SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐந்தாம்படை வீடாம் திருத்தணியின் சிறப்புகள்

2018-08-16@ 09:36:48

முருகனுடைய ஆறுபடை வீடுகளுள் ஐந்தாவது படைவீடு திருத்தணிகை. இதன் சிறப்புகள் ஏராளம். அவற்றில் சிலவற்றை காண்போம்.

* மலைகளில் சிறந்தது திருத்தணிகை என்று போற்றுகிறது கந்த புராணம். ‘திருத்தணிக்குச் செல்ல வேண்டும்’ என்று நினைத்தாலே நோய்நொடிகள்  நீங்கும் என்கிறது தணிகை புராணம். ‘திருத்தணிகையில்  ஐந்து நாட்கள் தங்கியிருந்து, என் திருவடிகளை தியானித்து வழிபடுபவர்கள் வீடு பேறு பெறுவர்’ என்று முருகனே வள்ளி குறத்தியிடம் சொல்வதாக கந்த புராணத்தில் குறிப்பிடுகிறார்  கச்சியப்ப சிவாச்சார்யார்.       
 
* முருகப் பெருமான் தானே தேர்ந்தெடுத்து அமர்ந்த தலமாதலால் ஸ்கந்தகிரி, செல்வங்கள்  யாவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளதால் ஸ்ரீபரிபூரணகிரி, உலகின் மூலாதாரமான  ஈசனே தணிகாசலனை இங்கு பூஜித்ததால் மூலாத்திரி, பக்தர்களின் கோரிக்கைகள்  நிமிடத்தில் நிறைவேறும் தலம் என்பதால் தணிகாசலம், இங்கு நாள் தோறும்  கருங்குவளை மலர்கள் மலர்வதால் அல்லகாத்திரி, முருகப் பெருமான் பிரணவப்  பொருளை உரைத்த தலம் என்பதால் பிரணவதான நகரம், இந்திரன் வரம் பெற்ற தலம் என்பதால் இந்திரநகரி, நாரதருக்கு விருப்பமான தலமாதலால் நாரதப்ரியம், அகோரன்  என்ற அந்தணன் முக்தி பெற்ற தலமாதலால் அகோரகல்வயைப்ரமம், நீலோற்பல மலர்கள்  நிறைந்த இடமாதலால் நீலோத்பலகிரி, கழுநீர்க் குன்றம் மற்றும் நீலகிரி,  கல்பத்தின் முடிவிலும் அழியாத தலம் ஆதலால், கல்பஜித் என்றும் பெயர் பெற்றது  திருத்தணிகை என்கிறார்கள். உற்பலகிரி, செங்கல்வகிரி, சாந்தரகிரி, நீலகிரி, குவளைச்  சிகரி ஆகிய பெயர்களும் இதற்கு உண்டு.

* திருத்தணி  முருகனை மும்மூர்த்திகள் மட்டுமின்றி நந்திதேவர், வாசுகி நாகம்  மற்றும் அகத்திய முனிவர் ஆகியோரும் வழிபட்டுள்ளனர். சிவபெருமான், திருத்தணிகையில் முருகப் பெருமானை தியானித்து பிரணவ  மந்திரத்தின் பொருள் உபதேசிக்கப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.  மைந்தனின் உபதேசத்தால் மகிழ்ந்த சிவபெருமான், வீர அட்டகாசமாகச் சிரித்ததால்,  வீரட்டானேஸ்வரர் எனும் பெயர் பெற்றார். ஸ்ரீவீரட்டானேஸ்வர் திருக்கோயில் திருத்தணிக்கு கிழக்கே, நந்தியாற்றின் வடகரையில் உள்ளது.

*ஸ்ரீமகாவிஷ்ணு,  திருத்தணிகை முருகனை வழிபட்டு சூரபத்மனின் சகோதரனான தாரகாசுரனிடம் இழந்த தனது சக்ராயுதத்தை மீண்டும் பெற்றாராம். அவர் உருவாக்கியது விஷ்ணு  தீர்த்தம். பங்குனி உத்திரமும், ஞாயிற்றுக்கிழமையும் கூடிய நன்னாளில் இதில்  நீராடி தணிகை முருகனை வழிபட்டால், சகல நலன்களும் கிட்டும் என்பது ஐதீகம்.
 
* ஒரு  முறை பிரணவத்தின் பொருள் தெரியாத பிரம்மனை தலையில் குட்டி, சிறையில் அடைத்தார் முருகப் பெருமான். இதனால் சிருஷ்டித் தொழில் பாதிப்படைவதை  விரும்பாத சிவனார், சிறையிலிருந்த பிரம்மனை மீட்டார். பிறகு, கர்வம்  நீங்கிய பிரம்மன் சிவனாரது ஆலோசனைப்படி, இங்கு வந்து தவம் இயற்றி தணிகைவேலனை வழிபட்டு, அட்ச சூத்திரம், கமண்டலம் மற்றும் சிருஷ்டி வல்லமையை  மீண்டும் பெற்றார். அவர் உருவாக்கிய பிரம்ம தீர்த்தம் மற்றும் பிரமேஸ்வரர்  லிங்கத்தை மலைப்பாதையில் தரிசிக்கலாம்.
 
* பிரம்மனின்  மனைவி சரஸ்வதிதேவியும் தணிகை வேலனை வழிபட்டு அருள்பெற்றதாக புராணங்கள்  கூறுகின்றன. இந்தத் தலத்தில் உள்ள சரஸ்வதி தீர்த்தமும் இதற்கு சான்று.

* ஸ்ரீராமபிரான்  இங்கு வந்து குமாரக் கடவுளை வணங்கி ஞானோபதேசம் பெற்றதாகக் கூறுவர். சீதா  பிராட்டி சமேத ஸ்ரீராமர் சந்நிதானம், ஸ்ரீராமர் பூஜித்த சிவலிங்கம் மற்றும்  அவர் உருவாக்கிய தீர்த்தமும் திருத்தணிகையில் உண்டு.  ‘திருத்தணியில் முருகப் பெருமானை தியானித்து தவம் இயற்றினால்  முத்தமிழறிவும், ஞானமும் கிட்டும்!’ என்று சிவபெருமான் அருளியபடி அகத்தியர் இங்கு வந்து, தவம் இயற்றி முருகப் பெருமானின் அருள்பெற்றார். பாற்கடலைக்  கடைந்தபோது மந்திர மலையினால் தன் உடலில் ஏற்பட்ட காயங்கள் குணமாக வாசுகி  நாகம் இங்கு வந்து முருகப்பெருமானை வழிபட்டு நலம் பெற்றதாக திருப்புகழ்  கூறுகிறது. மலையின் மேற்குப் பக்கம் உள்ள வாசுகி தீர்த்தத்தில் நீராடி,  தணிகை வேலனை வழி பட்டால் நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-07-2019

  17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • DongriBuildingCollapse

  மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

 • KyrgyzstanSlapping

  ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

 • ChangchunZoologicalPark

  உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • 16-07-2019

  16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்