களைக் காக்கும் பரந்தாமன் திருமால். இந்தத் திருமாலுக்கு சகல விதங்களிலும் உதவும் சக்தியே மகாலட்சுமி எனப் போற்றப்படுகிறாள்.அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகியாம் ஆதிபராசக்தி எடுத்த தசமகாவித்யையின் வடிவங்களில் 10 வது வித்யையாக கமலாத்மிகா எனும் மகாலட்சுமி போற்றப்படுகிறாள்.

‘இந்த தேவி தங்க நிறத்தினள். இமயம் போன்று உயர்ந்த நான்கு யானைகளின் துதிக்கையில் உள்ள பொன்மயமான அம்ருத கலசங்களால் அபிஷேகம் செய்விக்கப்படுபவள். நான்கு திருக்கரங்கள் கொண்டவள். ஜொலிக்கும் ரத்னாபரணங்கள் அணிந்து, வெண்பட்டாடை உடுத்தி, மேல் இரு கரங்களில் அன்றலர்ந்த தாமரை மலர்களை ஏந்தி, கீழிரு திருக்கரங்களில் அபயம், வரதம் தரித்தவள். சர்வாலங்கார பூஷிதையாகக் காட்சி தருபவள். கருடனைத் தன் வாகனமாகக் கொண்டவள். தாமரை மலரில் அமர்ந்தருள்பவள். மகாலட்சுமியான இவளே சகல சம்பத்துகளுக்கும் அதிபதி. புன்முறுவல் பூத்த நகையினள். மனத் திருப்தியளிப்பவள். சிருங்காரம் ததும்பும் வண்ணம், பொலிவு கொண்ட பேரழகி. திருமாலின் போக சக்தி’ என ஸௌபாக்ய லக்ஷ்மி உபநிஷத்   எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘இந்த தேவி ஒவ்வொரு மன்வந்தரத்திலும் ஒவ்வொரு விதமாக அவதாரம் செய்கிறாள். பூமி எனும் ப்ருத்வியிலிருந்து (மண்) அவதாரம் செய்து சீதையானாள். தீயில் அவதரித்து தடாதகை எனும் மீனாட்சியானவளும் இவளே. தாமரை மலரில் பிறந்து, பார்க்கவ முனிவரால் வளர்க்கப்பட்டு, பார்கவியானாள். திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தபோது அதிலிருந்து மகாலட்சுமியாக வெளிப்பட்டாள். சகல செல்வ வளங்களுக்கும் இவளே அதிபதி. தங்கநிற ஆடையை அணிந்தவள். மேன்மை, செழிப்பு எல்லாவற்றின் பிறப்பிடமும் இவளே. பார்ப்பதற்கு சாது போல் இருந்தாலும் மஹிஷாசுரனை அஷ்ட தசபுஜ துர்க்கையாக மாறி, கொன்றவள்’ என பெருமையுடன் கூறுகிறது, தேவி மகாத்மியம் எனும் துர்க்கா சப்தசதி. பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை என்னும் கூற்றுப்படி இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருளை தாராளமாக வழங்கும் தயாநிதி இத்தேவி. பொருள் வளம் கொழிக்க இத்தேவியின் திருவருள் அவசியம்.

இத்தேவியை லட்சுமி, ஸ்ரீகமலா, கமலாலயா, பத்மா, ரமா, நளினீ, யுக்மகரா, மா, க்ஷீரோதஜா, அம்ருதா, கும்பகரா, விஷ்ணுப்ரியா எனும் பன்னிரண்டு நாமங்களினால் துதிப்பவரின் அனைத்துத் துன்பங்களும் தீயிலிட்ட பஞ்சு போலாகும்.தனக்கு பிட்சையிட ஏதுமின்றி வீட்டில் இருந்த ஒரு நெல்லிக்கனியைத் தயக்கத்துடன்  அளித்து கலங்கி நின்ற ஒரு ஏழைப் பெண்மணியின் நிலைக்கு இரங்கி கனகதாராஸ்தவம் எனும் அற்புதத் துதியால் மகாலட்சுமியைத் துதித்தார், ஆதிசங்கர பகவத்பாதர். அதனால் மனம் குளிர்ந்த மகாலட்சுமி அந்தப் பெண்மணியின் வீட்டில் தங்க நெல்லிக்கனிகளை மழையெனப் பெய்வித்தாள்.ஸ்ரீமன்நிகமாந்த மகாதேசிகன், ஓர் ஏழைப் பிரம்மச்சாரியின் திருமணத்திற்காக, திருமகளைப் போற்றும் ஸ்ரீஸ்துதி எனும் ஒரு அரிய துதியைப் பாடி பொன்மழை பொழியச் செய்தார்.

ஸ்ரீம் பீஜத்தில் உறைபவள் இவள். அழகு, செல்வம், சந்தோஷம், சக்தி, அதிகாரம் போன்றவற்றை அருள்பவள். மன்மதனின் தாய். பாற் கடலில் உதித்தவள். சந்திரனின் சகோதரி. கமலா என்பது தாமரையைக் குறிக்கும். தாமரையில் அமர்ந்து தாமரையைத் தாங்கும் திருமகளாகிய கமலாத்மிகாவை உலகில் அனைவரும் அவள் கருணைக்காக வழிபடுகின்றனர். பூக்களில் தாமரைக்கு ஒரு விசேஷமான தன்மையுண்டு. சூரியனின் ஒளிக்குத் தகுந்தாற்போல் தன்னை ஆக்கிக் கொள்ளுவதுதான் அது. கிழக்கில் சூரியன் தோன்றும்போது மலர ஆரம்பித்து, அவன் ஒளியுடன் தன்னை மாற்றிக்கொண்டு அவன் மேற்கில் மறையும் போது தானும் குவிந்து மூடிக் கொள்ளும். அதனால், உலகிற்கு சக்தியையும் ஒளியையும் வழங்கும் நண்பனிடமிருந்து சக்தியைப் பெறும் தன்மை கொண்டிருக்கிறது, தாமரை. தேவி அதனைக் கைகளில் தரித்து அதன் மேல் அமர்ந்து தன் ஆற்றலை தெளிவுற அறிவிக்கிறாள்.

ஒவ்வொரு துறையிலும் நீக்கமறக் காணப்படும் அழகு இவளின் அருட் கடாட்சமே. கமலாத்மிகாவின் அருள் எந்தப் பொருளை விட்டு நீங்கினாலும் அப்பொருள் உபயோகமற்றதாகவும் பிறரின் வெறுப்பிற்கு உரித்தானதும் ஆகும். கவிகள், சிற்பிகள் போன்றோரிடம் காணப்படும் நுண்ணறிவு இவளுடைய தயவே. லட்சுமியின் கடாட்சம் பெற்றால்தான் பேறுகளைப் பெற முடியும் என்பதை வெங்கடாத்ரீ என்ற மகான் தன் லக்ஷ்மி ஸஹஸ்ரம் எனும் நூலில் உறுதியாகக் கூறியுள்ளார். திருமகளன்றி திருமாலுக்குப் பெருமைகள் இல்லை. ‘ஹரிவக்ஷஸ்தலவாஸினி’ என்று வடமொழியில் இத்தேவி அழைக்கப்படுகிறாள். ‘வடிவாய் நின் வல மார்பில் வாழ்கின்ற மங்கை’ என பெரியாழ்வாரும் குறிப்பிட்டுள்ளார். இத்தேவியின் பெருமைகள் ஸ்ரீஸூக்தத்தின் பதினைந்து ரிக்குகளிலும் போற்றப்படுகிறது.

இவள் நறுமணம் மிகுந்த இடத்தில் வசிப்பதில் ஆர்வம் உடையவள் என்பதை கந்தத்வாராம் எனும் மந்திரம் கூறுகிறது.லட்சுமி கடாட்சம் உள்ளவர்கள் எதையும் சாதிக்க முடியும். பணம் பாதாளம் வரை பாயும் என்பது பழமொழி. அதை ‘துராதர்ஷாம்’ என்ற சொல் குறிப்பிடுகிறது.இவள் அருட் பார்வை பட்டவர்கள் வசிக்கும் இடத்திற்குப் பதினாறு பேறுகளும் தாமே சென்றடையும். அவர்கள் வாழ்க்கை, வனப்பும் கூடி புஷ்டியாகும் என்பதை ‘நித்யபுஷ்டாம்’ எனும் மந்திரம் எடுத்துரைக்கிறது.துர்க்கா ஸுக்தம், ‘துர்காம் தேவீம் சரணமஹம் ப்ரபத்யே’ எனக் கூறுவது போல் ஸ்ரீஸூக்தமும் ‘தாம் பத்மினீம்சரணமஹம் ப்ரபத்யே’ என லட்சுமியை சரணடைய உபதேசிக்கிறது.
ஆனந்தர், கர்தமர், ஸிக்லீதர் போன்றோர் இந்த மகாலட்சுமி மந்திரத்தின் ரிஷிகளாவர். அக்னி பகவான் தேவதை. ஹிரண்யவர்ணம் என்பது பீஜம். காம்ஸோஸ்மிதாம் சக்தியாக கருதப்படுகிறது.

இவளின் அனுக்ரகம் ஏற்பட்டால் அழியா செல்வம், பெரியோர்களிடமும் விஷ்ணுவிடமும் பக்தி, சத்சந்தானம், நற்புகழ், தன&தான்ய, ஐஸ்வர்ய அபிவிருத்தி போன்றவை மென்மேலும் விருத்தியாகும். புகழுடன் பொலிவும் கூடும். பரம்பொருளாம் நாராயணனின் திருமார்பில் உறையும் இவள், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தன்னை உபாசிப்பவர்களுக்கு அருள்கிறாள். திருமால் ராமனாக வந்தபோது சீதையாகவும் கண்ணனாய் வந்தபோது ருக்மிணியாகவும் ஸ்ரீநிவாஸனாய் வந்தபோது பத்மாவதியாகவும் அவதரித்தவள் திருமகளே.வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும் சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமியாகவும் அரசர்களிடம் ராஜ்யலட்சுமியாகவும் குடும்பங்களில் க்ரஹலட்சுமியாகவும் அழகுள்ளவர்களிடம் சௌந்தர்ய லட்சுமியாகவும் புண்யாத்மாக்களிடம் ப்ரீதிலட்சுமியாகவும் க்ஷத்ரிய குலங்களில் கீர்த்திலட்சுமியாகவும் வியாபாரிகளிடம் வர்த்தகலட்சுமியாகவும் வேதங்கள் ஓதுவோரிடம் தயாலட்சுமியாகவும் பொலிபவள் இவளே. அழகின் உறைவிடம்... ஆனந்தத்தின் பிறப்பிடம் இவள்.

மஹாலக்ஷ்மியின் தியானத்தில் மஞ்சள் வண்ண பொன்னாடை தரித்தவளாகவும், செந்தாமரை போன்ற கண்களைக் கொண்டவளாகவும், இரு  தாமரைகள் ஏந்திய கரங்களுடன் அபய வரத முத்திரை தரித்தவளாகவும் நூறு உதய சூரியனின் நிறத்தைக் கொண்டவளாகவும் திருமாலின் திருமார்பில் அமர்ந்தவளாகவும் கூறப்பட்டுள்ளது.  வேங்கடாத்ரி எனும் மகான் தன் லக்ஷ்மி ஸஹஸ்ரத்தில் அம்மா! எதிர்பாராத விதமாக உன் கடைக்கண் பார்வை எவர் மீது விழுகிறதோ அவர் முக்கண்ணனாகவோ அல்லது எண்கண்ணனாகவோ ஆகிவிடுவார். அதாவது ருத்ரனாகவோ, பிரம்மனாகவோ ஆகிவிடுவாராம். உன் கடாக்ஷத்தைப் பெறுகிறவர் தேஹி என்ற சொல்லையே கூற மாட்டார். தேஹி என்றால் கொடு என்றும் சரீரமுடையவன் என்றும் பொருள். அதாவது உன் திருவருள் பெற்றவருக்கு பிறரிடம் யாசகம் கேட்காதவாறு நீ செல்வமளித்து விடுகிறாய். அவ்வாறே மறுபிறப்பே இல்லாதவாறு முக்தியும் தந்து விடுகிறாய் என்கிறார்.

தசமஹாவித்யாவின் பத்தாவது வடிவமான இத்தேவி தாமரை மலரில் அமர்ந்திருக்கும் நான்கு யானைகள் பொற்குடங்களில் உள்ள நீரால் தேவியை அபிஷேகம் செய்கின்றன.வாழ்க்கையில் அமைதி பெறவும், அதிர்ஷ்டம் கிட்டவும் தேவி உபாசகர்கள் இத்தேவியை
ஆராதிக்கின்றனர். நம் வீட்டில் திருமகள் அருள்புரிய வேண்டுமெனில் பசுஞ்சாணம் கொண்டு வாசல் மெழுகிக் கோலமிட்டால் அவள் கட்டாயம் அருள்புரிவாள். அதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது.பசுவின் தேகத்தில் தேவர்கள் அனைவரும் தங்க இடம் பெற்றனர். அனைத்து இடங்களிலும் அனைவரும் இடம் பெற்ற நிலையில் தாமதமாக வந்தாள் திருமகள். கோமாதாவிடம் ‘‘எனக்கும் உன் பவித்திரமான தேகத்தில் இடம் தரக்கூடாதா?’’ எனக் கேட்டாள்.

அனைவரும் இடம்பெறாத இடம் தன் பிருஷ்ட பாகம். அதை எப்படி ஸ்ரீதேவிக்கு அளிப்பது எனத் தயங்கிய பசுவிடம் லட்சுமி, ‘‘உன் தேகம் முழுதுமே பவித்ரம். அதனால் உன்பின்பக்கமாகிய பிருஷ்ட பாகத்திலேயே நான் தங்குகிறேன்’’ எனக்கூறி அங்கே இடமும் பிடித்தாள். அதனால் அங்கிருந்து வரும் கோமியம், பசுஞ்சாணம் போன்றவை புனிதமாகிறது. பசுஞ்சாணியில் திருமகள் வாசம் செய்வதை ‘கரீஷிணிம்’ எனும் சொல் குறிக்கிறது. கோமயத்தைக் கொண்டு மெழுகப்பட்ட இடம் பவித்ரமானதும் லட்சுமி கடாட்சம் பெற்றதாகவும் ஆகிவிடுகிறது. திருமகளை வரவேற்கவென்றே சில வீடுகளில் காலையில் வாசலில் பசுஞ்சாணம் தெளித்துக் கோலமிடுகின்றனர்.

குளிர்ந்த ஒளியைத் தரும் சந்திரன் போன்று பிரகாசிப்பவள். கீர்த்தியுடையவள். தேவர்களால் துதிக்கப்படுபவள். பஞ்ச பூதங்களுக்கும் ஈஸ்வரி என்பதை ‘ஈம்’ பீஜம் குறிக்கிறது. இந்த மகாலட்சுமியைச் சரணடைந்தால் அமங்கலங்களும் அலக்ஷ்மியும் அகலும் என ஸ்ரீஸூக்தம் உறுதியாகக் கூறுகிறது. மகாலட்சுமி நிலைத்திருக்க தினமும் ஸ்ரீஸூக்த ஜபம் செய்யவேண்டும். உண்மையே பேச வேண்டும். தனியாக உப்பையும் வெறும் பாக்கையும் மெல்லக்கூடாது. அழுக்கு ஆடைகள் அணியக்கூடாது. எண்ணெய் தேய்த்துக் கொண்டு உணவு அருந்தக்கூடாது. ஆசார சீலத்துடனும் ஒழுக்கத்துடனும் இருந்து இத்தேவியை உபாசிக்க வேண்டும். உண்மை, வாய்மை, அவதூறு கூறாமை, சோம்பலின்மை போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். வெறும் தரையில் படுத்தும் எண்ணெய் தேய்த்துக் கொண்டேயும் இத்தேவியின் மந்திரத்தை ஜபிக்கக் கூடாது.

(தொடரும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்