SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கரும்பாய் இனிக்கும் வாழ்வருளும் கரும்பார்குழலி

2018-08-14@ 09:38:52

தமிழ்நாட்டில், கொங்கு தேசத்தில், குளித்தலை அருகில், ரத்னாசல மலையில் கோயில் கொண்டுள்ளாள் கரும்பார்குழலி. தமிழ் நாட்டின் சக்தி தலங்களில் இது மிகவும் பிரசித்தி பெற்றது. அராளகேசியம்மன், கரும்பார் குழலியம்மை என்றெல்லாமும் இந்த அம்பாள் அழைக்கப்படுகிறாள். இத்திருத்தலத்தில் சிவபெருமான் காலையில் கடம்பர், மதியம் சொக்கர், மாலையில் திருஈங்கோய்மலைநாதர், அர்த்த சாமத்தில் சிம்மேசர் என்றழைக்கப்படுகிறார். மதியம் சொக்கர் என்றழைக்கப்படுவர், ரத்னாசல மலையில் வீற்றிருக்கும் ரத்னகிரீஸ்வரர். இவருக்கு அபிஷேகம் செய்யப்படும் பால் உடனே கெட்டித் தயிராக மாறும் அற்புதம் இன்றும் நிகழ்கிறது. இம்மலையின் மீது காகங்கள் பறப்பதில்லை. இத்தல இறைவன் மரகதத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருட்பாலிக்கிறார். இதனால் இவருக்கு மரகதாசலேஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு. மாசி மாத சிவராத்திரியின்போது மூன்றுநாட்கள் சுவாமி மீது சூரியஒளி கதிர்கள் விழுகிறது. இந்நேரத்தில் லிங்கம் நிறம் மாறி காட்சியளிப்பது விசேஷம். பாடல் பெற்ற சிவத்தலம் மலைமீது இருப்பது அபூர்வமானது.

இத்தலம் அந்த வகையில் சிறப்பு பெற்றது. அம்பாளுக்கு, சிவன் தன் இடப்பாகம் தர இங்குதான் வாக்களித்தார் என்பதால் இம்மலையை ‘சக்திமலை’ என்கின்றனர். இதனை உணர்த்தும் விதமாக முன்மண்டபத்திலும், மலையிலும் அர்த்தநாரீஸ்வரர் வடிவங்கள் உள்ளன. மரகதாம்பிகை, நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளது கருவறை விமானம், கோபுரம் போன்ற அமைப்பில் மூன்று கலசங்களுடன் துலங்குகிறது. கருவறை கோஷ்டத்தில் காலுக்கு கீழே மகிஷனுடன் சற்றே ருத்ர சாயலில் ஒரு துர்க்கையும், பக்கத்திலேயே சாந்தசொரூபியாக இன்னொரு துர்க்கையும் கொலுவிருப்பது கூடுதல் சிறப்பு. தென்திசை வந்த அகத்தியர், சிவனை வழிபட இத்தலம் வந்தார். அப்போது நடை அடைக்கப்பட்டுவிட்டது. தனக்கு காட்சி தரும்படி சிவனை வேண்டினார். மலையடிவாரத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடிவிட்டு வந்தால் தன்னை வணங்கலாம் என்று அசரீரி சொன்னது. அதன்படி அகத்தியர் தீர்த்தத்தில் நீராட, உடனே ஈ வடிவம் பெற்றார். பின் இம்மலை மீது பறந்து வந்து, சந்நதி கதவின் சாவித்துவாரம் வழியாக உள்ளே புகுந்து சுவாமியை தரிசனம் செய்தார். பின் மீண்டும் தன் பழைய வடிவம் பெற்று திரும்பினார்.

அகத்தியர் ஈ வடிவில் வழிபட்ட தலம் என்பதால் இம்மலை, ‘திருஈங்கோய்மலை’ என்றும், சிவனுக்கு ‘ஈங்கோய்நாதர்’ என்றும் பெயர் உண்டு. சிவனின் நண்பரான சுந்தரர், தான் விரும்பிய நேரங்களில் சிவனிடம் பொன் கேட்டுப் பெற்றுக் கொள்வார். அவர் இத்தலத்திற்கு வந்து சிவனிடம் பொன் கேட்டார். சுந்தரரிடம் விளையாட நினைத்த சிவன், இங்கிருந்த ஒரு புளியமரத்திற்குள் ஒளிந்து கொண்டார். சுந்தரர், எவ்வளவோ அழைத்தும் அவருக்கு ஈசன் காட்சி தரவில்லை. ஒரு தங்க புளியங்காயை மட்டும் அவருக்கு கிடைக்கும்படி செய்தார். சுந்தரர் அதனை எடுத்தபோது, புளியங்காய் மறைந்து விட்டது. தன்னிடம் சிவன் விளையாடுவதை உணர்ந்து கொண்ட சுந்தரர், கோபத்தில் ‘எனக்கு கிடைக்காத புளி யாருக்கும் கிடைக்காமல் போகட்டும்,’ என சொல்லிவிட்டு திரும்பி விட்டார். இத்தலத்தின் விருட்சம் புளியமரம். சுந்தரரின் சாபத்தால் இதுதவிர வேறு புளியமரமே இத்தலத்தில் இல்லை என்கிறார்கள். ஐநூறு படிகளுடன் அமைந்த மலைக்கோயில் இது. கோஷ்டத்தில் ஒரு தட்சிணாமூர்த்தி, விமானத்தில் வீணை தட்சிணாமூர்த்தி, கால்களை மாற்றி அமர்ந்த தட்சிணாமூர்த்தி என குரு பகவானின் வித்தியாசமான வடிவங்களை காணலாம்.

பிருகு முனிவர் சிவனை வணங்கும் வழக்கம் உடையவர். ஆனால், அம்பாளைக் கண்டு கொள்ளவே மாட்டார். பக்தர்களின் வழிபாட்டில் அம்பாளுக்கும் முக்கியத்துவம் வேண்டும் எனக்கருதிய சிவன், அவளைக் கோபப்படும்படி செய்தார். இந்த விளையாடலுக்கு கட்டுப்பட்ட அம்பாள், பூலோகம் வந்து இத்தலத்தில் தவம் செய்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன், தன் உடலின் இடப்பாகத்தை தருவதாக இத்தலத்தில் உறுதியளித்தார். ரத்னாசல மலைக்குக் கீழே அய்யனார் சந்நதியும், வைரப் பெருமாள் சந்நதியும் உள்ளது. இங்குள்ள அய்யனார் மிகவும் சக்தி வாய்ந்தவர். பிரச்னை உள்ளவர் இங்கே பூட்டு வாங்கி பூட்டுகின்றனர். பிரச்னைகள் யாவும் ‘பூட்டு பூட்டிக்கிட்டா மாதிரி தீரும்’ என்ற நம்பிக்கை நிலவி வருகிறது. வைரப்பெருமாள் சந்நதியில் ஒரு தலையற்ற உருவம் உள்ளது. இதற்கென்ன காரணம்? சிவபக்தரான பெருமாள் என்பவர் தன் தங்கைக்கு புத்திர பாக்கியம் அளிக்கும்படியும், அவ்வாறு குழந்தை பிறந்தால் தன் தலையைக் கொய்து காணிக்கையாக்குவதாகவும் ரத்னாசலேஸ்வரரிடம் வேண்டினார். சிவபெருமானும் புத்திர பாக்கியம் அருளினார். சொன்னபடி பெருமாள், கோயிலுக்கு வந்து தன் தலையைக் காணிக்கையாக்கினார்.

இதனைக் கண்டு அகமகிழ்ந்த சிவன் அவரைப் பழைய நிலைக்கு மாற்றியருளினார். இதனால், இன்றும் சிவனுக்கு கற்பூர ஆரத்தி எடுத்தபின், வைரப் பெருமாளுக்கும் காண்பித்த பின்னர்தான் பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது. மகப்பேறு வேண்டுவோர் இங்கு வந்து வேண்டிக் கொண்டு பயன் பெறுகின்றனர். வேப்பமரத்தின் குளிர் நிழலில் சக்தி பீட நாயகி அருட் பாலிக்கின்றார். அபய வரத கரங்களும், பத்மம் தாங்கிய மேலிரு கரங்களுமாக கரும்பார் குழலி வீற்றிருக்கிறாள். இங்கு வருகை தரும் பெண் பக்தர்கள் தங்கள் மாங்கல்யம் காக்க வேண்டி நிற்கின்றனர்; நிறைவான வாழ்க்கையும் பெறுகின்றனர். குமாரி எனும் திருப்பெயரில் இந்த சக்தி பீடமாம் ரத்னாவளி பீடத்தில் அரசாள்பவள் இந்த அம்பிகை. இவள் மகாமாயை. இவளே மதுரையில் மீனாட்சியாகவும், காசியிலே விசாலாட்சியாகவும், காஞ்சியிலே காமாட்சியாகவும் திருவருட்பாலிப்பவள்.

இந்த அம்பிகை ஈசனுடன் இணைந்து இந்த ரத்னாவளி பீடத்தில் ஜொலிக்கிறாள். தன்னை வணங்கி வழிபடுவோரின் துன்பம் துடைத்து காப்பவள். அம்பிகையின் கடைக்கண் பார்வை சிறிதே பட்டாலும், ஒருவன், உலகம் முழுவதையும் ஒரு குடைகீழ் ஆள்வான். அவன் தேவேந்திரனாகி ஐராவதத்தில் ஆரோகணித்துச் செல்வான், தேவர்கள் அவனுக்கு ஏவல் புரிவர். மன்மதன் பார்த்துப் பொறாமை கொள்ளும் வகையில் பேரெழில் படைத்து, தேவதாஸிகள், அப்ஸரஸ்கள் போன்றோர் காதல் கொள்வர். அவன் வாக்குகளில் தாம்பூல நறுமணம் வீசும். அவன் நித்ய யௌவனுத்துடன் வாழ்வான் என மூகர் தன் மூகபஞ்சசதியின் ஸ்துதி சதகத்தில் கூறியபடி கரும்பார் குழலி தன் பக்தர்களுக்கு அத்தனை பலன்களையும் அள்ளித்தரும்  ஸர்வசக்தி படைத்தவள். கரும்பார்குழலியின் பதமலர்கள் பணிந்து கரும்பைப் போல் இனிப்பான வாழ்வு பெறுவோம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pulwama_kashmirthakuthal11

  காஷ்மீரில் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், ஜம்முவில் 5-வது நாளாக ஊரடங்கு உத்தரவு

 • rafael_porvimanm1

  சர்வதேச விமான கண்காட்சி: பெங்களூருவில் ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் விமான சாகச ஒத்திகை

 • fruitsvegpala1

  லக்னோவில் நடைபெற்ற வருடாந்திர காய்கறி, பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்

 • france_leaders123

  ஃபிரான்சின் நீஸ் திருவிழா : உலகத் தலைவர்களின் உருவங்கள் இடம்பெற்ற பிரம்மாண்ட ஊர்வலத்தின் புகைப்பட தொகுப்பு

 • 19-02-2019

  19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்