SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரச்சனைகள் தீர்த்து அருள்பாலிக்கும் சிதம்பரேஸ்வரர்

2018-08-23@ 09:52:33

சித்தமெல்லாம் சிவமயமே என்ற பாடலுக்கேற்ப சிவபெருமான் ஒவ்வொரு உயிரின் சிந்தையிலும் நிறைந்திருக்கிறார். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பெயருடன் அருள்பாலிக்கும் பரமேஸ்வரன் விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை அருகே உள்ள திருமங்கலத்தில் சிதம்பரேஸ்வரராக காட்சியளிக்கிறார். நாயகியின் பெயர் சிவகாமசுந்தரி. சுமார் 2500 வருடங்கள் பழமையான படுக்கைக்கல் லிங்கம், நந்தீஸ்வரர், சண்டிகேஸ்வரர் ஆகியவை மட்டுமே இங்குள்ள ஏரிக்கரையில் கிடைத்துள்ளன. 4ம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாக கருதப்படும் இச்சிற்பங்கள் சோழர்கால சிற்பக்கலைக்கு சான்றாக திகழ்கிறது. கடந்த 2006ம் ஆண்டுவரை சிறிய கொட்டகையில் வைத்து சிவலிங்கத்தை வைத்து வழிபட்டு வந்த இவ்வூர் மக்கள் பின்னர் திருப்பணிகள் செய்து பிரமாண்ட ஆலயத்தை எழுப்பி 2010ம் ஆண்டு மே மாதம் 26ம்தேதி கும்பாபிஷேகம் நடத்தினர். கோயிலில் நுழைந்ததுமே 28 அடி உயர கொடிமரம் நம்மை வரவேற்கிறது.

அதையடுத்து நந்தீஸ்வரர் அருள்பாலிக்கிறார். இவர் சூரியநந்தி என அழைக்கப்படுகிறார். அவரை வணங்கி விட்டு உள்ளே சென்றால் சன்னதியில் நடுநாயகமாக லிங்க வடிவில் சிதம்பரேஸ்வரர் மேற்கு நோக்கி வீற்றிருக்கிறார் கங்கையில் உருண்டோடிவந்த சுயம்புலிங்கம். இயற்கையாக உருவானவர் என்பதால் இவரை வழிபட்டால் நினைத்ததெல்லாம் நடந்தேறும் என்பது ஐதீகம். இங்குள்ள இறைவனின் கருவறையும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கருவறையும், சிதம்பரம் நடராஜ பெருமாள் கருவறையும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பதாக பூகோள ரீதியாக கருதப்படுகிறது. இங்குள்ள சிதம்பரேஸ்வரரை கோரக்கர் என்ற சித்தர் பிரதிஷ்டை செய்ததாக தெரியவருகிறது. சிதம்பரேஸ்வரருக்கு முன்பாக அதிகார நந்தி வீற்றிருக்கிறார். அவருக்கு வலதுபுறத்தில் சிவகாமசுந்தரி சாந்தசொரூபியாக எமதிசையாக கருதப்படும் தெற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இதனால் திருமணம் ஆகாதவருக்கு நல்ல மணவாழ்க்கையும், மணமானவருக்கு புத்திர பாக்கியமும் மற்றும் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மகாலட்சுமி, கெஜலட்சுமி ஆகியோரும் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். அடுத்து மகாகணபதி சன்னதி, முருகன் சன்னதி உள்ளது. அவற்றின் அருகிலேயே வில்வம், நாகலிங்கம், மகாவில்வம் மற்றும் திருவோடு மரங்கள் உள்ளன. இக்கோயிலின் ஸ்தல விருட்சமாக கடம்ப மரம் உள்ளது. மகாவில்வ மரத்தில் ஒரு காம்பில் 11 இலைகள் உள்ளது சிறப்பானது. இதனைக்கொண்டு அபிஷேகம் செய்தால் பல வருட பலன்கள் ஒரே நேரத்தில் கிடைக்கும். வழக்கமாக கோயில்களில் நாகசிற்பம் மட்டுமே இடம் பெற்றிருக்கும். இக்கோயிலில் தனி சன்னதியாக அமைத்திருக்கிறார்கள். அடுத்து மூலவர் கருவறைக்கு வலதுபுறம் சனீஸ்வரர் தனி சன்னதியில் ஜேஸ்டா, மந்தா, நீலா ஆகிய 3 மனைவியர்களுடன் அருள்பாலிக்கிறார். கோபுரத்தின் தெற்கில் எமதர்மராஜனும், மேற்கில் விநாயகரும், வடக்கில் ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கிறார்கள். எண்கோண வடிவில் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. சனியின் வாகனமான காகத்துடன், கழுகு வாகனமும் (வடநாட்டில் சனிபகவானுக்கு கழுகு வாகனம் உண்டு) உள்ளது. நடராஜர் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார்.

அவரது சடையில் ராகு, கேது வீற்றிருக்கிறார்கள். தோஷம் போக்கும் வல்லமை இவருக்கு உண்டு. வியாக்ரபாதர், பதஞ்சலி, காரைக்கால் அம்மையார் ஆகியோரும் உடனிருந்து அருள்பாலிக்கிறார்கள். கருவறையை சுற்றிலும் சுவற்றில் தனி சன்னதியாக கோஷ்ட மூர்த்திகள் உள்ளனர். விஷ்ணு துர்க்கை, பிரம்மா, பெருமாள், தட்சணாமூர்த்தி, நர்த்தன விநாயகர் ஆகியோர் கோபுர கலசத்துடன் வீற்றிருக்கிறார்கள். சண்டிகேஸ்வரர் 2500 ஆண்டுகள் பழமையானது தனி சன்னதியில் வீற்றிருக்கிறார்.ஈசானிய மூலையில் தீர்த்தகுளம் உள்ளது. அருங்கோண வடிவில் காணப்படும் இக்குளத்தின் அருகே மனோரஞ்சிதம், செண்பகம், உத்திராட்ச மரம் உள்ளன. அடுத்து மகா பைரவர் சன்னதி உள்ளது. தேய்பிறை அஷ்டமி தினத்தில் சிறப்பு பூஜை நடைபெறும். அருகில் ஒரே கல்லால் ஆன ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். அருகில் மருத்துவ கடவுளான தன்வந்திரி நாராயணன் அருள்பாலிக்கிறார்.

ஆஞ்சநேயர் கோயில் அருகில் சந்திரன், சூரியன் சன்னதிகள் உள்ளன. தொடர்ந்து 63 நாயன்மார்களும், சேக்கிழார், அப்பரின் சகோதரி திலகவதி ஆகியோரும் காட்சி தருகின்றனர். அடுத்து திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் சன்னதி உள்ளது. பிரமாண்டமான மகா மண்டபம் பக்தர்கள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ளது. வள்ளி, தெய்வானை சமேதராக சுப்பிரமணியர் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார். பஞ்சலிங்கம். சரஸ்வதி, அய்யப்பன் சன்னதிகளும் உள்ளன. கோயிலை ஒட்டி பாபாவின் ஐம்பொன் சிலையுடன் கூடிய தியான மண்டபம் உள்ளது. எண்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் வாழ்ந்த பல சித்தர்கள் இக்கோயிலில் வழிபாடு செய்துள்ளனர். இங்கு தமிழ்வழிபாடு நடக்கிறது. திருமணத்தடை, குழந்தையின்மை, தீராத நோய் பாதிப்பு, மனநிலை பாதிப்பு உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து வைக்கும் அற்புதக்கடவுளாக சிதம்பரேஸ்வரர் திகழ்கிறார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • perufloodrain

  பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 • himachal

  இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

 • navamkolumpu

  கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

 • araliparaijallikattu

  அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

 • dakkafire

  வங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்