SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமணம் விரைவில் நடைபெற வாழை பரிகார பூஜை

2018-08-22@ 09:51:56


திருச்சி அடுத்த திருப்பைஞ்ஞீலி என்ற இடத்தில் ஞீலிவனேஸ்வரர் கோயில் உள்ளது. ஞீலி என்பது ஒரு வகை கல்வாழை. பைஞ்ஞீலி என்றால் பசுமையான வாழை. பசுமையான ஞீலி வாழையை தல விருட்சமாக பெற்றதால் திருப்பபைஞ்ஞீலி என்று இத்தலம் பெயர் பெற்றது. ஞீலிவனேஸ்வரர் கோயில், முற்றுப்பெறாத மொட்டைக் கோபுரத்துடன் பக்தர்களை வரவேற்கிறது. முதல் கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் ஒரு நாலுகால் மண்டபமும், அதன் பின்புறம் 3 நிலைகள் உடைய ராவணன் வாயில் என்ற இரண்டாவது நுழைவு கோபுரமும் உள்ளது.

ராவணன் வாயில் கோபுரம் முன் இடதுபுறம் சோற்றுடை ஈஸ்வரர் சன்னதி காணப்படுகிறது. திருநாவுக்கரசருக்கு அந்தணர் உருவில் வந்து உணவு படைத்து திருப்பைஞ்ஞீலி தலம் வரை அழைத்து வந்து சிவபெருமான் மறைந்து போன இடம் இதுவென்றும், பின்பு திருநாவுக்கரசருக்கு லிங்க உருவில் இவ்விடத்தில் காட்சி கொடுத்தருளினார் என்றும் தலபுராணம் கூறுகிறது. அந்த லிங்க உருவே சோற்றுடை ஈஸ்வரர் என்ற பெயரில் இங்கு அருள்பாலிக்கிறார். சித்திரை மாதம் அவிட்டம் நட்சத்திர நாளில் இந்தச் சன்னதியில் திருநாவுக்கரசருக்கு சோறு படைத்த விழா நடைபெறுகிறது.

எமன் சன்னதி:

2வது கோபுர வாயில் வழியாக  உள்ளே செல்லாமல் வெளி சுற்றுப்பிரகாரத்தில் வலம் வந்தால் எமன் சன்னதியைக் காணலாம். இச்சன்னதி ஒரு குடவறைக் கோயிலாகும். பூமிக்கு அடியில் சற்று பள்ளத்தில் உள்ள இந்த குடவறைக் கோயிலில் சோமஸ்கந்தர் ரூபத்தில் சிவன், அம்பாள் இடையே முருகன் அமர்ந்திருக்க, சுவாமியின் பாதத்தின் கீழே குழந்தை வடிவில் எமன் இருக்கிறார். இந்த சன்னதி முன்பு திருக்கடவூரில் செய்வது போல சஷ்டியப்பபூர்த்தி, ஆயுள் விருத்தி ஹோமம் ஆகியவை நடத்துகின்றனர். திருக்கடவூர் தலத்தில் மார்க்கண்டேயனுக்காக எமனைக் காலால் உதைத்து சம்ஹாரம் செய்தார் சிவபெருமான். இதனால் உலகில் இறப்பு என்பதே இல்லாமல் போக பூமியின் பாரம் அதிகரித்தது. பாரம் தாங்காத பூமி தேவி சிவபெருமானிடம் முறையிட்டாள்.

மற்ற தேவர்களும் சிவனிடம் எமனை உயிர்ப்பித்து தருமாறு முறையிட்டனர். சிவபெருமான் அதற்கிணங்கி எமனை இத்தலத்தில் தன் பாதத்தின் அடியில் குழந்தை உருவில் எழும்படி செய்து தர்மம் தவறாமல் நடந்து கொள்ளும்படி அறிவுரை கூறி மீண்டும் தன் பணியை செய்து வரும்படி அருள் செய்தார். சனீஸ்வரனின் அதிபதி எமன் என்பதாலும், எமனுக்கு இத்தலத்தில் தனி சன்னதி உள்ளதாலும் திருப்பைஞ்ஞீலி ஞீலிவேனேஸ்வரர் கோயிலில் நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி இல்லை. 2வது கோபுரம் வழியாக சுவாமி சன்னதி செல்ல ஒன்பது படிக்கட்டுகள் இறங்கி செல்ல வேண்டும். இந்த படிகள் ராவணனின் சபையில் ஒன்பது நவக்கிரகங்களும் அடிமைகளாக இருந்ததை குறிப்பிடுவதாக சொல்கிறார்கள். சுவாமி சன்னதிக்கு முன்னுள்ள நந்தியின் அருகே ஒன்பது குழிகள் உள்ளன. அதில் தீபம் ஏற்றி அதையே நவக்கிரகங்களாக எண்ணி வணங்குகின்றனர்.

2வது கோபுரம் வழியாக உள்ளே சென்று திருக்கார்த்திகை வாயிலில் நுழைந்து மூலவர் ஞீலிவனேஸ்வரர் சன்னதியை அடையலாம். இங்குள்ள லிங்கமூர்த்தி சுயம்பாகும். எமனுக்கு உயிர் கொடுத்து மீண்டும் தனது தொழிலை செய்து வர அதிகாரம் கொடுத்து அருளியதால் இத்தலத்து இறைவன் அதிகாரவல்லவபர் என்றும் அழைக்கப்படுகிறார். பங்குனி, புரட்டாசி மாதங்களில் மூன்று நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளிக்கதிர் விழுகிறது. இத்தல இறைவன் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 61வது தேவாரத்தலம் ஆகும். திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் மண்ணச்சநல்லூர் வழியாக சென்றால் திருப்பைஞ்ஞீலியை அடையலாம்.

திருமணம் கைகூட வாழை பரிகார பூஜை

இக்கோயிலில் இரு அம்மன் சன்னதிகள் இருக்கின்றன. இரண்டு அம்மன்கள் பெயரும் விசாலாட்சி தான். பார்வதி தேவி ஒருமுறை இத்தலத்திற்கு வந்து தவம் மேற்கொண்டாள். நிழல் தரும் மரங்கள் இல்லாததைக் கண்டு தனக்கு பணிவிடை செய்ய வந்த சப்த கன்னிகளை வாழை மரங்களாக அருகில் இருக்கக் கூறி அருள்செய்தாள். அத்தகைய பெருமை பெற்ற வாழைக்குப் பரிகாரம் செய்ய விரைவில் திருமணம் கைகூடும். வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைக்குப் பரிகாரம் செய்வது மிகவும் சிறப்பாகும். வாழைப்பரிகார பூஜை நேரம் காலை 8.30 முதல் பகல் 12.30 மணி வரையும், மாலையில் 4.30 முதல் 5.30 வரையும் நடத்தப்படும். இழந்த பணிவாய்ப்புகள் கிடைக்க, பதவி உயர்வு கிடைக்க, திருமண தடை நீங்க, ஆயுள் நீடிக்க இங்கு வேண்டிக் கொள்ளலாம். எமன் சன்னதியில் ஆயுள் ஹோமங்கள் செய்கிறார்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-06-2019

  18-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • yoga

  சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

 • octopus

  ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

 • brainfever

  பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

 • pandacub

  உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்