SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ராம பிரம்மத்தை தரிசித்த பால பிரம்மம்!

2018-08-13@ 16:27:57

ஞானியர் தரிசனம் - 22

ஸ்ரீமத் போதேந்திர சுவாமிகள் மற்றும் ஸ்ரீதர ஐயாவாள் அவர்கள் மறைந்து நூறாண்டுகள் கடந்து விட்டிருந்தன. அவர்கள் ஏற்படுத்தியிருந்த நாம சங்கீர்த்தன மார்க்கமானது மெல்ல தேயத் தொடங்கின. எது சரியான பாதை என்று அறியாது கூட்டத்தின் பின்னால் சுற்றுபவர்களாகவும் அலங்காரங்களோடு திரியும் உள்ளீடற்ற சந்நியாசிகளின் பின்னாலும் மக்கள் சுற்றியபடி இருந்தார்கள். ஆன்மிகத் தேடல்மிக்கோருக்கு பெருங் குழப்பம் நிலவியது. அன்னிய தேசத்திலிருந்து வந்த சக்திகள் மக்களின் குழப்பத்தையும் வறுமையையும் நன்கு உபயோகித்துக் கொண்டனர். இங்கிருக்கும் பெரும் செல்வங்களான கோயில்கள், நூல்கள், மார்க்கங்கள் பற்றிய தெளிவான விளக்கங்கள் அளிக்கப்படாமலேயே இருந்தன. அதிலும் மிக முக்கியமாக இறைவனுடைய திருப்பெயரைக்கொண்டு செய்யும் பக்தி மார்க்கமானது தேங்கிக் கிடந்தது. அப்போதுதான் அந்த அற்புதமான அவதாரம் நிகழ்ந்தது.

கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருவிசநல்லூர் எனும் ஸ்ரீதர ஐயாவாள் வாழ்ந்திருந்த ஊரே அது. ஆந்திர தேசத்தைச் சேர்ந்த அந்தணரான வேங்கடசுப்ரமண்யர் என்பவர் வசித்து வந்தார். வேதமறிந்து வேதம் கூறும் வாழ்வியல் முறையை வாழ்ந்து வருபவர். பாகவத சம்பிரதாயத்தைச் சேர்ந்தவராகவும் இருந்தார். அதேசமயம் தன்னுடைய சொந்த ஜீவனத்திற்காக திருமணம் மற்றும் சுப காரியங்களை செய்து வைத்து அதிலிருந்து பொருளீட்டிக் கொண்டிருந்தார்.இறையருளால் அவருக்கு அழகான குழந்தை பிறந்தது. அதற்கு வேங்கடராமன் எனும் பெயர் வைத்தனர். ஆனால், குழந்தை மூன்று வயது வரை ஒரு சொல் கூட பேசவில்லை. எல்லா குழந்தையும் அம்மா என்றாவது சொல்லும். ஆனால், இக்குழந்தை வார்த்தை ஒன்றுகூட உதிர்க்காது, பார்த்தது பார்த்தபடி இருந்தது. இதைக் கண்ட பெற்றோர் வேதனையுற்றனர். குழந்தை ஊமையாகவே இருந்து விடுமோ என்று அச்சப்பட்டனர்.

திடீரென்று ஒருநாள் ஒரு பெரியவர் அவர்களின் இல்லத்திற்கு வந்தார். அந்தப் பெரியவரின் தோற்றத்தையும் தேஜஸையும் கண்டவர்கள் பணிந்து வணங்கினர். ஆசனத்தில் அமர்த்தி கைகட்டி நின்றனர். ‘‘சுவாமி, உங்களைப் போன்றோர் எங்கள் இல்லத்திற்கு வந்ததை பெரும் பேறாக கருதுகிறோம். எங்கள் குழந்தையை தாங்கள் ஆசிர்வதிக்க வேண்டும்’’ என்றனர். குழந்தையை அருகே அழைத்து வந்தனர். அந்தப் பெரியவரை பார்த்ததும் குழந்தை மெல்ல சிரித்தது. பெரியவர் உற்று நோக்கினார். குழந்தையின் அகம் முழுதும் ஞானம் தழும்பி நின்றது. பேச ஏதுமற்று சகலமும் அறிந்து தெளிந்த நிலை நோக்கிய பக்குவத்தோடு இருந்தது. மௌனமே தனது உரையாடலென உயர்ந்த அனுபூதியில் திளைத்திருந்தது. வந்த பெரியவருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

‘‘ஆஹா... ஆஹா... ஈசனே இங்கு என்னை உந்தித் தள்ளியிருக்கிறான். இக்குழந்தையின் தரிசனத்தால் பெரும்பேருற்றேன். அம்மா... இந்தக் குழந்தையைக் குறித்து கவலையுறாதீர்கள். பாகவதத்தில் ஜடபரதர் மற்றும் நம்மாழ்வார் போன்ற பெரும் ஞானியர் இருந்த நிலையம்மா இது. குமரகுருபர சுவாமிகள் கூட அகவை ஆறு வரையிலும் இப்படித்தானம்மா இருந்தார். நிச்சயம் இந்தப் பாலகன் ஊரார் மெச்சும் உத்தமனாக விளங்குவான்’’ என ஆசியளித்தார்.  தந்தையும் தாயும் மகிழ்ந்தனர். இது குழந்தையா அல்லது குலத்தில் உதித்த மகானா என்று தெரியும் காலமும் நெருங்கி வந்தது. திருவிசநல்லூருக்கு அருகேயே மணஞ்சேரி என்கிற கிராமம் உள்ளது. அங்கு கோபால சுவாமிகள் என்கிற பரம பாகவதர் வாழ்ந்திருந்தார். எப்போதுமே அவரின் அகம் ராம நாமத்திலும் நாம ரசத்திலும் தோய்ந்து கிடந்தது. நாமம் பஜிப்பதைத் தவிர பிறிதொன்றை அறியா அளவிற்கு உலகு விலக்கு இருந்தது.

அதுமட்டுமல்லாது இப்படியொருவர் வாழ்ந்திருப்பதை அவர் வசிக்கும் தெருவிலுள்ளோரே அறியாதிருந்தனர். வேங்கடராமனின் தந்தையார் குழந்தையோடு மணஞ்சேரி கோபால சுவாமிகளிடம் சென்றார். கோபால சுவாமிகள் சிறுவனாக இருந்த பாலகனை உற்றுப் பார்த்தார். ‘‘என்ன செய்கிறது இந்தக் குழந்தைக்கு’’ என வைத்தியர்போல வினவினார். ‘‘இல்லை சுவாமிகளே... இது பேசாமலேயே இருக்கிறது’’ என்றார். ‘‘அப்படியா... இதற்கொரு மருந்திருக்கிறதே. அதைத் தந்தால் போயிற்று. அதுவே இதைக் குணமாக்கும்’’ என்று வேங்கடராமனை அருகே அழைத்தார். ‘‘எங்கே சொல் பார்ப்போம். நான் சொல்வதை’’ என்று ராம... என்று தாரக மந்திரத்தை நாமத்தை காதில் ஓதினார். அந்தச் சிறுவனுக்குள் உலகமே புரண்டு விட்டது போன்றிருந்தது. மின்சாரம் தாக்குண்டவர்போல அதிர்ந்துபோய் மூர்ச்சையுற்று கீழே வீழ்ந்தான். மெல்ல கண்விழித்தான். நாவு புரண்டது. மனதிலிருந்து சொல்லாக வார்த்தைகள் எழுந்தன. குரல் கணீரென்று வெளிப்பட்டு ராம... ராம... ராம... என்று மீண்டும் மீண்டும் கூறத் தொடங்கினான்.

வேங்கடசுப்ரமணிய சாஸ்திரிகள் ஆனந்த அதிர்ச்சியடைந்தார். முகத்திலிருந்த கவலையை சுத்தமாக துடைத்தெறிந்தார். கோபால சுவாமிகளை நமஸ்கரித்தார். தன் மகன் மகானென ஒரு மகானின் முன்பு ஊர்ஜிதம் செய்து கொண்டார். அன்றிலிருந்து அந்தச் சிறுவன் சகஜமாக பேசத் தொடங்கினான். இப்போது அவனுக்கு ஏழு வயதானது. சாஸ்திரிகள் மகனுக்கு பூணூல் போட்டுவைத்து பிரம்மோபதேசம் செய்து வைக்க எண்ணினார். நாளும் குறித்தார். பிரம்மோபதேச வைபவம் நடந்து கொண்டிருக்கும்போது சிறுவன் தன்னுள்ளே ஆழ்ந்திருந்தான். ஆனந்த அனுபவத்தில் தோய்ந்திருந்தான். பிரம்மோபதேசம் நடந்து முடிந்தபோது தன்னுள்ளே தான் கண்ட ராம மூர்த்தியை காணாது அழுதான். ‘‘அப்பா.. தாங்கள் பிரம்மோபதேசம் செய்து வைக்கும்போது என்னுள்ளே ராமர் பிரசன்னமானார்.

பிறகு மறைந்து விட்டார். இனி நான் அவரை எங்கு தேடுவேன்’’ என்று அழுதபடி மனம் உருகி தந்தையின் முன்பு நின்றார். பாலகனின் வார்த்தைகளை கேட்ட தந்தை ஆனந்த கூத்தாடினார். ‘‘ஹே... ராமா... சத்குரு...என் குழந்தையை ஆட்கொண்டீரா’’என்று அரற்றினார். சுற்றியுள்ளோர் அனைவரும் அவர் மகனை  சத்குரு... சத்குரு... சத்குரு... என்றழைத்தனர். அன்றுமுதல் அந்தப் பாலகன் வயதிருந்த பெரியவரை சத்குரு என்று எல்லோரும் அழைக்கத் தொடங்கினர். அந்த சத்குருவின் பணியினை விரைவாக்கவும் அவருள் இருந்த ராம பிரம்மம் தீர்மானித்தது.

கிருஷ்ணா

(ஞானியர் தரிசனம் தொடரும்)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • amazon_bang_111

  ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

 • northkorea_southkore

  வட கொரியாவில் முதன்முறையாக தென் கொரியா அதிபர் சுற்றுப் பயணம்

 • americatoday_flood123

  அமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்

 • pakistan_vehicls12345

  பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் பயன்படுத்தப்படும் 70 சொசுகு வாகனங்கள் ஏலம்

 • jawa_studentelection123

  ஜேஎன்யூ மாணவர் தேர்தல் - அனைத்திலும் இடதுசாரி மாணவர் அமைப்பினர் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்