SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தலை சாய்த்து பக்தர் வழிபாட்டை ஏற்ற ஈசன்!

2018-08-23@ 09:46:00

திருப்புகலூர் செய்த புண்ணியம், எந்தெந்த தலங்களுக்கெல்லாமோ சுற்றி, ஈசனார் அருள்பெற்று மகிழ்ந்த திருநாவுக்கரசர், இறுதியில் இத்தலத்திற்கு வந்து, இங்கேயே தங்கி சிவனார்க்குத் திருத்தொண்டு செய்து, இங்கேயே முக்தியும் அடைந்தார். புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர்  மேவிய  புண்ணியனே ! என்று நாவுக்கரசர் பாடிக்கொண்டே இறைவனுடன் இரண்டறக் கலந்த இடம் இந்தத் தலம் என்கிறபோது நமக்கும் அந்த அருள் கிட்டும் என்ற நம்பிக்கை நெஞ்சில் துளிர்விடுவது இயற்கைதானே! இத்தனை எண்ணமும் திருப்புகலூர் திருத்தலத்தின் திருக்கோயிலை நாம் நெருங்கும்போது நம் நெஞ்சில் எழத்தான் செய்யும்! திருவாரூர் மாவட்டம் நன்னிலத்திலிருந்து ஆறு கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம். காவிரிக்கரையோரமுள்ள தேவாரத் தலம். ஆற்றின் மறுகரையில் திருக்கண்ணபுரம், புகழ்மிக்க வைணவத் தலம்.

சாலை ஓரத்தில் ஒரு பெரிய வளைவு அமைத்து, அதில், ‘திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோயில் - அப்பர் முக்தி பெற்ற தலம்’ என கொட்டை எழுத்துகளில் எழுதி வைத்துள்ளனர். இந்த வளைவு வழியாக உள்ளே நுழைந்தால் திருக்கோயில் வாயிலுக்கு வந்து சேரலாம். மிகப் பெரிய கோயில் - பரப்பளவு மூவாயிரம் சதுர அடி! இதைச் சுற்றி 130 அடி அகலமுள்ள அகழி. இந்த அகழியைச் சுற்றி பரந்து விரிந்து கிடக்கும் வெளி. எல்லாமாகச் சேர்ந்து ஒரு அலாதி பிரமிப்பை ஊட்டுகின்றன! கோயிலின் நான்கு பக்கங்களிலும் அகழி இருந்தாலும், தென் கிழக்குப் பக்கத்தில் கொஞ்சம் தூர்த்து, கோயிலுக்கு வழி அமைத்திருக்கிறார்கள். ஊருக்குத் தென்புறத்தில் உள்ள முடிகொண்டான் ஆற்றிலிருந்து வாய்க்காலும், வடிகாலும் இந்த அகழியில் பாய்வதால், அகழி எப்போதும் நிறைந்திருக்கும், தெளிவாகவும் இருக்கிறது! கோயிலை நெருங்கியதும் நாம் முதலில் காண்பது ஞான விநாயகர் ஆலயம். இது தென்பக்கத்து அகழியின் கரையில் உள்ளது.

முதலில் இந்த விநாயகரை வணங்கிவிட்டு, கிழக்கே திரும்பி, வடக்கு நோக்கிச் சென்றால் புகலூர்நாதர் சந்நதியை அடைவோம். வாயிலைக் கடந்து சென்றதும் நாம் தரிசிப்பது, அம்பாள் கருந்தாழ்குழலியை. அம்பாள் தெற்கு நோக்கிய தனிச் சந்நதியில் நின்ற கோலத்தில் அருட்பாலிக்கிறாள். அடுத்து, கர்ப்பகிருகத்தில் அக்னீஸ்வரர் திருக்காட்சி வழங்குகிறார். இவருக்கு கோணபிரான் என்றும் ஒரு பெயர் உண்டு. அக்னி பகவான் தவம் செய்து வணங்கிய பெருமான் என்பதால் அக்னீஸ்வரர் எனப் பெயர். பாணாசுரன் தன் தாயாரின் பூஜைக்காக சுயம்பு லிங்கங்களை எல்லாம் பெயர்த்து எடுத்துச் சென்றான். அந்த வகையில் இந்த அக்னீஸ்வரரைப் பெயர்க்க முயற்சித்தபோது அவர் அவனுக்குச் சற்றும் அசைந்து கொடுக்கவில்லை. உடனே தன்னையே பலியிட்டுக்கொள்ள முனைந்திருக்கிறான். அதனைத் தடுத்த சிவபெருமான், அவனுடைய தாயாரின் வழிபாட்டைத் தான் இருந்த இடத்தில் இருந்தே ஏற்றுக் கொண்டார். அதற்காக சற்றே தலை வளைத்திருக்கிறார். அந்த லிங்கத் திருவுருவம் இன்றும் கோணிய நிலையில், வளைந்தே இருக்கிறது.

அதனால் அவர் கோணபிரான் என்றும் பெயர் பெற்றார். இத்திருக்கோயிலில் அக்னீஸ்வரரே மூலவர் என்றாலும், இவருக்கு நிகரான கீர்த்தியோடு இதே கோயிலினுள் கொலுவிருக்கிறார் வர்த்தமானீஸ்வரர். ஆனால், இவர் கோணாமல் நிமிர்ந்து நிற்கிறார்! இந்த வர்த்தமானீஸ்வரரை ‘வாச மாமலர் உடையார் வர்த்தமானீச்சரத்தாரே’ என்று பாராட்டி, ஞானசம்பந்தர் தனியாக ஒரு பதிகமே பாடியிருக்கிறார். கோணேஸ்வரையும், வர்த்தமானீசரரையும் வணங்கியபின் வெளியே வந்து உட்பிராகாரத்தை வலம் வந்தால் சந்திரசேகர், திரிபுராந்தகர், அக்னி, பிரம்மா ஆகியோரின் செப்புச் சிலைகளை தரிசிக்கலாம். திருட்டு ஏற்பட்டுவிடாமல் இருக்கவோ அல்லது பக்தர்களின் ஆர்வக் கோளாறால் பழுதுபட்டுவிடக்கூடுமோ என்ற எண்ணம் போலிருக்கிறது, இவர்கள் எல்லாம் கம்பிவலைக்குள் மென்முறுவலுடன் இடம் கொண்டிருக்கிறார்கள். அக்னி பகவான் திருவுருவை இதுநாள்வரை பார்க்காதவர்கள், இக்கோயிலில் காணலாம். இரண்டு முகங்கள், ஏழு சுடர்கள், மூன்று பாதங்கள், ஏழு கைகள் என அமைந்து நின்ற கோலத்தில் அருட்பாலிக்கிறார்.

கர்ப்பகிருகங்களைச் சுற்றியிருக்கும் கோஷ்டங்களில் அகஸ்தியர், நடராஜர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், அஷ்டபுஜ துர்க்கை, சதுர்புஜ துர்க்கை ஆகியோர் அடுத்தடுத்து அருளை வாரிவழங்குகிறார்கள். ததீசி, புலஸ்தியர், ஜாபாலி ஆகியோர் பூஜித்த லிங்கங்கள் பலவும் இங்கே இருக்கின்றன. திருநாவுக்கரசர் முக்தி பெற்ற தலமாயிற்றே! அவருக்குத் தனிச் சந்நதி இல்லாமலா? மேற்குப் பிராகாரத்தில் சின்னஞ்சிறு கோயிலை அலங்கரிக்கிறார் அவர், கையில் உழவாரப் படை கருவியுடன்! இக்கோயிலின் பெரிய திருவிழா சித்திரைமாத சதய நட்சத்திரத்தை ஒட்டி நடக்கும் அப்பர் திருவிழாதான் என்பது குறிப்பிடத்தக்கது. பத்து நாள் வைபவமாகக் கொண்டாடப்படுகிறது. நாலாம் நாள், தெப்பத் திருவிழாவன்று ஒரே கோலாகலம்! இந்நாளில்தான் அப்பர் முக்தி பெற்றார். கோயில் பிராகாரத்தில் தலபுராணச் சிறப்புகள் ஓவியங்களாகச்  சித்தரிக்கப்பட்டுள்ளன. ராஜராஜன், ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன் முதலான மன்னர்கள் ஏற்படுத்திய நிபந்தங்கள்  இக்கோயிலுக்கு ஏராளம்!

- ஆர்.சி.சம்பத்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-07-2019

  17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • DongriBuildingCollapse

  மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

 • KyrgyzstanSlapping

  ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

 • ChangchunZoologicalPark

  உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • 16-07-2019

  16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்