SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீடித்த செல்வமருளும் ஸ்ரீ சக்ர கோயில்கள்

2018-08-13@ 09:46:39

சக்கரம் என்பது ஒரு பொருளை ஒரு நிலையில் இருந்து வேறு நிலைக்கு இடம்பெயர்க்கும் சாதனமாகும். வட்டத்திற்கே சக்கர வடிவம் என்ற பெயரும் உண்டு. நாம் இப்போது சொல்லப்போகும் சக்ரம் என்பது பூஜைகளில் பயன்படுத்தும் மந்திர எழுத்துக்கள் அடங்கிய தகட்டு வடிவமாகும். மந்திர சக்திகள் கொண்ட எழுத்துக்களை முறையாக வரையறுக்கப்பட்ட சதுரம், வட்டம், முக்கோணம், எண்கோணம், அறுகோணம், நவகோணம் ஆகியவற்றைக் கொண்ட தளத்தில் எழுதி அதற்கான முறையில் உயிரூட்டப்பட்ட சாதனமே சக்ரம் எனப்படுகிறது. இந்த சக்ரங்களைத் தேவைக்கேற்ப மரப்பட்டை பதப்படுத்தப்பட்ட இலைகள், மரப்பலகைகள் உலோகத் தகடுகள், பாறைகள், கற்பலகைகள் ஆகியவற்றில் எழுதி வழிபடுகின்றனர். யானையின் எலும்புகள், ஆமை ஓடுகள் ஆகியவற்றில் எழுதிப் பூஐிக்கும் வழக்கமும் உள்ளது.

சமய வழிபாட்டில் சக்ர வழிபாடு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. அம்பிகையை, அர்ச்சாரூபம் எனப்படும் சிலைகள், மந்திர ரூபம் எனப்படும் சக்ரங்கள் ஜோதிரூபம் எனப்படும் விளக்குகள் ஆகியவற்றில் நிலைப்படுத்தி வணங்குகின்றனர். ஸ்ரீசக்ரத்தில் ஒன்றோடு ஒன்று இணைந்ததாக உள்ள ஒன்பது முக்கோணங்களில் சிவனைக் குறிக்கும் ஐந்து முக்கோணங்களும் சக்தியைக் குறிக்கும் நான்கு முக்கோணங்களும் உள்ளன. இவை இரண்டின் இணைவால் 43 முக்கோணங்கள் உருவாகின்றன. இவற்றில் சக்தியின் பிரதம கணங்கள் வீற்றிருக்கின்றனர். உச்சியான பிந்துஸ்தானத்தில் காமேஸ்வரருடன் லலிதா பரமேஸ்வரி வீற்றிருந்து அருட்பாலிக்கின்றாள். சிவசக்தியின் சம்மேளன வடிவமான ஸ்ரீசக்ரம் மகிமை வாய்ந்தது. வழிபடுபவருக்கு அளப்பரிய சக்திகளை அளிப்பது. அந்த சக்ரத்தை முப்பரிமாணமாக அமைக்கும்போது அது மகாமேரு என்று அழைக்கப்படுகிறது.

சக்ரங்களை கருவறையில் வைத்து வழிபடுவது மட்டுமின்றி மார்பில் அணியும் பதக்கங்கள், தோடுகள், பாதுகைகள் போன்றவற்றிலும் அதை எழுதி வழிபடுகின்றனர். பல்வேறு நிலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் ஸ்ரீசக்கரம், மகாமேரு பற்றிய செய்திகளை இப்பகுதியில் தொகுத்துக் காணலாம். மந்திர எழுத்துக்களை உரிய முக்கோணம், சதுரம், எண்கோணம், அறுகோணம் இணைந்த கட்டங்களில் எழுதி வழிபடுவதே ஸ்ரீசக்ர வழிபாடாகும். என்றாலும் சாக்தர்களால் கொண்டாடப்படும் ஸ்ரீசக்ரத்தில் எழுத்துக்களை அமைப்பதில்லை. சிவனடியார்கள் சிவலிங்கத்தையும், முருகனடியார்கள் வேலாயுதத்தையும் முதன்மை வழிபடுபொருளாகக் கொண்டிருப்பதைப் போல சாக்தர்கள் ஸ்ரீசக்ரத்தை அம்பிகையின் அருவுருவ வடிவமாக வைத்துப் போற்றி வழிபடுகின்றனர். சிவாலயங்களில் உள்ள அம்பிகை சந்நதியில் இந்த சக்ரத்தை வைத்து வழிபடும் வழக்கம் உள்ளது. இது எண்ணிக்கையில் சிறிதே ஆயினும் சிறப்புமிக்கதாகவே இருப்பதால் அது இங்கே குறிக்கப்படுகிறது.

திருவாரூர் அட்சரபீடமும் சக்ரமும் சைவர்களின் தலைமைப் பீடங்களில் ஒன்றான திருவாரூரில் உள்ள தியாகராஜசுவாமி கோயிலில் உள்ள கமலாம்பிகை சந்நதி சாக்தர்களால் பெரிதும் கொண்டாடப்படும் சந்நதியாக இருக்கிறது. இவளைச் சக்ரராஜ சிம்மாசனி என்று போற்றுகின்றனர். இங்குள்ள சந்நதியில் அட்சர பீடம் என்னும் பீடம் உள்ளது. அதில் அ முதல்க்ஷ வரை அனைத்து எழுத்துக்களும் எழுதிய பிரபா மண்டலத்துடன் கூடிய ஸ்ரீசக்ரம் வழிபாட்டில் உள்ளது. இங்குள்ள அம்பிகையே ஸ்ரீசக்கரத்தில் அமர்ந்துள்ளதாகக் கூறுகின்றனர். குற்றாலத்து தரணி பீடம் என்னும் மகாமேரு சந்நதி பராசக்தி பீடமான தரணி பீடம் திருக்குற்றாலத்திலுள்ள குற்றாலநாதர் ஆலயத்தில் அவருக்கு இடப்புறம் தனிச்சந்நதியில் அமைந்துள்ளது. பெரிய கற்பலகையில் மேரு வடிவாக ஸ்ரீசக்ரம் அமைக்கப்பட்டு, சக்ரத்தைச் சுற்றி சப்தமாதர்கள், காவல் பூதன், பைரவர், பூதகணங்கள் ஆகியோர் பரிவாரங்களாக அமைக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீசக்ரத்தை  ஸ்ரீசக்ரம், அர்த்தமேரு, மகாமேரு என்னும் மூன்று நிலைகளில் வழிபடுவர்.

ஸ்ரீசக்ரம் மகாமேரு வடிவில் அமைந்திருப்பதைக் குற்றாலத்தில் காண்கிறோம். தலபுராணம் இதன் பெருமைகளை விரிவாகக் கூறுகிறது. சக்தி பீடத்தின் எதிரில் காமகோடீஸ்வரர் சந்நதி உள்ளது. இந்த சக்தி பீடத்தை சிவாலய முனிவர் திருத்திப் பணி செய்து மேன்மைப்படுத்தினார் என விவரிக்கிறது. இங்குள்ள ஸ்ரீசக்ரத்தைச் சுற்றி சப்தமாதர்கள், விநாயகர் இருவர், சுப்பிரமணியர் இருவர் வைரவர் இருவர் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். இங்குள்ள வாயிலில் மகாமதுகரீ, மகாமோகினி என்பவர்கள் துவார பாலிகைகளாக உள்ளனர். இது பராசக்தி பீடம் என்று அழைக்கப்படுகிறது. தலபுராணம் இந்த சக்தி பீடத்தை வழிபடுவதால் கிடைக்கும் பலன்களை விரிவாகக் கூறுகிறது. சக்தி பீடத்திற்குச் சித்திரை மாதம் நறுநெய்யால் அபிஷேகம் செய்து ஆதிசக்தியை வழிபடுபவர். திருமால் பதவியைப் பெறுவர். வைகாசி மாதத்தில் செண்பக மலர் கொண்டு அருச்சிப்போர் சிவபதம் பெறுவர். ஆனி மாதத்தில் மல்லிகையால் பீடத்தை அருச்சிப்போர் பிரமபதம் பெறுவர்.

ஆடி மாதத்தில் பச்சைக் கற்பூரம் கலந்த சந்தனத்தைப் பீடத்தில் மந்திரங்களைச் சொல்லிப் பூசுவோர் இந்திர பதம் பெறுவர். பராசக்தி பீடத்தில் ஆவணி மாதத்தில் வெள்ளைஅரளி மலர்களைச் சாத்தி வழிபடுவோர் கலைமகள் அருளையும், பொன் நிற மலர்களைச் சாத்தி வழிபடுவோர் திருமகள் அருளையும் பெறுவர். பவள நிறமுள்ள மலர்களைச் சாத்துவோர் அன்னை ஆதிபராசக்தியின் தெய்வத் திருவருள் பெற்று சிவபதம் பெறுவர். புரட்டாசியில் நெய் கலந்த பொங்கலை நிவேதிப்பவர் சூரிய உலகிற்குச் செல்வர். ஐப்பசி மாதம் சந்தனாதித் தைலம் கொண்டு அபிஷேகம் செய்பவர் நான்முகன் உலகிற் சேர்வர். கார்த்திகை மாதம் நெய் விளக்கு ஏற்றித் தரிசிப்போர் பிறவி அறும். மார்கழியில் பருப்புப் பொங்கல் நிவேதிப்பவர் தேவராய் அமுதுண்டு வாழ்வர். தை மாதத்தில் மஞ்சள் காப்புச் சாத்தி வழிபடுவோர் சந்திர லோகம் அடைவர். பங்குனி மாதத்தில் ஐந்து வகையான திருமஞ்சனத் திரவியங்கள் அமைத்து வாசநீர் ஆட்டுபவர் அழிவில்லாத பரமபதம்
சென்றடைவர்.

சக்தி பீடத்தைக் கையினால் தொழுவோர்க்குக் கையால் செய்த பாவம் நீங்கும் மந்திரங்களைச் சொல்லும்போது மொழியால் விளைந்த பாவம் தொலையும். கண்ணால் ஆதிசக்தியைக் கண்டு மகிழும் போது கண்ணால் விளைந்த பாவம் அழியும். சக்திபீடத்தை வலம் வருவோர்க்கு எல்லாப் பாவங்களும் நீங்கும். இதனை,

துய்ய மலர்க் கரங்குவிப் பார் கையினாற்
செய்தவினை தொலையும் நாவால்
செய்ய புகழ் வார்த்தினர்க்கு வாக்கினாற்
புரிபாவம்சிதையும் கண்ணால்
உய்ய வெதிர் காண்பார்க்கு விழியினா
லிழைத்தவினை பொழியும் ஞானத்
தையல்பரை பீடம் வலம் புரிந்தாரைப்
பிரிந்தோடும் சகல பாவம்
என்று திருக்குற்றாலத் தலபுராணம்
கூறுகின்றது.

இந்தத் தரணிபீடத்தின் முற்றத்தில் மும்மூர்த்திகளும் குழந்தை வடிவில் தவழ்ந்த தாணுமாலயப் பூந்தொட்டிலில் ஆடிக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். ஆவுடையார் கோயில் எனப்படும் திருப்பெருந்துறை ஆத்மநாதர் கோயிலில் சிவபெருமான் ஆன்மநாதர் என்னும் பெயரில் அருவ வடிவில் இருந்து அருட்பாலிக்கின்றார். ஆனாலும் அவர் தன்னை உணர்ந்த ஞானிகளுக்கு செம்பொற்சோதியாகத் தோன்றிக் காட்சி அளிக்கிறார் என்று கூறுகின்றனர். அவருக்கு இணையாக அம்பிகையும் இத்தலத்தில் அருவ வடிவில் சிவயோக நாயகி என்னும் பெயரில் எழுந்தருளியுள்ளாள். இவளுக்குரிய அபிஷேக, அலங்கார வழிபாடுகளைச் செய்ய அவளது திருவடி நிலைகள் எழுந்தருளி வைக்கப்பட்டுள்ளன. இந்தத் திருவடி நிலைகள் தங்கத்தாலான சக்கரத்தின் மீது எழுந்தருளி வைக்கப்பட்டுள்ளன.

திருவடி நிலைகளுக்குச் செய்யும் அபிஷேக நீர் இந்த மந்திர சக்திவாய்ந்த சக்கரத்தின் மீது வழிந்து வெளியேறுகிறது. இப்படி வழிந்தோடும் நீர் அரிய சக்திகளைக் கொண்டது என்று கூறுகின்றனர். இந்தச் சக்ரம் வழக்கமான ஸ்ரீசக்ரம் போன்றதல்ல. வழக்கமான சக்கரத்தைச் சுற்றி இரண்டு தாமரை இதழ் வட்டம் இருக்கும். எழுத்துக்கள் இருக்காது. சிவயோக நாயகி சக்ரம் மூன்று தாமரை வட்டங்களோடு கோணங்களில் பீஜ எழுத்துக்களையும் கொண்டதாகும். இந்தச் சக்ரம் ஆகாசச் சக்ரம் என்பதால் முன் விதானத்தின் மையத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி சந்நதியில் ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் சந்நதியில் உள்ள மாடத்தில் ஓரடி நீளம் அகலம் கொண்ட தங்கத்தாலான யந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. தகுதியுள்ளவர்கள் ஆலயத்திற்கு வரும்போது இந்த யந்திரத்தை எடுத்து வந்து காட்டுகின்றனர்.

இந்தச் சக்ரத்திற்குச் செய்யப்பட்ட அர்ச்சனை குங்குமம் சகல செல்வங்களையும் தரவல்லது என்று நம்புகின்றனர். திருவானைக்காவில் அம்பிகையின் தோட்டில் அமைந்துள்ள சக்ரம் பொதுவாக வழிபாட்டிற்குரிய யந்திரங்களைத் தெய்வங்களின் பீடத்திற்கு அடியில் அமைப்பதே வழக்கம். சில தலங்களில் தெய்வ பீடத்தின் அடியில் வைப்பதோடு முன்புறம் சிறிய மேடை அமைத்து, அதன் மீது வைத்தும் வழிபடுகின்றனர். இதற்கு முற்றிலும் மாறாகத் திருவானைக்கா கோயிலில் எழுந்தருளி இருக்கும் அகிலாண்டேஸ்வரியின் திருச்செவியில் சக்ரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இரண்டு காதிலும் மேலே ஒன்றும் கீழே ஒன்றுமாக இரண்டு சக்ரங்கள் (ஆக நான்கு சக்ரங்கள்) அமைக்கப்பட்டுள்ளன. இவை தங்கத்தில் நவரத்தினக் கற்கள் இழைத்துச் செய்யப்பட்டதாகும். ஆதிசங்கர பகவத்பாதர் இந்த சக்ரங்களைச் செய்து அம்பிகைக்கு அணிவித்ததாக அவரது வரலாறு கூறுகிறது.

திருவிடைமருதூர் ஸ்ரீசக்ரம்

திருவிடைமருதூர் மகாலிங்கஸ்வாமி ஆலயத்தில் மூகாம்பிகை என்னும் பெயரிலான யோகநாயகியின் சந்நதி உள்ளது. இந்தச் சந்நதியில் மகாமேரு ஒன்று வழிபாட்டில் உள்ளது. இது ஸ்ரீபாஸ்கரராயரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். பாஸ்கரராயர் சிறந்த தேவி உபாசகர். அன்னையைப் போற்றும் தோத்திரங்களில் உயர்ந்ததாக இருப்பதும் ஆதிசங்கர பகவத்பாதர் அருளியதுமாகிய லலிதா ஸஹஸ்ர நாமத்திற்கு விரிவான உரை எழுதியவர். இவர் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு அருகில் உள்ள பாஸ்கரராயபுரத்தில் வாழ்ந்து வந்தவர். திருவாவடுதுறை ஆதீனத் திருமடத்தோடு தொடர்பு கொண்டிருந்தார். இவருடைய வேண்டுகோளை ஏற்று அப்போதைய ஆதினர்த்தர் மூன்று ஸ்ரீசக்கரங்களை உருவாக்கி அளித்தார். அம்மூன்றையும் பாஸ்கரராயர் நெடுநாட்கள் வைத்து பூஜித்திருந்த பின் அவற்றில் ஒன்றை இந்த மூகாம்பிகை சந்நதியில் நிலைப்படுத்தியுள்ளார். அந்த ஸ்ரீமேருவுக்குத் தினசரி வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

சிதம்பரத்தில் ஸ்ரீசக்ர வழிபாடு

சிதம்பரம் சிவகாமசுந்தரி சந்நதியில் ஸ்ரீசக்ர வழிபாடு சிறப்புடன் திகழ்கிறது. இந்தச் சந்நதியின் பிராகாரத்தில் அமைந்து வடக்கு திருமாளிகைப்பத்தியில் தெற்கு நோக்கியவாறு ஒரு பீடம் அமைக்கப்பட்டுள்ளது. பீடத்தை ஒட்டியுள்ள சுவரில் ஏறத்தாழ ஐந்தடிக்கு ஐந்தடி பரப்பில் ஸ்ரீசக்ரம் கருப்பு பளிங்குக் கல்லில் பொறிக்கப்பட்டு பதிக்கப்பட்டுள்ளது.

பூசை.ச.அருணவசந்தன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-10-2019

  20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-10-2019

  19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • boniaredlady

  தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

 • chisa

  தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

 • karvachauth_2019

  கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்