SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெர்ட்டிகோவை விரட்ட வியாழனால் இயலுமா?

2018-08-16@ 15:22:15

ஜோதிடம் என்கிற மருத்துவம் - 46

புதன், குரு, சுக்கிரன் ஆகியோர் சுபகிரஹங்களாக இருந்தாலும் இவர்களால் உடலின் வலிமையைக்கூட்ட இயலுவதில்லை. அசுபகிரஹங்களாக இருந்தாலும் செவ்வாயும், சனியுமே உடல்பயிற்சிக்குத் துணை நிற்பவர்கள், உடல்வலிமையைத் தருபவர்கள் என்ற உண்மையை கடந்த சில இதழ்களில் கண்டு வருகிறோம். செவ்வாயும், சனியும் உடல் வலிமையைத் தந்தாலும் மனித உடலுக்குள் இருக்கும் மிருதுவான பகுதிகளின் மேல் இவர்களது ஆதிக்கம் செல்லுபடியாவதில்லை. எலும்பு, தசை முதலிய வலிமையான பாகங்களின்மேல் செவ்வாய் மற்றும் சனியின் ஆதிக்கம் இருப்பதைப்போல, மெல்லிய நரம்புகள், நாளங்கள், சுரப்பிகள் இவற்றின் மேல் புதன், குரு, சுக்கிரன் ஆகிய சுபகிரஹங்களே தங்களது ஆதிக்கத்தினை செலுத்துகிறார்கள். தற்காலத்தில் வெர்ட்டிகோ என்ற பெயரைஅடிக்கடி காதில் கேட்க முடிகிறது. கிர்ர்... என்று திடீரென்று வருகின்ற தலைச்சுற்றல் மயக்கத்தினை வெர்ட்டிகோ என்றுஅழைப்பார்கள்.பெரும்பாலும் அறுபத்தைந்து வயதினை உடையவர்களுக்கு இதுபோன்ற கிறுகிறுப்பான மயக்கம் அடிக்கடி உண்டாகக் கூடும். இந்த விதமான தலைச்சுற்றலுக்கு பலவிதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன.

கழுத்தெலும்பின் தேய்மானம், காது நரம்புகளில் பிரச்னை, நரம்புத் தளர்ச்சி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுவது ஆகியவையாகும். அவற்றுள் சில. காதுகளில் பிரச்னை உள்ளவர்களை பெரும்பாலும் இந்த வெர்ட்டிகோ சென்றடைந்து விடுகிறது. மனித உடலில் உள்ள இரண்டு காதுகளின் நரம்புகளும் மூளையுடன் இணைக்கப்பட்டிருக்கும். காதுகளில் சீழ் பிடித்தால் கூட வெர்ட்டிகோ என்கிற இந்த கிறுகிறுப்பு மயக்கம் வந்துவிடும். காது, மூக்கு, தொண்டை இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. மனித உடலில் இந்த மூன்று பகுதிகளும் தனித்தனியாக காணப்பட்டாலும், இவை மூன்றும் உள்ளுக்குள் இணைபிரியாதவை. மூன்றில் ஒன்று பாதிக்கப்பட்டாலும், மற்ற இரண்டும் அதனால் அவதிக்குள்ளாகும். தொண்டையில் இன்ஃபெக்ஷன் என்றால் காது வலிக்கும், மூக்கு அடைத்துக் கொள்ளும். உடலில் உள்ள மற்ற எல்லா பாகங்களுக்கும் தனித்தனியே ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர்கள் இருந்தாலும், இந்த மூன்றுக்கும் சேர்த்து ஒரே மருத்துவர்தான் இருப்பார். காது, மூக்கு, தொண்டை நிபுணர் (ஈ.என்.டி., ஸ்பெஷலிஸ்ட்) என்று அந்த மருத்துவரை அழைப்பார்கள். வெர்ட்டிகோ பிரச்னையால் அவதிப்படுபவர்கள் முதலில் இந்த மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது நல்லது.

காதுகளில் பிரச்னை என்றால் மயக்கம் வருமா என்ன என்ற எண்ணம் நமக்குத் தோன்றுவது இயற்கை. நிச்சயமாக வரும். காதுகளில் ஒருவிதமான இரைச்சல் உண்டாகும்போதும், கேட்கும் திறனில் குறை உண்டாகும்போதும், அந்த ஒலியை உள்வாங்கும் மனிதனின் மூளை தடுமாற்றம் காண்கிறது. என்னவிதமான ஆணையை உடலுறுப்புகளுக்குப் பிறப்பிக்க வேண்டும் என்பதில் மூளை குழப்பத்திற்கு உள்ளாகிறது. கணிப்பொறியை இயக்கும்போது சமயத்தில் ஹேங் ஆகி அப்படியே செயலற்று நின்று விடுகிறதே, அதேபோல மனிதனின் மூளையும் செயலிழந்து போகிறது. இதனால் மயக்கம் வருகிறது. ஜோதிடவியலைப் பொறுத்தவரை ஒரு மனிதனின் ஜாதகத்தில் ஜென்ம லக்னம் என்பது மனிதனின் மூளையையும், மூன்றாம் பாவகம் என்பது காது, மூக்கு,
தொண்டைப்பகுதியையும் சொல்லும். ஜென்ம  லக்னமும், மூன்றாம் பாவகமும் ஒன்றுக்கொன்று தொடர்புகொள்ளும்போது இதுபோன்ற பிரச்னைகள் உண்டாகக் கூடும். உதாரணத்திற்கு ஐப்பசி மாதத்தில் சிம்ம லக்னத்தில் பிறந்தவரின் ஜாதகத்தில் சூரியன் நீசம் பெற்றிருப்பார்.

அதாவது ஜென்ம லக்னாதிபதி சூரியன் மூன்றாம் வீட்டில் நீசபலத்துடன் அமர்ந்திருந்தால் காது, மூக்கு, தொண்டை பிரச்னைகளை சந்திக்க நேரிடும். அதிலும் சூரியன் சுவாதி நட்சத்திரக் காலில் அதாவது ராகுவின் சாரம் பெற்று அமர்ந்து, ராகுவின் வலிமை எதிர்மறையாக இருந்தால் நிச்சயமாக காதில் பிரச்னையும், அதனால் மூளையில் பிரச்னையும் உண்டாகும். இதுபோன்ற அமைப்பினை உடையவர்களை வெர்ட்டிகோ முதலான பிரச்னைகள் தாக்கும். இந்த இடத்தில்தான் சுப கிரகங்களான புதன், குரு, சுக்கிரன் ஆகியோரின் பலம் தேவைப்படுகிறது. நரம்புகளுக்கு அதிபதியான புதன், நாளங்களுக்கு அதிபதியாகிய குரு, சுரப்பிகளுக்கு அதிபதியாகிய சுக்கிரன் ஆகிய மூவரும் தங்கள் பணியை சிறப்பாகச் செய்தால் நிச்சயமாக பாதுகாக்கப்படுவோம். பார்க்கின்சன், கெமிக்கல் இம்பேலன்ஸ் போன்ற மூளை தொடர்பான பிரச்னைகளிலிருந்தும் மேற்சொன்ன மூன்று கிரகங்களால் நம்மை காக்க இயலும். மனித மூளைக்குள் ரத்தம் மட்டுமின்றி மற்றுமொரு திரவமும் சென்று கொண்டிருக்கும். செரிப்ரோ ஸ்பைனல் ஃப்ளூயிட் என்று அதனைச் சொல்வார்கள்.

மனித மூளைக்குள் ஒன்றுக்கொன்று இணைந்திருக்கும் நியூரான்கள், அவை வெளியிடும் நியூரோ டிரான்ஸ்மீட்டர்கள் என்று நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத அமைப்புகள் பணியாற்றுகின்றன. இவைகளில் ஏதேனும் ஒன்று தனது பணியைச் சரிவர செய்யாவிட்டால் கூட மனித மூளை ஸ்தம்பித்து நின்றுவிடும். சடாரென்று உண்டாகின்ற தடுமாற்றம் மயக்கநிலைக்கு அழைத்துச் செல்லும். இந்த நியூரான்களை தனது  கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவர் நரம்பு மண்டலத்திற்கு அதிபதியான புதன் பகவான். நியூரோ டிரான்ஸ் மீட்டர்களை சரியான விகிதாசாரத்தில் செயல்பட வைப்பவர் குரு என்று பெயர் பெற்றிருக்கும் வியாழன். இவர்கள் இருவரும் சரியான நேரத்தில் செயல்பட சுரப்பிகளை முறையாக இயக்கித் துணை புரிபவர் சுக்கிரன். ஆக, புதன், வியாழன், வெள்ளி ஆகிய இந்த மூவரின் செயல்பாடும் மனித மூளைக்குள் சாஃப்ட்வேர் சிஸ்டமாக செயல்படுகிறது. இவர்களில் மிகவும் முக்கியமாக நியூரோ டிரான்ஸ்மீட்டர்களை சரியான விகிதாசாரத்தில் செயல்பட வைக்கும் குரு பகவானின் பணி அதிமுக்கியமானது.

இந்த நியூரோ டிரான்ஸ்மீட்டர்களில் தடுமாற்றம் நிகழும்போது வெர்ட்டிகோ என்ற தலைசுற்றலுக்கு உள்ளாகிறோம். சோலார் சிஸ்டத்தில் இந்த மூன்று கிரகங்களின் வரிசை மாறியிருந்தாலும், மனித மூளையுடன் இந்த கிரகங்களுக்கு இருக்கும் தொடர்பினை நமக்கு உணர்த்தும் வகையில் நம் முன்னோர்கள் வார நாட்களில் இவர்கள் மூவரையும் ஒன்றன்பின் ஒருவராக புதன், வியாழன், வெள்ளி என்று அடுத்தடுத்த நிலைகளில் வரிசைப்படுத்தி உள்ளார்கள். ஆக, குருபகவானின் அருள் இருந்தால் வெர்ட்டிகோ பிரச்னையை விரட்ட முடியும். வெர்ட்டிகோ பிரச்னையால் அவதிப்படுபவர்கள் குருவிற்கு உரிய தானியமான கொண்டைக் கடலையை ஊறவைத்து தினமும் காலையில் சிறிதளவு சாப்பிட்டு வருவது நல்லது. புரோட்டின் சத்து கிடைக்கிறது என்று சொன்னாலும் இதில் உள்ள புரோட்டின்கள் நியூரோ டிரான்ஸ் மீட்டர்களை சரியான விகிதத்தில் செயல்பட வைக்கும் சக்தி பெற்றவை.

அதே போல வெர்ட்டிகோ பிரச்னையால் அவதிப்படுபவர்கள் குரு பகவானுக்கு உரிய நிறமான மஞ்சள் (வெளிர் மஞ்சள்) நிறத்தை அடிக்கடி கண்களால் பார்ப்பது நல்லது. வெளிர் மஞ்சள்நிறம் அவர்களின் கண்களுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு மூளையையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். இவர்கள் தங்கள் வீட்டின் உட்புறச் சுவருக்கு மஞ்சள்நிற பெயிண்ட் அடிப்பது, மஞ்சள்நிற கைக்குட்டை, டவல் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் அடிக்கடி கண்களால் மஞ்சள் நிறத்தைக் காண இயலும். வெர்ட்டிகோ பிரச்னை உண்டாகும்போது அவசர காலத்தின்போது மட்டும் அதற்குரிய மருந்து மாத்திரைகளை சாப்பிடுவது நல்லது. நிரந்தரமாக விடாமல் தொடர்ந்து இந்த மருந்துகளை சாப்பிடுவது பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். மருந்துகளின் அளவினைக் குறைக்க வியாழனைப் போற்றுவோம். ஆரோக்யம் காப்போம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • japan_animsehan11

  ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி

 • wax_giant_pics

  மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

 • church_cathdral11

  நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

 • apolo_50vinkalam1

  நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

 • 18-07-2019

  18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்