SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொந்த வீடு கனவு நனவாகும்!

2018-08-16@ 16:18:26

இந்தப் பிறவியில் நான் பெற்ற அதிர்ஷ்டம்தான் என் மனைவி. மிகத் திறமையானவள். புத்தி கூர்மையானவள். அவளுடன் படித்த எல்லோருக்கும் அரசுப்பணி கிடைத்து விட்டது. இவளும் ஆறுமுறை தேர்வு எழுதியிருக்கிறாள். தேர்வு அறையில் சென்றவுடன் மனநிலை மாறுகிறது. சரியாக யோசிக்க முடியவில்லை என்கிறாள். தற்போது விரக்தியான மனநிலையில் உள்ளாள். அவளை நல்ல நிலையில் பார்க்க விரும்புகிறேன். ஒருவழி கூறுங்கள். கார்த்திக், கம்பம்.

மனைவியின் வாழ்வியல் நிலையை உயர்த்த வேண்டும் என்ற உங்களின் எண்ணம் பாராட்டுதலுக்கு உரியது. சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மனைவியின் ஜாதகக் கணிதத்தின்படி தற்போது குருதசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் ஞாபக சக்தியைத் தரும் குருவும், புத்திகாரகன் புதனும் வக்ரம் பெற்ற நிலையில் சஞ்சரிக்கிறார்கள். மேலும், உத்யோக ஸ்தான அதிபதி சுக்கிரன் மூன்றில் அமர்ந்திருப்பது சற்றே பலவீனமான  நிலை ஆகும். என்றாலும் சுக்கிரனின் ஆட்சி பலமும், சூரியனின் இணைவும் நிரந்தர உத்யோகத்தைப் பெற்றுத் தரும்.

விடா முயற்சியுடன் தொடர்ந்து தேர்வு எழுதி வரச் சொல்லுங்கள். சிறிதளவு ஊற வைத்த கொண்டைக் கடலையை ஒருநாளும், ஊறவைத்த பச்சைப் பயறை ஒருநாளும் என ஒருநாள் மாற்றி ஒருநாள் காலை வேளையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரச் சொல்லுங்கள். கருந்துளசி ஒன்றிரண்டு இலைகளை மென்று தின்பதும் நல்லது. கீழேயுள்ள ஸ்லோகத்தைச் சொல்லி தட்சிணா மூர்த்தியை தினமும் வணங்கி வரச் சொல்லுங்கள். தேனி வேதபுரியில் அமைந்துள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஆலயத்திற்குச் சென்று வழிபடுவதும் நல்லது. 06.04.2019க்குப் பின் நிரந்தர உத்யோகம் கிடைத்துவிடும்.

“ஓம் நமோ பகவதே தட்சிணா மூர்த்தயே மஹ்யம் மேதாம்
ப்ரக்ஞாம் ப்ரயச் சஸ்வாஹா.”


எங்கள் வம்ச மூதாதையர் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவசமாதியாகியுள்ள ஒரு சித்தரால் சபிக்கப்பட்டுள்ளதாக பூசாரியின் மூலம் அறிந்தேன். நினைவு தெரிந்த நாளிலிருந்து ஏற்பட்ட இழப்புகள், முடக்கப்பட்டுள்ள முயற்சிகள் அனைத்துக்கும் இதுவே காரணம் என எண்ணுகிறேன். எனது மகளுக்கு 28 வயதாகியும் வேலை கிடைப்பதில் தடை, திருமணத்தடை என்று எல்லாம் தடைபட்டு வருகிறது. சித்தரின் சாபநிவர்த்திக்கு உரிய பரிகாரத்தைச் சொல்லுங்கள். நடராஜன், கோவை.
    
ஆயில்யம் நட்சத்திரம், கடகராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் சூரிய புக்தி துவங்குகிறது. சித்தரின் சாபம் உள்ளதாக உங்களுக்கு தகவல் தெரிவித்த பூசாரி பூஜை செய்து வரும் அங்காள பரமேஸ்வரி ஆலயத்திற்கு ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை நாளில் சென்று அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுங்கள். அம்பாளின் துணையுடன் மறுநாள் திங்கட்கிழமை நாளன்று பூசாரி குறிப்பிடும் அந்தச் சித்தரின் ஜீவசமாதிக்குச் சென்று வழிபாடு செய்யுங்கள். உடன் உங்கள் மகளையும் தவறாமல் அழைத்துச் செல்லுங்கள்.

சமாதிக்கு முன்னால் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்யுங்கள். உங்கள் முன்னோர் செய்த தவறு என்ன என்பது அங்கே நீங்கள் காணும் சகுனங்கள் மூலமாக உங்களுக்குத் தெரிந்து விடும். அதற்கான பிராயச்சித்தம் என்ன என்பதும் அங்கேயே உங்களுக்குத் தெரியவரும். அதனையும் செய்து முடியுங்கள். சுற்றித்திரியும் சிவனடியார் (பிச்சைக்காரர் அல்ல) ஒருவர் கண்ணில் படுவார். அவருக்கு வஸ்திரமும், உணவும் வாங்கித் தந்து ஆசிர்வாதம் பெற உங்கள் பரம்பரை சாபம் முடிவிற்கு வரும். உத்திராட நட்சத்திரம், மகர ராசி, துலாம் லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளுக்கு 09.12.2018க்குப் பின் நிரந்தர உத்யோகம் கிடைத்துவிடும். கவலை வேண்டாம்.

நான் 18 வயதிலிருந்து கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறேன். இதுவரை ஒரு சென்ட் நிலம் கூடவாங்க முடியவில்லை. சொந்தமாக வீடு கட்டவும் இயலவில்லை. ஒரு பிரச்னை முடிந்தால் இன்னொரு பிரச்னை. நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். என் பிரச்னை தீரவழி சொல்லுங்கள். சுப்ரமணியம், நாமக்கல்.
 
அறுபதாவது வயதில் இருக்கும் நீங்கள் உங்களுடைய 18வது வயதில் இருந்து கடுமையாக உழைத்து வருவதாக எழுதியுள்ளீர்கள். பூசம் நட்சத்திரம், கடக ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சந்திரதசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. ஒரு சிலரது வாழ்க்கை இவ்வாறு அமைந்து விடுகிறது. எவ்வளவு உழைத்தும் சிறிய அளவிலான சொத்து கூட வாங்க இயலாமல் உங்களைப்போல் தவிப்பவர்கள் அதிகமாகவே உள்ளனர். இங்குதான் பூர்வ ஜென்ம புண்ணியம் என்பது முக்கியத்துவம் பெறுகிறது. ‘பதவீபூர்வ புண்யானாம்’ என்று ஜோதிடர்கள் ஜாதகத்தில் எழுதியிருப்பார்கள். அதாவது நாம் செய்த பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில் இந்த ஜென்மத்தில் சுகதுக்கங்களை அனுபவிப்போம் என்பது அதன் பொருள்.

இத்தனை சிரமத்திற்கு மத்தியிலும் கடவுள் உங்களுக்கு உழைக்கின்ற சக்தியை உடலுக்கும், மனதிற்கும் தந்திருக்கிறாரே என்பதை எண்ணி திருப்தி காணுங்கள். உங்கள் ஜாதக பலத்தின்படி 63 வயது முதல் 70 வயது வரை நடக்க உள்ள செவ்வாய்தசையில் உங்களின் ஏக்கம் தீர்ந்து விடும். 63வது வயதில் சொந்தவீடு என்பதை எப்பாடு பட்டாவது கட்டி விடுவீர்கள். நீங்கள் பிறந்த தைப்பூச நாளன்றே கிரகப் பிரவேசமும் செய்வீர்கள். பிரதி மாதந்தோறும் வருகின்ற பூச நட்சத்திரநாள் அன்று விரதம் இருந்து அருகிலுள்ள சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்திற்குச் சென்று பசும்பால் அபிஷேகம் செய்து வழிபட்டு வாருங்கள். வேலவனின் அருளால் சொந்தவீடு கனவு நனவாகும்.

73 வயதாகும் எனக்கு மூன்று வருடங்களாகவே மூட்டு வலி உள்ளது. என்னால் காலை மடக்கி உட்காரவோ, சிறிது தூரம் நடந்து செல்லவோ முடியவில்லை. இந்நிலையில் செக்யூரிட்டி வேலைக்கும் சென்று வருகிறேன். நரக வேதனை அனுபவித்து வரும் எனக்கு ஆபரேஷன் செய்து கொள்ளவும் வழியில்லை. என் வேதனை தீர நல்ல வழியைக் காட்டுங்கள். ஆறுமுகம், ஈரோடு.


மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, கன்னி லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது குருதசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. மூட்டு ஆபரேஷன் செய்து கொண்டால் மூன்று மாதத்திற்கு வேலைக்குச் செல்ல இயலாது என்றும், வருமானம் இல்லையென்றால் சாப்பாட்டிற்கு என்னவழி என்று தெரியாமல் வேதனைப்படுவதாக எழுதியுள்ளீர்கள். உங்கள் ஜாதக பலத்தின்படி சாப்பாட்டிற்கு கஷ்டம் என்பது உங்களுக்கு வராது. நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்திடமே நீங்கள் அனுமதி கேட்கலாம். கௌரவம் பாராமல் முதலாளியிடம் சென்று உங்கள் பிரச்னையைக் கூறுங்கள். உங்கள் மீதுள்ள மரியாதையால் நிச்சயமாக உங்களுக்கு உதவி செய்வார்கள். முதலாளி மறுத்தாலும் உங்களுக்கு உதவி செய்ய பல பேர் காத்திருப்பார்கள்.

தற்போது நல்ல நேரம் என்பது நடந்து வருவதால் நீங்கள் கேட்கும் இடத்தில் இருந்து நிச்சயமாக உதவி கிடைக்கும். தயக்கத்தினை விடுத்து வாயைத் திறந்து உதவியைக் கேளுங்கள். விஷம் குடித்து மடிந்து விடலாம் என்று நினைப்பதாக எழுதியுள்ளீர்கள். காலணி சரியில்லை என்பதற்காக காலை வெட்டிக் கொள்வீர்களா? எதிர்மறையான எண்ணங்களை விடுத்து கடவுளை நம்பி சுறுசுறுப்பாக செயல்படுங்கள். புதன்கிழமை நாளில் அருகிலுள்ள சிவாலயத்தில் உள்ள சண்டிகேஸ்வரர் சந்நதியில் விளக்கேற்றி வழிபடுங்கள். உங்கள் நேரம் நன்றாக இருப்பதால் ஆபரேஷன் செய்து கொள்ளுங்கள். சாப்பாட்டிற்கு எந்தவிதமான பிரச்னையும் நேராது.

நான் ஆர்.சி.கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவன். இருப்பினும் இந்து கோவில்களுக்குச் சென்று வருவேன். தற்போது நான் தனியாகவும், என் மனைவி பிள்ளைகளுடனும் வசிக்கிறார். திருமணமானதில் இருந்தே பிரச்னைதான். எனக்கு எந்த வேலையும் நிரந்தரமில்லை. தற்போது கூட வேலைக்குச் செல்ல இயலாமல் நாற்பது நாட்களாக காலில் புண்களோடு அவஸ்தைப்படுகிறேன். நல்ல பதில் சொல்வீர்கள் என நம்புகிறேன். சில்வெஸ்டர் எடிசன், சென்னை.

அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு தற்போது ராகு தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் ராகு விரயத்தைத் தரும் 12ம் வீட்டிலும், கேது நோயைத் தரும் ஆறாம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் கடும் உபாதையைச் சந்தித்து வருகிறீர்கள். எல்லா பிரச்னைக்கும் உங்களுடைய முன்கோபம்தான் காரணம் என்றும், அதனாலேயே 59 வயதிற்குள் உடல் மெலிவு, நோய்கள், தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றால் சிரமப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள். செய்யும் தவறினை உணர்ந்தால் மட்டும் போதாது. அதற்குரிய பிராயச்சித்தம் தேடுவதோடு மீண்டும் அந்தத் தவறினைச்
செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

செய்த தவறினை எண்ணி வருந்துவதோடு உரியவரிடம் மானசீகமாக மன்னிப்பும் கோர வேண்டும். உங்கள் ஜாதகக் கணக்கின்படி மனைவிக்கு உரிய ஸ்தானம் மிகவும் வலிமையாக உள்ளது. உங்கள் மனைவியே உங்கள் வாழ்வின் ஜீவாதாரம் என்பதைப் புரிந்து கொண்டு நடக்க முயற்சியுங்கள். நீங்கள் செய்த தவறுக்கு அவரிடம் மன்னிப்பு கேளுங்கள். மனம் திருந்தி வரும் உங்களை நிச்சயமாக ஏற்றுக் கொள்வார். அவரைத் தவிர வேறு யாராலும் உங்களுக்கு பணிவிடை செய்ய இயலாது. சனிக்கிழமை தோறும் அருகிலுள்ள தேவாலயத்தில் நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள். மனைவியும், மக்களும் உங்களை நன்றாக கவனித்துக் கொள்வார்கள். நீங்கள் வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் உண்டாகாது. 28.04.2019 முதல் உங்கள் வாழ்வினில் நல்ல நேரம் என்பது உதயமாகும்.

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • DongriBuildingCollapse

  மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

 • KyrgyzstanSlapping

  ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

 • ChangchunZoologicalPark

  உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • 16-07-2019

  16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

 • fra

  பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்