SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கள்ளம் - கபடம் - வஞ்சகம்!

2018-08-16@ 15:56:28

அர்த்தமுள்ள இந்துமதம் - 61

காஞ்சி மகா பெரியவர் மேலும் சொல்கிறார்:‘கர்மா தியரி’ என்றால் என்ன? எந்தச் செயலுக்கும் பிரதியாக ஒரு விளைவு உண்டு. Cause and Effect  என்பதாகவும், Action and Reaction என்பதாகவும் இவை தவிர்க்க முடியாத விதிகளாக இருக்கின்றன என்றும், ‘பிஸிக்ஸில்’ சொல்கிறார்கள்.  பௌதீகத்தில் சொல்வதையே மனுஷ்ய வாழ்க்கைக்கும் பொருத்தி கர்மக் கொள்கையை நம் ஆன்றோர்கள் கூறுகிறார்கள். பிரபஞ்சத்தில் ஜடமான பூதங்கள்  போலவே சைதன்யம் என்ற அறிவுள்ள ஜீவர்களும் அடக்கம். இவை ஒன்று சேர்ந்ததுதான் லோக வாழ்வு. எனவே ஒன்றுக்கு இருக்கும் நியதி, தர்மம்,  இன்னொன்றுக்கும் இருக்கத்தான் வேண்டும்.

மனிதனின் ஒவ்வொரு கர்மாவுக்கும் விளைவாக ஒரு பலன் உருவாக்கித்தான் தீரவேண்டும் என்பதே Karma theory. ‘பாப கர்மம் செய்தால் அதற்கான  தண்டனையை மனுஷ்யன் அனுபவிக்க வேண்டும். புண்ணிய கர்மம் செய்தால் அதற்கான நற்பலன் அவனை வந்தடையும்’ என்கிறது நம் மதம். நம் மதப்படியும்  கர்ம பலனைத் தந்து தீர்ப்புத் தருகிற பலதாதாவான ஈஸ்வரன் பரம கருணாமூர்த்திதான். ஆனால், அதற்காக லோகம் அதர்மத்தில் மனமறிந்து விழட்டும் என்று  விடுகிறவன் அல்ல அவன். அதனால் என்ன பண்ணுகிறான்?

நம் பாவ பலனை (புண்ணிய பலனையும்தான்) அனுபவிப்பதற்காக நம்மை, இன்னொரு ஜென்மா கொடுத்து மறுபடி இந்த உலகுக்கே அனுப்பி வைக்கிறான்.  ஸ்வர்க்க ஆனந்தம், நரகக் கஷ்டம் இரண்டும் இந்த உலகத்திலேயேதான் இருக்கின்றன. நாம் கலந்தாங்கட்டியாகப் பாவம், புண்ணியம் இரண்டும் போன  ஜென்மாவில் பண்ணியிருப்பதால் இப்போது கெட்டது, நல்லது இரண்டையும் சேர்த்து அனுபவிக்கிறோம். ரொம்பப் பாவம் செய்தவர்கள் ரொம்பக்  கஷ்டப்படுகிறார்கள்.

பொதுவிலே ரொம்பக் கஷ்டப்படுகிறவர்கள் அல்லது சமமாகக் கஷ்ட சுகம் உள்ளவர்கள் இருக்கிறோமே தவிர, தாங்கள் பரம சுகமாக இருப்பதாக  நினைக்கிறவர்கள் ரொம்பவும் துர்லபமாகவே இருக்கிறார்கள். இதிலிருந்தே நாம் அனைவரும் பொதுவில் பாவமே அதிகம் பண்ணியிருக்கிறோம் என்பது புரிகிறது.  பகவானின் கருணை காரணமாக, இன்னொரு ஜென்மாவிலிருந்து இவன் பாவத்தைக் கழுவிக் கொள்வானா என்று பார்ப்பதற்காக, ஒரு பெரிய வாய்ப்பாக  (Opportunity) பிறவியைக் கொடுக்கிறார். அதிலே ஒரு சாஸ்திரம், க்ஷேத்திரங்கள், இத்தியாதி வசதிகளை எல்லாம் கொடுத்து இவனுடைய அழுக்கைத்  துடைக்க முன் வருகிறார்.

‘இவன் கையாலாகாதவன், ஒருநாளும் தானாக முன்னேற மாட்டான்’ என்று அடியோடு உதவாக்கரையாக நினைத்த இவனுக்குப் பாவியானாலும்கூட  ஸ்வர்க்கத்தைக் கொடுத்து விடுகிறார் என்பதைவிட, இப்படி இவனைக்கூட நம்பி, உடன் தன்னைத்தானே கடைத்தேற்றிக் கொள்வான் என்று நம்பிக்கை வைத்துப்  புனர் ஜென்மா தந்து, இதில் இவனுடைய தன் முயற்சிகளுக்குப் பலவிதத்தில் கை கொடுக்க ஸ்வாமி முன் வருவதாகச் சொல்வது நன்றாக இருக்கிறது;  பொருத்தமாக இருக்கிறது. அதுதான் பரம கருணையாகவும் இருக்கிறது. ‘எனக்கென்று முயற்சி என்ன இருக்கிறது; எல்லாம் உன் செயல்’ என்று ஜீவன்  சரணாகதி செய்கிறபோது ஸ்வாமியே இவனை ஒரே தூக்காகத் தூக்கி விடுகிறார் என்பது வாஸ்தவம்.

ஆனால், இவனாக முயற்சியை விடுகிற சரணாகதியில் அனுக்கிரகம் செய்வது வேறு, இவன் முயற்சி செய்யவே லாயக்கில்லை என்று நினைத்து அனுக்கிரகம்  செய்வது வேறுதான். புருஷ லட்சணம் என்று ஒன்று இருப்பதாக நினைக்கிற வரையில் அதில் அவனை நம்பி விட்டு வைப்பதுதான் பரம கருணை. அதுதான்  நிஜமான அனுக்கிரகம். நம் மதத்தின் புனர் ஜென்மக் கொள்கைக்கு ஆதரவாக ஒன்றை அழுத்தமாகக் காட்டலாம். வெள்ளைக்காரி ஒருத்தி என்னிடம் வந்து இந்த  (Reincornation) விஷயத்துக்கு நிரூபணம் (Proof) கேட்டாள். நான் அவளிடம் வாதம் ஒன்றும் செய்யவில்லை.

அப்போது மடத்து முகாமில் ஒரு பண்டிதர் இருந்தார். அவருக்கு இங்கிலீஷும் வரும். அவரிடம் அவளை அங்கே உள்ள பிரசவ ஆஸ்பத்திரிக்கு  அழைத்துக்கொண்டுபோய், அங்கே பிறந்திருக்கிற குழந்தைகளைப் பற்றிய விவரங்களைக் குறிப்பெடுத்துக் கொண்டுவரும்படி சொன்னேன். அவளும் அப்படியே  பிரசவ ஆஸ்பத்திரிக்கு அவரோடு போய்விட்டு வந்து குழந்தைகளைப் பற்றிய குறிப்புகளைச் சொன்னாள். அதன்படி ஒரு குழந்தை கொழு கொழுவென்று இருந்தது.   இன்னொன்று அவலட்சணமாக இருந்தது. ஒன்று உசத்தியான ‘வார்டில்’ சௌகரியமாகப் பிறந்தது.

இன்னொன்று சொல்ல முடியாத கஷ்டங்களுக்கு நடுவே ஒரு பரம ஏழைப் பெண்ணுக்குப் பிறந்தது. ‘ஜென்மாவின் கடைசியில் பகவான் ஒருத்தரை நிரந்தரமாக  நரகத்துக்கு அனுப்புவது ஒரு பக்கம் இருக்கட்டும்; அது நமக்கு கண்ணுக்குத் தெரியாத விஷயம்; இப்போது பல ஜென்மங்களில் ஆரம்பத்தைப் பிரசவ  ஆஸ்பத்திரியில் பிரத்யட்சமாகப் பார்த்தாயே இதிலே ஏன் இத்தனை ஏற்றத் தாழ்வுகள்? ஏன் ஒன்று தாரித்திரியத்திலும், இன்னொன்று சம்பத்திலும் பிறக்க  வேண்டும்? ஏன் ஒன்று ஆரோக்கியமாகவும், இன்னொன்று அவலட்சணமாகவும் இருக்க வேண்டும்?

ஜீவனுக்கு ஒரே ஒரு ஜென்மாதான் உண்டு என்ற உங்கள் மதக்கொள்கையை ஒப்புக்கொண்டால் அவை ஜனிக்கிறபோதே இத்தனை பாரபட்சங்கள் இருப்பதைப்  பார்க்கிறபோது ஸ்வாமி கொஞ்சம்கூடக் கருணை இல்லாது, புத்திசாலித்தனம் இல்லாமல் மனம் போனபடி கண்ணாபின்னா என்று காரியம் செய்து  கொண்டிருக்கிறார் என்றுதானே ஆகிறது? அப்படிப்பட்ட ஸ்வாமி கருணை செய்வார் என்று நம்பி எப்படி பக்தி செலுத்துவது? பூர்வ ஜென்மப் பாப புண்ணியங்களை  ஒட்டிப் புனர்ஜென்மா அமைகிறது என்ற கொள்கையைத் தவிர, நீ பார்த்த ஏற்றத் தாழ்வுகளுக்கு என்ன காரணம் சொல்ல முடியும்?’’ என்று கேட்டேன்.

அவள் ரொம்ப சந்தோஷத்தோடு நான் சொன்னதை ஏற்றுக்கொண்டு போனாள். ஆனால், நவீன காலத்தவர்களுக்கு இந்த விளக்கங்கள் (Explanations)  போதாது. ஸயன்ஸ்படி ப்ரூஃப் கேட்பார்கள். அப்படிப் பார்த்தாலும் இப்போது ‘பாரா ஸைகாலஜி’க்காரர்கள் இந்த விஷயத்தில் நிறைய ஆராய்ச்சி பண்ணி,  ஜன்மாந்தரங்கள் உண்டு என்பதற்கு ஆதரவாக அநேக விஷயங்களைச் சொல்கிறார்கள். உலகம் முழுக்க இவர்கள் சுற்றி வந்ததில் எத்தனையோ இடங்களில் பூர்வ  ஜென்மத்தில் இப்போதைய இடத்துக்குத் துளிகூடச் சம்பந்தமேயில்லாமல் வேறு எங்கேயோ இருக்கப்பட்ட தூர தேசங்களில் தாங்கள் பார்த்தவற்றை நினைவாகச்  சொல்கிற பலபேர் இருக்கிறார்கள். அந்த விவரங்களை எல்லாம் மறக்காமல் சொல்கிறார்கள்.

இவர்கள் சொல்வது உண்மைதானா என்று பரிசோதித்துப் பார்ப்பதற்காக ‘பாராஸைகாலஜி’க்காரர்கள் அந்தந்த ஊர்களுக்குப் போயிருக்கிறார்கள். போனால் அங்கே  ஆச்சரியப்படுகிற மாதிரி இவர்கள் சொன்ன அடையாளங்களை, இவர்கள் பூர்வத்தில் சம்பந்தப்பட்டிருந்த மனுஷ்யர்களைப் பார்க்கிறார்கள். இது மாதிரி ஒன்று,  இரண்டு அல்ல - ஏகப்பட்ட கேஸ்கள் இருக்கின்றன. நமக்கெல்லாம் முற்பிறவி சமாசாரங்கள் அடியோடு மறந்துபோய்விட்டன. ஆனால், வெகு சிலருக்கு நினைவு  இருக்கிறது. அநேகமாக இப்படிப்பட்டவர்கள் பூர்வ ஜென்மத்தில் இயற்கையாகச் செத்துப் போகாமல் (Natural Death) அதாவது நோய் நொடி வந்து செத்துப்  போகாமல், கொலை செய்யப்பட்டவனாகவோ அல்லது திடீரென்று ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டு அப்போதே மரணமடைந்தவர்களாகவோ இருக்கிறார்கள் என்று  ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்...’’

கண் வெயிலைப் பார்க்கும், மனம் மழையை நினைக்கும்; வாய் பனியைப் பற்றிப் பேசும். இத்தனைக்கும் எல்லா அங்கங்களும் ஒரே உடம்பில்தான்  இருக்கின்றன.  ‘கண்ணொன்று காண, மனம் ஒன்று நாட, வாயொன்று பேச’ என்று பாடினார்கள். அப்படிப்பட்ட வஞ்சகர்கள் எத்தனை பேரை நான் பார்த்திருக்கிறேன்!  முகத்துக்கு முன்னால் சிரிப்பார்கள்; முதுகிற்குப் பின்னால் சீறுவார்கள். பக்கத்தில் இருந்துகொண்டே, ‘எப்போது கவிழ்க்கலாம்’ என்று எதிர்பார்த்துக்   கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட வஞ்சகர்கள் எத்தனைப் பேரை நான் பார்த்திருக்கிறேன்!

அவர்களைப்பற்றி எச்சரித்து எத்தனைப் பாடல்கள் எழுதியிருக்கிறேன்! சிலரை நான் நம்பாமல் இருந்தாலும், மற்றும் சிலரை நம்பி இருந்தாலும் எனக்கு  இத்தனைக் கஷ்டங்கள் வந்திருக்காது. பெதடின் போட்டு உடம்பைக் கெடுத்துக் கொண்டிருக்க மாட்டேன்; பணத்துக்குச் சிரமப்பட்டிருக்கவும் மாட்டேன். ஏற்கெனவே  நான் கூறியபடி, எனது வாழ்க்கை வரலாற்றுக்கு ‘வனவாசம்’ என்ற தலைப்பைவிட ‘ஒரு முட்டாளின் சுயசரிதம்’ என்ற தலைப்பே பொருத்தமானது. ஆனால்,  அந்த முப்பது ஆண்டுகளில் நான் பெற்றுக்கொண்ட அனுபவங்கள்தான், இன்று எழுத்துகளாகப் பரிணமிக்கின்றன.

பாண்டவர்கள் கௌரவர்களால் வஞ்சிக்கப்படாமல் இருந்திருந்தால், பகவானுடைய திருஷ்டி அவர்கள் மேல் விழுந்திருக்கப் போவதில்லை; பாரத யுத்தமும்   நடந்திருக்கப் போவதில்லை. நானும் பல பேரால் வஞ்சிக்கப்படாமல் இருந்திருந்தால், இந்துமதச் சிந்தனை எனக்கு இந்த அளவுக்குத் தோன்றி இருக்கப்  போவதில்லை. எனது தர்க்க அறிவை நான் விருத்தி செய்துகொள்ள வஞ்சகர்களும், துரோகிகளுமே துணையாக இருந்தார்கள். அவர்கள் நேரடி எதிரிகளாக  இருந்திருந்தால் நான் சமாளித்திருப்பேன். மித்ர துரோகிகளாக இருந்ததாலேயே சங்கடப்பட வேண்டி வந்தது.

புராண இதிகாசங்களிலோ, அரக்கர்கள் நேரடி எதிரிகள். அவர்களை நம்பலாம்; நம்ப முடியாதவன் நண்பன் மட்டுமே. அதனால்தான் ராமலிங்க அடிகளார், ‘உத்தமர்  தம் உறவு வேண்டும்’ என்று பாடினார். நல்லவர்பால் சேர்ந்து ஒழுகுவது பற்றி வள்ளுவனும் கூறினான். வஞ்சக நெஞ்சங்களைக் கம்பனும் பாடினான்.  கள்ளத்தை கருவறுக்க, கபடத்தை வேரறுக்க, வஞ்சகத்தை வெட்டி வீழ்த்த இந்து மதம் எடுத்துக்கொண்ட முயற்சி சொஞ்ச நஞ்சமல்ல. இருந்தும் அது  முன்னைவிட அதிகமாகி விட்டது! இந்தியப் பொருளாதாரத்தின் பலவீனத்தால், சிறு பருவத்திலேயே மனிதன் வஞ்சகனாகி விடுகிறான்.

கற்பழித்துக் கொலை செய்வதும், காதறுத்து நகை திருடுவதும் சகஜமாகி விட்டன. 'இரக்கமென்றொரு பொருளில்லா அரக்கர்’ என்றான் கம்பன். இரக்கமற்றவர்கள்  இப்போது நிறைந்து காணப்படுகிறார்கள். ‘ஒருவேளைச் சோறு தாயே’ என்று சத்தம் போடும் பிச்சைக்காரனுக்குச் சோறு போட மறுக்கிறார்கள். ஒரு நண்பர்  ஒருவர் மேடைகளிலே ஏழைகளைப்பற்றி மிக உருக்கமாகப் பேசுவார். ஒரு பிச்சைக்காரனுக்கும் காலணா போட்டதில்லை. எந்தக் கொடுஞ்செயலிலும் துணிந்து  இறங்குவார். ஆனால், அவரையும் பலர் நம்புகிறார்கள்.

சாகக் கிடக்கும் உயிருக்குக்கூடப் ‘பணம் கொடுத்தால்தான் வருவேன்’ என்று பிடிவாதம் பண்ணும் டாக்டர்கள்... ஜெயிக்கக் கூடிய வழக்கைக்கூட பணம்  கொடுக்காததால் தோற்கடிக்கும் வக்கீல்கள்...நண்பனோடு பழகி, அவனது மனைவியையே கெடுத்துவிடும் தலைவர்கள்... ஒன்றா, இரண்டா? லட்ச ரூபாயைத்  திருட்டுத்தனமாகச் சம்பாதித்து, இருபதாயிரம் ரூபாயைத் திருப்பதி உண்டியலிலே போட்டு விடுவதால் வெங்கடாசலபதி திருப்தியடைவதில்லை.  மனிதாபிமானத்தை நேசிக்காதவர்கள், நான் முன்பகுதியில் கூறியபடி, நரகவாசிகளே!

நான் பார்த்தவரையில் இரண்டு வகையான நீதிபதிகள் இந்தியாவில் இருக்கிறார்கள். ஒரு வகையினர் குற்றவாளிகளைக்கூட விடுதலை செய்து விடுகிறார்கள்.  இன்னொரு வகையினர், நிரபராதிகளைக்கூடத் தண்டித்து விடுகிறார்கள். வழக்கின் தன்மையைவிட, நீதிபதியின் மனப்போக்கே நியாய அநியாயங்களுக்குக்  காரணமாகி விடுகிறது. கூர்மையான கத்தியைக் கையில் வைத்துக்கொண்டு மென்மையான குழந்தையிடம் விளையாட்டுக் காட்டுகிறோம் என்பதை, அவர்கள்  மறந்துபோய் விடுகிறார்கள். முதலாவது பீச் லைனில் ஒரு மாஜிஸ்திரேட் கோர்ட்.

அங்கே என்மீது மான நஷ்ட வழக்குத் தொடுத்திருந்தார் பால்காரர் ஒருவர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டும் யாதவ ஜாதியைச் சேர்ந்தவர். மிகச்  சாதாரணமாகத் தள்ளப்பட வேண்டிய அந்த வழக்கைத் தன் ஜாதிக்காரனுக்குச் சாதகமாகி எனக்கு அபராதம் விதித்தார் மாஜிஸ்திரேட். கவனிக்க நாதி இல்லாமல்,  மேல் கோர்ட்டிலும் அது உறுதியாயிற்று. நானும், என்னுடைய அரசியல் தலைவர் ஒருவரும், ஒரு குறிப்பிட்ட தொழிலதிபர் தன் தொழிற்சாலையில்  மந்திரிகளுக்கு மது விருந்தளித்ததாகப் பேசி இருந்தோம். நான் அதை எழுதியிருந்தேன்.

அவருடைய சொந்தக்காரர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார். அவரிடம் என்னுடைய சிவில் வழக்கு ஒன்று வந்தது. தன் சொந்தக்காரரை நான்  அவமானப்படுத்தி விட்டதாகக் கருதி, அந்த சிவில் வழக்கை ‘டிகிரி’ செய்தார் அந்த நீதிபதி. பிறகு நான் பிரதம நீதிபதி கோர்ட்டில் அப்பீல் செய்து ஜெயித்தேன்.  இப்போது மத்திய அரசில் நிபுணராக விளங்குகிற ஒருவர் மாஜிஸ்திரேட்டாக இருந்தபோது, ஒரு டில்லி மந்திரியும் மற்றும் சிலரும் போய்ச் சொன்னார்கள்  என்பதற்காக, ஒரு மிஷின் வழக்கில் என்னைத் தண்டித்தார்.

பிறகு நான் உயர்நீதிமன்றத்தில் தோழர் மோகன் குமாரமங்கலத்தை வக்கீலாக வைத்து, ஒரு மணி நேரத்தில் அந்த வழக்கை ஜெயித்தேன். மற்றும் வேலூரில்  ஒரு வழக்கு. பல வழக்குகள். இப்போது எல்லா நீதிபதிகளுமே ரிடையராகி விட்டார்கள். இப்போது என்மீது வழக்குகள் அதிகமில்லை. இந்த நாலைந்து  ஆண்டுகளில் நான் கோர்ட்டுப் படிக்கட்டு ஏறியதில்லை. இனி அதற்கான அவசியமும் இருக்காது. இன்றைய நீதிபதிகளில் பலர் உயர்ந்த தத்துவப் பேச்சாளர்கள்.  கடந்த ஆறேழு ஆண்டுகளில் நியமிக்கப்பட்டிருக்கும் அனைவருமே எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், மனிதாபிமானிகள், அவர்களில் இளைஞர்களும் இருக்கிறார்கள்.

கள்ளம், கபடம், வஞ்சக நெஞ்சம் அவர்களிடம் இல்லை. நானும் ஐந்தாண்டுகளுக்கு முந்திய கண்ணதாசனாக இல்லை. அதனால், எல்லோருடனும் சந்தோஷமாகப்  பழக முடிகிறது. கடந்துபோன காலங்களை எண்ணிப் பார்த்தால் இப்போதும் எனக்கு கண்ணீர் வரும். வஞ்சகர்களையே என் வாழ்நாள் முழுவதும்  சந்தித்திருக்கிறேன். யாரோ ஒருவர் கவியரங்கத்திலே பாடியது போல் கவர்னர் அளவுக்குச் சம்பளம் வாங்கி, ராஷ்டிரபதி அளவுக்குச் செலவு செய்திருக்கிறேன்.  அன்றைய சந்திப்புகளை எண்ணிப் பார்க்கும்போது பொய், சூது, வஞ்சக நெஞ்சம் பற்றி இந்துமதம் சொன்னதே என் நினைவுக்கு வருகிறது.

மனிதனைத் தெய்வமாக்க இந்து மதம் விரும்புகிறது. ஆனால், மனிதனை மனிதனாக்கும் முயற்சியிலேயே இன்னும் அது வெற்றி பெறவில்லை. இதயம்  பரிசுத்தமாகவும், வார்த்தைகள், உண்மையாகவும் உள்ள ஒரு ஏழையைக் கண்டால், அவன் காலில் விழுந்துவிட நான் தயார். உண்மையில் ஏழைகளில்தான் பலர்   அப்படி இருக்கிறார்கள். ஓரளவு வசதியுள்ளவன்கூட, குடி கெடுப்பவனாகத்தான் இருக்கிறான். தன்னையே கண்ணாடியில் பார்த்த இரணியனைப் போல், பலர்  தங்களையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சமுதாய உணர்வு என்பது சிறிதும் இல்லை. நாம் சுமந்து கொண்டிருப்பது உடம்புதான் என்பதைச் சாகும் வரையில்  அவர்கள் நினைப்பதில்லை.

கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளங்களையே, மதம் வளர்க்கிறது. பொய் சொல்லாத சந்நியாசி, நாணயம் தவறாத சம்சாரி இருவரையும் அது உற்பத்தி செய்கிறது.  நாணயம், இரக்கம், ஒழுக்கம், மனிதாபிமானம் பற்றி இந்து மதம் போதித்த அளவுக்கு, எந்த மதமும் போதிக்கவில்லை. இன்றைய இளைஞன் அப்படி ஒரு  சமுதாயத்தை உருவாக்க வேண்டும். பத்துப் பேரை நல்லவர்களாக்குவது போல் ஒரு புனிதமான பணி, உலகத்தில் வேறெதுவும் இல்லை. அதற்கு இளைஞர்கள்  கைக்கொள்ள வேண்டிய ஒரே நம்பிக்கை, மத நம்பிக்கை. மதமும், அது காட்டும் தெய்வமும், அதன் வழி வந்த அவதார புருஷர்களுமே, ஒரு நேர்மையான  ஞானம் மிக்க சமுதாய கர்த்தாக்கள்.

நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்,

சென்னை - 600 017.

(தொடரும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-07-2019

  17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • DongriBuildingCollapse

  மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

 • KyrgyzstanSlapping

  ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

 • ChangchunZoologicalPark

  உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • 16-07-2019

  16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்