SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

வாக்குவன்மை அருளும் திருமீயச்சூர் லலிதாம்பிகை

2018-08-17@ 09:36:18

தமிழ்நாட்டில் உள்ள ஆலயங்கள் பெருங்கோயில், மாடக்கோயில், மணிக்கோயில் என பல்வேறு வகையாய் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு ஆலயத்தினுள்ளேயே மற்றொரு ஆலயம் உள்ள அமைப்பு இளங்கோயில் எனப்படும். திருமீயச்சூரில் உள்ள லலிதாம்பிகை சமேத அருணாசலேஸ்வரர் ஆலயம் இத்தகைய இளங்கோயில் அமைப்பில் உள்ளது. அருணாசலேஸ்வரரை மேகநாதசுவாமி என்றும், லலிதாம்பிகையை சாந்தநாயகி என்றும் பக்தர்கள்  வழிபடுகின்றனர். ஐந்து நிலைகள் கொண்ட கிழக்கு பார்த்த மேகநாத சுவாமி ஆலய ராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. ஆலயத்தின் நான்கு புறங்களிலும் தேரோடும் அழகிய வீதிகள். தேர்நிலைக்கு அருகில் தென்திசை நோக்கி சித்தி விநாயகர், தனி ஆலயத்தில் கோயில் கொண்டிருக்கிறார். அதனருகில், சந்நதித் தெருவில் சூரியன் உருவாக்கிய சூரியதீர்த்தம் உள்ளது. சூரியன் இத்தலத்தில் கஜவாகனனாக ஈசனை வழிபட்டதால் ஆலய விமானம் யானையின் பின்பாகம் போன்ற கஜப்ருஷ்ட அமைப்புடன் மூன்று கலசங்களுடன் காட்சியளிக்கிறது.

வெளிப்பிராகாரத்தைக் கடந்து உள்ளே சென்றால் மேகநாதர் கலைநயத்துடன் காட்சி தருகிறார். கோயிலில் லலிதாம்பிகைக்கு தனி சந்நதி உள்ளது. அகலமான கருவறையின் நடுநாயகமாக வலதுகாலை மடித்து, இடதுகாலை கீழே பீடத்தில் ஊன்றி பேரெழிலுடன் அமர்ந்திருக்கிறாள் லலிதை. திருவாசி பளபளக்க, வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து தரிசனம் தருகிறாள். தனிக்கோயிலில், அமைதியான திருவுருவில் லலிதை தரிசனமளிப்பதன் புராணம் என்ன? காச்யப முனிவரின் மனைவிகளான கத்துருவும் வினதையும் மழலை வரம்  வேண்டித் தவமிருந்தார்கள். வினதைக்கு பட்சி ராஜனான கருடனும் கத்துருவுக்கு உடற்குறையுள்ள அருணனும் பிறந்தனர். அதனால் மனம் நொந்த அவர்கள் இறைவனிடம் மீண்டும் சரணடைய, பறவை குழந்தை மகா விஷ்ணுவின் வாகனமான கருடனாக  பெரிய திருவடியாகவும் பேறு பெற்றது. கத்துருவின் குழந்தை அருணன் சூரியனின் சாரதியாக பதவி பெற்றார்.

அருணன் உடற்குறையுள்ளவராக இருந்ததால், அதை நிவர்த்தி செய்துகொள்ள விரும்பினார். தன் விருப்பத்தை நிறைவேற்றவல்ல ஈசனை தரிசிக்க, மோகினி வடிவம் கொண்டு அருணன் சென்றபோது, அவள் அழகில் மயங்கிய  இந்திரன் அவளை பலாத்காரம் செய்ததால், இறைவனின் சாபத்தை இந்திரன் பெற்றான். இந்த செய்தி அறிந்த சூரியனுக்கோ தன் சாரதியை மோகினியாக பார்க்க ஆசை வந்தது. கதிரவனுக்கு காமம் தலைக்கேற, மீண்டும் மோகினி, வடிவமெடுக்க அருணனை வற்புறுத்தினான். இதைத் தெரிந்துகொண்ட ஈஸ்வரன் சூரியனை சபித்தார். சூரியனின் உடல் கறுமையாகி உலகம் இருண்டு விட்டது. தன் தவறை உணர்ந்து ஈசனிடம் மனமுருக வேண்டிக் கொண்டான் சூரியன். மீண்டும் மீண்டும் இறைவனை சரணடைந்து மனமுருக வேண்டினான். அதற்கு இறைவன், ‘திருமீயச்சூர் சென்று சூர்ய புஷ்கரணி என்னும் நீர்நிலையை உருவாக்கி, பூஜைகள் செய்’ என்று ஆணையிட்டார்.

அதன்படி தலையில் எருக்கு இலை, அறுகம்புல், பசுஞ்சாணம் முதலியவற்றை வைத்துக் கொண்டு சங்கல்பம் செய்து விசேஷமாக பூஜைகள் செய்தான். ஏழு மாதம் இப்படிச் செய்தும் அவன் உடலின் கறுமையும், கடுமையும் மாறவில்லை. ஈஸ்வரனை நோக்கி கதறினான். சுவாமியும் அம்பாளும் ஏகாந்தமாக இருக்கும் ஒரு அமைதியான வேளையில் சூரியனின் அலறல் அபஸ்வரமாக ஒலித்தது. அம்பாளுக்கு கோபம் வந்து சூரியனை சபிக்க நினைத்தபோது ஈசன் அவளைத் தடுத்தார்.‘இப்போதுதான் சாப விமோசனம் பெறும் நிலைக்கு வந்திருக்கிறான் சூரியன், மீண்டும் சபித்து விடாதே! மீண்டும் உலகம் இருளில் மூழ்கிவிடும். எனவே  நீ சாந்தமடைந்து, உலகம் பிரகாசிக்கத் தவமிருப்பாயாக!’ என்று கேட்டுக் கொண்டார். அம்பிகையும்  சாந்த நாயகியாக, லலிதையாக திருமீயச்சூர் பகுதியில் தியான கோலத்தில் அமர்ந்தாள்.அன்னை பராசக்தியின் உத்தரவின் பேரில் வசின்யாதி வாக் தேவதைகள் தோன்றி லலிதா ஸஹஸ்ரநாமம் எனும் லலிதையைப் புகழும் அதியற்புதமான தோத்திரத்தை இத்தலத்தில் அரங்கேற்றினர்.

அதில் வரும் ஸ்ரீமாதா எனும் முதல் நாமத்தின்படி அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியாய், இந்த அகிலத்திற்கே அன்னையாய், தேவி அருள்கிறாள். ஹயக்ரீவர் சொற்படி அகத்திய முனிவர், திருமீயச்சூர் வந்தார். சூரியன் அப்போது சாந்தநாயகிக்கு பூஜை செய்துகொண்டிருந்ததை பார்த்தார். தானும் அன்னையை வணங்கி, ‘லலிதா நவரத்ன மாலை’ என்கிற பாடல் தொகுப்பைப் பாடினார். லலிதா நவரத்னமாலையை இத்தலத்தில் பாடினால் லலிதாஸஹஸ்ரநாம பாராயண பலன் கிட்டும் என்பார்கள். இத்தேவியின் சந்நதி, கொலுமண்டபம் போல, ஒரு ராஜதர்பார் போல் தோற்றமளிக்கிறது. அழகு, கம்பீரம், கருணை தவழ பேரெழிலுடன் தேவி அமர்ந்திருக்கும் காட்சியில் மனம் குவிகிறது. காண்பவரைப் பரவசப்படுத்தும் தரிசனம். சாந்நித்யம் நிறைந்த இந்த சந்நதி பக்தர்களை நெக்குருக வைத்து கண்களில் நீர் திரள வைப்பது நிஜம். மனதில் நினைக்கும் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றித் தருவது மனோன்மணி. அந்த மனோன்மணி வடிவில் பக்தர்களின் கோரிக்கை எதுவானாலும் நிறைவேற்றித் தருகிறாள் இந்த லலிதாம்பிகை.  

சித்ரா பௌர்ணமியும் சுவாதி நட்சத்திரமும் ஒன்றாக வரும் நாள் மிக விசேஷமானது. அன்று வானில் இருந்து விழும் மழைத்துளி சிப்பியினுள் நுழைந்தால் அது நல்முத்தாக மாறிவிடும். அந்நாள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையே வரும். அந்த நந்நாளில் இத்தல லலிதாம்பிகைக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். விஜயதசமியின் போது நான்கு மூட்டை அரிசியில் சர்க்கரைப் பொங்கல் தயாரித்து, அதன் நடுவில் நெய்க்குளம் அமைத்து தேவியின் முன் படைப்பார்கள். அர்ச்சகர் அலங்காரம் செய்து கற்பூர ஆரத்தி காட்டும் போது அங்குள்ள நெய்க்குளத்தில் தேவியின் பிம்பத்தைத் தரிசிப்பது அபூர்வமான வாய்ப்பு. சூரியன் பூஜை செய்ததால் சித்திரை மாதம் 21 முதல் 27ம் தேதிவரை தினமும் விடியற்காலையில் சூரிய கிரகணங்கள் ராஜகோபுரம் வழியாக துவஜஸ்தம்பம், பலிபீடம், மகாமண்டபம், ஸ்நபன மண்டபம், அர்த்த மண்டபம் ஆகியவற்றைக் கடந்து கருவறையில் ஈசனின் மீது படர்வது அற்புதமான நிகழ்வு. இந்த பூஜையில் அகத்தியர் எந்த வடிவிலாவது கலந்து கொள்வதாக ஐதீகம்.

அப்போது மேக நாதஸ்வாமிக்கு நெல்லிக்கட்டைகள் ஊறிய நீரால் அபிஷேகம் செய்யப்படுகிறது. சூரியனைப் போலவே யமதர்மராஜனும் சனீஸ்வரரும் மேகநாத சுவாமியிடம் அளவற்ற அன்பும் பக்தியும் கொண்டிருந்தனர். அதனால் யமனுக்கு உகந்த சதய நட்சத்திரத்தன்று சுவாமிக்கு யமலோக விருட்சமான பிரண்டையை உணவாக்கி சாதத்துடன் கலந்து அன்னதானம் செய்து, தாமரை இலையில், சங்கு புஷ்பத்தை வைத்து அர்ச்சனை செய்தால் உடல் நோய்களும் பாவங்களும் அகலும் என்பது ஐதீகம். திருமீயச்சூரில் ஈசனுக்குத் தான் செய்த விசேஷ பூஜை பற்றியும் அதனால் தான் பெற்ற பலனைப் பற்றியும் நசிகேதனுக்கு யமதர்மராஜர் சொன்னதாக தலபுராணம் கூறுகிறது.  இக்கோயிலைப் பற்றியும் அதில்  உறையும் ஈசன் பற்றியும் நாவுக்கரசர் பாடி இருக்கிறார். திருஞானசம்பந்தப் பெருமானாலும் பாடல் பெற்ற தலம் இது. பிரதானக் கோயிலும் இளங்கோயிலும் பிற்கால சோழர்காலத்து திருப்பணியாகும். திருச்சுற்றை வலம் வரும்போது கோபத்துடன் எழுந்து செல்லும் அம்பிகையை அரவணைத்து வலக்கரத்தால் அம்பிகையின் முகவாயைப் பிடித்து சாந்தப்படுத்தும் ஈசனின் சிற்பம் காண்பவர் மனதை கவர்கிறது.

இவரை  என அழைக்கின்றனர். கோயிலைச் சுற்றியுள்ள கோஷ்ட சிற்பங்கள் சில பிரமிப்பூட்டுகின்றன. அதில் ரிஷபாரூட சிற்பத்தைக் குறிப்பிட்டுக் கூறலாம். ஈசனின் சந்நதியின் வடக்குப் பிராகாரத்தில் அஷ்டபுஜ துர்க்கை அருளாட்சி புரிகிறாள். அன்னை லலிதை சாந்தமாக அருளும் ஆலயமாதலால் இந்த துர்க்காம்பிகையும் சாந்த வடிவினளாகவே தரிசனம் அளிக்கிறாள். வாழ்க்கையில், அமைதியையும் அர்த்தத்தையும் கண்டுபிடிக்கத் தெரியாமல் அல்லற்படும் நம்மை கருணையுடன் அழைத்து அருட்பாலிக்கிறாள் லலிதாம்பிகை. வணங்கும் பக்தர்களுக்கு இல்லற நலம், குழந்தைகளின் கல்வி வளம், செய்தொழிலில் வெற்றி, மாங்கல்ய பலம், நீண்ட ஆயுள், குறைவற்ற உடல்நலம் போன்றவற்றை அருளி தீவினை பாதிப்புகளிலிருந்தும் பாதுகாக்கிறாள் தேவி. கும்பகோணத்திலிருந்தோ மயிலாடுதுறையிலிருந்தோ திருவாரூர் செல்லும் பிரதான சாலையில் பேரளம் எனும் ஊருக்கு அருகில் அமைந்துள்ளது திருமீயச்சூர் திருத்தலம்.

ந.பரணிகுமார்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-09-2018

    25-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்