SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல்யாண வரமருளும் காமாட்சி

2018-08-14@ 09:39:42

மாங்காட்டில் தீப்பிழம்பின் மத்தியில் தவக்கோலத்தில் பொலிந்தவள், தஞ்சையில் பங்காரு காமாட்சியாக பிரமிப்பூட்டுகிறாள். காஞ்சியில் பேரமைதி தவழும் யோகநாயகியாக, யோக காமாட்சியாக உலகை அரவணைக்கிறாள். அத்தகைய பேராற்றலைப் பொழியும் பராசக்தியானவள் தன் இன்முகம் காட்டி கல்யாண காமாட்சியாக அருட்கோலம் காட்டும் தலமே தகடூர் எனும் தர்மபுரியாகும். ராவண வதம் முடித்தபிறகு ராமர் சற்று கலங்கித்தான் போனார். ராவணன்தான் எப்பேற்பட்ட சிவபக்தன்! சாமகானம் பாடி ஈசனையே அசைத்தவனாயிற்றே. சதுர் வேதங்களையும் கற்று கரை கண்டவனாயிற்றே. ஆனால் எத்தனை தர்மங்களை கரைத்துக் குடித்தாலும், தன் வாழ்க்கையை அதர்மத்தின் பாதையில் அமைத்துக் கொண்டானே! கருணை மிகுந்து, தர்மம் ராமரூபம் கொண்டது. அகங்காரம் எனும் ராவணனை வீழ்த்தியது. ஆனாலும் மனித உருகொண்டதால் செய்யக்கூடாததைச் செய்ததுபோல பதறியது.

ஐயோ, வேதமறிந்தவனை கொன்றேனே என்று கலங்கியது. கலக்கம் பிரம்மஹத்தி தோஷமாக ராமரைப் பற்றியது. அதைப் போக்க ஆதிசேது எனும் ராமேஸ்வர சமுத்திர மணலை அளாவி எடுத்து ஈசனை தம் தளிர்கரங்களால் லிங்க உருவில் குழைத்து நாள் தவறாது பூசித்தார் ராமர். கடல் அலைகள் பிரம்மஹத்தி தோஷத்தை தம்மோடு கரைத்துக் கொண்டன. தோஷம் விடுபட்ட ராமர், சூரியனாக ஜொலித்தார். ஆயினும், உள்ளுக்குள் ஏதோ நெருடிக் கொண்டிருந்தது. பிரம்மஹத்தி தோஷத்தின் வீர்யம் புகை போன்று சுழன்று கொண்டிருந்தது. மாமுனிகளை அண்டி அமர்ந்து ஆறுதல் அடையலாமே என்று நினைத்த ராமர் தீர்த்த யாத்திரை மேற்கொண்டார். அகத்தில் ஞானத்தீயை கொழுந்து விட்டெறியச் செய்த அகத்தியரை நாடினார். இதற்கொரு வழி கூறுங்களேன் என்று கேட்டுப் பணிவாக நின்றார். அகத்தியர் ‘‘ராகவா உனக்கு ஒரு குறையும் ஏற்படாது. நீ தீர்த்தமலை சென்று வா.

உன்னைச் சுழற்றும் இந்த தோஷம் பரிபூரணமாக நீங்கும். கல்யாண காமாட்சி உன் கலக்கம் தீர்ப்பாள்,’’ என்றார். அதேசமயம், குமார சம்பவம் நடைபெற வேண்டுமென தேவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். மன்மதன் தன் தூண்டுதலால் அது நிகழும் என்று சற்று கர்வம் கொண்டிருந்தான். ஈசனை தன் ஆளுமையில் கொண்டுவரத் துடித்தான். ஐயனருகே மன்மதன் வந்தான். ஈசனை சூழ நினைத்தான். ஆனால் சிவனின் ஞானாக்னி, மன்மதன் எனும் காமத்தை பொசுக்கியது. வெற்றுச் சாம்பலானான் மன்மதன். சுய உடலை இழந்த மன்மதன் உடலற்றவனானதால் அனங்கன் என்று அழைக்கப்பட்டான். பார்வதி இச்செயலைக் கண்டு வருந்தினாள். மன்மத பாணமே தோற்றுவிட்டதால் தான் ஈசனுடன் இணைய இயலாது போய்விடுமோ என்று மனம் உடைந்தாள்.  பூவுலகில் தவம் செய்து ஈசனோடு மீண்டும் இணைய உறுதி கொண்டாள். தகடூரில் ஸ்ரீசக்ரம் அமைத்து மாதவத்தில் ஆழ்ந்தாள் மாதா. ஈசனும் அந்த தவத்தில் கரைந்தார். சட்டென்று தரிசனம் தந்தார்.

தவத்தில் உறைந்திருந்த நாயகியின் முகம் சிவனைக் கண்டதும் பூரித்துச் சிவந்தது. மலைமகள் திருமணக் களை கொண்டாள். ஈசனும் அத்தலத்திலேயே அவளை மணந்ததோடு மன்மதனை உயிர்ப்பித்து ரதிதேவியின் கண்களுக்கு மட்டுமே தோன்றுமாறு செய்தார். மன்மதன் மகிழ்ந்தான். ரதிதேவி ஈசனின் திருவடி வீழ்ந்து பரவினாள். மன்மதனைக் காத்த கல்யாண காமாட்சி சக்தி பீடத்தின் மத்தியில் அமர்ந்து பேரருள் பெருக்கும் தலத்திற்கு ராமனையும் சென்றுவரச்சொல்லி, வசந்த நவராத்திரி பூஜை முறைகளையும் உபதேசித்தார் அகத்தியர். ராமர் சக்தி பீடத்தை நெருங்கியபோதே தன்வயமிழந்தார். அப்போதே பிரம்மஹத்தி தோஷமானது முற்றிலுமாக மறைந்தது. ராமர், பிரம்மம் எனும் தெளிந்த நீலவானத்தைப்போல நிர்மல மனதினராகத் திரும்பினார். தர்மபுரி எனும் இத்தலத்தில் மன்மதனை உயிர்ப்பித்ததற்கு ஆதாரமாக இருந்த அன்னை, போக காமாட்சியாக அருள் கூட்டி அமர்ந்தாள்.

பதினெட்டு யானைகள் தாங்கிய தேர் போன்ற அமைப்பில் விளங்குகிறது அன்னையின் சந்நதி. அன்னையை வணங்குபவர்கள் ராமரையும் தரிசிக்கிறார்கள். மேற்குப்புற கருவறையின் பின்னர் உள்ள முதல் யானையிடமிருந்து ஆரம்பிக்கும் ராமாயணக் காட்சிகள் அதியற்புதமான வேலைப்பாடுகளுடன் கூடி, அப்பிரதட்சணமாக வந்து, பதினெட்டாவது யானையுடன் முடிகிறது. சாதாரணமாகவே இறைவியின் சந்நதியை அப்பிரதட்சணமாக அதாவது, இடமிருந்து வலமாகச் சுற்றினால் உலக இன்பங்கள் விடுபட்டு முக்தி கிட்டும் என்பது ஆன்றோர்கள் வாக்கு. அம்பிகையை வலம் வரும்போது வலஇடமாகவும், ராமாயண காவியச் சிற்பங்களை தரிசிக்க இடவலமாகவும் வருவதால் இவள் இம்மையும் மறுமையும் கலந்தளிக்கும் அருட்தாய் என்பதை எளிதாக உணரலாம். ஆலயத்துக்குள் நுழைந்தவுடன் தல விநாயகரான செல்வ விநாயகரும், அவரை அடுத்து ஆறுமுகம் கொண்ட ஷண்முகநாதனும் தரிசனமளிக்கின்றனர்.

பிராகாரம் வலம் வருகையில், ‘மனோன்மணி’ உபாசனையை உலகில் பரப்பிய காடு வெட்டி சித்தர் சிவலிங்க ரூபமாய் சித்தேஸ்வரன் என்ற பெயரில் அருள்கிறார். அடுத்து தலத்தின் பிரதான நாயகி, ஐம்பது அடிக்கும் மேலாக உயர்ந்த இடத்தில் ஸ்ரீசக்ர மேடை மேல் நின்று அருள்கிறாள். மூன்று தள விமானத்தின் கீழ் தன்னிகரில்லாப் பெருமையுடன் காட்சி தரும் கோலம், பார்க்க மனம் அப்படியே நெகிழும். அம்மனின் கருவறை அமைப்பு வித்தியாசமானது.
ஈசனின் கருவறை விமானத்தைவிட பெரிது. அருளே உருவாய் கல்யாண குணங்களோடு, வணங்குவோர் வாழ்வில் நலம் பல அருளும் அம்பிகையை மனம் குவிய தரிசிக்கிறோம். அன்னையின் பதினாறு துணை சக்திகளும், மாதங்கி, வாராகியும் சேர்ந்து பதினெட்டு யானைகள், ஸ்ரீசக்ர சந்நதியில் கொலுவீற்றிருக்கும் நாயகியைத் தாங்கி நிற்கின்றன. உயரத்தில் உள்ள காமாட்சியின் சந்நதியை அடைய பதினெட்டு திருப்படிகள் உள்ளன.

அமாவாசை தினங்களில் பெண்கள் இங்கு திருப்படி பூஜையை விமரிசையாக செய்கிறார்கள். இத்தலத்தில் அருளும் ராஜதுர்க்கை ‘சூலினி’எனப் போற்றப்படுகிறாள். தர்மர் இருபத்தேழு மூல மந்திரங்களால் வழிபட்ட மூர்த்தினி இவள். சங்கு சக்ரம் ஏந்தி மஹிஷனை வதைக்கும் கோபரூபத்தில் இவள் இருந்தாலும் நாடிவரும் அன்பருக்கு நலங்கள் பல சேர்ப்பவள். செவ்வாய் தோஷம் போக்குபவள். ஒவ்வொரு தை மாதமும் சண்டிஹோமம் கொண்டருள்கிறாள் சூலினி. இங்கு ப்ரத்யங்கிரா தேவியும் சிறப்பாக வழிபடப்படுகிறாள். அடுத்தது மல்லிகார்ஜுனனின் பிரதான சந்நதி. தீபஸ்தம்பம், பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் கடந்தால் உற்சவ மூர்த்தங்களை தரிசிக்கலாம். இடது புறம் துர்வாசரை அவமதித்த சாபம் தீர இத்தலத்து ஈசனை வணங்கி சாபநிவர்த்தி பெற்ற ஐராவத யானையையும் காணலாம். கருவறையின் முகப்பில் உள்ள கஜலட்சுமியை, ஒரு யானை துதிக்கையைத் தூக்கியும், ஒரு யானை மண்டியிட்டு வணங்கும் அதிசய அமைப்பும் சிலிர்க்க வைக்கிறது. தர்மபுரி கோட்டை கோயில் எனப் புகழ் பெற்ற இத்தலம் தர்மபுரி பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • srilanka_chri11

  கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்

 • india_medals11

  ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்!!

 • pudin_russiaa1

  வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை

 • shadow_111

  பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

 • nigeriaaa_twins1

  இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்