SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வரமளித்து வளம் காக்கும் வரலட்சுமி விரதம்!

2018-08-24@ 10:04:55

24.8.2018

ஆன்மிகப் பொருட்களையும், புத்தகங்களையும் பார்வைக்கும், விற்பனைக்கும் வைத்திருந்த கண்காட்சி அது. புவனேஸ்வரி குடும்பத்தினர் அதனைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அன்றுதான் கண்காட்சியின் துவக்க நாள் என்பதால் கூட்டம் அதிகமாகவே இருந்தது. புவனேஸ்வரியின் கண்கள் வழக்கம்போலவே பவானி மாமியைத் தேடின. இதுபோன்ற இடங்களுக்கு மாமி வராமல் இருக்க மாட்டாரே... அதோ, அவள் நினைத்ததுபோலவே மாமி, கையிலிருந்த பை நிறைய புத்தகங்கள், பூஜை பொருட்களை வாங்கிக்கொண்டு வந்து கொண்டிருந்தாள்.‘‘மாமி பர்ச்சேஸ் முடிச்சிட்டீங்க போலிருக்கு. எங்க அப்பா பூஜையறை தோரணங்கள் வாங்கறதுக்காகப் போயிருக்காரு. அவர் வர்றதுக்குள்ள ஏதேனும் விரதம் பத்தி சொல்லிடுங்களேன்.’’ கேன்டீனுக்குள் போய் அமர்ந்தார்கள்.‘‘பேர்தான் வரலட்சுமி விரதமே தவிர, வெறும் செல்வத்தை மட்டும் தர்ற விரதம் இல்லே இது.நல்ல உடல் நலம், நீண்ட ஆயுள், மாங்கல்ய பலம், குழந்தைப்பேறுன்னு எல்லாவகையான நலன்களையும் தரக்கூடியது; வரமாக வாரி வழங்கக்கூடியது.

ஆடி மாசம் வர்ற பவுர்ணமிக்கு முந்தின வெள்ளிக்கிழமையிலே இந்த விரதத்தை மேற்கொள்றது வழக்கம்.சில வருஷத்திலே ஆவணி மாசத்திலேயும் இந்த விரதநாள் வரும்...’’‘‘எப்படி இந்த விரதத்தைச் செய்யறது மாமி?’’ புவனேஸ்வரி கேட்டாள்.‘‘முதல் நாளே வீட்டை நல்லா பெருக்கி, ஈரத்துணியால துடைச்சு சுத்தப்படுத்திக்கோங்க. வீட்டு ஹால்ல கிழக்கு அல்லது மேற்கு பார்த்தபடி தரையிலே ஒரு கோலம் போட்டுக்கோங்க. அந்தக் கோலத்துக்கு மேலே ஒரு பலகையை நல்லா துடைச்சு வையுங்க. இந்த பலகை மேலேயும் ஒரு கோலம் போட்டுக்கோங்க. ஒரு சுத்தமான சொம்பை எடுத்துக்கோங்க. அதுமேலே மஞ்சள் தடவி வெச்சுக்கோங்க. அதுக்குள்ளே அரிசியும் பருப்பும் கலந்து உள்ளே போட்டுக்கோங்க. சொம்புக்குள்ளே கால்பாகம் இருக்கட்டும். துவரம் பருப்பு போடலாம். இரண்டும் சமமாகக் கலந்து சொம்பிலே கால் பாகம் வர்றா மாதிரி போட்டுக்கணும். அதோட கூடவே, கருகமணி, வளையல், சின்னதாக சீப்பு, சின்னக் கண்ணாடி, எலுமிச்சம் பழம், குங்குமம் நிறைந்த குங்குமச்சிமிழ், ரெண்டு இல்லாட்டா மூணு நாணயங்கள்.

அந்த சொம்புக்குள்ளே வெற்றிலை பாக்கையும் போட்டுக்கணும். இப்படி உள்ளே போடற பொருட்களை அவங்கவங்க குடும்ப சம்பிரதாயப்படி பண்ணிக்கலாம். அந்தப் பொருட்களின் எண்ணிக்கை கூட அவங்க அவங்க வழக்கப்படியே இருக்கலாம். சிலபேர் இப்படி முதல்நாள் விரதத்தை ஆரம்பிக்காம, அடுத்த நாள், விரத தினத்தன்னிக்கேகூட ஆரம்பிச்சுப்பாங்க. அதாவது கலசம் வைக்கறதை முந்தின நாளோ விரதத்தன்னைக்கோ செய்யலாம். ஆச்சா... கலசத்துமேல மாவிலைக் கொத்தைச் சொருகி வையுங்க. ஒரு உருண்டையான தேங்காய்க்கு மஞ்சள் பூசி, அதை மாவிலைக் கொத்துக்கு நடுவிலே வையுங்க. தேங்காய்க்கு குங்குமம் வையுங்க. ஒரு மஞ்சள் சரடு எடுத்து அதிலே ஒரு மஞ்சள் கிழங்கைக் கட்டி, அதை கலசச் சொம்பின் கழுத்திலே கட்டுங்க. இப்படி கலசத்தைத் தயார் பண்ணிகிட்டப்புறம், அம்மன் முகத்தை எடுத்து தேங்காய்ல பதிச்சு வெச்சுக்கோங்க. அம்மனுக்கு கருகமணி மாலையை சாத்துங்க.

இரண்டு பக்கமும் தெரியறாப்பல காதோலையையும் சொருகி வையுங்க. கூடவே பூமாலையும் சாத்தலாம். இதுகூட அவரவர் வசதிப்படி பண்ணிக்கலாம்.சிலபேர் தாழம்பூ வெச்சும் அலங்கரிக்கலாம். இந்த கலசத்திலேதான் மகாலட்சுமி எழுந்தருளியிருக்கறதாக ஐதீகம்.’’ ‘‘ஓஹோ...’’ புவனேஸ்வரியின் பார்வையில் ஆச்சரியம்.‘‘அதனால சுவர் ஓரமா, யார் கால் தூசும் படாதபடி வைக்கணும். இதையெல்லாம் பண்ணி முடிச்சப்புறம், கலசத்துக்கு முன்னால விளக்கேத்தி வையுங்க. கலசத்துக்கு கற்பூரம் காட்டுங்க. வெண்பொங்கல் தயார் பண்ணி நைவேத்யம் பண்ணுங்க... இது முதல் நாள் ஏற்பாடு...’’‘‘அடுத்த நாள் என்ன பண்ணணும்?’’‘‘சொல்றேன். அடுத்தநாள்தான் விரத நாள். அன்னிக்குக் காலையிலேயே எழுந்து மஞ்சள் பூசிக் குளிக்கணும். குளிச்சிட்டு, குங்குமம் இட்டுண்டு பூஜையறைக்குப் போங்க. சாமி படத்துக்கு முன்னால ஒரு சின்ன மண்டபம் மாதிரி அமைப்பை ஏற்படுத்திக்கோங்க. இதுக்குன்னு தனியா கார்ப்பெண்டரைக் கூப்பிட்டு பண்ணணும்னு இல்லே. வீட்டில் இருக்கக்கூடிய சின்ன மர முக்காலி ஸ்டூலைக்கூட பயன்படுத்திக்கலாம்.

அதன் மூன்று கால்களிலும் மலர்ச்சரத்தை சுத்தி, மேலே தட்டிலே கோலம் போட்டு அலங்கரிச்சாலே போதும். இந்த ஸ்டூல்ல கோலத்தின் மேலே ஒரு நுனி இலையைப் போட்டு அதன் மேல அரிசியைப் பரப்பி வைச்சுக்கோங்க. சில பேர் நெல்லையும் பரப்பி வைப்பாங்க. மண்டபம் அல்லது மண்டபம் மாதிரி ஸ்டூலை ரெடி பண்ணிட்டீங்க இல்லையா, இப்ப ஹால்ல முந்தின நாளே தயார் பண்ணி வெச்சிருக்கற, அம்மன் முகம் பதிச்ச கலசத்தை இரண்டு சுமங்கலிப் பெண்கள் மெல்ல தூக்கிக்கிட்டு வந்து அரிசி பரப்பின ஸ்டூல் மேல, நடுவிலே வைக்கணும். அம்மன் முகம் கிழக்கு அல்லது மேற்கு பார்த்தாற்போல இருக்கறது நல்லது.இப்போ கலசத்துக்கு புதுசா பூமாலை சாத்தணும். கலசத்துக்கு முன்னால விளக்கேற்றி வையுங்க. இரண்டு சுமங்கலிப் பெண்கள் அந்த அம்மன் கலசத்தைத் தூக்கிட்டு வர்றதுதான் சம்பிரதாயம். அது மட்டுமில்லே, அப்படித் தூக்கிக்கிட்டு வரும்போது, ‘லட்சுமி, ராவே மா இன்ட்டிக்கி...’ன்னு பாடிகிட்டே தூக்கி வர்றதும் ஒரு வழக்கம்தான்.’’

‘‘தெலுங்கு பாட்டு மாதிரி இருக்கே?’’ புவனேஸ்வரி கேட்டாள்.‘’ஆமாம்.அப்படின்னா, ‘லட்சுமித் தாயே என் வீட்டுக்கு எழுந்தருளுவாயே’ன்னு அர்த்தம். இப்ப, அடுத்ததாக நோன்புச் சரடைத் தயார் பண்ணிக்கணும். மெலிதான நூல்ல மஞ்சள் தடவிக்கோங்க. இதுதான் நோன்பு சரடு. சுமாரா ஒரு அடி நீளம்வரை இருக்கலாம். இந்த சரட்டிலே ஒன்பது முடிச்சுகள் போட்டு வெச்சுக்கோங்க. இந்தச் சரடை ஆண்களும் அணியலாம். இந்த நோன்புச் சரடுகளையும் கலசத்தோட வைத்து, ‘என் வீட்டிற்கு வந்திருக்கிற வரலட்சுமி தாயே, என்றைக்கும் எங்கள் வீட்டைவிட்டு நீங்காதிருந்து எங்களுக்குத் தேவையான வரமெல்லாம் தந்து காத்தருள் தாயே’ அப்படீன்னு உளமார வேண்டிக்கோங்க. தெரிஞ்ச லட்சுமி ஸ்லோகங்களையெல்லாம் சொல்லி, தூபம், தீபம், கற்பூரம் காட்டி வழிபடுங்க. சர்க்கரைப் பொங்கல், தேங்காய் கொழுக்கட்டை அல்லது வேறு ஏதாவது இனிப்பை தயார் செய்து, அதை நிவேதனமா படைக்கலாம். அப்புறமா அம்மனை மனசார வேண்டிகிட்டு நோன்பு சரடை எடுத்து பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலது கை மணிக்கட்டிலும் கட்டிக்கலாம். தங்கள் கணவர் கையால தங்கள் கழுத்தில் பெண்கள் கட்டிக்கறதும் இன்னும் சிறப்பாக அமையும். வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிப்பதால் முற்பிறவி பாவமெல்லாம் நீங்கும்.  திருமண பாக்கியம், மாங்கல்ய பலம், குழந்தை செல்வம் மற்றும் எல்லா  ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் இந்த வரலட்சுமி விரதம்...’’ மாமி  முடித்தாள்.                                                          
பிரபுசங்கர்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-04-2019

  20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • iyesumakal11

  இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2019

  18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • chinaautoshow

  சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்